இந்தியா : மக்கட்தொகையும் வெளியும் – கமலா மரியுஸ்

இந்தியா : மக்கட்தொகையும்  வெளியும்

இந்தியப் பாலின ஏற்றத்தாழ்வுகள்

கமலா மரியுஸ், வருகைப் பேராசிரியர்

  • பொர்தோ-மோந்த்தேஜ்ன் பல்கலைக் கழகம், பிரான்சு;
  • பிரெஞ்சுஅரசின் மொழி மற்றும் பண்பாடு ஆய்வு நிறுவனம், புதுச்சேரி, இந்தியா.

 

இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சியும் ; கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் நாடு அடைந்துள்ள முன்னேற்றமும் பலரும் அறித்ததுதான், இருந்த போதிலும் சமூகத்தில் மக்களிடையே பெரும் எற்றதாழ்கவுகள் இருக்கவே செய்கின்றன. 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் என்கிற விகிதாச்சாரமும் ; குறைவான ஊதியமும் ; பாலின அடிப்படையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் ; ஆணும் பெண்ணும் சமம் என்பதை நிறுவ பெரும் முயற்சிகள் தேவைப்படுகின்றன என்பதைக் காட்டுகின்றன. எனவே பாலினம் என்கிற முப்பட்டகக் கண்ணாடியின் உட்கட்ட வேறுபாடுகளை நிலவியலை முன்வைத்து ஆய்வு மேற்கொள்வது அவசியமாகிறது.

இரண்டாயிரம் ஆண்டிலிருந்ததே, இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி உதாரணமாக எடுத்தாளப்பட்டு வருகிறது, நியாயமான எடுத்துகாட்டே, இருந்தபோதிலும் அடைந்துள்ள இப்பொருளியல் முன்னேற்றம் இந்தியச் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளென்று வருகிறபோது வரைமுறைக்கு உட்பட்டதாகிறது . கிடைக்கும் அனேக சமூக அமைப்பின் தரவுகளின் படி ( அதாவது  மக்கட்பெருக்கம், கல்வியறிவு, குடும்பத்தைத் தவிர்த்து பிற பணிகளில் பெண்களின் பங்களிப்பு, மக்களின் ஆயுட்காலம், மருத்துவ வாய்ப்பு ஆகியவற்றில்) பாகிஸ்தானைத் தவிர்த்து பிற தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகிறபோது இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது, ஆனால் தனிநபர் வருமானத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியென்று வருகிறபோது சிறந்த பலன்களை அது அடைந்துள்ளது. இதனை அமர்த்தியா சென் « வளர்ச்சிப்பாதையில் காண்கிற ஒரு களங்கத்தின் » குறியீடு (2014) என்கிறார்.

இனம், மதம், சாதி, பாலினம் அடிப்படையில் வேறுபடுகிற அனைத்து இந்தியரையும் கோட்பாட்டளவில் பாதுகாப்பதற்கு சமத்துவ அரசியலமைப்புச் சட்டம் என்ற ஒன்றிருந்தாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாகவும், தனித்தன்மையுடனும் வினையாற்றும் சாதி அமைப்பும் அதன் செல்வாக்கும் நவீன இந்திய சமூகத்தில் முக்கியப் பங்கினை வகிப்பதுடன் அனைத்து மட்டங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் வலுப்பெற்ற காரணமாக இருக்கின்றன என்பதும் உண்மை

