பன்னிரண்டாம் தேதி(மார்ச்) காலை செவில்லா நகருக்குப் பயணம். ஸ்பெய்ன் இரயில்வே துறை குறித்து ஒரு தகவல். மாட் ரீட்டில் ஆரம்பித்து, கொர்தோபா, செவில்லா என்ற மூன்று இரயில் நிலையங்களும் ஸ்பெய்ன் நகரங்களைப் போலவே அவ்வளவு சுத்தம், நன்கு பராமரிக்கிறார்கள். ஐரோப்பாவில் வேறு நகரங்களில் (ஸ்காண்டி நேவியா சுவிஸ் தவிர்த்து) இதுபொன்றதொரு சுத்தத்தைக் கண்டதில்லை. ஐரோப்பாவின் பிற நகரங்களில் காண்பதைப்போல நூறாண்டுகளைக் கடந்த கலை நேர்த்திமிக்க கட்டிடங்களாக ஸ்பெய்ன் இரயில் நிலையங்கள் இல்லை அனைத்துமே நவீனத்தின் அடையாளங்கள், அறிவியல் திரைப்படத்தில் இடம்பெறுகிற கட்டிட ங்களை நினைவூட்டுபவை. அடுத்ததாக பாதுகாப்பு ஏற்பாடுகள். விமான நிலையத்தில் விமானத்தில் எறுவதற்கு முன்பாக உள்ள பாதுகாப்பு சோதனைகளை இங்கும் கடக்க வேண்டியிருக்கிறது. கட ந்த காலத்தில் இரயிலில் நடந்த பயங்கரவாத தாக்குதல்அனுபவம் ஸ்பெய்ன் நாட்டவரை எச்சரிக்கையுடன் இருக்க வைத்துள்ளது பிரான்சு நாட்டில் அத்தகைய பாதுகாப்பு சோதனைகள் இல்லை .
ஏற்கனவே கூறியதை மீண்டும் நினைவூட்டுகிறேன். ஸ்பெய்ன் நாட்டின் அண்டாலூசியாவுக்குச் செல்கிறவர்கள் குறிப்பாக செவில்லாவிற்கும் கொர்தோபாவிற்கும் செல்கிறவர்கள் பாரீஸிலிருந்து செவில்லா சென்று பின்னர் அங்கிருந்து கொர்தோபா செல்வது நல்லது. பணம், நாள் விரயம் இரண்டும் மிச்சம் செவில்லா செல்வதற்குக் காலை 9 மணிக்கு கொர்தோபா இரயில் நிலையம் சென்றோம். இடம்பெயர்ந்திருப்பது இந்தியத் துணைக் கண்டம் என்பதைப் பயணச்சீட்டு விற்பவரின் பார்வை அவரது மூளைக்குத் தெரிவிக்க ஆங்கில மொழியாடலுடன் தனது பணியைத் தொடர்ந்தார். நாங்கள் இருவரும் பிரெஞ்சுக் காரர்களுக்கு அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் என்ற விளக்கத்திற்கெல்லாம் அவசியமின்றி பயணச்சீட்டுகள் கைமாறின. .
ஓருண்மையை உங்களொடு பகிர்ந்துகொள்ள வேண்டும் இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் இருக்கிறார்கள், தமிழை, தமிழ்ப் பண்பாட்டைப் புலம்பெயர்ந்தவர்கள் வளர்த்தெடுப்பார்கள் என்றெல்லாம் நம்மிடத்தில் கனவுகள் இருக்கின்றன . கனவுகாண யாருக்கு உரிமை இல்லை. நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களும் அன்றைய வசதிக்கேற்ப மொரீஷியஸிலும், பீஜித்தீவிலும், கரும்புத் தோட்டங்களில் வேலை செய்து குடிசைக்குத் திரும்பியவேளைகளில் புலம்பெயர்ந்த சூடு தணியாமலிருந்தபோது தாயகத்தையும் தாய்மொழியையும் நேசித்தார்கள். அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கு அப்படியான நாஸ்ட்டால்ஜியாக்கள் இல்லை, புலம்பெயர்ந்த நாட்டில் அதற்கான தேவைகளும் இல்லை. மிச்சமென்று இருப்பதெல்லாம். மாரியாத்தாளும், பழனி ஆண்டவரும், கோவிந்தனும் மட்டுமே. அமெரிக்கா, ஐரோப்பாவென்று புலம்பெயர்ந்திருக்குமிடத்திலும், இந்த உண்மைதான் நாளை அரங்கேறும். இன்றைக்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தமிழ்ப் பண்பென்ற ஆராதிக்கிறவர்கள், அவற்றைக் கொண்டாடுகிறவர்கள் அனைவருமே இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஐரோப்பா, அமெரிக்காவென்று குடியேறியவர்கள். தாயக நாஸ்ட்டால்ஜியா மோகத்திலிருந்து