கதை சொல்லி (le voyage de Slaboulgoum) -பியர் ரொபெர் லெக்ளெர்க் -தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா

 

(Pierre –robert Leclercq பிரெஞ்சு படைப்பாளி சிறுகதைகள், கவிதைகள்,நாவல்கள், நாடகங்களென ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்புகளை தந்திருக்கிறார். குறுநாவலையொத்த இச்சிறுகதை ‘Griot’ என்று ஆப்ரிக்க மொழியில் அழைக்கப்படும் ஒரு கதைசொல்லியைப் பற்றி பேசுகிறது. இக்கதை சொல்லி பிரெஞ்சுக் காலனியாக இருந்த செனெகெல் நாட்டில் இருந்துகொண்டு யுத்தகால அனுபவமென்று கதைசொல்ல முற்படுகிறார். உண்மையா, கட்டுக்கதையா? ஆர்.எல் ஸ்டீவன்ஸன் treasure island , தனது வீட்டில் அடைந்துகிடந்த நிலையில் எந்தத் தீவையும் காணாமலேயே எழுதியதாகச் சொல்வார்கள். , துராஸ் கல்கத்தாவை எட்டிப்பார்க்காமலேயே அந்நகரம் குறித்து தமது புனைவொன்றில் விவரிக்கிறார். நீலக்கடல்நாவலை எழுதியபோது மொரீஷியஸ் தீவை நான் பார்த்்தில்லை. எனினும் தன் சொந்த மரணத்தைக்கூட ஒரு கதைசொல்லியால் விவரிக்க இயலும். இது கதைசொல்லிகள் வாங்கிவந்த வரம். இச்சிறுகதை வாசித்தபோது கி.ரா. பற்றிய நினைவு இயல்பாய் தொடர்ந்தது)

தூபாம்பூல்(Touba Mboul) நகரத்திலிருந்து வெளியேறும் சாலையில் அவர் தன்னந்தனியாக வசித்து வருகிறார்.அவருடைய  வீட்டு வாசற்படியிலேயே  ஏதிர்கொள்வது நிச்சயம். தணிந்த குரலில், அவர் மட்டும் தனித்து உரையாடுவதைக் கண்டு ஒரு சிலர் ஆச்சரிப்பட்டிருக்கிறார்கள். «எங்க இருக்கிற? எங்க சாகிறஎன்பது போன்ற விநோதமான வார்த்தைகளை அவர் கூறக் கேட்டிருக்கிறார்கள்.