12-img_6112 இந்த வெவ்வேறான ஏற்றதாழ்வுக்கான அடிப்படை காரணங்களை ஒட்டுமொத்தமாக அணுகுவதா அல்லது அவற்றின் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலையை தெளிவுபடுத்துவதன் மூலம் அனைத்தையும் சேர்ந்தார்போல விளங்கிக்கொள்வதா ? என்பதே தற்போது நமக்குள்ள கேள்வி.  பாகுபாடு தாக்கக் கருத்தியத்திலும் ( le concept d’intersectionnalité ) [1] இது எதிரொலிக்கிறது  இக்கருத்தியம் எற்றத்தாழ்வுகளிலுள்ள ஒருங்கிணைந்த  பண்பினையும் ; சாதிப்பிரிவுகள், வர்க்கப் பிரிவினைகள், பிற அடையாளங்கள், பாலின நோக்கு, மத வேறுபாடுகள், புவிசார்  இடஅமைப்பு ஆகியவற்றுடன்  தொடர்புடைய அடக்குமுறையையும்  மறு பரிசீலனை செய்வதற்கு பொருத்தமான ஆய்வுக்கருவி. ஆனால் பாலின அடையாளம் என்பது சமூக ஏற்றத்தாழ்வு பிரச்சினையின் ஒரு கூடுதல் காரணி  என்பது உறுதி. ஆனால் இதனைப்  வர்க்கம் மற்றும் சாதிய வேறுபாடுகளிடமிருந்து பிரித்துப்பார்க்க முடியாது. அமர்த்யா சென் கூறுவதைப் போல (2007,233) , « ஐயத்திற்கிடமின்றி  இருவகை உரிமை பாதிப்புகளின் தலையீடு பாலின வேறுபாட்டில் உள்ளது- பெண்ணாகவும் அதேநேரத்தில் பிற்பட்டவகுப்பினளாகவும் அவள்  இருக்கிறாள்  என்ற உண்மை- இது  ஏழ்மையில் உழலும்  குறைந்த அளவு சலுகைகளுடனும் வாழ்கிற  வகுப்பினைச் சார்ந்த பெண்களை பெருமளவில் தண்டிக்கிறது. »

எனினும் சாதி அமைப்பு பாலினவேறுபாட்டில் சிற்சில பிரிவினருக்குச் சாதகமாக வும் அமைத்துள்ளது. பிராமண பெண்ணுடைய நிலமை (2)   ஒரு தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஆணைக் காட்டிலும்  பொறாமைப்படக் கூடியதாக இருக்கிறது  தவிர பாலின எல்லைகள் இருப்பினும் சலுகைபெற்ற வகுப்பைப் பின்புலமாகக் கொண்ட பெண்கள் இந்திய சுதந்திர போராட்டத்தின்போது, பிரிட்டிஷ் இராச்சியத்திற்கு  எதிராகவும், பின்னர் இந்திய அரசியல் உயர் பதவிகளிலும் ஆற்றிய,ஆற்றும்  பங்களிப்புகள் சாதி அமைப்பின் பலன்களைத் தெரிவிப்பவைதான். இந்திரகாந்தி பல ஆண்டுகள் (1966 -1977 ; 1980 -1984) நாட்டைஆள முடிந்தது இதற்கொரு நல்ல உதாரணம். பெண் என்பவள் வேண்டாம் என்ற நிலைப்பாடு ஒருபக்கம், நாட்டின் பிரதமர் அல்லது அதிபராக ஆவதென்பது இன்னொரு பக்கம் என்ற நிலையில் , இந்தியாவில் நிலவும் பாலின சமன்பாடின்மையை ஓர் இந்தியப் பெண் எவ்வாறு எதிர்கொள்கிறாள் ?

சமத்துவமின்மைக்கு மாறுபட்ட பல காரணிகளைப் போலவே, மாறுபட்ட அதன் வடிவங்களும்  அதாவது வெளி சாரந்த பாகுபாடுகள், வன்முறைகள் அல்லது அமர்த்யா சென்  மொழியில் (2005) சொல்வதெனில் : வறுமை, எழுத்தறிவின்மை, மருத்துவப் பாதுகாப்பின்மை  போன்றவையும் காரணமாகின்றன. உடல் சார்ந்த ஒரு சில வன்முறைகள் ( வரதட்சணை கொலைகள் , பெண் சிசுக்கொலைகள், பாலுறவு அடிபடையிலான வன்முறைகள்) நீண்ட நாட்களாகவே வெளிப்படையான பாகுபாடுகளாக இருந்து வந்துள்ளன என்பது மிகப்பெரிய அளவில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கிறது (கபாடியா 2002). மாறாக கவனத்திற்கு வராத வெளிசார்ந்த பாலின சமத்துவமின்மை பற்றிய விடயம் ஆய்வுக்கு மிக க் குறைந்த அளவிலேயே இதுவரை உட்படுத்தப்பட்டுள்ளது. « இடங்கள் மற்றும் வெளிகள் சார்ந்தும் பாலினப்பாகுபாடுகள் இருக்கின்றன » என்ற அனுமானத்துடன் அண்மைக் காலத்தில்தான் ஆய்வாளர்கள் (சார்லஸ் 2008, தேசாய் 2007, ரனதீவ் 2002) புதுவிதமான ஆய்வுப்பணிகளில்  இறங்கினார்கள்.

