புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் லெ.கிளேசியோ தனது ‘குற்ற விசாரணை நாவலுக்கு எழுதிய முன்னுரையில் “எதார்த்தவாதத்தில் பெரிதாய் எனக்கு அக்கறையில்லை ‘(உண்மை’ என்று ஒன்றில்லை என்ற கருத்து மேலும் மேலும் என்னிடத்தில் வலுப்பெற்று வருகிறது) இந்நாவல் முழுவதும் ஒரு புனைவென்ற எண்ணத்தைக் கட்டமைக்க விரும்பும் எனக்குள்ள எதிர்பார்ப்பு வாசிப்பவரிடத்தில் சிந்தனைத் தாக்கத்தைக் குறைந்த பட்சம் தற்காலிகமாவது ஏற்படுத்தித் தருதல்”- எனக் குறிப்பிடுவார். உயிர்வாழ்க்கை என்பது ஒரு வகை புனைவு. பொய்வடிவத்தில் உண்மைகளும், உண்மையென்று பொய்களும் அல்லது இரண்டும் கலந்த கலவையாக, அருதியிட்டு கூறவியலாத தன்மையினதாக இருக்கிற நமது வாழ்க்கை சார்ந்த கலையின் எந்தவொரு வடிவமும் உண்மையை மையமாகக்கொண்டதென்பது அல்லது எதார்த்தமென வாதிடுவது கேலிகூத்தாகாவே முடியும்.
“அழிவை எதிர்க்க இலக்கியத்தால் மட்டுமே முடியும்” என்ற நம்பிக்கையுடன் அயர்வுறாமல் கல்விப்பணியோடு படைப்பிலக்கியத்திலும் தீவிரமாகப் பங்காற்றிவந்திருக்கிற தமிழவனின் ‘முஸல் பனி’ நாவலை வாசித்த தருணத்திலும் வாசித்து முடித்தபோதும் லெ கிளேசியோவிற்கும் இவருக்கும் மன நிலையிலும், வினைத்திட்பத்திலும், ஓர் இணக்கமிருப்பதைக் கண்டேன். நவீன தமிழும், தமிழவனும் வெவ்வேறானவர்களல்ல என்பது வெகுகாலமாகவே திடமாய் மனதிற் பதிந்திருப்பதால் இதில் வியக்க ஒன்றுமில்லை. ஏனைய துறைகளைப்போலவே இலக்கியமும் மாற்றத்திற்கு உட்பட்டது. அம்மாற்றமும் நாளை மறுநாளோ, நாளையோ, இன்று பிற்பகலோ நிகழ்ந்தால் போதும் என்பதல்ல, இக்கணமே நிகழ்ந்தாகவேண்டும் தவறினால் எப்போதும்போல காலத்தால் பின் தள்ளப்படும். இலக்கியம் என்பது ஒருமொழியின், அம்மொழியூடாக ஓர் இனத்தின் தராதரத்தை தீர்மானிக்கும் உரைகல். அந்த இலக்கியம் காலத்தோடு பயணிக்கும் திறன்கொண்டதாக இருத்தல் அவசியம்.புனைவுகள் கவிதைகள் வாசிப்பும்; ஓவியங்கள் சிற்பங்கள் புரிதலும் ஒன்றிரண்டு மனிதர்களிடம் கூடுதலாக வினைபுரிகின்றன. அவர்களின்சிந்தைகளில் கிளர்ச்சியை ஊட்டி வாசித்தவனை எழுத்தாளனாகவும்; இரசித்தவனை கலைஞனாகவும் உருமாற்றம் செய்து எழுதவும், தீட்டவும், வடிக்கவும் தூண்டுகின்றன:
நூலினான உரையினனான
நொடியோடு புணர்ந்த பிசியினான
ஏது நுதலிய முதுமொழியான
மன்றமொழிகிளர்ந்த மந்திரத்தான
கூற்றிட வைத்த குறிப்பினான (தொல்-செய்யுள்165)
என்றெழுதிய தொல்காப்பியருங்கூட இன்றைக்கிருந்தால் கூடுதலாகச் சில வடிவங்களைக் குறித்து பேசியிருப்பார். நியாண்டர்தால் மனிதன் தொடங்கி நவீன மனிதர் வரையிலான கால நீட்சியில் இயங்குவெளியும் அவற்றின் உட்கூறுகளும், குணங்களும் தம்மைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு வருகின்றன. இலக்கிய கோட்பாடுகளுக்கும் இவ்விதி மொழி பேதமின்றி உலகின் எப்பகுதி ஆயினும் பொருந்தும். முஸல்பனியின் நூலாசிரியர் முன்னுரையில் கூறுவதுபோல இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கான தமிழிலக்கியத்தைக் கண்டுபிடிப்பதில் விஞ்ஞான முறை, கறார் தன்மை, தமிழ்யாப்பின் உள்ளொழுங்கு, தொல்காப்பியத்தின் அகண்ட தன்மையும் முக்கியம். நவீன தமிழிலக்கிய கோட்பாடாக அவற்றைக் கையாளுவது காலத்தின் கட்டாயம். இதே நூலின் முன்னுரை இறுதியில் தெரிவிக்கும் கருத்தில் ஓரளவு முரண்பட்டாலும் இன்றைய தமிழ்ச் சூழலில் பலரும் நினைப்பதுபோல அல்லது எழுதிக்கொண்டிருப்பதுபோல நவீன இலக்கியம் என்பது எதார்த்த மென்ற பெயரில் எட்டுகால் பூச்சிக்கு எத்தனை கால்களென்று கேட்டு பதிலைப் பெறுவது அல்ல.