நிறைய பயணங்கள் செய்ததுண்டு என்கிறார். அவர் வர்த்தைகளின் படி சொல்வதெனில் ஏராளமாக……வெகுதூரம்நிறைய நாடுகள்“. கடந்த சில வருடங்களாக அவருடைய கால்கள் நீண்டதூர பயனத்தை மறுத்து வருகின்றன. பொஸ் (Mbos) நகரத்தில் வசிகும், செனெகல் நாட்டுக் கண்ணாடி ஓவியர்களில் மிகவும் புகழ்பெற்ற தனது இளம்வயது சகோதரரைக்கூட தற்போது பார்க்ப் போகும் வழக்கமில்லை. செனெகெல் நாட்டு ஷியா இஸ்லாமியர் வழக்கப்படி தம்ஹாரி(Tamkharit) என்கிற புதுவருடத் தினத்திற்கு மட்டும் பயணத்திலிருந்து விதிவிலக்குண்டு. விசுசாசிகளின் தலைவிதியை அன்றைய தினம் அல்லா தீர்மானிக்கிறார். தூபாம்பூல் நண்பர்களெல்லாம் ஒன்று கூடுவார்கள். பகலில் அரிசிச் சோறு, கருவாடு, மாமிசம், தக்காளி, மாவாக்கப்பட்டுப் பிசைந்த நிலக்கடலை  கலந்த எம்பக்ஸால்யூசலூம்(mbaxal-u-saloum) செனெகல் நாட்டு உணவை அவர்ளுடன் சேர்ந்து உண்பார். இரவானால் அவர்களுக்குக் கதைச் சொல்லத் தொடங்கிவிடுவார். வோழ் (Vosges) மலையில் போனோம்‘, ‘ஷ்லூர்ட்கண்வாய்களுக்கிடையே பசியுடன் திரியும் ஓநாய்கள், இலண்டன் பெண்ணொருத்தியுடன் காதல், 24செ.மீ நீளமுள்ள ஒரு வடு, ராணுவத் துணைத் தளபதி ஒருவரின் விமானம் லூசியன் மொரான்ழ் சிரிப்புகள் என்று அவருக்குக் கதைசொல்ல விடயங்கள் இருந்தன. கஒலாக், மிஸ்ஸிரா, ஃபூந்த்தியூன் என்று வெகுதூர ஊர்களிலிருந்தெல்லாம் , தூபஎம்பூல் நகருக்கு கதை கேட்க வருகிறார்கள். பிரான்சு நட்டிலிருந்தும் எழுத்தாளர் ஒருவர் வந்தார். தம்மிடமுள்ள தகவல்கள் போதாத நிலையில், அக்குறையைத் தவிர்க்க சில ஆப்ரிக்க கதைகளைக்கொண்டு தமது பாணியில் கலந்து சொல்லஎழுத்தாளர் ஏமாற்றதுடன் புறப்பட்டுவிட்டார். பிரெஞ்சு எழுத்தாளருக்கு ஆப்ரிக்க மக்கள் பூர்வீகக் குடிகள், எனவேப் பழங்குடியினர், மனித மாமிசம், நாற்பதுகளில் எடுக்கப்பட்டதிரைப்படங்களில் வருகிற கொண்டாட்டங்கள் போன்றவற்றை அக்கதைகளில் எதிர்பார்த்தார், ‘ஹூல்ட்ஸ் (Hultz) அம்புஎன்றும் வார்த்தை வந்தது, பிரெஞ்சு எழுத்தாளரைத் தடுக்க உதவவில்லை. ராணுவத் தளபதி ஒருவரின் கிரேடு பற்றிய பேச்சுதுகூட பெரிதாய் அவரை ஈர்க்கவில்லை. கிழவர் சொல்வதற்கென கையாளும் குறிப்புகள் தமது நாட்டின் சம்பிராதாயக் கதைகளிலிருந்து பெறப்பட்டவை அல்ல. அவர் கூறும் கதைகள் திரும்பத் திரும்ப இரண்டே இரண்டு விஷயங்கள் பற்றியதாக இருந்தன: முதலாவது கதைசொல்லியான முதியவரின் வாழ்க்கை, இரண்டாவதாக சொல்பவரைப்போலவே கேட்பவரையும் கனவில் மிதக்கவைக்கும் புராணிக நகருக்கு அவர் தரும் வர்ணனைகள். அப்படியும் அந்நகரைப் பற்றிமுழுமையாகக் கூறவில்லை என்றுதான் கேட்டவர்கள் சொல்கிறார்கள். இருந்தபோதிலும், அவர் கூறுவதைவைத்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அந்நகரில் வாழ்ந்ததைப்போன்ற நம்பிக்கையை கேட்பவர்களிடத்தில் ஏற்படுத்துவார், தவிர ஒவ்வொருமுறையும் அந்நகரம் குறித்து புதிதாய் எதையோ அறிவதுபோன்ற அனுபவமும் நமக்கு வாய்க்கும்.

அனுபவங்களென்று கூறியதெல்லாம் புனைவுகளாக உருமாறின. அவரது கதைகளில் சொந்தவாழ்க்கையின் தாக்கமென்பது இருபத்தைந்து வயதில் தொடங்குகிறது. அக்கதையில் வரும் அதிசயநகரத்தை விவரிக்கிறபோதெல்லாம் தவறாமல் ஸெல்என்ற பெயரில் ஒரு தாயும் இடம் பெறுவார். அப்பெண்மணி குறித்து நிறைய அவருக்குச் சொல்ல இருந்தன. அவரைப் பற்றி பேசுகிறபோதுதான் ஹூல்ட்ஸ் அம்புபோன்ற வார்த்தைகள், குறும்புக்கார சிறுவனுக்குரிய குறுநகையுடன், முகத்திலிருந்து வெளிப்படும். இப்படியொரு அதிசயத்திற்குப்பிறகு விளங்கிக்கொள்ள முடியாத அவருடைய வார்த்தைகளை மேலும் குழப்புவதைப்போன்று, குரூஸ், கலியா அறை 243 என்பவற்றையும் அவ்வப்போது கூறலானார்.

தற்போது அவற்றில் சில எதனுடன் சொடர்புடையதென்பது மறந்துவிட்டது., வயது அவைபற்றிய ஆர்வத்தை சிதைக்காமல் வைத்துள்ளபோதிலும், அவற்றின் பொருளை நினைவில் நிறுத்த தவறிவிட்டது. இன்றும் அவைகளெல்லாம் ஞாபகத்தில் இருக்கின்றன. ஆனால் எது எதோடு சம்பந்தப்பட்டதென்பதில் தெளிவில்லை. அதனாலென்ன! அவர் கதை சொல்கிறபோது இடம்பிடித்துவிடுகின்றன. ஸ்லாபூகும் சொல்லக் கேட்கவேண்டுமெனக் காத்திருக்கிறவர்களும் தங்கள் பங்கு மகிழ்ச்சியை பெறமுடிவதில் திருப்தியுறுகிறார்கள்.

