காஃப்காவின் நாய்க்குட்டி – ஒரு வாசிப்புப் பார்வை
க.முத்துக்கிருஷ்ணன்
நாவல் என்ற இலக்கிய வகை ஒரு கட்டுக்குள் அடங்காத, அடக்க இயலாத முரட்டுக் குணம் கொண்டதாக விளங்குவது போல் தோன்றினாலும் எழுதி முடித்த பின்னர் அந்தப் படைப்பாளியால் ஒரு வரையறைக்குள் கொண்டு நிலை நிறுத்தி வைக்கப்படுகின்ற ஒரு மென்மை இலக்கிய வகை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது போல் தோன்றினாலும் ஏற்றுக் கொண்டாக வேண்டிய ஒன்று தான் என்பது உண்மை.
திரு.நாகரத்தினம் கிருஷ்ணாவின் மொழிபெயர்ப்புப் படைப்புகள் பலவற்றைப் படித்திருப்பினும் அவர் மூலநாவலும் எழுதக்கூடிய வல்லமை படைத்தவர் என்பது அவரின் “காஃப்காவின் நாய்க்குட்டி” என்ற சமீபத்தில் வெளிவந்துள்ள நாவலைப் படித்ததும் நிரூபணமாயிற்று.
இன்றைய உலக இலக்கியங்கள் அனைத்துமே ஒரு புதிய வழித்தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றன என்பது கபிரியேல் கார்கியா மார்க்யோஸ், ஒரான் பாமுக், சல்மான் ருஷ்டி ஆகியோரின் உலகளாவிய பரிசுகள் பெற்ற நாவல்களைக் கருத்தில் கொள்ளல் அவசியம், ஃபிரன்ஸ் காஃப்காவிற்கும் ஒரு தலையிடம் உண்டு.
ஃப்ரன்ஸ் காஃப்காவின் The Trial என்ற நாவலின் தமிழ் மொழி பெயர்ப்பில் க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு குறிப்பு என்ற முன்னுரை போன்ற பகுதியில் கீழ்க்கண்ட கருத்தை வாசிப்பு என்பது பற்றி விவரித்து விளக்குகிறார்.
“வாசிப்பு என்பது இயந்திரகதியில் நிகழும் செயல் அல்ல; மாறாக மன ஒழுங்கை வலியுறுத்தும், படைப்புச் செயலில் பங்கு கொள்ளும் ஒரு செயல் வாசகனின் கவனத்தையும் அக்கறையைக் கோரும் போது தான் ஒரு படைப்பு தன் முழு வீச்சையும் புலப்படுத்துகிறது பெரும்பாலோருக்கு வாசிப்பு எளிதில் நிகழும், முயற்சி தேவைப்படாத ஒரு பழக்கமாக இருந்து வருகிறது. வாசகனின் முயற்சியை வேண்டும், அதன் மூலம் வாசகனின் அகவிஸ்தரிப்பைச் சாத்தியமாக்கும்”
இந்த க்ரியா எஸ்.ராமகிருஷ்ணனின் கருத்து நாவல் வாசிப்போரின் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றாகிறது.
ஓர் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நாவல் வாசிப்பு நிலை தமிழில் இன்று இல்லை என்பது உறுதி. புதுமைப்பித்தன், நகுலன், மௌனி, சுந்தரராமசாமி, தமிழவன் போன்றோர் கடல்புறா, கயல்விழி, குறிஞ்சிமலர், பாவைவிளக்கு, சிவகாமியின் சபதம் போன்ற நாவல் முறைகளை முற்றிலும் ஒதுக்கிவிட்டு நாவல் தளம் தமிழில் புது மேடையில் இன்று உற்சாகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பழைமைப் பாங்கான நாவல்கள் வெளிவருவது இன்று அடியோடு நின்று விட்டது எனலாம்.