விடுபடாதவர்கள் ஆதலால் மொழியென்றும் பண்பாடென்றும்(பொங்கல், தீபாவளி, கோலிவுட், பாலிவுட், ரஜனி, விஜய், அரசியல்) பேசுகிறார்கள். – ஆனால் அவர்களுக்கேகூட தாயகம் திரும்பும் ஆசையில்லை. அலுத்துவிட்டது. இந்தியாவிற்கு பார்வையாளனாக மட்டுமே செல்ல விருப்பம்,, இலங்கைத் தமிழர்களில் 99 விழுக்காட்டினர் நிலமையும் அதுதான். இ ந் நிலையில் எங்கள் அடுத்த தலைமுறையினர் அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்குப் பின்னர் எப்படி இருப்பார்களெனச் சொல்ல வேண்டியதில்லை, தவிர தாய் நாட்டிலேயே தமிழ் படிக்க ஆளில்லாதபோது ரஜனிக்காகவும் விஜய்க்காகவும் இங்கே படிக்கிற தமிழ் எத்தனை காலத்திற்கு உதவும். இரண்டொரு நூற்றாண்டுகளை புலம்பெயர்ந்த மண்ணில் கழித்த தலைமுறை தங்கள் பிள்ளைகள் மேடைகளில் திருக்குறள் சொல்லக்கேட்டுச் சந்தோஷப் படுவார்களா ? மொரீசியஸில் அப்படியொரு நிலமை பதினேழாம் நூற்றாண்டில் இருந்தது, இன்றில்லை. ஆக உடலால் மட்டுமே தமிழர்களாக இருக்க முடியும், அது கூட வேறு கண்டத்தைச் சேர்ந்த உடலுடன் கலக்காதவரை அந்த உடல் கூட புலம்பெயர்ந்த நாடுகளில் இந்தியத் துணைக் கண்டத்தைச் சார்ந்தவர் என்ற அடையாளத்தை பெற உதவுமேதவிர தமிழர் அடையாளத்தைத் தருவதாக இருக்காது.
ஸ்பெய்ன் பயணத்திற்கு வருகிறேன் செவில்லாவில் வந்திறங்கியபோது காலை பத்தரை மணி. பொதுவாக ஐரோப்பிய பெரு நகரங்களில் சுற்றுலா பயணிகளுக்கென தகவல் அலுவலகங்கள் இருக்கும், இந்தியாவில் இது பெரும் குறை. சேவைகள் குறித்து பெரும் அறிவிப்புகளை மத்திய அமைச்சர்களில் ஆரம்பித்து மா நில அமைச்சர்வர்கள் வரை செய்வார்கள். தினசரிகளிலும் செய்திகள் வரும். கருணா நிதி தேதிமுக கூட்டணி கனிந்து விட்டது என்பதைப் போன்றதுதான் இதுவும். பின்னர் அனைத்தும் புஸ்வாணமாக முடியும்.
செவில்லா இரயில் நிலையத்திலிருந்த சுற்றுலா தகவல் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் எங்களிடத்தில் ஒரு வரை பட த்தைக் கொடுத்து, பிரெஞ்சுமொழியில் நிதானமாக அனைத்தையும் விளக்கினார். நிலையத்தைவிட்டு வெளிவந்ததும் தட எண் 21 பிடித்து (இம்முறை நீல நிறப் பேருந்து) ஏறியதும், ஓட்டுனரிடம் நாங்கள் இறங்கவேண்டிய இடத்தைக் குறிப்பிட்டோம். தவறுதலாக எங்கேயாவது இறங்க்கிவிடப்போகிறோம் என்ற பயம். அவர் ஸ்பானிஷ் மொழியில் பதிலைச்சொன்னார். அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ள வேறு ஓட்டுனர் மாறப் போகிறார் என்பதை அவர் கூறியதைவைத்து ஊகிக்க முடிந்தது. அடுத் த நிறுத்தத்தில் ஏறிய ஓட்டுனரிடம் எங்களைப் பார்த்து முன்னவர் கூறியதைவைத்து, எங்களுக்குரிய நிறுத்தத்தில் இறக்கிவிடச்சொல்கிறார் என்பது புரிந்தது. நான்காவது நிறுத்தத்தில் இறங்க்கியதும் sight seeing பேருந்து தடத்தின் பயணச் சீட்டு முகவர்கள் எங்களைச் சூழ்ந்துகொண்டார்கள். இங்கும் பச்சை, சிவப்பு வண்ணத்தில் அரைமணி நேரத்திற்கு ஒரு முறை நகரின் முக்கிய சுற்றுலா இடங்களை பேருந்துகள் வலம் வருகின்றன. முதற்சுற்றை பேருந்தின் மேற்தளத்தில் அமர்ந்து ஒலி நாடா அளித்த விளக்கங்களைக் கேட்டவண்ணம் முடித்தோம். அதன் பின்னர் பார்க்க வேண்டியவற்றுள் எவையெவை முக்கியமோ அவற்றை மட்டும் கண்டோம்.