இப்பெயர் காரணம் ஒருவரும் அறியாதது, ‘செடார் சொகோன்என்ற பெயர் ஸ்லாபூகூம்என்று மாறிய மர்மத்தை அறிந்த ஒரேமனிதர் அவருடைய முதல் மாமனார், ஆனால் அவர் மறைந்தும் பல வருடங்கள் ஆகின்றன. சிற்சில சமயம், விளையாட்டாக என்பதைவிட ஆர்வம் காரணமாக நேரடியாகவே அவரிடம் கேட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அநாவசியமான நிர்ப்பந்தத்திற்கு ஆளானவர்போல, கண்களை இறுக மூடிக்கொள்வார், முகம் கோணலாகும், கைகள் இரண்டையும் மேலே உயர்த்தி, « தெரியாது!» என களைத்த மனிதரைப்போல பதிலை உதிர்ப்பார், அதன் பிறகும் எப்படி நாம் வற்புறுத்த முடியும்?

இளம்வயது ஸ்லாபூகும் பற்றித் அதிகத் தகவல்களில்லை. வடக்கே வெகுதூரத்தில், மொரித்தானியா நாட்டிற்கு அண்மையிலிருந்த டகனாவில் பிறந்திருக்கிறார். அவருடைய முன்னோர்கள் கொலுவாக்கள் என்பதால் கிராமத்தைவிட்டு என்றைக்கு வெளியேறும்படி உத்தரவு பிறந்ததோ அன்றைக்கு ஆரம்பித்தது ஸ்லாபூகும் வாழ்க்கை. அப்போது, உலகின் மற்றொருமுனையில் பிரெஞ்சுக்காரர்களும் ஜெர்மானியரும் 1914-18 யுத்தத்தைத் திரும்பச் செய்துக்கொண்டிருந்த காலமது.

இளம்வயது கிராமாவாசியாக இருந்தபோது, பிரான்சு நாட்டையும், பாரீஸ் நகரையும் ஐஃபல் கோபுரத்தையும், ஆர்க் தெ ட்திரியோம்ஃப் என்கிற ஒஸ்டர்லிட்ஸ் யுத்த வெற்றி வளைவையும், லாங்க்ரு பகுதியில் பிறப்பெடுத்துப் பாயும் சேன் நதியையும் பார்க்கும் ஆர்வம் எப்போதும் இருந்தது. குறிப்பாகக் கடைசியாகக் குறிப்பிட்ட சேன் நதியின் மூலத்தைப் பற்றிய இத்தெளிவு பள்ளியில் பூகோளப் பாடத்தில் அவர் பத்துக்குப் பத்து மதிப்பெண் பெறக் காரணமாயிற்று என்கிறார்கள். ஆக இதுபோன்ற விஷயங்கள் அசௌகரியங்களை மட்டுமல்ல நல்ல பலன்களையும் தரக்கூடும்.

சேடார் சொகோன் இருபதுவயதில், ராணுவச்சீருடையில், சிரித்தமுகத்துடன், தலைநிறைய எப்பினால் (Epinal) நகரம் பற்றிய நினைவுகளுடன் யுத்தம் செய்ய புறப்பட்டுப் போனார். எல்லா யுத்தங்களையும் போலவே இந்த யுத்தத்திற்கும் பெயரென்று ஒன்று வேண்டும். எனவே வேடிக்கையான யுத்தம்எனப் பெயர் சூட்டினார்கள். இளம் ராணுவ வீரர் செகோனுக்கு அப்பெயர் தவறானத் தேர்வு. அதிலும் குறிப்பாக போனோம்மற்றும் ஷ்லூர்ட்கணவாய்களில் போர்த்திற நடவடிக்கையாக தங்கள் ராணுவம் பின்வாங்கியபோது ஓநாய் வாயில் அகப்படுவதற்கெனஎன்றுரைப்பது மங்கலச்சொல்லாக இருந்தது.

« என்ன நடந்தது? சிறைபிடிக்கப்பட்டோம்அன்று நடந்த சம்பவத்தை அப்படித்தான் கூறிக்கொண்டார்கள். எதிரிகளிடம் பிடிபட்டது நான் மட்டுமல்ல பலர், எனவேதான் கைதிகள்என்று பன்மையில் சொல்லவேண்டியிருக்கிறது. மொத்தம் நாங்கள் நூறுபேர். எங்கள் அனைவரையும் அல்ஸாஸ் பகுதியில் நேஃப் ப்ரிஸாக்‘(Neuf-Brisach) என்ற இடத்திற்குக் கொண்டுபோனார்கள். அங்கே சில கிழமைகள் வைத்திருந்தார்கள். பிறகு இரயிலிலும், டிரக்கிலும் அடைத்தார்கள். முதலில் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கிறார்களென்றே நினைத்தோம். இல்லை அவர்கள் கொண்டு சென்றது நூரன்பெர்க் என்ற இடத்திற்கு, ஆம் ! திரும்ப நாங்கள் சந்திக்க நேர்ந்தது நூரம்பெர்க்(Nuremberg) ஓப்லாக்(oflag) முகாம் எண் XIII Aல்.