“காஃப்காவின் நாய்க்குட்டி” பிறந்த கதை என்ற தன் முன்னுரையில் “காஃப்காவின் நாய்க்குட்டி” என்ற நாவலின் தலைப்பினைப் போலவே “பிராஹா நகரப் பயணம்”, பயணத்தின் மூன்றாம் நாள்’ “காஃப்காவின் பிறந்த இல்லத்தைக் கண்டது”, ‘நாவல் கருத்தரித்தது’ அனைத்துமே தற்செயல் நிகழ்வுகள். திட்டமிடல்களைக் காட்டிலும் எதிர்பாராதவையே நமது வாழ்க்கையை அதிகம் தீர்மானிப்பவை என்பதை உறுதி செய்த மற்றோர் சம்பவம்”
என்று நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் தெரிவித்திருப்பதிலிருந்து நவீன நாவல்கள் பழைய ஆரம்பகால நாவல்களைப் போல திட்டமிடல்களில் அமைக்கப்படுவதல்ல என்பது புலனாகிறது. நாவல் ஒரு கரையற்ற கடல், எல்லைகளற்ற வான்வெளி, ஓட்டம், நனவோடை, நினைவிலி ஆகிய தடங்களில் கதை போன்ற ஒன்று நடனமிடுகிறது. தாளகதியும் நிறைந்திருக்கிறது. அந்த வகையிலும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் “காஃப்காவின் நாய்க்குட்டி” என்ற நாவல் அமைந்திருப்பது புது முயற்சி இலக்கியங்களில் முழு முனைப்பு கொண்டு செயல்பட்டிருக்கிறது என்பது வெற்றிக்கான அறிகுறி தான்.
“காஃப்காவின் நாய்க்குட்டி” என்ற நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவலின் கதை என்ன? நித்திலாவின் கதையா? பாலாவின் கதையா? சாமியின் கதையா? ஹரிணியின் கதையா? நித்திலாவின் தமக்கையின் கதையா? வாகீசனின் கதையா? அத்ரியானாவின் கதையா? இவர்கள் எல்லோருடைய கதை என்றும் சொல்லாம், இல்லை என்றும் சொல்லலாம். இங்கே தான் நாவலின் தேடலில் வாசகன் பயணிக்க வேண்டியதிருக்கிறது. பல்வகை உத்திகள் நாவலில் புரண்டும்,
சுழன்றும், பின்னப் பட்டிருக்கின்றன. அனைத்து பாத்திரங்களும் தேடலில் சுழன்று நிகழ்வுகளான கதையம்சத்தைத் தெளிவுறுத்துகிறது.
கதைக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் நாவல் முழுவதும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத நவீன உத்திகள் நாவலின் ஊடாகப் புகுந்து ஒரு அபூர்வமான இலக்கிய அனுபவிப்பை வாசிப்பவனிடம் விதைத்துச் செல்கிறது நாவல். இச்செயல் சாதாரணம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு புதிய வழித்தடத்தைக் கண்டறிய நாகரத்தினம் கிருஷ்ணா மிகுந்த அவா கொண்டுள்ளார். அந்த முயற்சி அவரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறதா? என்பதை இந் நாவலைப் படிக்கும் வாசகர்களால் மட்டுமே புலப்படுத்த இயலும்.