பாலின சமத்துவமின்மையின் பல்வகையான முகங்களுடன் இணைந்த பேதங்களின் பரப்பை அமர்த்யா சென் வழி முறையில் (2007,251)(3) வெவ்வேறான தலைப்புகளின்கீழ் வகைப்படுத்தி அவற்றில் வெளிசார்ந்த பரிமாணத்தையும் (மரியுஸ் 2016) கருத்தில் கொண்டு நாம் பரிசீலிப்போம்.

4-2012-09-30-11-18

  1. நிலவியல் அடிப்படையிலான பாகுபாடு

ஆசியாவில் மிக க் குறிப்பாக இந்தியாவிலும் சீனாவிலும் பெண்களின் இறப்பு வீதம் அசாதாரண வகையில் அதிகரிப்பது, தொடரும் ஆண்குழந்தைகளின் பிறப்பினால் நிகழும் ஆண்மயம் இவ்விரண்டின் தாக்கத்தினாலு ம் பாலின ஏற்றத் தாழ்வு விகிதம்அதன் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஆசியாவின் பாலினப் பாகுபாட்டை நிலவியல் பரப்பு, மக்கள் அடர்த்தி அடிப்படையில்  ஐயத்திற்கிடமின்றி சிறப்பான முறையில் ஆய்வு மேற்கொண்ட மக்கட்தொகை வல்லுனர் கி. கில்மோட்டோ 2010 ஆம் ஆண்டில் சீனாவிலும் இந்தியாவிலும் 91 மில்லியன் ஆண்கள் கூடுதாலாக இருப்பார்களெனக் கணித்திருந்தார்.  இவ்விரண்டு தேசங்களிலும் பாலின  விகிதாச்சாரமென்பது உலகின் பிறநாடுகளையொத்ததாக இருக்குமெனில்  20 மில்லியன் பெண்களைக் கூடுதலாக கணக்கெடுக்க நேர்ந்திருக்கும். கணித்த எண்ணிக்கைக்கும், பின்னர் அவதானித்தமைக்கும் மக்கட்தொகையில் காண நேர்ந்த இப்பெரிய இடைவெளியை இருபது ஆண்டுகளுக்கு முன்பே இந்தியப் பொருளியல் நிபுணர் அமர்த்யா சென் இந்தியாவிலும் சீனாவிலும் பல மில்லியன் பெண்களை இழக்க நேரும், என்பதை « Missing women » என்ற பெயரில் தெளிவாக க் அனுமானித்திருந்தார்.  இம்மக்கட்தொகை பேரழிவிற்குப் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய அமைப்பு முறையில் நெறிமுறை மற்றும் மதிப்பீடுகளில் தொடரும் இழப்புகள் மட்டுமின்றி நாட்டில் பிரத்தியேகமாகப் பின்பற்றப்பட்டு வரும் குடும்பக் கட்டுப்பாடு அரசியலும் காரணம்.