இக்குறிப்பைத் துல்லியமாகத் தெரிவித்தபோது. கேட்டுக்கொண்டிருந்த மனிதருக்கு எவ்விதச் சங்கடமுமில்லை.

    • நீங்கள் கூறுவது உங்கள் வாழ்க்கையில் நடந்ததைத்தான் இல்லையா ?
    • என் கதையேதான் ! சந்தேகமே வேண்டாம்
    • அப்படியென்றால் ஸ்டாலாக்(Stalag) என்று சொல்லுங்கள். ஓப்லாக்கைதிகள் முகாம், ராணுவ அதிகாரிகளுக்கானது. சாதாரண ராணுவ வீரர்களை ஸ்டாலாக்கில் சிறைப்படுத்தியிருந்தார்கள். நீங்கள் ராணுவ அதிகாரியா ?

இக்கேள்வி ஸ்லாபூகூமை வியப்பில் ஆழ்த்தியிருக்கவேண்டும். கேள்வி அவரைச் சங்கடப்படுத்தவில்லை. சிறிது நேர இடைவெளிக்குப்பின்னர் மற்றொரு சம்பவத்தை விவரிக்க ஆரம்பித்தார்.

    • நான் ராணுவ அதிகாரிதான், அதாவது கேப்டன்.
    • கேப்டன் ?

ஆமாம். மிகத்திறமையாகச் சண்டையிட்டேன். எங்களை வழிநடத்திய ஜெனரலுக்கு இது நன்றாகத் தெரியும். ஒரு நாள் தம்மை வந்து பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். போர் சிறிது தணிந்திருந்த ஒரு நாளில் அவரைச் சந்திப்பதென்று முடிவு செய்தேன். எனது சக வீரரிடம், « இங்கே பார், நான் போகவேண்டும் ! » –என்று கூறினேன். அவனோ, « எங்கே போகிறாய்? » எனக்கேட்டான். நான், « ஜெனரலைப் பார்க்கஎன்றேன். அவன் திரும்ப, ” அவர் பார்க்கவிரும்பியது உண்மைதான், நான் உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன்” – என வருந்தினான். நான் சென்றபோது ஜெனரல் சுங்கான் புகைத்துக்கொண்டிருந்தார். அவர் ஒரு கோட்டையில் தங்கியிருந்தார், ஆனல் எங்கேயென்று நினைவில்லை. சண்டை மும்முரமாக நடந்துகொண்டிருந்த காலம். சரி பிரச்சினைக்கு வருகிறேன். என்னைக் கண்டவுடன் புரிந்துகொண்டார். « உன்னைப்பற்றி நிறைய பேர் கூறியிருக்கிறார்கள்” –என்றார். தொடர்ந்து, « நான் கேட்ட அளவில், எதிரிகளின் தாக்குதலுக்கு அஞ்சுகிற ஆசாமி அல்ல, மிகவும் திறமையான ஆசாமி நீ! உன்னைப்போல ஒவ்வொரு வீரரும் எதிரிகளைச் சிறை பிடித்திருந்தால் போர் எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும்“- என்றார். நான் நீங்கள் நினைப்பது போலவே பதில்கூறாமல் இருந்தேன். அதிலும் ஒரு ஜெனரல் பேசும்போது, வாரத்தை எப்படி வரும் ? பிறகு சிறிது நேரம் என்னிடம் உரையாடிவிட்டு, « உன்னைப்போன்ற வீரனுக்கு உரிய சன்மானம் தரப்படவேண்டும்” – என்றார். நான் என்னைக் கோப்ரல் என்று அறிவிக்கப் போகிறார் எனநினைத்திருக்க, தடாலடியாக சில நொடி அவதானிப்பிற்குப் பிறகு,” இன்று முதல் நீ கேப்டன் ” – எனக்கூறினார்.

    • திடீரென்று!
    • ஆமாம், அப்படித்தான் அறிவித்தார்.
    • எடுத்த எடுப்பில் கேப்டன்?
    • ஆம்! உண்மையைச் சொல்வதெனில் எனக்குக்கூட வியப்பாக இருந்தது. அதிலும் ஜெனரலை எனக்கு முன்பின் தெரியாது.

«கேப்டன்! இனி சூப் நன்றாக இருக்கும்! –எனக் கூறியது காதில் இன்னமும் ஒலிக்கிறது. திரும்பவும் சக வீரரிடம் வந்தேன்.«என்னைக்காட்டிலும் உனக்கு கிரேடு கூடிவிட்டது ! », எனக்கூறினார். அவன் பெயர் லெமெர்சியெ, செம்பட்டைத்தலையன்….

