« எழுதுவதற்குப் படித்தால் மட்டும் போதாது ஊர் சுற்றவும் வேண்டுமென » நண்பர் இந்திரன் தெரிவித்திருந்தார். உண்மையும் அதுதான். நமது இருத்தல் பிற மனிதர்களாலும் தீர்மானிக்கப்படுகிறது. மனைவி உள்ளவரைதான் கணவன், தந்தை எனும் இருத்தல் பிள்ளைகளால் கிடைக்கிறது. சகோதரன் என்பதும் சகோதரி என்பதும் உடன்பிறந்தவர்கள் படைக்கும் அடையாளம். எழுத்தாளன் என்பதும், ஓவியன் என்பதும், ஆசிரியன் என்பதும் நாமே நமக்குப் படைத்துக்கொள்ளும் அடையாளங்கள் அல்ல. இச்சமூகத்தின் அங்க்கீகரிப்பால் அதன் அமைப்பு முறைகளால் அதனை உருவாக்கிய பிறமனிதர்களால் தீர்மானிக்கப்படுவது. எனவே இயலும் போதெல்லாம் நமாது இருத்தலை இயக்கி நமது இருப்பை உறுதிசெய்ய வேண்டியிருக்கிறது, தவறினால் , இயங்கமறுத்தால் அவர்கள் புதைத்துவிட்டுப் போய்விடுவார்கள். ஆக இயலும் போதெல்லாம் சக மனிதர்களைச் சந்திக்கவேண்டும், என் சுவாசக் காற்று அவர்களைத் தொட்டுக் கடக்கவேண்டும், அதனூடாக எனது உயிர்வாழ்க்கை புதுப்பிக்கப்படுகிறதென உங்களைப் போலவே நானும் நினைக்கிறேன். எழுத்தாளர்கள் மட்டுமல்ல எல்லோருமே ஒவ்வொருகணமும் படிக்கிறோம் என்ற உணர்வின்றியே வாழ்க்கைமுழுதும் கற்கிறோம், பெற்றதை அதற்கான தேவைவருகிறபோது உபயோகிக்கவும் செய்கிறோம். எவரிடம் கற்றோம், எங்கே படித்தோம் என்கிற உணர்வின்றியேஅவற்றை உபயோகிக்கவும் செய்கிறோம். கற்றதும் பெற்றதும் அதற்கான அவசியம் வருகிறபோது நமது அனுமதிக்குக் காத்திராமலேயே எஜமானாக மாறி நம்மை செலுத்துகிறது.
ஐரோப்பாவில் உள்ள சௌகரியம் நாடுகளின் எல்லைகள் குறுகிய நிலப்பரப்புக்குளைக் கொண்டவை . புதுச்சேரியிலிருந்து சென்னைக்குச் செல்ல ஆகும் அதே நேரத்தை இங்கும், சாலைப்பயணத்திற்குச் செலவிட்டால் ( நான் இருக்கும் ஸ்ட்ராஸ்பூரிலிருந்து) ஜெர்மனிலோ, ஆஸ்ட்ரியாவிலோ, சுவிட்ஸர்லாந்திலோ, பெல்ஜியத்திலோ, லக்ஸம்பர்கிலோ இருக்கமுடியும். ஸ்பெய்ன் நாட்டிற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பார் சலோனாவிற்குச் சென்றிருக்கிறேன். மகனும், மருமகளும் தங்கள் திருமணப் பரிசாக எங்கள் அனைவரையும் அழைத்துச் சென்றார்கள். அமெரிக்காவிலிருந்து பெரியமகள், மருமகன் ; இளையமகள் என அனைவரும் சென்றிருந்தோம். உயிர்மை.காம் ல் அது வாசிக்க கிடைக்கும் : http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=1456. . ஸ்பெய்ன் செல்ல ஆசைப்பட்டால் பார்சலோனாவிற்குக் கண்டிப்பாக முதலிற் போகவேண்டும். அதன் பிறகே மற்றதெல்லாம். இம்முறை நாங்கள் சென்றது ஸ்பெய்ன் நாட்டின் தென்பகுதியிலுள்ள அந்தாலூசி(Andalousie) பிரதேசத்திற்கு. இப்பிரதேசத்தில் செவில்லா – கொர்தோபா, இரண்டுமே முக்கியமான நகரங்கள்.. 