கடந்த டிசம்பர் 27 மாலை நண்பர் பேராசிரியர் க.பஞ்சு தலைமையில் எனது நாநன்கு நாவல்கள் பற்றிய திறனாய்வும் , திறனாய்வாளர் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு – ‘வாழ்வின் பன்முகப் பிரதிகள்’ , நண்பர் பஞ்சுவைப் பற்றிய ‘இலங்கு நூல் செய வலர் – க. பஞ்சாங்கம்’ ஆகிய இரண்டும் வெளியிடப்பட்டன.
நண்பர் சீனு தமிழ்பணி கடந்த ஆண்டு ‘காப்காவின் நாய்க்குட்டி’ புத்தக வெளியீட்டின்போது எனது நூல்கள் பற்றிய திறனாய்வை நடத்தவேண்டும் என விரும்பினார். உணர்ச்சி வேகத்தில் சொல்லிவிட்டார் என்றுதான் நினைத்தேன். ஆனால் தொடர்ந்து வற்புறுத்திவந்தார். இந்த வற்புறுத்தல் பின்னர் நண்பர்கள் பஞ்சு, நாயகர் இருவர் ஊடாக வலுப்பெற்றது . நான்கு நாவல்கள், ஐந்து சிறுகதைத் தொகுப்புகள் ஒன்பது கட்டுரை தொகுப்புகள் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு ஐந்து மொழிபெயர்ப்புகள், தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு அம்பையின் சிறுகதைகள் என செய்திருந்தும் எனது இருத்தல் அத்தனை முக்கியத்துவம் பெற்றதல்ல. நான் அறியப்படவேண்டும் எனவிரும்பிய நண்பர்களுக்கு நன்றி. தமிழர்கள் நினைவுகொள்ள மறந்தாலும் தமிழ் என்னை நினைவுகொள்ளூம் என்ற நம்பிக்கையிலேயே எழுதிவருகிறேன். இப்படிச்சொல்வதற்குக் காரணம் இருக்கிறது நான் தனியே தமிழுலகில் ஈட்டாத புகழை அம்பையின் சிறுகதைகளை ஒரு பிரெஞ்சு பெண்மணியின் ஒத்துழைப்புடன் இணைந்து செய்ததில் இன்று பிரெஞ்சு படைப்புலகில் எனது பெயரும் பதிவாகி இருக்கிறது. எனது சிறுகதையை Cousins de personnes என்ற இதழும் பிரசுரித்துள்ளது. கார்த்திக் தேவராஜ் என்றகணினித் துறை இளைஞர், ஆங்கிலத்தைத் திறமையாகவும் இலாவகமாகவும் கையாளக்கூடியவர், பெங்களூரிலிருந்து நீலக்கடலை மொழிபெயர்க்க விரும்பி முதல் அத்தியாயத்தை மொழிபெயர்த்தும் அனுப்பியுள்ளார். நாயகர், ஒரு பிரெஞ்சு நண்பர் ஆகியோரின் உதவியுடன் பேராசிரியர் கிருஷ்ண மூர்த்தி அவர்களால் மாத்தா ஹரி நாவல் பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்படுகிறது.
தமிழில் நல்ல எழுத்துக்களைக் காழ்ப்பின்றி பாராட்டுகிற மனிதர்களும் இல்லாமில்லை. திருவாளர்கள் க. சச்சிதானந்தம், வே. சபா நாயகம், ரெ. கார்த்திகேசு, பிரபஞ்சன், தமிழவன்,க. பஞ்சசாங்கம், நா. முருகேசபாண்டியன் , தேவமைந்தன்; இன்றைக்குப் பா. ரவிக்குமார், க. முத்துகிருஷ்ணன், இலண்டனிலிருந்து சிறந்த வருங்க்கால புலம்பெயர்ந்த எழுத்தாளராக பரிணமிக்க உள்ள புதுச்சேரியைச் சேர்ந்த ரா. கிரிதரன் ஆகியோர் நான் கேட்டுக்கொண்டு மதிப்புரை எழுதியவர்களல்ல என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ஆக எவ்வித எதிர்பார்ப்புமின்றி உழைத்தால் எழுத்தும் ஊட்டத்துடன் இருந்தால் நமது எழுத்துக் கவனிக்கப்படும் என்ற நம்பிக்கை வேண்டும்(குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு). இது கணினி உலகம், 30 ஆண்டுகளுக்கு முந்தைய நிலமை இன்றில்லை.நல்ல படைப்புகள் காலம் தாழ்ந்தும் கவனிக்கப்படும், உங்கள் மீது நம்பிக்கை வையுங்க்கள். இல்லையென்றால் சு.ரா வின் இனிய நண்பர் எம். எஸ் தொலைபேசியில் அழைத்து ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ நாவலைப் பாராட்டுவாரா? பா ரவிக்குமார், நறுமுகை, கார்த்திக் தேவராஜ், ரா. கிரிதரன் போன்ற இளைஞர்களின் ஆதரவு எனது எழுத்திற்கு வாய்த்திருக்குமா?இங்கே செஞ்சி இலக்கிய வட்டத்தின் துணைகொண்டு இளைஞர்களை உற்சாகப்படுத்திவரும் நறுமுகை இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் ஒன்றிரண்டுபேர் இருக்கவே செய்கிறார்கள்.குறுகிய காலத்தில் நான் பெற்ற அடையாளத்திற்கு இந்த நல்ல உள்ளங்க்களே காரணம். இளைஞர்களே சோர்வின்றி எழுதுங்கள்.