சமூக நிர்ப்பந்தங்கள் காரணமாக இளம்வயது திருமணங்கள் வழக்கில் இருப்பினும், குழந்தைப்பேறு அளவோடு இருப்பதற்கு, தம்பதிகளிடையே பாலியலுறவில் கடைபிடிக்கும் ஒழுங்குகள்  உதாரணத்திற்கு பிரசவத்தை அடுத்து பாலியலுறவை தள்ளிவைத்தல் ; பாட்டியாக நேர்ந்தால், குழைந்தைப் பேற்றை தவிர்ப்பது (அதாவது நாற்பது வயதில்) போன்ற வலுவான சமூக நெறிமுறையும் காரணம்.  தவிர கடுமையான உணவுத் தட்டுப்பாடு என்ற சூழலில், சமூக அமைப்புகள் மற்றும் மால்தஸீயன் சர்வதேச  நிறுவனங்கள( ஐக்கிய நாட்டு சபையின் மக்கட்தொகை நிதியமைப்பு, உலக நாடுகளின் வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனத்தின் உதவி, உலகச் சுகாதாதார அமைப்பு)போன்றவற்றின் தாக்கத்தினால் « மக்கட்தொகை வெடிகுண்டுக்கு  (the Population Bomb) » எதிராக அரசாங்கம் விரிவானதொரு  குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர அதனொரு பகுதியாகக் கருக்கலைப்புச் சுதந்திரமும் (கருக்கலைப்பு மருத்துவச் சட்டம் 1971) ஆண்களுக்கு வாசக்டமியும் நடைமுறைக்கு வந்தன. 1975 -1977ல் இந்திராகாந்தியால் அறிமுகப்படுத்தப் பட்டு நடைமுறையிலிருந்த நெருக்கடி நிலையின்போது மிதமிஞ்சிய அளவில் கருத்தடைகள் செய்யப்பட்டன. 1975-1976 ல் வருடத்திற்கு 2.7 மில்லியனாக இருந்த கருத்தடை செய்துகொண்டவர்கள் எண்ணிக்கை, அதற்கடுத்த வருடம் 8.3 மில்லியனைத் தொட்டது, அவர்களில்  வாசக்டமி செய்துகொண்டவர்கள் மட்டும் 6 மில்லியன்கள் (கில்மொட்டோ, குல்கர்னி, 2010,41). கருத்தடை அறுவைச் சிகிச்சியைத் மிகத் தீவிரமாகக் கையாண்டதன்  விளைவாக காங்கிரஸ் கட்சி 1977 பொதுத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது, அதன்பின்னர் கருத்தடை செய்துகொள்பவர்களில் ஆண்களின் எண்ணிக்கையில் விரைவான சரிவையும், மாறாக பெண்களின் எண்ணிக்கையில் உயர்வையும் காண முடிந்தது

குடும்பக் கட்டுப்பாடுத் திட்டம் 1956 ஆம் ஆண்டிலிருந்து 2000 வரை 250 மில்லியன் பிறப்புகளைத்  தவிர்த்தது. அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு கருத்தடையின் தயவினால்  நடந்தது.(கில்மொட்டோ, குல்கர்னி2010,68). இக்குடும்பக் கட்டுப்பாடு  அரசியலின் மிகக் கொடூரமானதொரு விளைவுகளிலொன்று பெண்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்தது :  1911 ஆம் ஆண்டு 1000 ஆண்களுக்கு  972 பெண்கள் இருந்தார்கள் இன்று 933,  ஆக எண்ணிக்கை சரிவை கண்டுள்ளது. அதாவது சீனாவை அடுத்து ( 100 பெண்களுக்கு 117 ஆண்கள் என்ற பிறப்பு வீதம்) உலகிலேயே ஆண்பெண் விகிதாச்சாரத்தில் பாதகமான நிலையிலுள்ள நாடு இந்தியா.  2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்திய மக்கட்தொகை  121 கோடியே 19 இலட்சத்து மூவாயிரத்தி நானூற்று இருபத்தி இரண்டு பேர்.  அதன்படி ஆண்கள் எண்ணிக்கையுடன் சரிநிகராக்க 38 இலட்சம்  பெண்கள் கூடுதலாகத் தேவை (624 இலட்சம் ஆண்களுக்கு  586 இலட்சம் பெண்கள்) (fig1). பெரும் எண்ணிக்கையில் தாய்மார்கள் வாரிசாக ஓர் ஆண்குழைந்தை வேண்டுமென்று இடையில் பிறக்கும் பெண்குழந்தைகளை மருத்துவ தொழில் நுட்ப உதவியுடன் கொன்றுவிடுகிறார்கள். கடந்த  இருபது ஆண்டுகளில் தேர்ந்தெடுத்த கருக்கலைப்பு நடமுறையினால் ஆண்ழந்தைகளின் பிறப்புவீதம் கணிசமாக பெருகியுள்ளதையும் பெண்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆண்களுக்கு 945 என்று 1991ல் இருந்தது  2011 ஆம் ஆண்டு 914 ஆக குறைந்துள்ளதன் மூலம் அறியமுடிகிறது. (4)