திடீரெனப் படைத்த லெமெர்சியெ பாத்திரத்திரதிற்குத் துணைச் சேர்க்க வாழ்க்கை‘, ‘ராணுவ வீரர்களின் நூறு சாகசங்கள்எனக் கூறிக்கொண்டுபோக, கேட்டுக் கொண்டிருந்த பிரான்சு எழுத்தாளர் தோளை உயர்த்திவிட்டு, எழுந்துகொண்டார்.. பிரெஞ்சுக்காரர்கள், கதை சொல்லிகளை அம்போவென தவிக்கவிட்டுச் செல்கிறவர்கள் என்ற முடிவுக்கும் ஸ்லாபூகூம் வரலானார்.

ஆவர் கூறும் கதையின் இப்பகுதி அப்படியொன்றும் உபயோகமற்றதுமல்லஅவருடைய நம்பிக்கையான கதை கேட்கும் மனிதர்கள் லெமெர்சியெவினுடைய அசாதரண கதையையும், தங்கள் முன்னாள் ராணுவ வீரர் ஒரு கேப்டன் என்பதையும் மறுநாளே தெரிந்துகொண்டார்கள்.

அவர் கூறும் கதையை நம்பாதவரென்று ஒருவருமில்லை. இக்கட்டுகதைகளுக்குத் தேதி அத்தனை முக்கியமானதல்ல. கதைசொல்லிக்கு உண்மை ஓர் ஆதாரமேயன்றி சுமை அல்ல. அவரிடம் கதைகேட்கும் எவரும் வாழ்க்கை எதுவாக இருக்கிறது, இருந்தது, இருக்கும் என்றெல்லாம் கேட்பதில்லை, ஆனால் என்னவாக இருக்கக்கூடும் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். எனவே ஜோடித்து அவரால் கதை சொல்ல முடிகிறது. அண்டை அயலில் இருப்பவர்களுக்கும், வெகுதூரத்திலிருந்து ஸ்லாபூகூமிடம் கதைகேட்கவென்று வருபவர்களுக்கும் நகரமொன்றின் மர்மம் (அவர் கதையில் இரண்டு நகரங்கள் இடம்பெறுவதில்லை), அல்ஸாஸ் பெண்ணொருத்திக்குப் பதிலாக சீமாட்டி ஒருத்தியுடன் காதல், போர் விவரிப்புகள்(அவர் ஒருவர்மட்டுமே சண்டையிட்டு ஜெயிக்காமல் போனதெப்படி எனும் வியப்புடன்) போன்றவைக் கருத்தில்கொள்ள வேண்டியவை. அவர்களுக்கு முக்கியமானவை என்று சொன்னால் : அவர் கதைகள் தரும் நெகிழ்ச்சி, பிரம்மிப்பு, வேடிக்கை, பயங்கரம் என அனைத்தும். அவைக் கேட்பவரை கணநேரம், அன்றாட வழ்க்கைப் பிரச்சினையிலிருந்து விலக்கிவைத்து, பிரக்ஞையுடன் கனவுகாண்கிற உணர்வைத் தரக்கூடியவை. உண்மையான கதைசொல்லியின் வேலையும் அதுதான். ஸ்லாபூகூம் அதை மிகச்சிறப்பாக செய்கிறார். சாகசங்களை அவர் உரைப்பதில் இட்டுக்கட்டிச்சொல்வது முக்கிய பங்கு வகிக்கிறது. அவருடைய கதைகள் கேட்பவர்க்கு அலுப்பைத் தராதவை. பொய்யை உண்மையெனத் திரித்துக்கூறாதவை, உண்மையை நுட்பமாக தழுவியவை. ஸ்லாகூம் ஒரு கவிஞர், அவரை  வரலாற்றாசிரியனாக இரு என்றால் எப்படி சாத்தியம்.