கீழைதேயத்து படைப்பாளிகளுக்கு இம்முஸல்பனி நாவலை முன்வைத்து (நேர்வினையாகவும், எதிர்வினையாகவும்) சில பொறுப்புணர்வுகளை தமிழவன் விதைத்திருக்கிறார். கெ. அய்யப்ப பணிக்கர் தமது, ” இந்திய இலக்கிய கோட்பாடுகள்” என்ற நூலில் எழுப்பியுள்ள வினாக்கள் முஸல் பனி நாவலுக்கும் பொருந்தும். இருபத்தொன்றாம் நூற்றாண்டு தமிழ் நாவல்கள் அடிப்படையில் மூன்று உண்மைகளை மனதிற்கொண்டு வினையாற்ற கடமைப்பட்டிருக்கிறோம்:
1. ஐரோப்பிய மரபு: காலனி ஆதிக்கத்தினால் கிடைத்த ஐரோப்பிய சிந்தனை மரபு
2.பன்முகத்தன்மைகொண்ட இந்திய மரபு
3.தமிழ் மரபு
ஆக இன்றைய தமிழ் நவீனமென்பது மேற்கொண்ட மூன்று மரபுகளையும் உள்வாங்கிகொண்டு செயல்படுவது. உலக இலக்கியங்களோடு இணைந்து பயணிக்க ஐரோப்பிய மரபையும், பாரம்பரிய மரபயும் இணைத்து ஒரு புதியமரபில் இயங்குவது காலத்தின் கட்டாயம்.
முஸல் பனி நாவல் என்ன சொல்கிறது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? ஆசிரியர் சொல்வதுபோல அதன் பூடக மொழியா? குறியீடுகளா? படிமங்களா? எடுத்துரைப்பா? இருப்பியல்வாதியான தமிழவனை பின் நவீனத்துவத்திலிருந்து பிரித்துப் பார்ப்பது இயலாத காரியம்.. தமிழர் வரலாற்றை, பெருமைகளை, கீர்த்திகளை, வடக்கில் இமயம்வரைசென்று கொடிநாட்டிய புகழை சங்க இலக்கியங்களும் காப்பியங்களும் பெருமிதம் பொங்க படைப்பிலக்கியத்திற்குக் கொண்டுவந்த காலம்போக, அப்பழம்பெருமைக்கு நேர்ந்த வீழ்ச்சியை, அபகீர்த்தியை, குறிப்பாக அண்மைக்காலங்களில் தமிழினத்திற்கு இழக்கப்பட்ட அநீதி கண்டு கொதி நிலையில் சுமார் நூறுபக்கங்களில் தமிழ் தேசிய உணர்வின்பாற்பட்டு இப்படைப்பிலக்கியத்தை கொண்டுவந்திருக்கிறார். இம்முயற்சிக்கு வழமைபோல இருபத்தொன்றாம் நூற்றாண்டு மேற்கத்திய கதை சொல்லல் உத்தி கைகொடுத்திருக்கிறது. மொழியிலும் இலக்கியத்திலும் தமிழர்கள் முன்னோடிகள். மேலை நாடுகள் தங்களுக்கான மொழியெது என்ற தேடலில் இருந்த காலத்தில் திணைகள், அகம் புறமென்று தமிழர் வாழ்க்கைச் சித்திரம் மிக நுட்பமாக எழுதப்பட்டுவிட்டது. ஆனால் அதன் பிறகு மேற்கத்திய ஆமைகள் தொடர்ந்து முந்திக்கொண்டுவருகின்றன.
