மிக அருகில் கடல் – இந்திரன்

 

Indiranபடைப்பிலக்கியத்தில் கவிதையின் தலைப்பைப்போலவே, கவிதைத் தொகுப்பிற்கும் அதன் தலைப்பும் நூல் வடிவமும் மிகவும் முக்கியம். பெண்ணொருத்தியின் வெளித்தோற்றம் முதற்பார்வையில் தரும் வியப்பும் மர்மமும் கவிதை அல்லது கவிதைத் தொகுப்பும் தரவேண்டும். ஒரு கவிதையின் அகவய விளைச்சலும் சௌந்தர்யமும் இரண்டாவது கட்டம். கவிதை அல்லது கவிதைத் தொகுப்பின்  ‘Beaux arts’ என்ற அழகியல் இவ்விருகூறுகளையும் கருத்தில் கொண்டு இயங்குவது. பிரெஞ்சில் கவிஞர்களை விரல் விட்டு எண்ணிடலாம். ஆனால் தமிழில் இராணுவத்திற்கு ஆள் எடுப்பதுபோல வரிசைகளில் இளம் கவிஞர்கள் நெருக்கிகொண்டு நிற்கிறார்கள். பருவம், சினிமா, இளம்பெண்கள் அல்லது இளம் ஆண்கள், கொஞ்சம் தமிழ் இவைகொடுத்த ஊக்கத்தில் நண்பர்களிடம் காட்ட அவர்களும் பாராட்ட, குறிப்பாக எதிர்பாலின நண்பர்கள் பாராட்டினால் அல்லது சிற்றேடுகள் பக்கத்தை நிரப்ப போட்டுவிவிடுவாதாலேயே  ‘ஜிவ்வென்று’ கவிஞர் நாற்காலிகளில் ஏறி அமர்ந்து உணர்ச்சிப்பூர்வமாக எழுதிய ஐந்து கவிதைகளுடன் தொகுப்பின் கனத்திற்காக பதினைந்து கவிதைகளை அவசர கதியில் எழுதி பதிப்பாளரின் கல் மனம் கரைந்தால் (?) நூலாக வெளிவந்துவிடுவிறது.  இந்த இளம்வயதினரிடையே சிறந்த கவிஞர்களும் இருக்கலாம், உருவாகலாம், அது அவர்களின் உழைப்பைப் பொருத்தது. இவர்களிடம் கவிதை மனம் இருக்குமெனில் அத்திபூப்பதுபோல கவிதை எழுத உட்காரமாட்டார்கள்,தொடர்ந்து இயங்குவார்கள், தமிழும் காலமும் கலந்துபேசி இவர்களைக் கொண்டாடும் காலம் வரும். இன்றிருக்கும் மூத்த கவிஞர்கள் பலரும் அப்படி உருவானவர்கள்தான் என்பதை, இளம் அசலான கவிஞர்கள் புரிந்துகொள்ளவேண்டும்- உதாரணத்திற்கு இந்திரன்.