1-sex-ratio-evolutionகிராமப்புறங்களில் தந்தைவழிச் சமூக சொத்துரிமைச் சமச்சீரற்ற ஆண் பெண் விகிதாச்சாரத்திற்கு சாதகமாக உள்ளதென்பதை பெரியநாயகம் ஆரோக்கியசாமி மற்றும் சீனுவாசன் கோலி இருவரின் (2012) ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  தேசிய குடும்பச் சுகாதார ஆய்வு நிறுவனத்தின் தரவுகளின்படி (National Family Health Survey (2005-2006), ஒரு குடும்பத்தில் எந்த அளவிற்கு நில உடமையின் அளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அந்த அளவிற்குப் பெண்களின் சுயமாக செயல்படும் உரிமை  மட்டுப்படுத்தப்படுகிறது என்ற உண்மை தெரியவந்துள்ளது. அதாவது பெண்களின் இடம் பெயரும் உரிமை, முடிவெடுக்கும் உரிமை, பணிக்கான ஊதியம் இவற்றில் பாதிப்பினைக் காண்கிறோம், தவிர இக்குடும்பங்களில் பையன்கள் பெண்கள் விகிதாச்சாரமும் (0-6 வயது) பையன்களுக்கே சாதகமாக இருக்கிறது. ஒரு ஏக்கருக்கும் குறைவான நில உடமையாளர்களை எடுத்துக்கொண்டால் அக்குடும்பங்களில் 100 சிறுமியருக்கு 107 பையன்கள் என்றிருக்கிறார்கள். ஆனால் பத்து ஏக்கருக்கும் அதிகமாக வைத்திருக்கிற நில உடமையாளர்களை எடுத்துக்கொண்டால் , அங்கே 100 சிறுமியருக்கு 128 பையன்கள் என்ற நிலை. ஆந்திரப் பிரதேசத்தில் நிலமை மிகவும்மோசம், 4 ஹெக்டார் நிலமுள்ள குடும்பங்களில் 100 சிறுமியருக்கு 170 சிறுவர்கள் என்றிருக்கிறார்கள். மாறாக கேரளா, மத்திய பிரதேசம், மேற்குவங்காளம் ஆகிய தாய்வழிச் சொத்துரிமை வழக்கிலிருக்கும் மாநிலங்களில் நில உடமை ஆண் பெண் விகிதாச்சாரத்துடன் தொடர்பு படுத்தும் அளவிற்கு முக்கியத்துவம் பெறவில்லை.

carte-sex-ratio-indeபாலினப் பாகுபாட்டில் தந்தை வழி சமூகக் கட்டமைப்புகள் ஆதிக்கம் செலுத்துகிறதென்பதை ஒருசில ஆய்வாளர்கள் கண்டிருக்கிறார்கள், அதன்படி இஸ்லாமியர்களைபோலவே  இந்துக்களும் காஃப் பஞ்சாயத்தின் கீழ்(அதிகாரம் பரவலாக்கப்பட்ட பின்பு ஆண்கள் மட்டுமேஅங்கம் வகிக்கிற மரபுவழியில் அமைந்த ஆனால் நெறிமுறைகளைப் பின் பற்றாத கிராம சபை)  கௌவுரவத்தை முன் நிறுத்தினார்கள். விளைவாக மிதமிஞ்சிய வகையில் எங்கும் எதிலும் ஆண்கள் என்றொரு நிலைப்பாட்டினை பஞ்சாப், அரியானா மாநில இந்துக் குடும்பங்களிலும் கீக்கியரிடையே ஜாட் எனும் ஆதிக்க வகுப்பினரிடமும், இத்துடன் நில்லாது  கௌவுரவக்கொலைகள், சிசுக்கொலைகளென்ற குற்ற நடைமுறைகளை குஜராத், ராஜஸ்தான் மாநில பழமைவாத இந்துக்களிடமும் இஸ்லாமியர்களிடமும் காண்கிறோம். «  மேல்தட்டுமக்களின் கருத்தியங்கள் அல்லது உயர்சாதி பிராம்மணர்கள் மற்றும் பிரதிநித்துவ அமைப்பெனக் கூறிக்கொண்ட நவீனம், இவற்றுடன் ஆணாதிக்கம், இப்படி அனைத்துமாகவிருந்த இக்காவலரண்கள் பெண்களை வேட்டையாடுவதற்கு பெரிதும் ஆதரவாக இருந்தவை »(ஹெஸே 2014,277). மேலும் பிராந்தியப் பிரிவினைகளும் பாலினப் பாகுபாட்டில் குறிப்பிட்டுசொல்லும்படியாக ஏற்றத்தாழ்வுகளைத் தெரிவிப்பவைகளாக உள்ளன : வடமேற்கு மாநிலங்களை (ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப், அரியானா, ராஜஸ்த்தான், குஜராத் ) தென்மாநிலங்கள் அல்லது கிழக்குப்பிராந்தியங்களுடன் ஒப்பிடுகிறபோது பிந்தியவற்றுள் ஆண் பெண் விகிதாச்சார  ஏற்றத்தாழ்வு அத்துணை முக்கியத்துவம் பெறவில்லை என்பது கண்கூடு.  (fig. 2).

