கதை சொல்லி – 4 (சென்ற வாரத் தொடர்ச்சி) – பியர் ரொபெர் லெக்கிளெர்க்

                கதை சொல்லி , தமது கற்பனை நகருக்கு வந்தாயிற்று.. அதிசய நகரத்தை அடைவதற்கு முன்பாக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. முதியவரின் சகோதரர் நஃபிசாட்டு இவருடைய துபாம்பூலுக்கே வந்திருந்து விமானமேற்ற டக்கார் நகருக்கு அழைத்துச்சென்றர். முதியவர் விமானத்தில் காலைவைத்த பின்னரே அவரும் புறப்பட்டுச் சென்றார். விமானப்பணிப்பெண்ணிடம் ஒரு குழந்தையைப் போல அவர் ஒப்படைத்துவிட்டு ச் சென்றார், அதை நபிசாட்டு உணர்ந்திருக்கவில்லை. பாரீஸ் நகரில் ஒரு விமான நிலையத்திலிருந்து மற்றொன்றிர்க்கு அவரை பத்திரமாக அனுப்பிவைத்தது அதே விமானப் பணிப்பெண் தான். கடந்த எட்டு நாட்களாக செடார் சகோன் என்கிற ஸ்லாபூகூம், ஒவ்வொரு நாளும் காலையில், இனிமேலும் மர்மமாக இருக்க சாத்தியமற்ற ஹூல்ட்ஸ் அம்பை( அம்பையொத்த கதீட்ரல் கோபுரம்கத்தீட்ரலை வடிவமைத்தவர் ஹூல்ட்ஸ் என்கிற கட்டிடக் கலைஞர்) அல்லாவிற்கு நன்றியைத் தெரிவித்தபடி பார்க்க முடிகிறது. அவர் நன்றி தெரிவிக்கிறவர்களின் பட்டியலில் நஃபிசாட்டு, அப்தூலயே, உமர் மூவரும் இருக்கிறார்கள். அவர்களின் உதவியின்றி ‘ Gallia’ என்றழைக்கப்படுகிற ஸ்ட்ராஸ்பூர்க் பல்கலைக் கழக மாணவர் விடுதி 243 ஆம் எண் அறைவாசியாக தற்போது இருக்கச் சாத்தியமில்லை.

மணி எட்டாகிறது. கீழே இறங்கி ஒரு சிறுவனைபோல காலை உணவாக இரண்டு சாக்லெட் திணித்த ரொட்டியை விரும்பித் தின்பதற்கான நேரம்.

-போதுமான நேரம் இருக்கிறது, இரண்டு வாரங்கள் தங்க இருக்கிறாய்

நேரம், நேரம்! எல்லோரும் இங்கு நேரம் பற்றியே பேசுகிறார்கள்.

விமான நிலையத்தைச் சுற்றிப்பார்க்கவிரும்பியதால் உடனடியாக புறப்பட முதியவருக்கு விருப்பமில்லை. ஸ்ட்ராஸ்பூர் (Strasbourg) நகரை சில மணி நேரங்களில் அவர் பார்க்கப்போவதில்லை. தவிர விடுதியில் அவருக்காகப் பலர் காத்திருக்கிறார்கள் எனக்கூறி அப்தூலயே அவரைச் சமாதானப்படுத்தினான்.

– ‘ ஹூல்ட்ஸ் அம்புஎன்பதென்ன ? எங்கிருக்கிறது ?

புரியலை.

– ‘ஹூல்ட்ஸ் அம்பு‘.

என்ன அம்பு ? அப்படி எந்த அம்பும் இங்கில்லையே.

-அப்படி ஒன்றிருக்கிறது. சினேகிதன் லூசியன் சொல்லியிருக்கிறானே !

லூசியானா ? யார் அது ?

எனக்கு அதுபற்றிய தகவலை விளக்க ஒருவர் கிடைக்காமலா பொவிடுவார். எப்படியும் அப்படி ஒருவரை நிச்சயம் கண்டிபிடிப்பேன்.

