வணக்கத்திற்குரிய பஞ்சு, இந்திரன் பிற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
லெ கஃபே -ஃபிலோ, ஸ்ட்ராஸ்பூர் ல் விவாதத்திற்குரிய தலைப்பு l’être (Being) ம் l’existence ம் ஒன்றா வெவ்வேறா என்பது பற்றியதல்ல, எனினும் கேள்விக்கானப் பதிலைத் தேடுமுன் வினைமுதலான உயிரி என்றால் என்ன என்று புரிந்துகொள்வது நலம், அதுபோலவே அதனை தமிழில் அல்லது மேற்குலக மெய்யியலில் ‘இருத்தல்’ எனக் கையாளுகிறபோது அதனை ‘உயிரி’ என்று அழைக்கிற காரணத்தையும் விளக்கியாகவேண்டும்.
தலைப்பிலுள்ள்ள கேள்வியை மேற்குலகு பார்வையின்படி « இருத்தல், இருத்தலாக இருக்க காரணமிருக்கிறதா ? »எனத் தற்காலிகமாக வைத்துக்கொள்வோம் .
இருத்தல் என்றால் என்ன ? இருத்தலை உறுதிசெய்கிற காரணிகள் எவை ? போன்ற கேள்விகளுக்கு விடையென்ன ? இவ்விடையைப் பெறுதலேகூட இருத்தல், இருத்தலாக இருப்பதற்குரிய காரணத் தேடல்தான். மெய்யியல் சிந்தனையாளர்கள் பலரும் ‘இருத்தல்’ (l’être) என்ற சொல்லை ‘எதுவாக இருக்கிறதோ அது’ (ce qui est) என்கிறார்கள். அந்த ‘அது’ என்பது, உண்மை நிலை(la réalité)அல்லது இயற்கை நிலை. மீயியல் (la métaphysique) சிந்தனை வாதிகள் ‘இருத்தலை’ அவன், அவள், அது என மூன்றாகவும் கண்டார்கள்.‘எதுவாகவோ இருக்கிறதோ அது’ எதோ ஒரு வகையில் தனது ‘இருத்தலை’ உறுதி செய்ய முனைகிறது, என்பது தெக்கார்த், காண்ட், அரிஸ்டாடில் போன்றவர்களின் கருத்து. L’existence என்ற சொல்லும் ஒன்றின் உண்மைநிலை அல்லது இயல்நிலைபற்றித்தான் பேசுகிறது. ஆனால் இருத்தலியல் (l’existentialisme) சார்த்ரு, அதனை மனிதரை மையப்படுத்தியதொரு சிந்தனையாக முன்வைக்கிறார் அவருக்கு அது l’être(Being) அல்ல l’être humain (human being) – இருத்தல் அல்ல மனித இருத்தல் சார்ந்த விடயம் : இருத்தலை ‘தன்னில்’ (l’en-soi), ‘தனக்காக’ (pour-soi) என்று அவர் வரையறை செய்கிறார். இதில் ‘l’en-soi’ என்பது ஒன்றின் இயல்பான பண்பு (உண்மை நிலை). ‘pour-soi’ என்பது தன்னை உணர்வது , தன்னை உணர்ந்த தன் பலனாக அதன் தேவைக்குழைப்பது. மேற்கண்டை இரண்டின் கூட்டுப்பொருள்தான் ‘சாரம்’ (l’essence) ; இச்சாரம் தான் சார்த்த்ருவைப் பொறுத்தவரை ஓர் இருத்தலின் தனித்துவம்,, அதன் அடையாளம்.
இருத்தல் ஓர் உயிரி ஏன் ?
பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலுள்ளதுபோல உயிரியைக் குறிக்க espèce என்ற சொல் உள்ளது, இருந்தும் l’être ஐ உயிரி என்றழைக்க சில காரணங்கள் இருக்கின்றன.
அ. மீயியல்வாதிகள் இருத்தலை ஒரு சடப்பொருளாக உருவகப்படுத்துகிறார்கள். கீழ்த்திசையின் பார்வையில் எதுவும் உயிர்தான், உயிர் சார்ந்ததுதான் மெய், அல்லது உண்மைநிலை., . சார்த்ருவின் ‘l’en-soi’ ஒரு சடப்பொருளுக்கும் பொருந்தும், என்றாலும் ‘pour-soi’ என்று வருகிறபோது ‘தனக்காக’ அது இயங்கும்போது உயிரியாகவேத் தன்னை முன்நிறுத்துகிறது.