carte-sex-ration-enfants-indeஎனினும் இந்தியச் சமூகங்கள் பாலின விகிதாச்சாரத்தைத் தாங்கள் தேர்வு செய்யும் நிலையிலில்லை என்பதையே இந்தியாவின் வடமேற்குப் பிராந்திய கிறித்துவர்கள்,இஸ்லாமியர்கள் அல்லது தலித்துகள் மூலம் அறிகிறோம். அங்கு நாட்டின் இதரப் பிராந்தியங்களைக் காட்டிலும் ஆண்பெண் விகிதாச்சார எற்றத்தாழ்வுகள் கூடுதலாக இருக்கின்றன. இந்த ஒவ்வொரு குழுவிலும் அதன் பிரத்தியேக பண்பாடுகள், சமூகப் பண்புகள் ஆகியவற்றைபோலவே, அவர்கள் வாழும் இடமும் மேற்கூறப்பட்ட ஏற்றத்தாழ்விற்குக் காரணமாகிறது(கில் மோட்டோ, 2010).  உண்மையில் பாலினத் தேர்வு தொடக்கத்தில் செல்வாக்குடன் இருந்த பகுதி, வரலாற்றளவில் பெண்களுக்கு எதிரானப் பாகுபாடு எங்கு வலுவாக இருந்ததோ அப்பகுதி, அது குறிப்பாக குஜராத் தொடங்கி பஞ்சாப் வரை விரிந்துள்ள மேற்குப் பிராந்தியம்.  அங்கு பெண் சிசுக்கொலை பரவலாக வழக்கிலிருந்த காலத்தில் , அதனை ஒழிக்க காலனிய அரசாங்கம் கடுமையாக போராடியது.  ஆனால் பெண்களுக்கு எதிரான இப் பாகுபாடு மெள்ள மெள்ள  புதிய பிராந்தியங்களையும் தமது ஆதிக்கத்தின் கொண்டுவர வரைபடம் (fig3) தெரிவிவிப்பதைப்போல தேசத்தின் ஒரு கணிசமான பகுதியை  இன்று அப்பாகுபாடு தமக்குரிமையாக்கிக்கொண்டுள்ளது.  இறுதியாக வெளிசார்ந்த  அண்மையும், பாகுபாட்டின் இயல்புகள் மற்றும் நெறிமுறைகளின் பிரச்சாரத்திற்கு உதவியது(மனியெ,2015) ; பாகுபாட்டின் இயக்கத் தன்மையை நன்கு விளங்கிக்கொள்ள சமூகம் மற்றும் பொருளியல் காரணிகளன்றி, கில்மோட்டோ  ஆய்வின் உதவியால் (2004,2006,2008, 2010) இன்று  புவிசார் காரணங்களும் உதவுகின்றன.