இந்திரன் இனித் தேடவேண்டியதென்று ஒன்றுமில்லை. தமிழுலகம் அறிந்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், கலை விமர்சகர். இந்த அங்கீகாரம் பரிசுகளாகவும், விருதுகளாகவும் வடிவம் பெற்றிருக்கின்றன, இருந்தும் தொடர்ந்து படைப்பிலக்கியத்துறை பல முனைகளிலும் அவரைக் காண்கிறோம். இலக்கிய நண்பர்களோடு தொடர்புவைத்துக்கொண்டிருக்கிறார். உண்மையான படைப்பாளிகளைத் தேடி சென்று பாராட்டுகிறார். இளம் திறமைசாலிகளை இனம் கண்டு உற்சாகப்படுத்துகிறார். இவைகளெல்லாம் அவரைக் கவிஞராக மட்டுமல்ல நல்ல மனிதரென்ற அடையாளத்தையும் தந்திருக்கின்றன. இந்திரன் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்பே “மிக அருகில் கடல்”. கவிஞர் இந்திரனின் கண்கள் பெரியவை – பெரியவை என்றால் அசாதாரணப் பெரியவை. நீங்களும் நானும் எட்டாத தூரத்திற்குப் பயணிப்பவை, கடலுக்கு அப்பாலும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் தன்மை கொண்டவை. அதனாற்றான் அவரால் நமது பார்வை பரப்பிற்கு வெளியிற்கிடந்த ஆப்ரிக்க கவிஞர்களைக் கட்டித் தழுவி, வாஞ்சையோடு நமது வாசல்வரை அழைத்து வரமுடிந்தது, ‘அறைக்குள் வந்த ஆப்ரிக்கவானம்’ அபூர்வமான மொபெயர்ப்புத் தொகுப்பு. கவிதைகளை மொழிபெயர்ப்பதென்பது எளிதானதல்ல, என்னால் இயலாதென ஒதுங்கிக்கொண்ட நிலப்பரப்பு. இந்திரனின் விழிகள் அகன்றவை, அவற்றின் பார்வை விஸ்தீரணம் உலகின் விளிம்பையும் உள்ளடக்கியது என்பதற்கு மற்றுமோர் உதாரணம்தான் அண்மையில் வாசித்த ‘மிக அருகில் கடல்’ என்ற கவிதைத் தொகுப்பு தொகுப்பிற்குள் இத்தலைப்பில் ஏதேனும் கவிதை இருக்கிறதா என்று தேடினேன். அப்படி எதுவும் இல்லை. உள்ள இருபத்தேழு கவிதைகளோடு இத்தலைப்பையும் கவிதையாக எடுத்துக்கொண்டால்  மொத்தம் இருபத்தெட்டுகவிதைகள்.  ஆம் தலைப்பே ஒரு கவிதைதான். ‘மிக அருகில் கடல்’ என்ற கவிதைத் தலைப்புக்கான காரணத்தை ‘கடலின் பாசை’ என்ற பெயரில் கவிஞர் எழுதிய முன்னுரையும் ‘தீவின் தனிமை’ என்கிற கவிதையில் இடம்பெறும் வரிகளும் தெரிவிக்கின்றன.mika arukil kadal

“கடலுக்கு மிக அருகில்தான் பிறந்தேன்.. புதுச்சேரியில் எனது வீட்டில் நான் சிறுவனாக இருந்தபோது நடு நிசியில் கேட்கும் கடல் புரளும் ஓசையை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை… என்னுடைய பெரும்பாலான கனவுகள் என்னிடம் யாசித்துப் பெற்றவைதான் .. என் உடம்பின் உள்ளே கட்டப்பட்டிருக்கும் எலும்புகள் கடல் உப்புகொண்டுதான் உருவாக்கப்படவையோ என்று எனக்கு அடிக்கடி சந்தேகம்கூட வருவதுண்டு.. கடலை நான் அறிவேன். அதன் பாஷை எனக்குப் புரியும்…” (கடலின் பாசை)

“கடலுக்கு அப்பால்

அடிவானத்தில் பதுங்கி நிற்கும் தொலை தூர தீவுகளின்

பெயர்களை

நான் ஏற்கனவே அறிந்திருப்பதாக

எனக்குள் ஒரு பிரம்மை தோன்றுகிறது”.. (தீவின் தனிமை -பக்.54)

ஆக அவரோடு புறவெளியிலும் அகவெளியிலும் நெருக்கமான கடலை கவிதை ஆக்கியதில், தொகுப்பிற்கான பெயராக தேர்வுசெய்ததில் கவிஞரின் தருக்க நியாயங்களுக்கும் பங்கிருக்கின்றன என்பது உண்மைதான் எனினும் இலைமறைகாயாக ஓர் ‘myth’ம் ‘mysteryம் ‘ கலந்திருப்பதை அப்பெயர் நமக்குத் தெரிவிக்கிறது. கவிஞரோடு அவர் அவதானித்தக் கடலில் நாமும் மூழ்கித் தேடி அலைகின்றவர்களாக இருக்கிறோம், தலைப்புப் போதாதென்று நூலட்டையில் இடம்பெற்றுள கல்லில் செதுக்கிய மனிதத்தலையும் அதன் பின்னே விரிந்துக் கிடக்கும் கடலும் இயற்கையோடிணைந்த மனித குல உயிர்வாழ்க்கையின் மர்மமுடிச்சுகளை அவிழ்பவையாக உள்ளன. அம்முகத்தைக் கண்டதாலோ என்னவோ ஓர் அதிரடி வாசிப்பை (incursion?) முதற்கட்டமாகவும் ஆழ்ந்த வாசிப்பை இரண்டாம் கட்டத்திலும் நடத்தி முடித்து உணர்ச்சி வியர்வையில் தெப்பமாக நனைத்து சிலுசிலுவென்று கவிச்சை மணத்துடன் “உப்பங்காற்றிர்க்காக” ஏங்குகிறது மனம், கால் புதைய வம்பா மணலில் சென்னை மெரீனாவில் ஆரம்பித்து புதுச்சேரிவரை வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பருவங்களில் நடந்த நினைவுகளில் கழிகின்றன நொடிகள்.