மீண்டும் 27 ந்தேதி நிகழ்ச்சிக்கு வருகிறேன் வித்திட்ட நண்பர் சீனு தமிழ்மணி எனது இலக்கிய பயணத்திற்கு வழித்துணையாக அமைந்து உடன் பயணிக்கும் நண்பர் சு. ஆ வெங்கிட சுப்புராய நாயகர், எழுத்தாளன் என்பவன் எழுதுவதுபோல இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பவன் நான். அத்தி பூத்தாற்போல சிலர் இருக்கவே செய்கிறார்கள். அவர்களில் நாஞ்சில் நாடன், எஸ். ராமகிருஷ்ணன், பாவண்ணன் , வண்ணதாசன், வண்ண நிலவன், கண்மணி குணசேகரன் என்பவர்களோடு அதிகம் நெருக்கம் இல்லையென்றாலும் அப்படியானவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதற்கு அவர்கள் வாழ்க்கையே சாட்சி. பொய்யான, பகட்டான தமிழ்ச் சூழலில் அண்மைக்காலத்தில் நெருங்கிப்பழகி பிரம்மிக்கின்ற ஒருவர் பேராசிரியர் பஞ்சு, அவர் வழிகாட்டுதலில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடங்கி சிறப்பாக முடிந்தது. நண்பர்கள் சீனு தமிழ்மணி, நாயகர், பேராசிரியர் பஞ்சு ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்
காலசுவடுபதிப்பகம் ஐந்து நாட்களில் புத்தகத்தை முடித்து அனுப்பி வைத்தார்கள் நண்பர் கண்ணன் எளிமைக்கும் வெள்ளந்தியான உள்ளத்திற்கும் அறியப்பட்ட இனிய நண்பர் களந்தை பீர் முகம்மது அவர்களை நிகழ்ச்சியில் பங்க்கேற்க அனுப்பியும் வைத்தார். காலச்சுவடு பதிப்பகத்திற்கு மிகவும் நன்றி
நண்பர்கள் மற்றும் எனது அழைப்பின் பேரில் நிகழ்வில் கலந்துகொண்ட திருவாளர்கள் அ.ராமசாமி, ந முருகேசபாண்டியன், பாரதிபுத்திரன் , பா. ரவிக்குமார், நறுமுகை ஜெ ராதாகிருஷ்ணன் அனைவருக்கும் நன்றிகள்
எனது பள்ளி தமிழாசிரியர்கள் திருவாளர்கள் நாகி, ராஜேந்திரன், மூத்த இலக்கியவாதியும் திறனாய்வாளர்மான வே. சபா நாயகம், தேவமைந்தன், நந்திவர்மன் என என்மீது அன்புகொண்டுள்ள பெருந்தகைகள் கலந்துகொண்டது பெரும் பேறு. அவ்வாறே அ. பெருமாள் , பூங்குழலி பெருமாள் தம்பதிகளுக்கும் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிற நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
அன்புடனும் பணிவுடனும்
நா.கிருஷ்ணா
நல்ல வாய்ப்பு பயன்படு்த்த இயலாமல் போனது எனக்கு வருத்தமே சார்…
அருமையான பதிவு. இளைஞர்களை உற்சாமூட்டுவது நம்பிக்கையளிக்கிறது.. வாழ்த்துக்கள்