« கலக்குரலைக் கர்னாடக க் காரனிடம் எதிர்பார்க்கலாம். அவன் வெவரம் தெரியாதவன். நாம் நமது சொரணையுள்ள தமிழ் எழுத்தாளர்கள் வழி நடப்போம். ‘பகலில் பக்கம் பார்த்து பேசு இரவில் அதுவும் வேண்டாம், பகுத்தறியாமல் துணியாதே என்றெல்லாம் நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள் என்பது நமது படைப்புலக மேதைகளுக்குத் தெரியாதா என்ன ? »
படைப்பிலக்கியத்தில் கவிதை எழுதுவது அத்தனை எளிதான செயல் அல்ல . இருந்தும் தமிழில் அதிகம் கவிதை எழுதப்படுகிறது. இன்றைக்கு உலகில் அதிகம் கவிதை எழுதுபவர்கள் தமிழராகத்தான் இருக்க வேண்டும். பதிப்பாளர்கள் கவிஞர்களைக் கண்டால் ஒடுகிறார்கள். இன்று கவிதை எழுதுபவர்களை (தமிழில்) மூவகையினராகப் பிரிக்கலாம். தமிழ் படித்து, யாப்புப் படித்து, கவிதை வாசிக்க மேடைகிடைத்தால் வாழ்த்துப்பா, இரங்கற்பா எனக் கவிதை எழுதிகொண்டிருப்பவர்கள். ஆண்டுக்கு ஐந்துகவிதை எழுதுவதால் இலக்கண சுத்தமாக எழுதுவார்கள். ஆனால் கவிதைக்குரிய இலட்சணங்களைக் கோட்டைவிட்டிருப்பார்கள். அடுத்தவர்கள் பதின் வயதினர். கொஞ்சம் தமிழ் ஆர்வம் கொஞ்சம் வயதுக்கோளாறு என்ற சுரவேகத்தில் கவிதை எழுத ஆரம்பித்து, ஏதாவதொரு சிற்றிதழில் பிரசுரமானதும், முக நூலில் வைரமுத்துவை திட்டுவார்கள் (உள்ளூர வைரமுத்துவாக வரும் ஆவல் இருந்தாலுங்கூட). சொந்தச் செலவில் கவிதைப் புத்தகம்போட்டு தொடர்ந்து உழைப்பவர்கள் நிலைபெறவும் மற்றவர்கள் தொலைந்துபோகவும் இதில் வாய்ப்பிருக்கிறது
மகாகவி பாரதிக்கு கவிதையில் வாழ்பவனே கவிஞன், கவிதை எழுதுபவன் அல்ல. அவன் கவிதையையே வாழ்க்கையாக உடையோன் . வாழ்க்கையையே கவிதையாகச் செய்தோன். வாழ்க்கையைக் கவிதையாகச் செய்தல் என்பதென்ன ? வாழ்க்கை முழுதும் கவிதையாக வாழ்ந்து முடிபவன்.தனது காலத்தின் மனித வாழ்க்கையைக் கவிதைகளில் பதிவு செய்கிறவன், அதன் உயர்வு கண்டு பெருமிதமும், தாழ்வுகண்டு பெரும் சீற்றத்திற்கும் ஆளாகிறவன். அவன் « தேடிச் சோறு நிதம் தின்ன்று, பல சின்னசிறுகதைகள் பேசி » வாழ்ந்து கரைகிற மனிதக் கூட்டத்தில் ஒருவனல்லன். தமது மொழியாற்றலை கவிப்புலமையை சகமனிதன் உயர்வுக்கு உபயோகிக்கிறவன். சமூக பிரக்ஞையோடு கவிதை செய்பவன். எட்டயபுரத்திலிருந்து திருவல்லிக்கேணிவரை சமகால வாழ்க்கையைக் கவிதையாகச் செய்தவன், பாரதி. குயிற்பாட்டில் தத்துவமும், சொல்லத் தெரிந்திருந்தான், ‘கண்ணம்மா கண்ணம்மா’ என காதலில் உருகவும் அறிந்திருந்தான் . வாழ்க்கையைக் கவிதையாகச் செய்தலென்பதன் அடையாளம் இது.