கொர்தோபாவை விட செவில்லா பெரிய நகரம். குறைந்தபட்சம் இரண்டு நாட்களை ஒதுக்குவது நல்லது. செவில்லா கொர்தோபாவைப் போலவே புராணீகமும் மர்ம மும் ஒன்றிணைந்த அதிசய நகரம். இங்கும் வரலாறு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. ரோமானியர்கள், அரபுகள் ஸ்பானிஷ் மன்னர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருக்கிறது. கிறிஸ்தோப் கொலம்பஸ் கடற்பயனத்தை மேற்கொள்வதற்கு முன்பாக தமது திட்ட த்தை நண்பர்களுடன் கலந்தாலோசித்தது இவ்விடத்தில்தான். இங்கும் பார்க்கவேண்டியவையென ஒரு பெரிய பட்டியலை விரிக்கலாம். மார்கெரித் யூர்செனார் என்ற பிரெஞ்சு எழுத்தாளரை அறிந்தவர்கள் அவருடைய முக்கிய நாவலான Mémoires d’Hadrien ஐ வாசித்திருக்கக்கூடும். உலகின் முக்கிய நாவல் வரிசையில் அதற்கு எப்போதும் இடமுண்டு. தமிழ்ப்படுத்த விரும்பி. இருபது பக்கங்களுக்கு மேல் மொழி பெயர்த்து தொடராமல் இன்னமும் கணினியில் தூங்குகிறது. அந்த அத்ரியனை ரோமானியர்களுக்கு அளித்தது செவில்லா நகரம்தான். யுனெஸ்கோவின் மரபுவழி சின்னங்களாகத் தேர்வு செய்யப்பட்ட பல நூற்றாண்டுகளைக் கடந்தக் கட்டிடக்கலைச் சான்றுகள் ஏராளம் : Catedral de Santa Maria Aalcazar,Plaza d’Espana, Quartier Tirana, SantaCruz …1992 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகப்பொருட்காட்சி கோபுரமும், அறிவியல் மண்டபங்கள், நவீன கலை நுட்பத்துடன் வடிவமைத்த பாலங்கள் பார்க்க வேண்டியவை இருக்கின்றன. இரவு தங்க முடிந்தால் Flamencoவைத் தவறவிடாதீர்கள்.
பிளாஸா எஸ்பானாவில் அதிசயமாக ஒர் ஈழத் தமிழரைச் சந்தித்தேன் வியப்பாக இருந்த து. ஸ்பெய்ன் நாட்டிற்கு அவர்கள் காலனி மக்களே அதிகம் வருவதில்லை. அண்டை நாடான மொராக்காவிலிருந்து புலம்பெயருபவர்கள் உண்டு. வழக்கம்போல இந்தியத் துணைக்கண்ட த்திலிருந்து சீக்கியர்களையும், பாகிஸ்தானியரையும் பார்க்கலாம். தமிழர்கள் அரிதாகத் தான் கண்ணிற்படுவார்கள். அதை அவர் உறுதி செய்தார். இந்த நகரை எப்படி தேர்வு செய்தீர்கள் பிரத்தியேக க் காரணம் இருக்கிறதா எனக் கேட்டதற்கு, தான் பத்தாண்டுகளுக்கு முன்பு இலண்டனில் இருந்தாகவும், தமிழர்கள் முகத்தில் விழிக்க க் கூடாதென்று இப்படி தனி ஆளாக இங்கிருக்கிறேன் என்றார். அவர் இப்படிக் கூற எது காரணமாக இருக்குமென யோசித்தது ஒரு நல்ல நாவலுக்கு களம் அமைத்துக் கொடுத்தது. ஆனால் அதனை ஈழத் தமிழில் எழுதவேண்டும். இந்தியத் தமிழ் உதவாது அதில் ஈரம் இருக்காது என்பதால் அப்போதே அதை மறந்தாயிற்று. இறுதியாக அவரிடம் கேட்க எனக்கு ஒரு கேள்வி இருந்தது. தமிழர்கள் முகத்தில் விழிக்க் கூடாது என்பது உங்கள் முடிவென்றால் எதற்காக என்னைத் தடுத்து நிறுத்தி எதற்காகப் பேசவிரும்பினீர்கள் என்று மனதில் எழுந்ததைக் கேட்கவும் செய்தேன் . தமிழ் பேசி நாளாயிற்று என்பது அவர் பதில்.
———————————————
தாயக நாஸ்ட்டால்ஜியா பற்றிய உங்களின் அவதானிப்பு மிக உண்மை. ஆனால் அது சோகம்.