அப்தூலயேக்கு கவலை வந்துவிட்டது. கிழவர் மூளைக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாதென நினைத்தான். மேயர் டீட் ரைஸ்‘ (Maire Dietrich) சாலையிலிருந்த பல்கலைக்ழக மாணவர் விடுதிக்கு முன்பாக இருவரும் கடைசியில் வந்துசேர்ந்தபோது, அவர் மனநிலைப் பாதிப்புக் குறித்துத் தெளிவாய் இருந்தான். லா மர்செய்யேஸ்(la Marseillaise) பாடலில் சிலவரிகளை முணுமுணுத்தார். வரவேற்பில் இருந்த பெண்ணிடம் அவர் நடந்துகொண்ட விதம் அவனுடைய பயத்தைக் குறைக்கப் போதுமானதாக இருந்தது. அப்பெண்ணும் அப்தூலயேவுமாக முதியவருக்கென ஒதுக்கியிருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்கள்

-மதாம், உங்கள் நடையுடை பாவனை எல்லாம் நேர்த்தியாக இருக்கிறது ! – என வரவேற்பு பெண்ணிடம் பெரியவர் கூறினார்

இதுதான் உங்கள் அறை, எண் 243. இது உங்கள் அறையின் சாவி. – பெண்.

கொஞ்சம் இரும்மா, போகாதே ! உன்னிடம் ஒன்று கேட்கவேண்டும். ஹூல்ட்ஸ் அம்பு என்றால் என்ன தெரியுமா?

அப்தூலயே சங்கடப்பட்டான். பிரச்சினையிலிருந்து தப்பிக்க நினைத்தவன்போல அறையின் வசதிகள் குறித்துப் பேச விரும்பினான். மாறாக முதியவர், அறைக்குள் நுழைந்த மறுகணம் கட்டிலில் உட்கார்ந்தவர், தன்னுடைய சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வதைத் தவிர வேறு வேலையில்லை என்பதைப்போல :

ஹூல்ட்ஸ் அம்பு ? என மீண்டும் வினவினர்.

நீங்கள் அம்பு எனக்குறிப்பிடும் ‘flèche ‘ என்றப் பிரெஞ்சு வார்த்தைக்கு கோபுரம் என்றும் பொருளுண்டு

, இப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஹூல் ட்ஸின் முழுப்பெயர் ஜோஹன்னஸ் ஹூல்ட்ஸ் (Johannes Hültz) – முதியவர்.

கிழவரின் பிதற்றலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பெண்ணும் எதையோ உளறுகிறாளென அப்தூலயே நினைத்தான்.

சரி கொஞ்சம் இப்படி சன்னல் பங்கம் வாங்க, கூறிய பெண் சன்னலை நோக்கிநடக்க, அப்தூலயேவும் அவனுடைய பெரியவரும் அவளைப் பின் தொடர்ந்தார்கள். சன்னல் அருகில் நின்றவள், ‘ இடதுபக்கம் உயரத்தில் என்ன தெரிகிறதென்று பாருங்கள்‘, என்றாள். பேரனும் தாத்தாவும் அவள் காட்டிய திசையில் பார்த்தார்கள்.

இது தானாஅது?

கதீட்ரலின் தேவாலய மணிகூண்டு.

பெண்ணின் கை முதியவரின் தோளில் இருந்தது. அவள் பக்கம் திரும்பியவர், «  லூசியன் பொய் சொல்லவில்லை, எனக்கூறினார், அவ்வாறு கூறியபோத, கண்களில் நீர் அரும்பியது

கோபுரத்தின் உயரம் 142 மீட்டர் ! கதீட்ரலை கட்ட ஆரம்பித்தது பன்னிரண்டாம் நூற்றாண்டு. கோபுரத்தை ஜோகன்ஸ் ஹூல்ட்ஸ் கட்டி முடித்தது மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு , கற்பனை செய்துபாருங்கள் ! – பெண்.