இக்கவிதைத் தொகுப்பை கவிஞர் ஏன் எழுதினார்? எதற்காக எழுதினார்? என்ற கேள்விகளுக்கு இள்ம்வயதிலிருந்தே கடலோடு பின்னிப்பிணைந்த அவரது நெஞ்சத்தை குவாதுலுப் தீவும் அத்தீவின் மக்களும் புரிந்துகொண்டிருக்கவேண்டும் அத்தீவுகளுக்கு சென்றதன் பலனாக மீண்டும் கடல் அவரை உணர்ச்சி சூராவளியில் இறக்கிவிட்டிருக்கிறது, தப்புவதற்கு கவிஞரிடம் கவிதைக் கட்டுமரங்கள் இருக்கின்றனவென்று அவரை அறிந்த கடலுக்குத் தெரியாதா என்ன?

“ஆர்ப்பரிக்கிற அலைகடலில்

தொலைந்து போகிறபோதெல்லாம்

உன் மூச்சுக்காற்றையே ஒரு மிதவையாய்ப் பற்றிகொண்டு

சளைக்காமல் நீந்துகிறேன்” –(பிம்பம் பிரதிபிம்பம் -பக்கம் 36)

எனக் கவிஞரும் அதனை உறுதி படுத்துகிறார். இக்கவிதைகள் என்னசொல்லுகின்றன? மொழியியலாளனாகவோ, ஒரு திறனாய்வாளனாகவோ இக்கவிதையை நெருங்கவில்லை கொஞ்சம் இலக்கிய பசியுடனிருக்கிற வாசகனாக நெருங்கியிருக்கிறேன்.

‘பறவையும் குழந்தையும்’ சிறந்த படிமத்தைக் கண்முன்நிறுத்துகிறது. கவிதையின் பங்குதாரர்களாக ஒற்றை சிறகு, மற்றொன்று குழந்தை. உயிர்வாழ்க்கையின் முதலும் – முடிவும். உதிர்ந்த சிறகுபோலதான மனித வாழ்க்கை போகுமிடந்தோறும் ஒன்றை உதிர்த்து, நிரந்தரமாக ஓரிடத்தில் இருக்க சாத்தியமற்று, வாழ்க்கைத் தருணங்களை ஜெபமாலைபோல விரலால் தள்ளியபடி வாழ்ந்தாக நம்பிக்கொண்டிருந்தாலும் பிரக்ஞையின்றி முடிவை நோக்கி வெளியில் மேலே மேலே என்று பறந்து அலுத்து ஒரு நாள் ஒட்டுமொத்த இறகுகளையும் மண்ணுக்குள் புதைந்துவிடும். உதிராத இறகு அதற்குரிய இடத்தில் இருந்த கணத்தில் இறகின் உடலுக்கு என்ன செய்தாய் என்ற கேள்வியை கேட்க ஒரு குழந்தைக்குத்தான் தகுதரம் இருப்பதாகக் கவிஞர் தெரிவிக்கிறார். தானியமும் தண்ணீரும் வைக்கச்சொல்லும் குழந்தையின் பார்வைக்கு அங்கு சிறகை மறைத்து பறவையின் மொத்த உருவமும் தெரியலாம், அது சிறகடித்து துள்ளுவதும், கெத்தி கெத்தி உட்காருவதும், அதன் இரைதேடும் விழிகளும், பசித்த கீச் கீச்சும் குழந்தையின் பார்வைக்கு, செவிக்கு கேட்கிறது. குழந்தையின் அறிவுரைக்கேட்டு இறகுக்கு மனிதன் ஏதேனும் செய்தானா என்றால் இல்லை.  இரவெல்லாம் குற்ற உணர்வு உறுத்தியிருக்கவேண்டும், மறுநாள் மீண்டும் கதவைதிறந்து பார்க்கிறான். தற்போதுகூட இறகுக்குத் தண்ணீரும் தானியமும் வைப்பதற்காகத் திறந்தவனல்ல, எங்கே இன்னமும் பால்கனியில் கிடந்து, அவன் பால்கனி வருகையை நெருடலாக்கிவிடுமோ என்ற அச்சத்தில். இறகுகள் கூட தமது காலடிகளுக்குத் தடைகல்லாக இருக்கக்கூடாதென்பதுதான் நம்மிற் பலரின் வாழ்க்கைப் பயணம். ஆனால் நம்முடைய சிறகுகளும் ஆங்காங்கே கவனிப்பாரற்று கிடக்கின்றன என்பதை உண்மையில் மறந்து போகிறோம்.

