பேசாதிரு மனமே (1980)
இரத்தத்தின் இரத்தங்களும்
இரசவாத நடனமிட
கச்சைகள் கட்டிடுவர்
கலங்காதிரு மனமே !
காவிக்குப் பல்லிளித்து
கருத்துக்கு முகம் சுளிக்கும்
பாவிகள் சாதகத்தைப்
படியாதிரு மனமே !
உள்ளத்தில் சிறுமைகளை
உரமிட்டு வளர்த்தவர்கள்
கள்ளத்தால் கதையளப்பர்
கலங்காதிரு மனமே !
நட்பென்று வந்திடுவர்
நலங்கெட பொய்யுரைப்பர்
விலங்கினும் கீழின ங்கள்
விலைபோகாதிரு மனமே !
பிட்டுக்குமண் சுமந்து
பிரம்படி பட்ட ஈசன்
கட்டைக்கும் நாள் குறிப்பர்
கலங்காதிரு மனமே !
எதிர் வீட்டுத் தமிழனை
எட்டி உதைத்து விட்டு
பிறவித் தமிழுக்கென்பர்
பேசாதிருமனமே !
– நாகரத்தினம் கிருஷ்ணா
படைப்பிலக்கியத்தில் ஆர்வம் கொண்ட பலருக்கும் அவர்களின் தமிழ் ஆசான் கள் முதற்காரணம். நான் உயர் நிலைப் பள்ளியில் படித்தபோது எனக்கு வாய்த்த தமிழ் ஆசிரியர்களை மறக்க முடியாது : ஒருவர் திரு நா.கிருஷ்ணசாமி, மற்றவர் திரு இராசேந்திரன். இருவரையும் அண்மையில் சந்தித்தேன். இவர்களின் ஆசியால் எல்லோரையும்போல கவிதையில் தான் எனது இலக்கிய வாழ்வும் ஆரம்பம். எழுபதுகளில் கண்ணதாசன் தனிப்பாடல்களில் தீராத மோகம். அவற்றின் உந்துதலில் ஒரு தொகுப்பை வெளியிட்டேன், தலமை திரு. அவ்வை நடராசன், தொகுப்பிற்கு முன்னுரையும் அவருடையதுதான். பல இன்றும் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கிற வெகுசன இதழ்களில் பிரசுரமானவை. எனினும் தொடர்ந்து கவிதைள் எழுதாது, உரை நடைபக்கம் ஒதுங்கினேன். பிரசுரிப்பதில்லையே தவிர, அவ்வப்போது கவிதைகள் எழுத நேரிடுகிறது. அண்மையில் பா இரவிக் குமாருடையக் கவிதைத் தொகுப்பை வாசித்துவிட்டு தொடர்ந்து எழுதுங்களேன் என வற்புறுத்தியபொழுது, அவர் என்னிடம் கூறிய பதில், ” நிறைய எழுதி வைத்திருக்கிறேன்” பிரசுரிக்கத் தயக்கம் என்றார். அவர் பதிலை என்னுடையதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.
உண்மையைச் சொன்னால் கவிதை விடயத்தில் அப்படி யொரு தயக்கம் என்னிடத்தில் இருக்கிறது. நான் சட்டென்று வெந்து தணியும் ஆசாமி, வெறித்தனம் என்னுள் தீப்பற்றி எரிகிறபோது கவிதை எனக்குச் சுயசிகிச்சை மருந்தாக இருக்கிறது. எழுதி , எழுதிய வேகத்தில் கிழித்தும் போடுவதுண்டு. இந்தச் சூழலில் ஒரு முடிவெடுத்தேன், பழையவற்றை அசைபோட்டு , புதிதாய் எழுதிக்கொண்டிருப்பவற்றிர்க்கு (கண்ணதாசன் பாணியில் அல்லாத புதுக்கவிதைகளுக்கு) என்றேனும் ஒரு நாள் களம் அமைத்துக்கொடுக்கலாமா என்று பார்க்கிறேன். அதற்கான முதற்படி இது.