இப்படியின்று இருக்குமென்று எனக்கு நன்றாகத் தெரியும். லூசியன்!…இக்கோபுரம் பற்றி என்னிடம் பேசியிருக்கிறான்.

          லூசியான் யார் என அவள் வினவவில்லை. கதீட்ரலின் உயரமான கோபுரத்தின் பக்கம் பார்வை சென்றது. ஹூல்ட்ஸ் அம்பு‘ , எனும் புதிரானச் சொற்கள் இரண்டும் அர்த்தமின்றி அவருடைய கதைசொல்லலில் இடம்பெற்றவை, அவை பொருளுளிழந்த சொற்களாகவே இருந்தன. அவை திடமானவையாக, மிகுந்த உயரத்தில் விண்ணில் பறப்பதற்கு முனைவதுபோல இருந்தன. உணர்ச்சிப் பெருக்குடன், கன்னத்தில் விழுந்து உதடுகளருகே உருண்ட ஆனந்தகண்ணீரைத் தேய்த்துத் துடைதார்.

          ஒரு வாரத்தில் ஸ்லாபூகூம் அவர் இதுவரை அறிந்திராத வேறு பல தகவல்களும் நகரைப்பற்றிக் கிடைத்தன. தமது சினேகிதனின் ஊரிலுள்ள அனைத்தையும் பார்க்க விரும்பினார். குடைராட்டினத்தில் சுற்ற ஆசைபட்ட குழந்தையைப்போல டிராமில் பயணப்பட்டார். செல்லவேண்டிய இடம் தூரமெனில், கார் வைத்திருந்த ஒன்றிரண்டு பேர் வழிகாட்டிகளாகக் கிடைப்பார்கள், அவர்களைச் சென்றுபார்ப்பார். தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள நினைத்து, ரோவான் கோட்டை‘ (le château des Rohan), கதீட்ரல் கடிகாரம்,’ le palais de l’Europe’ மண்டபம், அதே பெயர்கொண்ட ஒரு பாலம் ஆகியவற்றைக் காணச் சென்றபோது நூற்றுகணக்கான கேள்விகளை எழுப்பினார். ‘la pharmacie du Cerf’ என்ற மருந்தகம் பிரான்சு நாட்டின் முதல் மருந்தகம் எனும் தகவல் அவருக்கு வியப்பை அளித்தது. இதுபோன்ற உண்மைகளைத் தெரிந்து கொள்கிறபோது கிராமத்துப் பரணொன்றில் பதுங்கி யிருந்தபோதும், பயணத்தை விடிந்து தொடரலாமென காட்டில் காத்திருந்த இரவுவேளையிலும்,, இலண்டனுக்குச் செல்லும் வழியிலும் சினேகிதன் லூசியன் மொர்பான்ழுடையக் வார்த்தைகள் போல இருந்தன. புதிது புதிதாய் ஒன்றை அறிகிறபோதெல்லாம் அவர் நெகிழ்ந்துபோகிறார். சிற்சில சமயங்களில் அவர் வாய் விட்டுச் சிரிப்பதுண்டு, அதற்கான காரணமும் பூடகமானது. ஊரில் தீவென்று இவர் வர்ணித்தது எப்படி தீவாக அல்லாமல் நதியாக இருந்ததோ அதுபோலக் கேட்டவர்கள் வியப்புற்ற ஸெல்‘(Zel) எனக்குறிப்பிட்டதும், கடைசியில் கதீட்ரலுக்கு எதிரே ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு மனிதர் குடியிருப்பாகத் திகழ்ந்த லா மெய்ஸோன் கமிட்ஸெல் (la maison Kammerzel) என்ற கட்டிடமன்றி வேறில்லை என்பதை விளங்கிக்கொண்டார். லூசியன் மொரான்ழ் நினைவுகளையெல்லாம், காலம் துடைத்திருந்தது, அவற்றில் எஞ்சியவற்றைக்கொண்டு வியப்புக்குரிய புனைவுகளை உருவாக்கினார். இன்று அவையெல்லாம் திரும்ப உண்மையாயின. இதுநாள்வரை பொருளைத் தொலைத்திருந்த அதுபோன்ற சொற்கள், கூற்றுகள் எல்லாம்,நகரைச்சுற்றுகிறபோது எதிர்பாராதவிதத்திலும்,, காப்பி விடுதியில் அற்முகம் ஆனவர்களிடம் வித்தியாசமானதொரு ஆப்ரிக்காவை இவர் இட்டுக் கட்டி விவரிக்கிறபோது கேட்கிறவர்கள் சந்தேகித்தவையும் இன்று உண்மையாயின. கனிம நீர், பீர், சாலட் ஆகியவற்றைக் கேட்பவர்களுக்கு கொடுத்துக்கொண்டே அப்தூலயே சிரித்துக்கொண்டிருப்பான். ‘இவரை ஏன் அழைத்தோம்என்கிற கவலைகளெல்லாம் அவனிடத்தில் தற்போதில்லை.

