– ஷெரி வீக் எண்டிற்கு, நம்ம முதல் வருட திருமண நாளைக் கொண்டாட, ‘Le Bataclan’ இசை அரங்கில் ராக் நிகழ்ச்சியொன்றிர்க்கு இரண்டு டிக்கெட் வாங்கி வச்சிருக்கேன், சர்பிரைசாக இருக்கவேண்டுமென்று உங்கிட்ட சொல்லல, போகலாமா?
ஆ. நவம்பர் 13 இரவு 9 மணி
– Salut mon pote! என்ன செய்யற? ”
– பிரான்சு – ஜெர்மன் மேட்ச் பார்க்கனும்னு இருக்கேன், எங்கும் வெளியிலே வர்ரதா இல்ல.”
– இன்றைக்கு என்பிறந்த நாள ரெஸ்ட்டாரெண்ட்ல கொண்டாடப்போறேன் வந்திடுன்னு சொல்லியிருந்தேனே மறந்துட்டியா? ”
– நல்லவேளை ஞாபகப் படுத்தின, நான் மறத்துட்டேன் என்னை மன்னிச்சுடு அரைமணிநேரத்துலே அங்கே இருப்பேன்.
– எங்கேன்னு ஞாபகம் இருக்கா?
-Paris 11ème, “la Belle équipe தானே வந்திடறேன்.
இ. நவம்பர் 13 இரவு ஒன்பது மணி
தங்கள் ரெஸ்ட்டாரெண்டிற்குள் கணவன் மனைவி பிள்ளைகள் இருவர் என நுழைகிற குடும்பத்தினரை le Petit Cambodge, உணவு விடுதி ஊழியர் வரவேற்று அவர்கள் ரிசர்வ் செய்திருந்த மேசையில் உட்காரவைக்கிறார்.
இப்படி ஏதேதோ காரணத்தை முன்னிட்டு தினசரி வாழ்க்கையில் சங்கடங்களிலிருந்து விடுபட்டு கணநேர சந்தோஷத்திற்காக வீட்டில் அடைந்து கிடக்க விரும்பாமல் வெளியிற் சென்ற பலர் வீடு திரும்பமாட்டோம் என நினைத்திருக்கமாட்டார்கள். அடுத்தடுத்து ஆறு இடங்களில் நடந்த பயங்கரவாதத்தின் தாக்குதல் இவர்களின் உயிரை மட்டும் குடிக்கவில்லை, அவர்களின் கனவுகளை, வாழ்க்கை மீதான பற்றுதல்களை, அவர்களிடம் உறவாடியும் நட்புகொண்டும், அவர்களை ஆதரித்தும், அவர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்து வாழ்ந்தவர்களின் நம்பிக்கைகளையும் சிதற அடித்திருக்கிறது. உயிரைப் பறிகொடுத்தவர்கள் 129 பேர், படுகாயமுற்றும் உயிர் பிவைப்பார்களா என்ற நிலமையில் இருப்பவர் 80 பேர், 300க்கும் அதிகமாக காயம்பட்டோர் என்கின்றன கிடைக்கும் தகவல்கள். பிள்ளையும் தாயுமாக சாப்பிட உட்கார்ந்து மகனை பறிகொடுத்த தாய், காதலனைப் பறிகொடுத்த காதலி, ஒரு குடும்பத்தில் தந்தை தாய் மூத்த சகோதரி மூவரையும் பறிகொடுத்துவிட்டு அனாதையான சிறுவன், பெரும்பாலோர் வயது 30க்கும் கீழ். . இப்படி இறந்தபின்னம் தொடரும் அவலங்கள்
பாரீஸ்லிருந்து 500 கி.மீ தள்ளி வசிக்கிறேன் என்னிடமும் பத்திரமாக இருக்கிறாயா என்ற கேள்வியை நண்பர்களும் உறவுகளும் வைக்கிறார்கள். மனித மனத்தின் இயல்புப்படி நம்முடைய உறவுகள் நன்றாக இருக்கிறார்கள் அது போதுமே என்கிற குரூரத் திருப்தி நமக்கு. பாதிக்கக்கப்பட்டவர்களைப்பற்றிய உரையாடல் சில நாட்கள் நீடிக்கும், அதன் பிறகு அவரவர்க்கு ஆயிரம் பிரச்சினைகள் கவலைகள் இருக்கின்றன. இதுதான் வாழ்க்கை, எதார்த்தம் என்கிற சமாதானம் இருக்கவே இருக்கிறது. தொலைபேசியில் “கடலூர்தான் மழையால் பாதிக்கப்பட்டிருக்கிறது, புதுச்சேரியில் பிரச்சினை இல்லை” என்ற செய்தி தருகிற அதே அற்ப சந்தோஷம்.