பா. இரவிக்குமார் என்ற இந்த இளைஞரிடம் சகமனிதனைப்பற்றிய அக்கறை தெரிகிறது. இச்சமூகத்தின் போக்கு குறித்து க் கவலைப்படுபவராக இருக்கிறார். ஆக பாரதி வைத்திருக்கிற கவிஞன் சட்டைக்குக் கச்சிதமாகப் பொருந்தும் இளைஞர். பா. இரவிக்குமார் பெயருக்கு முன்னால் கவிமாமன்னன் , கவிவேந்தன், கவி நாட்டாமை என்கிற பட்டங்கள் எதுவுமில்லை. கவிஞர் என்ற சொல்லையும் தவிர்த்திருந்தார். ஆக நல்ல கவிதைகள் எழுதியிருக்கக்கூடும் என்ற நம்பிக்கையிலேயே அவருடையக் கவிதைத் தொகுப்பைத் திறந்தேன், ஏமாற்றம் அதிகமில்லை.
இத்தொகுப்பிலுள்ள முதல் கவிதை . எனக்கும் உங்களுக்குமான ‘கடைசி சந்திப்பு’
என வாசகர்களை மிரட்டுவதுபோன்றதொரு கவிதைத் தலைப்பைக் கொண்டிருக்கிறது.
கடைசி சந்திப்பு
கடைசி சந்திப்பு/ஏற்படுத்தும் ரணங்கள்/சொல்லி முடியாதவை
அறைக்குள் என்றால்/ ஆறுதலாகச்/சற்றே விசும்பலாம்
சாலையில் என்றால்/அபத்தமாக எதையோ/பேசவேண்டி இருக்கும்.
எந்த த் தருணத்தில்/பிரிகிறோம்/என்பதைச் சொல்ல முடியாது/துல்லியமாக
ஏதோ ஒர் ஏக்கத்தின்/அல்லது /ஏதோ ஒரு கனவின் /மரணம் அது
சபித்தவோ வாழ்ந்தவோ/ சக்தியற்று/ஒரு சிறுவனின்/குமுறலெனத்/துடிக்கும் நெஞ்சம்
உயிர் /அறுபடும் நொடியில்/கண்ணீரின்/ உயிர்ப்பு அது
இனி/பார்க்கவே கூடாது /என்ற முடிவுடனும்../ஒரே ஒரு முறை/
சந்திக்கமாட்டோமா /என்ற ஏக்கத்துடனும் /நாம் பிரிந்தத் தருணத்தில்தான்
நான் இறந்து போனேன்.
கவிதை என்பது இறுக்கமானது, சொற்களை விரயம்செய்யாமல் சொல்லவேண்டியவற்றைக் கவிதைக்குரிய உபகரணங்களைக்கொண்டு விளக்க முற்படுவது. இக்கவிதையில் கடைசி சந்திப்பு என்ற சொல்லே நிழ்வின் மொத்தபாரத்தையும் சுமந்து வதைபடுகிறது கடைசி சந்திப்பை ரணங்கள் எங்கிறார் கவிஞர். ரணங்கள் நாள்பட்டவை. ஆறாப்புண்களைத்தான் ரணங்கள் என்கிறோம். ரணங்ககளின் வலியை வார்த்தைகள் கொண்டு விளக்கமுடியாது. அதனால் தான் அதனை « சொல்லி முடியாதவை » எங்கிறார். கவிதைக்குரிய கருவிகளை நாடாமல் அதாவது உருவகம், உவமை என்று சுற்றி வளைக்காமல் « ஏதோ ஓர் ஏக்கத்தின் அல்லது ஏதோ ஒரு கனவின் மரணம் அது » என்கிறார். « சபிக்கவோ வாழ்த்தவோ சக்தியற்று ஒரு சிறுவனின் குமுறலென துடிக்கும் நெஞ்சம் » என்றும், « உயிர் அறுபடும் நொடியில் கண்ணீரின் உப்பு அது » என்றும் உருவகப்படுத்துகிறார். உண்மையில் கடைசிசந்திப்பு என்பது ஒரு வகையான பொய்யான வீம்புடனும், மீண்டும் சந்திக்கமாட்டோமா என்ற ஏக்கத்துடனும் நிகழ்வதாலேயே « நாம் பிரிந்த தருணத்தில் தான் நான் இறந்துபோனேன் » எனக் கூறுகிறபோது « பெண்ணை ஏமாற்றும் வழக்கமான ஆணின் தந்திரமோ எனச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. உண்மையில் காதலன் இறந்திருந்தால் கடைசி சந்திப்பு என்ற கவிதையை எழுதியிருக்க முடியாது,
இன்றைய உலகில், அதிகாரமென்பது சகமனிதரை அடக்கி ஆள்வதற்கு என்பதோடு, அந்த அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள அவசியம் எனில் மொத்த மனிதர்களையும் அழித்தொழித்துவிட்டு தனி மனிதனாக அவன் மட்டும் மிஞ்சினால் கூட போதுமென்று நினைக்கிறான்.