           கழிந்த ஒவ்வொரு நாளும் இளமைக்காலத்தை அவரிடம் திரும்ப அழைத்திருந்தது. அல்ஸாஸ் பிரதேச ‘les Dernières nouvelles d’Alsace’ செய்தித்தாளைப் வாசித்துக்கொண்டே காலை உணவை உட்கொண்டிருந்த முதியவருக்கு, ஸ்ட்ராஸ்பூர்நகர 60000 குடும்பங்களும் குடிநீர் விநியோக பிரச்சினையால் தவித்த செய்தியையும், நகரப் பேருந்துகளில் முன்னால் ஏறவேண்டிய நிலைமையையும் இனிப்பிறருக்குச் சொல்லலாம் என்பதை நினைக்கப் பெருமையாக இருந்தது. அவர் தங்கியிருந்த மாணவர் விடுதியையே விலைக்குவாங்கிக்கொள்ளும் உத்தேசத்திலிருப்பவர்போல விடுதி முழுவதையும் சுற்றிப்பார்த்தார். ‘கலியா‘(Gallia) என அழைக்கபட்ட அவ்விடுதியின் ஒவ்வொரு மாடியிலும் ஏறி இறங்கினார். சில சமயம் தனித்தும், சிலசமயம் துணையுடனும் அது நிகழ்ந்தது. அப்போது, மாணவர்களின் உடற்பயிற்சிக் கூடத்தையும், அவர் கண்டிராத புதிய உடற்பயிற்சிக் கருவிகளையும்; ஓவியக்கூடத்தில் இசைக்கும் பியானோவையும், புத்தகங்களில் வரிசை வரிசையாகக் கவிழ்ந்திருந்த தலைகளை நூலகத்திலும் கண்டார். மாணவர்களில் ஒன்றிரண்டுபேர் தங்கள் அறைக்கு அழைத்தபோது இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் அவர்கள் அறைக்குச் சென்று அவர்களின் வாழ்வனுபவக் செய்திகளைக் காதுகொடுத்து கேட்பார், இவரும் தன்பங்கிற்கு துல்லியானத் தகவல்களைக்கற்பனையாக உருமாற்றித் தெரிவிப்பதுண்டு. அவரிடம் உரையாடியவர்கள் அனைவரும் ஆளுக்கொருவிதமாய் இருந்தது அவருக்கு வியப்பினைத் தந்தது. உலகிலுள்ள நாடுகள் அனைத்தும் தங்களின் பிரதிநிதிகளாக மாணவர்களை விடுதிக்கு அனுப்பியிருக்கவேண்டுமென நினைத்தார். அவர்கள் சொல்ல நிதானத்துடன் கேட்டார், இடைக்கிடை அவர்களின் நாட்டார் மரபுக் கதைகள் பற்றி வினாக்கள் எழுப்புவார், அவற்றைக்கொண்டு புதிய, இசைவான குட்டிக்கதைப் படைத்தார். அவை அனைத்தையும் நினைவிற்கொள்ள இயலாமற்போகலாம். ஆனால் அவற்றில் நினைவில் நிறுத்த முடிந்தவற்றிலிருந்து, முதியவர் தமது சொந்த ஊரான துபாம்பூல் திரும்பியதும் , அவருடைய புனைபெயருக்குக் கடன்பட்டுள்ள வீதிகள் நகரம் குறித்து, அந்நகரம் பற்றிய உண்மைகள் கூடுதலாகத் தெரியவந்துள்ள நிலையில் இனி உரைக்கும் கதைகளில் அடுக்கடுக்கான அத்தியாயங்களைச் சேர்க்க உதவும். ஆனால் என்றும் விளங்கிக்கொள்ள இயலாதப் புதிராக அம்பும்‘, ‘ஸெல்லும் தொடரும், ஆனான் அவற்றுடன் வேறுபல பல இரகசியங்களும் இணைந்துகொள்ளும். ஏற்கனவே இவருக்கென மாணவர் பேரவை எற்பாடுசெய்திருந்த நிகழ்ச்சியொன்றில் கேட்டவற்றை தம்முடைய உபயோகத்திற்கென பத்திரப்படுத்திக்கொண்டார். .