பல பாத்திரங்களின் கதைகள் பலவகை உத்திகளால் மிகவும் வித்தியாசமான முறைகளில் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாத்திரத்தின் கதையும் முரண்பாடான, அதே சமயம் உலகளாவிய சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கைப் பிரதிபலிப்பாக இருக்கிறது. நித்திலா என்ற பாத்திரம் மிகவும் முக்கியத்துவம் பெற்ற பாத்திரமாகத் திகழ்கிறது. நாவல் வாசிப்பவர்கள் நித்திலா மீது இரக்கம் கொள்ளவும் அதே சமயம் அவளுடைய தைரியத்தை நினைத்துப் பெருமைப்படவும், அவளுடைய அல்லல்களை நினைத்து வருத்தப்படவும் நேர்கிறது. நித்திலாவின் (திருமண ஆகாமல் பெற்ற குழந்தை) மகன் மனோகரன் போன்ற விவரிப்புகள் தமிழுக்குப் புதுமையாகத் தென்படுவது போல் தோன்றினாலும் பழைமையின் சாயல் ஓட்டிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. பிற பாத்திரங்களில் முக்கியமானது அத்ரியேனா என்ற பாத்திரம் நாவலின் தலைப்போடு பொருந்திப் போகிற பாத்திரமாகப் பரிமளிக்கிறது. நாய்க்குட்டியாகப்
பார்க்கப்படுதல் அத்ரியானாவும் அவள் கணவரும் படிமங்களாக்கப்பட்டிருப்பது நாவலாசிரியர் புதிய உத்திகளுக்குள் நுண்மையாக நுழைந்திருப்பது புலப்படுகிறது. ஹரிணியின் உதவும் மனப்பான்மை மனிதாபிமானத்தை எதிரொலிக்கிறது. நித்திலாவின் தமக்கை தமிழ் டி.வி. சீரியல்களில் வரும் பெண்களை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது. வாகீசன் சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளும் விதம் மனித இயல்பைத் திறம்பட சுட்டுகிறது. காதல் புறம் தள்ளப்பட்டு வாழ்வின் ஆதாரம் மையப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு. இன்னும் பாலா, சாமி, முல்லர் ஆகிய எல்லா பாத்திரங்களும் அவரவர்கள் பண்புநலனைப் பக்குவமாக வெளிப்படுத்துகிறார்கள் என்பது கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது. எல்லா பாத்திரங்களுமே ஒரு தேடலை நோக்கிப் பயணிப்பது தான் நாவலின் அடிநாதம். அந்தத் தேடல் என்ன என்பதை நாவல் படிப்பதிலிருந்து தேடினால் கிடைப்பது வாழ்க்கை என்ற ஒன்று தான்.
இந்த நாவலில் ரசித்துச் சிலாகிக்கக் கூடிய பகுதிகள் நிரம்ப உள்ளன. அனைத்து சுவாரஸ்யங்களையும் கூறல் தேவையற்றது என்பதால் சிலவற்றை மட்டும் கூறல் மிகவும் அவசியம். பிறவற்றை நாவல் படிப்போர் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம். சில ரசிக்கக்கூடிய பல பகுதிகளில் சில கீழே:-
“மெல்லிய சன்னல் திரைகளின் மறுபக்கம் வெள்ளை வெளேரென்று மேகங்கள். ஒரு பகுதி பால்கனியின் கைப்பிடிக் கம்பிகளில் தலை வைத்திருந்தன”–பக்கம் 24
“எதுவானா என்ன?” ஊர் பேர் தெரியா தமிழ் எழுத்தாளன் மனைவின்னு சொல்லிக் கொள்வதைக் காட்டிலும், காஃப்கா வீட்டு நாயெனச் சொல்லிக் கொள்வதில் பெருமை”– பக்கம் 44
“தற்கொலை செய்து கொள்ளத் துணிச்சல் இல்லாம சந்நியாசத்தைத் தேர்வு செய்தேனோ என்கிற சந்தேகம் எனக்குண்டு. அநேகமாக துறவு பூண பெரும்பாலோருக்கு அதுவே காரணம்” –பக்கம் 119
“ராஜபக்ஷேக்கள் தமிழரிலும் உண்டென்று தெரியும். ஆனால் அவன் தமக்கையின் கணவனாக தன்னுடைய குடும்பத்திலும் இருக்கக் கூடுமென்று யோசித்துப் பார்த்ததில்லை”–பக்கம் 164
“நவாஸ் ஷெரீப்பை சந்திக்கத் தயாராக இருந்த மோடி போல
அவளை வரவேற்கத் தயாரான போது மாலை மணி ஆறு”–
பக்கம் 187
“நாய்க்கு என்ன பேரு பின்லாடனா”–பக்கம் 191
“நூலற்ற பட்டம் போல பயண இலக்குகள் பற்றிய
கவலைகளின்றி காற்றிடம் தன்னை ஒப்படைக்கும்
எண்ணம் கடந்த சில நாட்களாக விடாமல் அவரைத் துரத்துகிறது”.– பக்கம் 250
“அவள் சிரிக்கிற போது, வெண்ணிற பற்கள் உதடுகளில் உட்காரவும் எழவும் செய்வதைப் பெண்களும் சாடையாகக் கவனித்தனர்”. –பக்கம் 262
தமிழ்நாட்டில் தமிழ் பலருடைய வாயில் அகப்பட்டுப் படாதபாடு படுவதைப் பார்க்கும் போது தமிழை எண்ணி பரிதாபம் கொள்ளத்தான் நேர்கிறது. டி.வி செய்தி, சீரியல், தினசரி செய்தித்தாள்த் தமிழ், அரசியல் கட்சிகளின் ஆவேசக் கூட்டத் தமிழ் ஆகிய இன்ன பிற இதில் அடங்கும். ஆனால் இந்நாவலில் தமிழ்நாட்டுத் தமிழ், பிரெஞ்சுத் தமிழ், இலங்கைத் தமிழ், புதுச்சேரித் தமிழ் ஆகிய மொழிநடை மிகவும் லாவகமாகவும் அற்புதமாகவும் கையாளப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது.
