அடுத்தடுத்து சில பணிகள் காரணமாக முக நூல்பக்கம் அதிக வர இயல்வதில்லை. எனவே ‘எப்படி நடந்தது, என்று நடந்தது என்பதை உணரப்படாமலேயே அந்தி சாய்வதுபோல தினசரி நிகழ்வுகளில் ஒன்றாக அதிகம் கவனத்திற்கு வராமலேயே ரெ. காரத்திகேசுவின் மரணம் நிகழ்ந்துவிட்டது..
எனக்கு அவருக்குமான தொடர்பு என்பதைவிட அறிமுகம் ராயர் காப்பிக் கிளப் மூலமாக ஏற்பட்ட து. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திண்ணை இணைய இதழில் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தபோது, அவற்றில் சிலவ்ற்றை வாசித்து என்பீது அன்புகொண்டு, நான் வெளி உலகிற்கு வரவேண்டும் என ஆசைப் பட்டவர்கள் பட்டியலைக் கவிஞர் சதாரா மாலதியிடமிருந்து தொடங்கவேண்டும். மிகச்சிறந்த ஆர்ப்பாட்டமற்ற கவிஞர். இரண்டு கிழமைக்கு ஒரு முறையாவது மின்ன ஞ்சல் எழுதுவார். பெரியவர் கி.அ. சச்சித்தானந்த த்தை இலண்டன் வந்திருந்தபோது, அவரைப் பிரான்சுக்கு அனுப்பிவைத்து, ஸ்ட்ராஸ்பூர்வரை அவரும் வந்து மூன்று நாட்கள் தங்கிச்சென்று எனது படைப்புகளைப் பற்றி சந்தியா நடராஜனிடம் கூறி பதிப்பிக்கவைத்தவர். மாத்தாஹரி நாவல் வெளிவந்தபோது எனி இந்தியன் பதிப்பகத்திற்குச் சென்று கையோடு நாவலைக்கொண்டுபோய் அதற்கு கி.அ சச்சிதானந்தம் எழுதிய மதிப்புரை சம்பிரதாய விமர்சனமல்ல. இன்றளவும் அந்த அன்பு நீடிக்கிறது. அவர் வரிசையில் தான் அமர ர்கள் வே.சபாநாயகம், ரெ.கார்த்திகேசு போன்றவர்களையும் நிறுத்தவேண்டும். இவர்கள் இழப்பு எனது சொந்த இழப்புபோல. ரெ. கார்த்திகேசு கதைகள் எளிமையானவை, பன்முக ஆளுமை கொண்டவர். ஆனாலும் பிறர் எழுத்துக்களை பிடித்திருந்தாமல் மனமுவந்து பாராட்டுவார். பாரீஸில் ஒரு தமிழ் மாநாட்டைக்கூட்டினார்கள். தமக்கு அழைப்பு வந்திருப்பதாகவும் ‘நாகி’ உங்களைப் பார்ப்பதற்காக க் கலந்துகொள்ளப் போகிறேன். என எழுதினார். நான் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லையென நினைக்கிறேன். ஆனால் வெளியில் எங்கேனும் சந்திக்கலாமென எழுதினேன். ரெ.கா. பிரான்சு வரவில்லை, அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் எனக்கு அமையவில்லை. அக்குறை பின்னர் கோவையில் ‘தாயகம் கடந்த தமிழ்’ நிகழ்வில் தீர்ந்தது. நண்பர் மாலன், திரு சிற்பி ஆகியோரின் பெரும் பங்களிப்பில் நடந்த இரு நாள் நிகழ்வில் ஓர் அமர்விற்கு என்னைத் தலமை தாங்கச்சொல்லியிருந்தார்கள். அது கார்த்திக்கேசுவிற்கும் மாலனுக்குமுள்ள உயர்ந்த நட்பின் விளவாக சாத்தியமாகி இருக்கவேண்டுமென்பது என் ஊகம். நிகழ்வின் போது இரண்டு நாட்களும் ரெ.கா வுடன் போதிய அளவிற்கு உரையாட முடிந்தது.
மாத்தாஹரி பிரெஞ்சில் 2017ல் வந்துவிடுமென்று நம்பிக்கை.செய்தியை அறியவந்தால் உண்மையில் மகிழக்கூடியவர்களில் அவரும் ஒருவர். .
எனக்கு சிலர் யோசனைகூறியதுபோல, அவர்கூட மலேசியாவில் ஒரு பரிசொன்றை ஏற்படுத்தி வருட த்திற்கு ஒரு மூத்த எழுத்தாளருக்கு ஐந்தாயிரம் மலேசிய வெள்ளி பரிசு கொடுத்திருந்தால், தமிழகச் ஜாம்பவான்கள் கொண்டாடியிருப்பார்கள். ஆனால் பகலும், இரவும், காலையும், மாலையும், பூத்தலும், காய்த்தலும் யார் அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறது?.