9ந்தேதி Strasbourg லிருந்து புறப்பட்டோம். பிரான்சு முழுக்க வரவிருக்கும் புதிய தொழிலாளர் சட்டத்தை எதிர்த்து வேலை நிறுத்தம், அதன் விளைவாக 4 யூரோ கொடுத்து விமான நிலையத்திற்குச் செல்வதற்குப் பதிலாக டாக்ஸிக்கு 60 யூரோ கொடுக்க வேண்டியிருந்த து. பாரீஸ் ஒர்லி விமான நிலையத்தில் காலை எட்டுமணிக்கு இறங்க்கியபோது பருவ நிலையும் மோசமாக இருக்க அனேக விமானங்களை இரத்து செய்திருந்தார்கள். ஆனால் மாட் ரீட் செல்ல பிரச்சினையில்லை. ஸ்பெய்ன் தலை நகரம் மாட் ரீட்டில் இறங்கியபோது பிற்பகல் பன்னிரண்டரை.. மாட் ரீட்டிலிருந்து கொர்தோபா செல்ல விரைவு வண்டி எங்களுக்கு 2.20க்கு இருந்தது. இந்த இடத்தில் ஒரு சிறுகுறிப்பு பாரீஸிலிருந்து அந்தாலூசி செல்ல விரும்பும் நண்பர்கள் பாரீஸ் ஒர்லியிலிருந்து செவில்லா (Seville) சென்று அங்கிருந்து கொர்தோபா செல்வது உத்தமம். பயணச்செலவு மட்டுமல்ல நேரமும் மிச்சம் ( பாரீஸ்–செவில்லா 60 யூரோ+, செவில்லாவிலிருந்து கொர்தோபா இரயிலுக்கு 9யூரோ) . தேவையின்றி மாட்ரீட் போனதில் எல்லாமே இரட்டிப்பு ஆனது.
காத்திருந்த பிரச்சினை
வாழ்க்கை மட்டுமல்ல பயணமும் பிரச்சினைகளைச் சந்தித்து முடிவில் ‘சுபம்’ முறுவலிக்குமெனில், மகிழ்ச்சிதான். ஆனால் பிரச்சினைக்குரிய அத்தருணங்களை வர்ணிக்க வார்த்தைகள் போதா. மாட்ரீட் விமானத்தளத்தில் இறங்கி இரயில் நிலையம் செல்ல மகளின் யோசனை டாக்ஸி பிடிப்பது. அதனை நான் விரும்புவதில்லை. முடிந்தவரை தவிர்த்திருக்கிறேன். பொதுமக்கள் வாகனத்தில் பயணிக்கிறபோது மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. நடப்பது அதனைக் காட்டிலும் கூடுதலாக உதவும் எனில் நடக்க ஆசைப்படுவதுண்டு. கவிஞர் இந்திரன் கூறுவதுபோல மனிதர்களை வாசிக்க என்று வைத்துக்கொள்ளலாம். விமானத் தளத்தில் இறங்கி அங்கிருந்த ஓர் அரசு சுற்றுலாதுறை அலுவலகத்தில் விசாரித்தபோது இரயில் நிலையம் செல்ல பேருந்து இருப்பதை உறுதி செய்தார்கள். ஸ்பெய்ன் நாட்டில் உள்ள சௌகரியம் பெருந்தடங்களில் செல்கிற பேருந்துகளுக்கு, தடத்திற்கு ஒரு நிறத்தை ஒதுக்கி இருக்கிறார்கள். அவற்றினை இணைக்கிற கிளைத் தடங்களில் செல்கிற வாகனங்களுக்கும் பெருந்தட வாகனத்தின் நிறத்தையே ஒதுக்குவதால் பேருந்து தூரத்தில் வருகிறபோதே அடையாளப் படுத்த முடிவதோடு வீண் பதற்றமும் கொள்ளவேண்டியதில்லை. விமான நிலையத்திலிருந்து மஞ்சள் நிறப் பேருந்து மாட்ரீட் அத்தோஷா இரயில் நிலையத்திற்குச் செல்கிறது, இருபது நிமிட பயணம். வாகன ஒட்டுனரிடம் இரயில் நிலையத்தில் இறங்கவேண்டும் என்றேன், பிரெஞ்சு, ஆங்கிலம் இரண்டுமொழிகளை உபயோகித்தும் பயனில்லை. பேருந்திலிருந்த ஒரு குறிப்பு நான்காவது நிறுத்தம் என்றிருக்க அமைதியாய் இருக்கையைத் தேடியபொழுது குறுக்கிட்ட ஆங்கிலேயர்( ?) நான் இரயில் நிலையத்தில் இறங்கப் போகிறேன் என்றார். பேருந்து நின்றபோது பயணித்தவர்கள் அனைவருமே இரயில் நிலையத்திற்குப் பேருந்தைப் பிடித்தவர்கள் எனப் புரிந்தது
ஓர் அதிர்ச்சித் தகவல்.