          இவருடைய நிகழ்ச்சிக்கென வைத்திருந்த அறிவிப்புத் தட்டி ஸ்லாபூகூம், புகழ்பெற்ற கதைசொல்லி யினுடைய நிகழ்ச்சி எனத் தெரிவித்தது. அதன்படியே நிகழ்ச்சிக்குப் பெருங்கூட்டம். கைத்தட்டியவர்களைக் காட்டிலும் அவருடைய கதைசொல்லலில் மயங்கியவர்கள் எண்ணிக்கை அதிகம், அப்படியொரு வெற்றி. அவரொரு தொழில் முறை கலைஞர் இல்லையென்கிறபோதும் சிரிப்பையும், உணர்ச்சியையும் சரியான அளவில் கலந்து, சேட்டைகளின்றி பார்வையாளர்களைக் கட்டிப் போட அவரால் முடிந்தது. துபாம்பூலில் நடந்ததைப் போலவே ஒவ்வொரு சொல்லும் புதிய சொற்களுக்குக் காரணமாயின, அதுபோலவே ஒவ்வொரு புனைவும், புதிய புனைவுகளுக்கு வித்திட்டன. உதாரனத்திற்கு தேன் நிறகூந்தலையுடைய இளம்பெண்ணின் கதை தற்போது, துரதிஷ்டம்கொண்ட எகிப்திய பெண் தேவதையை கொக்கொன்று இந்திய அரண்மணையில் காத்திருந்த காக்கேசிய (Caucase) இளைஞனிடம் கொண்டுபோய் சேர்த்தது. மாறுபட்ட இழைகளைக்கொண்டு திரும்பத் திரும்ப புதிய ஆடையாக உருமாற்றிகொண்டிருந்தார். விதிவிலக்காக கழுகும் சேவலும் என்ற கதையை மட்டும் முதல் நாளிலிருந்தே, திரும்பத் திரும்பத் சொல்லவேண்டியக் கட்டாயம். கேட்டவர்களில் ஒருவர் கீழ்க்கண்ட வகையில் அதைக்குறித்து எழுதினார்.