« ஏன் எதற்கு என்று தெரியாமல்
யார் யாருக்காகவோ
ஆடவேண்டியிருக்கிறது
அதிகாரத்தை நிலை நிறுத்த
சகலரையும் பலிகொடுக்கையில்
அரசன் அல்லது அரசி நான்
துக்கம் தோய்ந்த விரல்களால்
எவர் எவரையோ
வெட்ட வேண்டியிருக்கிறது
……….
வெட்டப்பட்டுப் பரிதாபமாய்
வீழ்கையில்
ஒரு சாதாரண சிப்பாய் நான்
என்பவை ‘பொய் முகங்கள்’ கவிதையில் இடம் கிற வரிகளில் தோய்ந்துள்ள உண்மைகள் அனைவருக்கும் பொருந்தும்.
தொகுப்பிலுள்ள மற்றொரு முக்கியமான கவிதை, ‘கனவில் வரும் பிணங்கள்’. இதொரு கொடுங்கனவென்று தலைப்பு நமக்கு சொல்கிறது. அர்த்த ராத்திரியில் குழந்தை அலறி அழும். வளர்ந்தவர்கள் என்றால் நடு இரவில் திடுக்கிட்டு எழுவார்கள். வேர்வையில் நனைந்திருப்பார்கள். ஒரு தம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு உறங்கமுயற்சிப்பார்கள். கனவு கொடுங்ககனவாகிப் போவதே பிரதானக் காரணம். மூளை நரம்பியல் வல்லுனர்கள் , உறக்க ஒழுங்கின்மையின் போது கொடுங்க்கனவுகள் எற்படுகின்றன என் கிறார்கள். நமக்கு எப்போது கொடுங்கனவு வருகிறது என்பது முக்கியமல்ல ? ஏன் கொடுங்கனவு காண்கிறோம் என்பதும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று. உலகெங்கும் எதேதோ காரணங்ககளுக்காக மனித இனம் பிளவுண்டு மோதுவது, வெட்டி மடிவது இன்று தொடர்கதையாகி இருக்கிறது. சமயம், நிறம், இனம், சாதி, எனக் கட்டிப்புரள காரணங்களும் உள்ளன. ‘ பொய் முகங்களில்’ கவிஞன் தன்னுள் இருக்கும் கொலைவெறிச் சிமிழைத் திறந்துபார்க்கிறான். இங்கே அதற்கான புறக் காரணத்தைக்கூறி, படுகளத்தின் பார்வையாளாகி கையறு நிலையில் கதறுகிறான். எழுதியவர் தமிழ்க்கவிஞர், அண்டை மா நிலமான கர்னாடக படைப்பிலக்கியவாதி அல்ல, அவர்களுக்கு எழுத்தும் வாழ்க்கையும் ஒன்று. நாம் காகிதப்புலிகள். கொடுங்கனவு கண்ட கையோடு ஒரு தம்ளர் தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திகொண்டால் சுபம் இக்கேடுகெட்ட சமுகத்தை இடித்துரைக்க பா. இரவிக்குமாரும் தயாரில்லை.
« திரிசூலங்கள் பற்றியும்
கொலைவெறிகொண்ட கண்கள் பற்றியும்
எதுவும் தெரியாமலேயே
அந்தக் குழந்தைகள் இறந்த து
எவ்வளவு நல்லது ?
……………………..
…………………………….
கனவில் ஒரு பிணம் வந்து
நீ இந்துவா ? எனக்கேட்டால்
கடவுளே !
என்ன பதில் சொல்வேன் ?
எனச் சங்க டத்தை அந்தக் கடவுளிடமே முறையிட்டால் சிக்கல் தீர்நது. கலக்குரலைக் கர்னாடக எழுத் தாளனிடம் எதிர்பார்க்கலாம். அவன் வெவரம் தெரியாதவன். நாம் நமது சொரணையுள்ள தமிழ் எழுத்தாளர்கள் வழி நடப்போம். ‘பகலில் பக்கம் பார்த்து பேசு இரவில் அதுவும் வேண்டாம், பகுத்தறியாமல் துணியாதே என்றெல்லாம் நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்களென்பது நமது படைப்புலக மேதைகளுக்குத் தெரியாதா என்ன ?
இத்தொகுப்பில் உள்ள ‘கடைசி இரவு’, ‘நான் தாகமாய் இருக்கிறேன்’ , ‘சுதந்திரம்’, ‘இந்த வாழ்க்கை’ பிற முக்கியமான கவிதைகள்.
———————————————————————-
கைரேகைக் கொடியில் கனவுப்பூ
ஆசிரியர் பா. இரவிகுமார்
வெளியீடு
மித்ர ஆர்ட்ஸ்& கிரியேஷன்ஸ்
சென்னை 84