மகள் அனுப்பியிருந்த முன்பதிவு பாரீஸ்–ஒர்லி – மாட் ரீட் விமானப் பயணம், தொடர்ந்து மாட் ரீட் – கொர்தோபா இரயில் பயணம் . எங்கள் முன் பதிவைக்காட்டி இரயில் பயணச்சீட்டைபெற வரிசையில் பத்து நிமிடம் நின்று, பயணச் சீட்டு விற்பனையாளரை நெருங்க்கியபோது முன்பதிவில் இரயில் பயணத்திற்கான எண் இல்லை எனக்கூறி . பயணிகள் சேவை அலுவலகத்தில் விசாரிக்குமாறு அனுப்பிவைத்தார். அங்கும் அரைமணி நேரக் காத்திருப்பிற்குப் பின்னர் தங்களுக்கு மேலேயுள்ள நிர்வாகத்திடம் விசாரியுங்கள் என அனுப்பி வைத்தார்கள். இரயில் பயணத்திற்கான முன்பதிவு எண்ணைப் பெற்றால்தான் தீர்வு என்பது முடிவாகக் கிடைத்த பதில். . எங்க்களுக்குப் மின் அஞ்சலில் பயண முன்பதிவை அனுப்பிய முகவர் செய்த தவறு. நாங்க்களும் முன்பதிவில் இருந்த விமானப் பயண பதிவு எண்ணை இரயில் பயணத்திற்கும் சேர்த்து என நினைத்துவிட்டோம். மகளுக்குப் போன்போட்டு பயண முகவர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ள கூறினோம். நேரம் கடந்துகொண்டிருந்தது. கொர்தொபா செல்லும் இரயில் பத்து நிமிடத்தில் புறப்பட இருக்க பிரச்சினையைப் பிறகு தீர்த்துகொள்ளலாம் என நினைத்து 180 யூரோ கொடுத்து ஒரு வழிபயணமென இரண்டு டிக்கெட்டை எடுத்து ஓடி இரயில் அமரும் வரை அனுபவித்த நரக நொடிகளை மறக்க முடியாது.
ஸ்பெய்ன் விரைவு இரயிலும் 400 கி.மீதூரத்தை ஒரு மணி நாற்பது நிமிட த்தில் கடந்திருந்தது. இத்தனைக்கும் வழியில் இரண்டு ஸ்டேஷனில் தலா ஐந்து நிமிடம் நின்றிருக்கும். பிற்பகல் 2.20க்குப் புறப்பட்டு மாலை 4.10க்கெல்லாம் கொர்தொபா வந்துவிட்டோம். எடுத்திருந்த ஒட்டல் இரயில் நிலையத்திற்கு வெகு அருகிலேயே இருந்த து. ஒட்டலுக்குச் சென்று சிறிது ஓய்வெடுத்துவிட்டு மாலை ஐந்தரை மணிக்கெல்லாம் கீழே இறங்கி அரபு பண்பாட்டுடன் இரண்டற கலந்திருந்த கொர்தொபா பழைய நகர்ப் பகுதிக்குச் சென்றோம்
(தொடரும்)