ஆ. ‘இருத்தலை’ மேற்கத்திய மெய்யியல் உலகு ஒரு பெயர்ச்சொல்லாக எடுத்துக்கொண்டு, தங்கள் சிந்தனையை முன்வைக்கிறது. ஆனால் அவர்களில் சார்த்த்ரு ‘இருத்தல்’ வினை ஆற்றக்கூடியதென்கிறார் ; L’être(to be) என்றாலுங்கூட வினையின்றிப் பெயர்ச்சொல் இல்லை. வினை என்பது இயக்கம்மெனில், அவ்வினை உயிரிக்குமட்டுமே சாத்தியம்
இ. இருத்தல் என்பதை நிகழ்காலத்திற்குரியது அது மரணித்தது அல்ல அவ்வகையிலும் அதொரு உயிரி. இருத்தல் என்பது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலானது, இந்த இடைபட்டவெளியில் அது எங்கே இருந்தாலும் அதொரு உயிரியாக மட்டுமே இருக்கமுடியும்.
ஈ. பௌத்தம் சார்த்துருவின் தன்னை உணர்தலை விழிப்பு என்கிறது, விழிப்பு உயிர்ப்புள்ள ஒன்றிர்க்கே சாத்தியம்.
உ. மார்க்ஸ் சிந்தனையின் படி இயற்கை மனிதர் உழைப்பிற்குக் காத்திருக்கிறது, மனிதர்களின் உழைப்பால் பலனாகிறது, சுயமாக எதையும் செய்யமுடியாதது, அதன் பலவீனமாகவே இருக்கட்டும், ஆனால் மனினும் சுயமாக முளைத்தவனல்ல, அதே நிலம் உட்பட அவனது சார்புவாழ்க்கை தவிர்க்கமுடியாதது. ஆகப்பொதுவில் மாற்றம், வளர்ச்சி, ஆக்கம் பரிணாமம் அனைத்துமே அது பொருளொன்றில் நிகழ்ந்தாலும்கூட, உயிரொன்றின் படிநிலைதான்.
ஆக இந்த இருத்தலை ஓர் உயிரி என்று அணுகுகிறபோது.ஓர் இருத்த்ல் இருத்தலாக இருப்பதற்குகுரிய காரணத்தைத் தெரிந்துகொள்வது எளிது.
இருத்தல் செயல்படாமல் இருக்கமுடியாது, அச்செயலில் அதன் அடையாளத்தேடல் இருக்கிறது,
இக்கொள்கைக்கெல்லாம் உண்மைநிலைதான் அடிப்படை நியதியை வகுக்கிறதெனில் எதுவாக இருக்கிறதோ அது, அத மரணிக்கும்வரை எதோ ஒரு வகையில் இயங்க வேண்டுமென்பதும் அதற்குரிய நியதியே, அவ்வியக்கத்திற்காக இருத்தல் இருந்தாக வேண்டும்.
இருத்தல் மரமோ, செடியோ, கொடியோ மனிதனோ விலங்கோ எதுவென்றாலும் பல் சக்கரத்தின் ஒரு பல்போல இப்பிரபஞ்சத்தின், ஒரு சமூக எந்திரத்தின் அங்கம். அது சுழல பிரக்ஞையின்றியோ பிரக்ஞையுடனோ இயங்க ‘இருத்தல்’ ‘இருத்தலாக’ இருப்பது அவசியமாகிறது சார்த்ருவின் தன்னில் மற்றும் தனக்காக வென்று இயங்குகிறபோதும் அவனுடையா தனக்காக என்ற சொல்லில் பிறரும் இருக்கிறார்கள், அது குடும்பம், உறவு, சகதொழிலாளர்கள் எனக் கண்ணிகளாக நீளும் சங்கிலி. அக்கண்ணியில் அவனுமொரு கண்ணி என்பதாலும் இருத்தல் நியாயப் படுத்தப்படுகிறது.
———————————————-