மக்கட்தொகையில்  இதுபோன்ற இடையூறு கள் ஏற்படுத்தும் தீங்கான பலன்களை அளவிடத் தொடங்கியிருக்கிறோம். அண்மைக்கால தலைமுறையில் எற்பட்டுள்ள பெண்கள் பற்றாக்குறையினால் முதலில் துன்பத்திற்கு ஆளாகிறவர்கள் திருமண வயதை அடைந்துள்ள இளைஞர்கள், விளைவாக தந்தைவழி இனப்பெருக்கமுறை மட்டுமின்றி மரபு வழிபட்ட பாலின கருத்தியமும் கேள்விக்கு ஆளாகியுள்ளது. இப்புதிய சூழல் பெண்களின் நிலையில் உண்மையில் மாற்றத்தைத் தந்துள்ளது, அவர்கள் தற்போது தங்கள் வரதட்சணையைக் குறைக்கும்படி பேரத்தில் ஈடுபடவோ அல்லது தங்கள் சாதிக்கு வெளியே மணம் செய்துகொள்ளவோ இயலும் (கௌர் 2014). காஃப் பஞ்சாயத்து அனுமதியுடன் கலப்புத் திருமணங்கள் ஜாட் வகுப்பினரிடையே  நடைபெறுவதைக் காண்கிறோம், அண்மைக் காலம் வரை இதனை நினைத்துப் பார்க்க இயலாது.  குடும்ப அமைப்புமுறை  இன்று கணவன்,மனைவி, பிள்ளைகள் எனும் தனிக்குடும்பமாக மாறிவருகிறது, இப்போக்கிற்கு, உலகமயமாக்கப் பட்டப் பொருளாதாரம் தரும் ஒத்துழைப்பினால்  பெண்களுக்கு வேலைவாய்ப்ப்பும்  அதனால் அவர்களுக்கு வாய்க்கிற தனித்து செயல் பட முடியுமென்ற  நம்பிக்கையும் தந்தைவழி சமூகத்தைக் கலகலக்கச் செய்வதோடு ஆண்பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கருத்தியத்தை உபயோகமற்றதாவும் ஆக்கியுள்ளது.  சமச்சீரான பாலின விகிதாச்சாரத்தை  அடைய ஊக்கத்தொகை, பலவகையான நிதி உதவிகளைப் பெண்களுக்கு மட்டுமே(5)  வழங்கி பாலினவேற்றுமைக்கு எதிராகப் பிரச்சாரத்தையும் மேற்கோள்ளவேண்டும்.  பாலின விகிதாச்சாரம் எதிர்பார்க்கின்ற காலக்கெடுவில்  இல்லையென்றாலும் சிறிது முன்போ பின்போ அந்தந்த மாநிலங்களைப் பொறுத்து ஓர் எல்லையைத் தொட்டு  தைவான் தென் கொரியா நாடுகளில் ஏற்பட்ட அனுபவத்தைப்போல பின்னர் குறையும்,  அதற்கு இங்கும்  பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை பரவலாக்கவேண்டும் என்பது  கில் மொட்டோவின் யோசனை(6), அவ்வழியில் நாமும் சிந்திக்கலாம். இதை உறுதி செய்வதைபோலவே வரை படம்( fig2)வடமேற்கு மாநிலங்களில் (பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், அரியானா)  இந்நிகழ்வு உண்மையாகியிருப்பதை  அம்மாநிலங்களில் பெண்களுக்கு அனுகூலமாக இருக்கும் பாலின விகிதாச்சாரம் தெரிவிக்கிறது, அதேவரைபடத்தில் கிழக்குப் பிராந்தியங்களிலும், ஆந்திர மாநிலத்திலும், பாலின விகிதாச்சாரத்தில் உள்ள  சரிவையும் காணமுடிகிறது.

(தொடரும்)

———————————————–

[1] L’intersectionnalité (Crenshaw, 2005) est une démarche tout à fait utile pour la géographie car elle permet d’étendre considérablement le travail de déconstruction sur les pratiques spatiales en intégrant les mécanismes de domination divers, liés au sexe, au genre, à la caste, à la communauté, aux générations. Cette réflexion sur l’intersectionnalité des catégories de genre, race et caste a très largement nourri le champ des postcolonial studies, des diapora studies, des queer studies.

[2] Les brahmanes appartiennent à l’ordre le plus élevé (varna) du système des castes (Marius-Gnanou et al., 28, 2015)

[3] Amartya Sen est sans doute l’un des penseurs indiens qui a proposé l’une des analyses les plus pertinentes sur les inégalités dans le contexte indien en adoptant une approche multidimensionnelle, combinant classe, caste et genre.

[4] Les données sont issues du recensement de 2011, c’est pourquoi dans les documents de cet article l’Andhra Pradesh n’est pas divisé comme c’est le cas depuis 2014 avec la création d’un nouvel État, le Télangana.

[5] Le gouvernement central a mis en place The National Girl Child Protection Scheme, qui attribue des aides aux familles pour la scolarité de leur fille, pour leur mariage, selon leurs revenus.

[6] Guilmoto, Christophe. « La masculinisation des naissances. État des lieux et des connaissances », INED, 2015 (pdf)

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s