“தனது கூடு போதாதென நினைத்த கழுகொன்று சேவலொன்றின் பிரதேசத்தைக் கைப்பற்றியது. அதன் இறக்கைகொண்டு முதலில் இருமுறைத் தாக்குதல், பின்னர் மூன்றுமுறை அலகால் கொத்த பிரச்சினை எளிதாகத் தீர்க்கப்பட்டது. வெற்றிபெற்றக் கழுகு , தம்மால் முடிந்த அளவிற்குக் கழுகுகளை ஒன்று திரட்டி, அற்புதமானதொரு வீட்டை வோழ்மலை கற்களைக்கொண்டு கட்டியது. சூரியன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவ்வீடு சூரிய ஒளியைப் பிரதிபலித்தது. சேவல் பொறுமையுடன் சில ஆண்டுகள் காத்திருந்தது, அதுவும் தன்னால் முடிந்தமட்டும் துணைக்கு சேவல்களைச் சேர்த்துக்கொண்டு கழுகுடன் சண்டையிட்டுத் தனது பிரதேசத்தைக் கைப்பற்றி கழுகின் அற்புதமான வீட்டைத் தனதாக்கிக்கொண்டது.. கழுகு அதிகக் காலமெல்லாம் காத்திருக்கவில்லை. சேவல்களை அடித்துத் துரத்திவிட்டு, தன்னுடைய அதிசய வீட்டைத் திரும்ப எடுத்துக்கொண்டது. ஆனால் மீண்டும் குறுகிய காலத்திலேயே ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்காவென்று வெகு தொலைவிலிருந்து வந்த மிருகங்களைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டு கழுகைத் துரத்திவிட்டுத் திரும்பவும் சேவல் அந்த அற்புதமான வீட்டைத் தன்வசம் ஆக்கிக்கொண்டது. அக்கணத்தில் கழுகுகளும், சேவல்களும் பொருளின்றி சண்டையிட்டு அடிக்கடி உறையும் இடத்தை மாற்றிக்கொண்டிருப்பது வீணென்று புரிந்துகொண்டன. கழுகு சேவலின் பிரதேசத்திற்கு ஆசைப்படுவது தவறென உணர, அன்றிலிருந்து ஏராளமான சேவல்களும், கழுகுகளும் மாத்திரமின்றி கரடி, சிங்கம், மான், எருது, புறா என அனைத்து விலங்குகளும் ஒற்றுமையுடன் அந்த அதியவீட்டில் வசிக்கத் தொடங்கின.”

          இக்கதை யை முழுமையாக இட்டுக்கட்டியதென்று கூற முடியாது. அனைத்திற்கும் மேலாக வியப்புக்குரிய விஷயம் கலியா‘ (Gallia) என்ற பெயர்காரணத்தைத் தெரிந்துகோள்ள அவர் காட்டிய ஆர்வம். அவருக்கு அது தெரிவந்தபோது பெருமையாக இருந்தது.

ஆரம்பத்தில் கலியா என்ற பெயரில்லை. ஜெர்மானியா என்றே அழைக்கப்பட்டது. காரணம் 1870க்குப் பிறகு ஜெர்மானியர்கள்…………யுத்தத்தில்

அந்தப் போர்பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் ஜெயித்திருந்தார்கள்.

நெப்போலியன் படையில் செனெகல் நாட்டு வீரர்கள் இடம்பெறாததுதான் காரணம்.- என்பது பெரியவரின் பதில்.

ஜெர்மானியர்கள் எழுப்பிய கட்டிடம். ஆனால் 1918ல் பிரெஞ்சுக்காரர்களின் கைவசம். ஜெர்மானியர்கள் இனி இல்லையென்றான பிறகு கலியாஎன்று அழைக்கத் தொடங்கினார்கள்.

40 ல் மறுபடியும் ஜெர்மானியாஆனதில்லையா.

ஆமாம், ஆனால் 45ல் மீண்டும்…..

புரிகிறது. இக்கதை நல்லவேளை பாதகமாக முடியவில்லை

உங்களிடம் அப்படி முடிகிற கதை இருக்கிறதா ?

இல்லை. பொதுவாக கதைக்கேட்பவர்கள் சுபமாக கதை முடியவில்லையெனில் கேட்கமாட்டார்கள்.

இக்கதை நீங்கள் பிறருக்குச் சொல்லக்கூடியதுதான். ஆனால் எல்லோருக்கும் தெரிந்தக் கதையாயிற்றே.

          முதியவர் சிரித்தார். அப்தூலயேவிற்கு ஸ்லாபூகூம் உண்மையான கதையொன்றை படைக்கக்கூடியவர் என்று தெரியாது.