இருபத்தொன்றாம் நூற்றாண்டு கதைசொல்லல் என்றால் என்ன? விரல்விட்டு எண்ணிக்கொண்டிருந்த காலமோ சுவரில் பற்றுவைத்த காலமோஇன்றில்லை. இலக்கியம் என்பது மூத்தோர் சொல்லோ அற நூலோ அல்ல. தொடக்க காலத்தில் கல்வியென்பதே இம்மை மறுமை,நெறிமுறைகள் என்று இயங்கின. இன்று அக்கல்வி மொழி, அறிவியல்,வரலாறு, புவியியல், தத்துவம்போன்ற பெரும் பிரிவுகளும், நுணுக்கமான பல உட்பிரிவுகளும் கொண்டது. நேற்றைய இலக்கிய அப்பியாசம் யாப்பில்தேர்ச்சிபெற்று அறநூல்களை எழுதவும், வயிற்றுபாட்டிற்கு செல்வர்களை அண்டிப் பிழைக்கவும் செய்தது. இன்று மனித இனத்தின் அறிவு வளர்ந்திருக்கிறது, விரிவடைத்திருக்கிறது. இன்றைய இலக்கியமும் சுதந்திரமானது, எண்ணற்ற நுட்பங்களுடன் இயங்குவது. நவீன இலக்கியம் இவற்றையெல்லாம் கணக்கிற்கொள்ளாமல் முழுமை அடைய இயலாது.
காலனி ஆதிக்கம் நமது பண்பாட்டை புரட்டிப்போட்டதுபோலவே நமது சிந்தனையிலும் பெரும் மாற்றத்தைக்கொண்டுவந்தது. விரும்பியோ விரும்பாமலோ மேற்கு நாடுகளின் தத்துவமும், தர்க்கமும், ஓர்மையும், கலை நுணுக்கமும், இலக்கிய பார்வையும் உலகெங்கும் வியாபித்துவிட்டன. அதன் காரணமாக இன்று உலக இலக்கியம் என்பது மேற்கத்திய இலக்கிய கோட்பாட்டின் வழிவந்தவை என்ற புரிதல் உள்ளது. தென் அமெரிக்க படைப்புகள், வட அமெரிக்க படைப்புகள்; ஆப்ரிக்க நாடுகளின் படைப்புகள்; இந்தியா உட்பட ஆசிய நாடுகளின் படைப்புகள் ஆகியவற்றுள் மேற்கத்திய நாடுகளின் சிந்தனைத் தாக்கங்களிருக்கவே செய்கின்றன. அதேவேளை தொல்காப்பிய்னைபோன்ற ஒரு முப்பாட்டனை பெற்றிருந்த நமக்கு மேற்கத்திய அறிவுக்கு முன்னால் முழு சரணாகதி என்பது கற்பனையிலும் சாத்தியமில்லை. அதிலும் உலகின் பெரும்பாலான படைப்பிலக்கியங்கள் அறத்தைபோதிப்பதே இலக்கியம் என்று எண்ணிக்கொண்டிருந்தவேளை நமது சங்க இலக்கியங்கள் அகம் புறமென்று மனிதர் வாழ்க்கையைப் பிரித்து படைப்பிலக்கியத்தை ஆரம்பித்து வைத்தன.
நண்பர் தமிழவன் ‘முஸல் பனி’, முன்னுரைக்கு எட்டு பக்கங்களை ஒதுக்கியிருக்கிறார், தனது நாவல் குறித்து விரிவாகப் பேசுகிறார். முஸல்பனி வாசகனுக்கு அதற்கான அவசியமிருப்பதாகப் படவில்லை. அளவிற் சிறியதாக இருந்து புகழின் உச்சத்தை எட்டிய நாவல்கள் உலகில் அனேகம். படைப்பிலக்கியத்தினை அளவிட மொழியும், எடுத்துரைப்பும் சொல்லப்படும் விஷயமுமே முக்கியம், பக்கங்களின் எண்ணிக்கை அல்ல.