‘கரீபியன் சமையல்’ என்ற கவிதைகூட வாழ்க்கையை பற்றிய கேள்வியுடனேயே முடிகிறது

“உலகெங்கிலும்

வாழ்க்கை ஓர் அசைவ உணவு

வெறுங்கையில் எடுத்துச் சாப்பிடுவதா

கத்திமுள்ளில் சாப்பிடுவதா சாப்பிடாமல் விரதம் இருப்பதா?

எதுவும் செய்யலாம்.

அல்லது

சாப்பாடு மேசைக்குக் கீழே இருந்துகொண்டு

மெலிதாய் குரல்கொடுக்கும்

செல்லப்பூனைக்குக்கூட பரிமாறி விடலாம்

………………………..

………………………….;

என்ன செய்யப்போகிறோம் இப்போது? ”

என சகமனிதர்களைப் பார்த்து கவிஞர் வைக்கும் கேள்விக்கான பதில் நாமறிந்ததுதான். பரிமாறப்படுபவை பெரும்பாலான நேரங்களில் சமைத்தவர் தேர்விலும் கைப்பக்குவத்தையும் நம்பியுள்ளன. நமக்கான பக்குவங்களைக் கணக்கிற்கொண்டோ நமது நாவிற்கு எவை சுவை தரும் என்றறிந்தோ சமைப்பவர்களும் படைப்பவர்களும் வினையாற்றுவதில்லை. எங்கே எது படைக்கப்படுகிறதோ அதை உண்ணப் பழகிக்கொள்ளுகிறபோது, உணவின் ருசியில் ஓர் ஒத்திசைவை கண்டடைகிறபோது எதுவும் ருசிக்கும். ஆனால்  நல்ல படையலைக்கூட தோற்றத்தைக்கண்டு முகம் சுளிக்கிறவர்களாக இருக்கிறோம். ஸ்டெர்மெர் (Stirner) என்ற ஜெர்மன் தத்துவவாதிச் சொல்வதைப்போல “அப்பத்தைத் தின்று செரித்தால் கடவுளடனான கணக்கு முடிந்தது’. இருபத்தோற்றாம் நூற்றாண்டு வாழ்க்கை இப்படித்தான் தின்று செரிக்கப்படுகிறது.

மழைக்காடும் ஓவியனும் இத்தொகுப்பில் என்னை மிகக் கவர்ந்த கவிதை. ஒவ்வொரு வரியும் அபாரம். அபூர்வமான கற்பனையும், அதனை மொழிக்குள் கொண்டுவரும் இலாவகமும் இருந்தாலொழிய இதைப்படைத்திருக்க முடியாது.