           ஹூல்ட்ஸ் கோபுரத்தை ப் பார்க்கிறார். இனி அவருக்கு அது புதிரில்லை. அல்லாவுக்கு நன்றி தெரிவிக்கிறார். அதேவேளை நஃபிசாட்டு, அப்தூலயே, உமர் ஆகியோரையும் அவர் மறந்தவரில்லை. சாக்லேட் திணித்த ரொட்டியை, ஒரு சிறுவனைப்போல விரும்பிச் சாப்பிடும் நேரம். தூண்களுக்கிடையில் கச்சிதமாக அமைந்த 243 ஆம் எண்கொண்ட அறை, அசையாமல் நின்றிருந்தார். பதினைந்து நாட்களும் வேகமாக கரைந்துவிட்டன. ஸ்லாபூகிமிற்கு, ஸ்ட்ராபூர்கூமை மட்டுமல்ல பழகிவிட்ட கலியாவையும் பிரிந்து செல்ல மனமில்லை என செடார் சொகோன் முனுமுனுத்தார். தனது சினேகிதன் லூசியன் மொரான்ழிடம் , « அவர்கள் என்னைத் தங்கச்சொல்லப்போகிறார்கள் பார்எனத் தெரிவித்தார். இங்கே எனக்கு நன்றாக இருக்கிறது. தவிர நான் காணவேண்டிய வீதிகளும், வரலாற்று நினைவுச்சின்னங்களும் மிச்சமிருக்கின்றன. இங்கிருக்கிறவர்கள் அனைவரையும் விரும்புகிறேன். உன்னுடைய நகரத்தைப் பற்றி நிறைய கதைகள் சொல்லவேண்டியவை பாக்கியுள்ளன. அவற்றைச் சொல்லி முடித்ததும், பிற கதைகளுக்குச் செல்வேன். அல்ஸாஸ் மிகப்பெரிய பிரதேசம். »

          தனது எதிர்காலத் திட்டம் பற்றிக் கூறியதைத் திரும்ப முணுமுணுத்தார். அவரை ஒருவரும் முட்டளாக்க முடியாது. இனி இதுபோன்ற நாளைகள் உண்மை அல்லாத கதை மாந்தருக்கென அவர் படைக்கும் கற்பனை மனிதர்களிடத்தில் மட்டுமே சாத்தியம். இன்னும் சிறிது நேரத்தில் கலியாவைச் சேர்ந்த நண்பர்களும் பிற நண்பர்களும் வழி அனுப்ப வருவார்கள், சற்றுமுன்னர் அவர் உரையாடத்தொடங்கிய லூசியானும் அங்கு வரக்கூடும். உலகின் அம்மறுமுனை, விமான தளம், மேகத்திற்கு மேலே, நாலாயிரம் கி.மீட்டர் தூரத்தில் இருக்கக்கூடும், செனெகெல் நாட்டு டாக்ஸியில் சென்றால் இருநூறு கி.மீட்டர். அவருடைய வாழ்க்கை துபாம்பூலில் கதைசொல்லி யாக இருப்பதேயன்றி, சாலைகள் ஊரில் ஒரு நட்சத்திரமாக வலம் வதில்லை.

வருகின்றவர்கள் எதுவேண்டுமானாலும் கூறட்டும், நான் இங்குதான் தங்கப்போகிறேன்

          இனி இந்தவாழ்க்கை சாத்தியமில்லை என்கிற போதும் கணநேரம் அதில் திளைப்பதும் சுகமாக இருந்தது. நம்பிக்கையின்றி அவ்வனுபவக் கற்பனையில் மூழ்கினார். சாக்லேட் திணித்த ரொட்டியை மறந்து பாலகணியில் அசையாமல் நின்றார். இடதுபக்கம் கதீட்ரல், வல்துபக்கம் சேன்போல் தேவாலயம். நேரெதிரே தீவுஎன்று பெயர்கொண்ட நதி ஓடிக்கொண்டிருந்தது, நதியில் சுற்றுலா பயணிகளின் படகுகள்.

முற்றும்

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s