தெகிமோலா என்பதை கண்டமாகவோ, நாடாகவோ வைத்துக்கொள்லலாம். முஸல்பனியில் ஆரம்பித்து, அத்திகரிப்பா,எட்டு திசைகள், முன்னூற்றுஅறுபத்தைந்து படிகள், மண்ரா பட்டணம், காண முடியாத உண்மை, ஆதி இலக்கணகாரன் ஆகியவை பெயர்கள்களாகவும் குறியீடுகளாகவும் வருகின்றன. அகவய நோக்கில் முதலில் கண்பார்வைக்கும் பின்னர் சிந்தனைக்குள்ளும் ஒடுங்குகிற ஒவ்வொன்றிர்க்கும் பெயர்கள் தவிர்க்க முடியாதவை. இப்பெயர்கள் பேராசியர் பஞ்சாங்கம் சொல்வதுபோல மனிதரின் நிலம் சார்ந்து இடப்படுகின்றன. இதனுடன் ஓரினத்தின் மரபையும் இணைத்துக்கொள்ளவேண்டும். இப்பெயர்கள் ஊடாகத்தான், அப்பெயரை ஒட்டிய மனிதரின் இயல்புகள் பொருளின் பண்புகள் ஆகியவற்றைக் குறித்த மேம்போக்கான கருத்துக்களை கணப்பொழுதில் ஏற்படுத்திக்கொள்கிறோம். அக்கருத்தியங்களை நோக்கி நம்மை முன் நகர்த்தவும் செய்கிறோம். ஆனால் அப்பெயர்கள் நிலையாய் ஓரிடத்தில் இருப்பதில்லை, தொடுவானம்போல விலகிச் செல்கின்றன. அடர்த்தியான பனிமூட்டம் நாம் அண்மித்ததும் கலைவதுபோல தோற்றம் தருவதும் நாம் கடந்ததும் மீண்டும் அடர்ந்து படர்வதுமாக ஒரு சித்துவிளையாட்டினை நிகழ்த்துகிறது. குறிப்பாகத் தமது முழுமையை பிறர் அறிந்துவிடக்கூடாதென்கிற முனைப்புடன் அவை செயல்படுகின்றன. இக்கண்பொத்தி விளையாட்டு அபரிதமான புனைவுகளுக்கும் கற்பனைகளுக்கும் வழிவகுக்கின்றன. தமிழவன் இதைச் சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
அத்திகரிப்பாவும் அவனது நாடு தெகிமொலாவும், 3300 ஆண்டுகளுக்குப்பின்பு அவன் வழித்தோன்றலாக வருகிற முஸல்பனியும் அவர்கள் வாழ்க்கை சரிதத்தோடு பயணிக்கும் தொன்மமும், குறியீடுகளும் உருவகமும் சொற்காட்சிகளாக விரிந்து அழகுசேர்க்கும் படிமங்களுக்கும் நாவலில் பஞ்சமில்லை. அவற்றை அளவுடன் கையாண்டிருக்கலாமோ? என்ற மனக்குறையும் அவ்வப்போது தலைகாட்டுகிறது. ஆசிரியர் கூறுவதுபோல நூல் முழுக்க தமிழர் வரலாறு, அவ்வரலாற்றோடு பிணைந்த நினைவுகள், நிகழ்வுகள், கலை இலக்கியம், சிறுமைகள், பெருமைகள் என பலவும் நூல் முழுதும் விரவிக்கிடக்கின்றன. அத்திகரிப்பாவுக்கு எட்டு திசைகள் இருந்தாலும் அவற்றுக்கு பெயர்கிடையாதென்பதும்; மண்ரா பட்டணம் அதன் இருமைப்பண்புகள்; ‘பாத்திக்கட்டி பிரிந்திருக்கும் மக்கள்’ (அங்கே காதல் என்ற சொல் கலவரத்தை நிகழ்த்தும், அவர்களின் தினசரி வாழ்க்கையை படுகளமாக்கும்), ‘காண்பதற்குப் பயணம் செய்பவர்கள்’ (ஒரு முறை கண்கள் நிறைய கண்டுவிட்டால் தங்கள் இனமும் குடும்பங்களும் விடுதலை பெற்றுவிடும் என்ற பொது உளவியலை நம்பிய இனத்தைச்சேர்ந்த்தவர்கள்), ‘சூத்திரங்களில் இருந்தபடிஅழுத எழுத்துக்கள்’,முப்பத்தொரு தீர்க்கதரிசிகள் என்பதுபோன்ற சொற்றொடர்களைக்கொண்டு தமிழர் சரித்திரத்தை மீண்டும் நினைவூட்டுகிறார்.
தமிழவனின் இச்சோதனை முயற்சி இலக்கியத்தில் சூராவளியை ஏற்படுத்துகிறதோ இல்லையோ, உறங்கப்பழகிய தமிழர்களில் ஒன்றிரண்டுபேராவது விழித்தெழுவார்கள் என்று நம்புகிறேன். உலகில் இன்று நவீன இலக்கியம் என்பது பிறதுறைகளைப்போலவே மேற்கத்திய தாக்கத்தோடு வளர்ந்தது. தமிழிலக்கியம் அதிலொன்று. எனினும் வளர்ச்சியில் மேற்கத்திய உலகுடன் நமது இலக்கியம் இணையாக இருக்கின்றதா என்றால் இல்லை. எடுத்துரைப்பிலும் உத்தியிலும் ஓர் இருபது முப்பது ஆண்டுகள் எப்போதும் பிந்தியவர்களாகவே இருக்கிறோம். ‘முஸல்பனி’ நாவல் அக்குறையை தவிர்க்க முயன்று வெற்றியும் பெற்றிருக்கிறது என்று சொல்லவேண்டும்.அம்முயற்சி திருவினையா என்பது அடுத்த கட்ட விவாதம். ஆனாலும் தமிழின் Avant-gardiste ஆன தமிழவனின் இச்சோதனைமுயற்சியை கவனத்திற்கொள்ளாதவர்கள் கிணற்றுதவளைகளாகத்தான் இருக்கவேண்டும்.
____________________________________________________________________