முட்கம்பிவேலிக்கு சில மீட்டர்கள் தூரத்தில், மேஜர் லூசியன் மொரான்ழினுடைய பெருமூச்சை உணர முடிகிறது. சிறை முகாமிலிருந்து தப்புகின்ற முயற்சியில், நண்பர்களாகியிருந்தோம். அவர் உடலை அருகிலிருந்த காட்டுக்குள் இழுத்துச் செல்லப் போதுமான தெம்பு என்னிடமிருந்தது, இழுத்துக்கொண்டுபோய் போடுகிறேன். «என்னை சாகவிடு என்கிறார். அவர் வயிறு கிழிந்திருக்கிறது. சுற்றிலும் கண்மூடித்தனமாகச் சுட்டுக்கொண்டிருக்கிறார்கள். மீண்டும் அவர், « என்னைச் சாகவிடு,என்கிறார். நான், « முடிடியாது, என்கிறேன். அவரோ இது என்னுடையக் கட்டளைஎன்கிறார். அங்கேயே அவரைப் போட்டுவிட்டுப் புறபட்டேன். ஓடுகிறேன், அதிஷ்ட்ட வசமாகத் தப்பினேன். இரவு முழுக்க நடந்து ஒருவழியாக பிரான்சு நாட்டின் கிழக்குப்பிரதேசமான அல்ஸாஸ் (Alsace)க்குள் வந்திருக்கிறேன் என்பது புரிந்தது. விடிந்ததும் கிராமமொன்றுக் கண்ணிற் பட்டது. “பரவாயில்லை, என நினைத்துக்கொள்கிறேன், அங்கே ஒரு பண்ணை “. எனகென்று பாடைத்ததுபோல ஓர் அழகான அல்ஸாஸ் பெண், என்னிடத்தில் காதல்கொள்கிறாள். பரணொன்றில் என்னை பதுங்கியிருக்க எற்பாடும் செய்கிறாள். அழகி, தேன் நிறத்தில் தலைமுடி, பனிபோல வெள்ளைவெளேரென்று இருந்தாள்.  என்னைத் தீவிரமாக நேசித்தாள், எந்த அளவிற்கெனில் அடுத்த சில நாட்களில் நான் யாரென்று புரிந்துகொண்டு உதவிய எங்கள் துணைத்தளபதி யின் தயவினால் இலண்டனில் சதிக்க நேர்ந்த சீமாட்டியின் காதலுக்கு ஈடாகா. லாங்க்ருவில் உற்பத்தியாகிப் பாய்ந்துகொண்டிருக்கிற சேன் நதி பாலத்தைக் கடந்தேன். இரயிலொன்றில் பதுங்கிப் பயணித்து பாரீஸ் வந்தடைந்தேன். துணைத் தளபதி என்ன சொல்லியிருப்பாரென நினைக்கிறீர்கள் ? அவர், « உங்களை எனக்குத் தெரியும். பழையத் துணிச்சல் தற்போதும் உங்களிடம் உண்டா ? » எனக் கேட்டார். நான் அவரிடம் : «  சந்தேகம் வேண்டாம் » , என்றேன். அவர் « என்னிடம் விமானமொன்று இருக்கிறது, காட்டில் தான் பதுக்கிவைக்க முடியும், அங்குதான் இருக்கிறது. நாளை இலண்டனுக்குப் போகிறேன், என்னுடன் வர உங்களுக்கு விருப்பமா ? எனக் கேட்டார். இலண்டனில் திரும்பவும் ராணுவ வீரன். பிறகு அங்கிருந்து திரும்பவும் விமானம் பிடித்து அல்ஜீரிய நாட்டிற்கு. அங்குதான் ஜெனரல் தெகோல் (le général de Gaulle) தமது காரை நிறுத்தி என்னிடம் விசாரித்தது. அவர், « பிரமாதம் ! உங்களைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன், உங்களைச் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ” –எனக்கூறினார். ஒருவேளை, «  என்னை சந்திக்க முடிந்ததே மிக்க மகிழ்ச்சி» என அவர் கூறியிருக்கலாம்., நினைவில்லை. எனது கையைப் பற்றி குலுக்குகிறார். அப்போதைய போர் நிலைமையை இருவருமாகச் சில நிமிடங்கள் பகிர்ந்துகொண்டோம். பின்னர் அவர் காரில் ஏறி சென்றுவிட்டார். பாரீஸில் ஜெனரல் லெகிளெர்க் படையினருக்குமுன்பாக என்னைக் கௌவுரவித்தபோது, திரும்ப அவரைக் காண முடிந்தது. ஆம், ‘படையினருக்கு முன்பாகஎன்றுதான் கூறவேண்டும், அப்படிச்சொல்வதுதான் எங்களுக்கு வழக்கம். லான்ங்க்ரூவில் உற்பத்தியாகிப்பாயும் சேன் நதிக்கரையில் இது நடந்தது. நொர்மாந்தியில்(Normandie) 30 ஜெர்மன் ராணுவ வீரர்களை நான் தனியொருவனாக சிறைபிடித்தேன் என்பதை ஜெனரல் அறிவார். ஆனால் பாரீஸ் நிகழ்ச்சியோடு யுத்தம் முடிந்துவிடவில்ல. திரும்பவும் போரிடவேண்டியிருந்தது. ஒரு நாள் மாலை…..

மீண்டும் கதைக்குள் மூழ்குகிறார். அர்தென் (Ardennes) சம்பவத்தில் பெற்ற 24 செ.மீட்டர் நீளமான வடுவை நினைவுபடுத்திவிட்டுக் அவர் காவியம் முற்றுபெறும். ஆனால் வடுவை பிறருக்குக் காட்டுவதற்கு அவருக்குத் தயக்கம் இருக்கிறது.

