சாதிக்கான் : பாகிஸ்தானியர், சமயத்தால் இஸ்லாமியர் முதன் முறையாக மேற்கு நாடுகளில் மிகப்பெரிய, மிகமுக்கியமான நகரமொன்றிர்க்கு, இலண்டன் மா நகருக்கு மேயராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். அவர் ஒரு வழக்கறிஞர், மனித உரிமைப் போராளி, பிரிட்டிஷ் உழைப்பாளர் கட்சியில் நீண்டகால உறுப்பினர், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர். அவர் வழக்கறிஞர், மனித உரிமை போராளி என்பதால், சில நேரங்களில் சட்டப்பிரச்சினையுள்ள மனிதர்களை அலுவலகத்தில் வைத்து சந்திக்க நேர்ந்திருக்கிறது. அதனைக் கொண்டு மேம்போக்காக அவர் தீவிரவாதிகளுக்குத் துணைபோகிறவர் என்ற குற்றசாட்டுகள் எதிரிகளால் வைக்கப்பட்டன. இருந்தாலும் அவருடைய மதத்தையோ, அயல் நாட்டிலிருந்து வந்தவர் என்ற அடையாளத்தையோ வைத்துப் பார்க்காமல் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். கன்சர்வேட்டிவ் கட்சியின் கோடீஸ்வர, ஐரோப்பியரை, கடந்தகால காலனி நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த மனிதர் வெற்றிகண்டிருப்பது ஒரு சாதனை. பாரீஸ் மா நகரில் ஒரு மேயருக்கு பிரத்தியேக அதிகாரங்கள் உண்டு : போலீஸ் மற்றும் நகரப் போக்குவரத்து அரசியலில் அவருடைய கைகள் கட்டப்பட்டவை அல்ல. இலண்டன் மா நகர் மேயர் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டவை என் கிறார்கள். நமக்கு அது முக்கியமல்ல, அவரது வெற்றி இரு விஷயங்களை உறுதிபடுத்துகிறது. முதலாவதாக அவர் என்னதான் மேற்குலக வாழ்க்கையெனும் பொது நீரோட்டத்தில் கலந்திருந்தாலும் பிரச்சினைகள் என்று வருகிறபோது அவரது குலமும், கோத்திரமும் பூர்வாசிரம உண்மைகளும் கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்யப்படும் உண்மை, அவரது மேற்குலக வாழ்க்கையை, இங்க்கிலாந்து நாட்டில் அவரது இருத்தல் எறும்பு ஊர்ந்து போட்டிருந்த மணற்கோட்டினை, இலண்டன் மேயர் தேர்தல் கலைத்திருக்கிறது. நாற்பது ஆண்டுகால இலண்டன் இருப்பு மறுக்கபட்டு அவரது கடந்த காலம் தோண்டி எடுக்கப்பட்டது. இரண்டாவதாகக் கடந்த பல நூற்றாண்டுகளாக நவீன வாழ்க்கைமுறையில் பலஅம்சங்களில் முன்னோடிகளாக உள்ள மேற்குலக மக்கள் இவ்விடயத்திலும் தாங்கள் முன்னோடிகள் என்பதை எண்பித்து ஒரு புலம்பெயர்ந்த பாகிஸ்தானியரின் அரசியல் இருத்தலை மறுக்காமல் உறுதிப்படுத்தியிருக்கும் உண்மை.
மனித வாழ்க்கையில் இருத்தலும் மறுத்தலும் பரஸ்பர எதிர்வினைகள். « எனது இருத்தலை ஏற்றால் உனது இருத்தலை ஏற்பேன், இல்லையென்றால் இல்லை. » எனக்கு லைக் போட்டால் உனக்கு உடனடியாக ஒரு லைக். துறைசார்ந்த இருமனிதர்களிடத்தில் ஒருவர் இருத்தலை மற்றவர் அங்கீகரிப்பது அத்தனை எளிதானதல்ல. ஜெயிப்பவன் பக்கத்து தெருவைச் சேர்ந்தவனாக இருந்தால் பிரச்சினையில்லை, மாறாக அவன் பக்கத்துவீட்டுக்காரனாக இருந்தால், வயிறு எரிகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதர்களை மட்டுமல்ல அவர்களமர்ந்த நாற்காலிகளைக் கூட வெறுக்கும் மன நிலைக்குத் தள்ளப்பட்டு, வெறுப்பு நிலை அரசியலில் வாழ்ந்த, வாழ்கிற தமிழ் அரசியல் வாதிகளை அறிவோம். உலகில் வேறேங்கும் கண்டிராத அளவில் நூற்றுக்கணக்கில் தமிழ் நாட்டில் கட்சிகள் உள்ளன. தமது இருத்தல் உணரப்படவில்லை என்ற ஏக்கங்களின் புறவடிவங்கள் அவை.
எழுத்து அரசியலிலும் இந்த இருத்தல் மறுத்தல் பிரச்சினைகள் இருக்கின்றன. ஓர் எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரையோ, ஒரு கவிஞர் மற்றொரு கவிஞரையோ, ஒரு மொழிபெயர்ப்பாளர் மற்றொரு மொழிபெயர்ப்பாளரையோ அவர் இருத்தலையோ « as it is » எற்பது இங்கு நடக்கக் கூடியதல்ல, தனது அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூப்பிக்க முயல்வதுபோல சில நேரங்களில் பிற எழுத்தாளர்களுடன் (அவர் தமக்குப் போட்டியில்லை எனக் கருதினால், அவர்கள் இருத்தலை இனி தன்னால் மறுக்க முடியாதென்றால்) குரூப் போட்டோ எடுத்துக் கொள்வதுண்டு, விதிவிலக்குகளாக சில எழுத்தாளர்கள் இருக்கலாம், ஆனால் அது பொது விதி அல்ல.
என்னிடம் தங்கள் படைப்பை மொழிபெயர்க்கச் சொல்லி கேட்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு நியாயம் கருதி அதைச் செய்ய நினைத்தாலும், எனது உள்மனம் எழுப்பும் கேள்விக்குப் பதில் சொல்லவேண்டியவனாக இருக்கிறேன். எனது இருத்தலை உறுதிசெய்ய அவர்கள் கிள்ளிப்போட்டத் துரும்புகள் எத்தனை என்று எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது. பிறர் தங்கள் இருத்தலுக்கு எத்தனை விசுவாசமாக இருக்கிறார்களோ அத்தனை விசுவாசமாக எனது இருத்தலை போற்றவும், உறுதிசெய்யவும் எனக்கும் விருப்பம் இருக்கிறது.
இக்கட்டுரையை எப்படி எடுத்துக்கொள்வீர்களோ எனக்குத் தெரியாது, எல்லா மனிதர்களையும்போலவே எனது இருத்தலைத் தெரிவிக்கும் முயற்சியெனக் நீங்கள் கருதினால், எனது வாக்கு மறுத்தலுக்கு அல்ல.
—————————————-