இன்றைக்கு வெளிவரும் நவீன உத்திகளுடன் கூடிய நாவல்களைப் படிக்கும் போது அத்தியாயங்கள் நீண்டு கொண்டே செல்லுவது மிகவும் சலிப்பை ஏற்படுத்துவதாய் உள்ளது. ஆனால் இந்நாவலில் மிகமிகச் சிறிய, குறுகிய, கட்டுக்கோப்பான அத்தியாயங்கள் நாவல் வாசிப்பின் விறுவிறுப்பை கூட்டுவதற்கு உந்துதலாய் இருக்கிறது.
இந்நாவலைப் படிக்கும் போது நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்கு ஃப்ரன்ஸ் காஃப்கா மீது உள்ள அளவு கடந்த ஈடுபாடும் தாக்கமும் நன்கு புலனாகிறது.
58,87,151,168,181,195,250,254,262 ஆகிய பக்கங்களிலுள்ள எழுத்துப் பிழைகளை அடுத்த பதிப்பில் நீக்குதலை நினைவிற்கொள்ளல் வேண்டும் என்பது அதற்குப் பொறுப்பாளர்களின் கடமை, பணி. உலகளாவிய களன்களைக் கட்டுக் கோப்பான நவீன உத்திகளை மிக கவனமாக உள்ளடக்கிய ஒரு சிறப்பு மிக்க நாவல் என்றே “காஃகாவின் நாய்க்குட்டி” என்ற நாவலைச் சொல்ல வேண்டும். நவீன உத்திகளை உள்ளடக்கிய இந்நாளில் வெளி வந்து கொண்டிருக்கும் புரியாமை என்ற கஷ்டம் இந்த நாவலில் இல்லை என்பது மகிழ்வுக்குரியது. நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களிடமிருந்து இன்னும் பல சிறந்த நாவல்கள் வெளிப்படும் என்ற நம்பிக்கையைப் படிப்பவர்களிடம் இந்த நாவல் ஏற்படுத்துகிறது. நாகரத்தினம் கிருஷ்ணாவைப் பொறுத்தவரையில் அவர் சிறந்த முறையில் முழுப் பொறுப்புடன் எழுதியிருக்கிறார். தமிழ் வாசகர்களும் சிறந்த முறையில் முழுப் பொறுப்புடன், கவனச் சிதறலின்றி இந்நாவலை அணுகுவார்கள் என்றால் அது தமிழுக்கு இன்னும் மெருகூட்டும், வலுவூட்டும்.
இம்மாதிரி புதுவகை நாவல்களைப் பதிப்பிக்கும் காலச்சுவடு பதிப்பகத்திற்கு தமிழ் இலக்கியச் சரித்திரத்தில் ஒரு நல்லிடம் நிச்சயம் உண்டு.
- Muthu Krishnan,
291, Secretariat Colony,
Thuraipakkam,
Chennai- 600 097.
94444 21507
muthu77000@gmail.com <mailto:muthu77000@gmail.com>
நன்றி : பேசும் புதிய சக்தி