இரண்டாம் வகுப்பு ராணுவ வீரனான மோன்ராழைப் பின்பற்றித் தப்பித்த மற்றொரு இரண்டாம்வகுப்பு ராணுவ வீரன் சொகோன் என்று வருகிற இரண்டாவது கதையில், புனைவுத் தன்மைகள் குறைவு. இதில் நூரன்பர்க்கிலிருந்து அல்ஸாஸ் வந்தடைய ஓர் இரவுக்கும் கூடுதலாக அவர்கள் நடக்கவேண்டியுள்ளது. கிராமத்தில் ஒரு வயதானத் தம்பதிகள் உதவிசெய்ய பரணில் சில நாட்கள் பதுங்கி வாழ்கிறார்கள். அவர்கள் வீட்டில் பனியையொத்த வெள்ளை வெளேரென்று பெண் எவளுமில்லை. இரவில் நடந்தும், பகலில் உறங்கியும் பிரான்சு நாட்டின் வடக்கிலுள்ள கலெ (Calais) நகரை அடைகிறார்கள். அங்கிருந்து பயணித்து இங்கிலாந்துக்கு வருகிறார்கள். ; மோன்ராழ் இலண்டன் சீமாட்டியிடம் காதலில் விழுகிறான் , பின்னர் இருவரும் பிரிகிறார்கள். மொரான்ழிற்கு தரைப்படையைக்காட்டிலும் விமானப்படைபிரிவில் ஆர்வம் உண்டாகிறது. ராணுவ வீரர் சொகோன் ஆப்ரிக்கா, ஜெர்மனென்று யுத்தத்தில் கலந்துகொண்டபோதிலும், எந்த ஒரு ஜெனரலையும் சந்திப்பதில்லை, எதிரியைச் சிறைபிடித்த செய்தியோ, துப்பாக்கி முனை காயத்தினால் நீளமான வடு நிலைத்துவிட்டக் கதையோ இல்லை. இத்திருத்திய கதை, ரகசியமும், தயக்கமும் கொண்டது. சொந்த ராணுவ வாழ்க்கையின் உண்மையை வெளியுலகிற்குச் சிறிதும் வெளிக்காட்டாதது. சிலசமயங்களில் அவருக்குப் புகழ்சேர்க்கிற விஷயங்களும் அதிலுண்டு, அவ்வாறானவற்றை அலுக்காமற் கூறுவார். அவற்றுடன் கற்பனைக்கேற்ப கூடுதலாக சிறுசிறு தகவல்களைச் சேர்ப்பதுண்டு, உதாரணமாக தேன்நிற தலைமுடிகொண்ட பெண்களின் எண்ணிக்கையும் அவர்களின் காதலும் பன் மடங்கு ஆகும், யுத்தங்கள் காவிய அடையாளம் பெறும், விழுப்புண்களும் இரண்டு அல்லது மூன்றாகக் கூடலாம், விளைவாக கதைசொல்லி மாத்திரமின்றி கதைகேட்பவர்களும் சந்தோஷப்படுவார்கள்.

பிறந்த நாட்டிற்குத் திரும்பிய சேடார் சொகோன், நாடு எப்போதும்போல மாற்றமின்றி இருப்பதைக்கண்டார் . இறப்பும், பிறம்பும் பெரிதாய் இல்லை. இறந்தவர்களில் முக்கியமானவர்களென்று சொல்ல வேண்டுமெனில் அவருடைய தந்தையையும் தாயையும் சொல்லவேண்டும் அவருடைய சகோதரி சேன்லூயியைச்சேர்ந்த மீன்பிடிக்கும் தொழில் செய்த பழைய நண்பர் ஒருவரை மணம் செய்திருந்தாள். அவர்கள் மெங்கேய்(Menguèye) நகரத்தில் வசித்தார்கள். யுத்தம் செய்ய பிரான்சுநாட்டிற்கு புறப்பட்டுபோனபோது அவருடைய சகோதரர்கள் பதின் வயதினர், தற்போது போஸ்என்ற இடத்தில் வசிக்கிறார்கள் ; அவருடைய தகப்பனாரின் பிற மனைவிகளுக்கு அனைவரும் பெண்பிள்ளைகள்.அப்போதெல்லாம் அவர்கள் சின்னஞ்சிறுமிகள். அவர்களுக்கு சேடார் ஓர் அந்நியர். எனவே தனது சகோதரர்களுடன் வசிப்பதுதான் முதல் உத்தேசம்.அவர்களைக் காண இருநூறு கி.மீ. தூரம் பறந்து செல்லவேண்டும்.அங்கு இளைய சகோதரர் நஃபிசட்டூ அவருடைய வருகைக்காகக் காத்திருந்தார்.