“மழைக்காடு வெட்கப்பட்டது

ஓவியனின் முன்னால் நிர்வாணமாக நிற்க

ஈரத்தில் ஊறிய இருள் துணியை

தன் தூரிகையால் போர்த்தினான் ஓவியன்”

இங்கே கவிஞனும் கலைஞனும் போட்டிப்போட்டுக்கொண்டு கவிதையைத் தீட்டியிருக்கிறார்கள்.  கவிஞன் எழுதியது எது கலைஞன் படைத்தது எது குழம்பித் தவிக்கிறோம். இக்கவிதையை இந்திரனன்றி வேறொருவர் அழகியலின் அத்தனை நேர்ந்த்திகளையும் ஒழுங்குகளையும் குழைத்து எழுத்தில் கொண்டுவர இயலாது.

கவிதைத் தொனி:

இந்திரன் கவிதைகளில் நான் பிரம்மிக்கும் விஷயம், அவர் கவிதைகளூடாக ஒலிக்கிற கம்பீரமான கவிஞனின் குரல், வீரியம் நிறைந்த ஆண்மையின் குரல்.

“ஊசிவால் குருவி

…….

என்னைப்பார்த்து கேட்டது

நீ எத்தனை கடல்தாண்டிவந்தாய்?

……….

“அடர்ந்து வளர்ந்த மரங்களின் கூட்டத்திலிருந்து

எனது வேப்ப மரத்தின் தமிழ்க்குரல்கேட்டது:

“யாதும் ஊரே, யாவரும் கேளீர்” (- வரிப்பூனை பக்கம்-20)

என்கிறபோதும்; கருப்பு அழகியில் “யார்பிம்பம்? யார் பிரதி பிம்பம்” எனக்குழம்பும் போதும்;  தேர்ந்தெடுப்புக்கவிதையில் “பாடும் பறவை ஏன் பாடுவதைத் தேர்ந்ந்தெடுக்கவில்லை” என புதிருக்கு விடைகாண முற்படுகிறபோதும் ஒலிக்கிற கவிஞரின் குரல்கள் முகத்தில் அறைவதுபோல இருக்கின்றன. போற்றியும், புகழ்ந்து பாடியும் வயிற்றைக் கழுவிய யுகத்தில் நாமில்லை. சுந்ததிரம் வார்த்தையில் ஜனித்தால் போதாது கவிதையின் நரம்புகளும் புடைத்தெழவேண்டும், எமெ செசேரும், செங்கோரும் முன்வைத்தது  “Négritude” என்ற பெயரில் இந்த ஆண்மையைத்தான்.

சொல்வதற்கு நிறையக் கவிதைகள் இருக்கின்றன. ‘வரிப்பூனை’,  கடல் ஆமை’, கதவு’ உடன் பிறப்பு’, ‘பார்வை அற்றவர்களுக்கான அருவி’, ‘பூங்கொத்துகள்’ ஆகியவை அவற்றுள் முக்கியமானவை. எல்லாவற்றையும் இங்கே எழுதுவது அறமாகாது. கவிதைகளெங்கும் உவமை, உவமேயங்கள் உருவகங்கள் நிறைந்து கிடக்கின்றன. ‘பால்கனிபறவை, வெயில் புரளும் காலை நேரம்’, மழைக்காடு, இருள்துணி , நிழல் சிற்பங்கள், காற்று வீதிகள்…கடைசியாய் ஒரு முறை இந்த வரிகளையும் குறிப்ப்டாமல் இக்கட்டுரையை முடிக்க மனமில்லை.

“தயக்கங்களுக்கிடையே சிந்திய

உன் ஒவ்வொரு வார்த்தையும்

தொலைபேசி கம்பிகளில் மழைநீர்க் குமிழிகளாத் தொங்கி

……………………………..;”

ஆனால் அண்மைக்காலத்தில் நான் படித்தக் கவிதைத் தொகுப்புகளில் மிகச்சிறந்ததொரு கவிதைத் தொகுப்பு.

நன்றி: திண்ணை  4 sep.2016

————————————————————————–

மிக அருகில் கடல்

கொதுலூப் தீவில் எழுதிய கவிதைகள்

ஆசிரியர் இந்திரன்

விலை 70ரூ

——————–

யாளி பதிவு வெளியீடு

எண் 8/17 கார்ப்பரேஷன் காலனி

ஆற்காடு சாலை

கோடம்பாக்கம் சென்னை -24

தொலைபேசி 91-44 -24721443

மின்னஞ்சல் indran48@gmail.com

 

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s