அவர் துபாம்பூலில்  தங்க முடிவுசெய்தார், அந்நகரை நேசித்ததோடு, அவருடைய வார்த்தைள் ஜீவிக்கவேண்டுமெனில், அதுதான் சிறந்த இடமென்பது  எடுத்த முடிவு. அவர் தனது முதல் மாமனாரிடம் யுத்தத்தைப் பற்றி சிறிது கூற நேரிட்டது, அவர்தான் மற்றவர்களும் கேட்டால் சந்தோஷப்படுவார்கள் என்றார்அந்த யோசனையை அவர் முன்வைக்காவிட்டால், இவருக்கு கதை சொல்லும் எண்ணம் பிறந்திருக்காதுமுதல் நாள்மாலை கூறியதை அப்படியேசொல்லாமல் மாற்றி மறுநாள் காலை சொல்லத் தொடங்கினார். நிறைய முகங்களுக்கு முன்பாக, இயல்பாக, கதையை முன்னெடுத்துச் செல்வதற்கேற்ப, அழகுற ஜோடித்துச் சொல்வார், கதைசொல்லும் திறனின் வேகத்திற்கேற்ப சொற்கள் வந்து விழுந்தன. அடுத்தடுத்த நாட்களில் செவி வழிச் செய்தியாக தகவல் பரவ, வந்தவர்கள் திரும்பச்சொல்லுமாறுக் கேட்டுக்கொண்டார்கள் . தொடக்கத்தில் இவராகச் சிலவற்றைச் சேர்க்கவேண்டியிருந்தது, அதன் பின்னர் தானாக வந்தது. கதை கேட்கவந்தவர்களைப் போலவே கதை சொல்லியான அவருக்கும் கிடைக்கும் சந்தோஷத்தைப் புரிந்துகொண்டார். தேன் நிற தலைமயிர் கொண்டபெண்ணொருத்தியைப் பற்றியும், ராணுவத் தளபதியின் விமானம் குறித்தும், சக ராணுவவீரர்களுக்கு முன்பாக தன்னைக் கௌவுரவித்ததைச் சொல்லத் தொடங்கியதும் அந்த மாலைதான்.

கேட்டவர் அனைவரும் மயங்கினார்கள். அதாவது தற்போது கேட்பவர்களைப் போலவே. இறுதிவரை கேட்பவரை ஆர்வம் குறையாமலிருக்கும்படி பார்த்துக்கொள்ள அவருக்குத் தெரியும். ஒரே கதையை பலமுறை உரைக்க நேர்ந்தாலும் முடிவுமட்டும் ஒன்றல்ல. கதைசொல்லும் நேரத்தின் அளவைப்பொறுத்து கதைசொல்லும் தொனியில் ஏற்ற இறக்கங்களை பிரயோகிப்பார். அவருடைய ஞாபகங்களுக்கு இசைந்து உடல் சிலிர்க்கும், அதுபோன்றதொரு ஒத்திசைவான சிலிர்ப்பை புதிதாய்ச் சேர்க்கும் தகவல்களும் ஏற்படுத்தித் தரும்.

கடந்த அரைநூற்றாண்டாக அவர் கதை பின்னுகிறார். கதை சொல்லிக்குத் தன்னை ஸ்லாபூகூம் என்று அழைக்கப்படவே விருப்பம். பெயரின் நதிமூலத்தை அவருடைய மாமனார் ஒருவரைத் தவிர பிறர் அறியமாட்டார்கள். அவருடன் தப்பிய கூட்டாளியின் நினைவாகச் சூட்டிக்கொண்ட பெயர் அது. அவர் மணம் செய்துகொண்டிருந்த மூன்றுமனைவிகள், நாட்டைவிட்டு வெளியேறிவிட்ட அவருடைய ஆறு பிள்ளைகள் ஒருவரும் அறியமாட்டார்கள்.

மொரான்ழ் பற்றி அவர் வாய் திறப்பதில்லை. அப்பெயருக்கு மரணத்தை அறிவித்து முடித்தாயிற்று. ஒருவேளை தனிமனிதனாகத் தப்பிக்கிறபோது தன்னை ஹீரோவாகச் சித்தரிக்க முடியுமென்ற நம்பிக்கையாக இருக்கலாம். நியாயமான நம்பிக்கை, ஹீரோயிஸத்தை நிச்சயம் அவருக்குச் சம்பாதித்துக் கொடுக்கும், காரணம் வினோதமான வார்த்தைப் புதிர்களினால் புனையப்பட்டதும் அவரால் சாலைகள் நகரம் என்று வர்ணிக்கப்படும் அவருடைய இரண்டாவது புனைவில் இடம்பெறும் நகரத்தின் மர்மத்தைக் களைய அது உதவும்.

(தொடரும்)

நன்றி திண்ணை செப்டம்பர் 25- 2016

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s