கொலையாளிகளும் கொலையுண்டவர்களும்
எதிர்பாராத மனித உருவில்வந்த சுனாமித் தாக்குதலால் மனித உயிர்களுக்குப் பெருஞ்சேதம். கொலையுண்டவர்களுக்கும் கொலையாளிகளுக்கும் என்ன பிரச்சினை. முன் விரோதமா ? பங்காளிகளா? வரப்பு அல்லது வாய்க்கால் சண்டையா? இவர்கள் தின்ற சோற்றில் மண்ணை அள்ளிப்போட்டார்களா? கூட்டு வியாபாரத்தில் மோசடியா? அல்லது தொழிற்போட்டியா ? அல்லது குறைந்த பட்சம் தங்கள் வாழ் நாளில் இதற்கு முன்பு கொலையாளிகளும் கொலையுண்டவர்களும் சந்தித்ததுண்டா ?
ஒவ்வொரு வருடமும் தற்போது நவம்பர் மாதம் பிறக்கிறபோதெல்லாம் திக் திக் என்கிறது. புண்ணியவான்கள் அப்படியொரு வரத்தை அந்த மாதத்திற்கு வழங்கியிருக்கிறார்கள். நவம்பர் 13த்ந்தேதியும் பிற நவம்பர் பயங்கர வாதத் தாக்குதல் தேதிகள்போல வரலாற்றில் இடம் பிடித்துவிடும். மனித மனங்கொண்டோரை அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. பிறக்கிற உயிர்கள் ஒவ்வொன்றும் மரணதண்டனையைப் பெற்றவைதான். இயற்கை எப்போது அதனை நிறைவேற்றுமென்கிற தேதியை மட்டும் அறியாமலிருக்கிறோம், அவ்வளவுதான். தேதி தெரியவந்தால் வாழ்க்கை சுவாஸ்யமற்று போய்விடும். தங்கள் கொலைச்செயலைபுரிந்த கணத்திலேயே, அதற்குரிய தண்டனையைக் கொலையாளிகள் பெறவேண்டுமென்பது இயற்கையின் தீர்ப்போ என்னவோ அவர்களுக்குரிய தண்டனையையும் அப்போதே நிறைவேற்றிவிடுகிறது. ஆனால் கொலையுண்டவர்களுக்கு வேண்டுமானால் அவர்களின் மரணம் எதிர்பாராததாக இருந்திருக்கலாம், ஆனால் கொலையாளிகளுக்கு தங்கட் செயலை அரங்கேற்றும் தினத்துடன், மரணமும் இணைந்திருப்பது விந்தை.
பெரியண்ணன்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட இம்மனிதர்கள் உண்மையில் அப்பாவிகள். சாவிகொடுத்த பொம்மைகளாக, நடைபிணம்போல இயங்கி மடியும் அடிமைகள். அவர்கள் சாகாமலிருந்தால் மரணதண்டனைக்குச் சாத்தியமற்ற பிரான்சு நாட்டில் – ஜனநாயக நாடென்ற பாரத்தையும் சுமந்திருப்பதால் குற்றவாளிகளே ஆனாலும் சட்டப்படி கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள் இருக்கின்றன. விசாரணை, நீதிமன்றம், தண்டனை, பிறகு (வசதியான) சிறைவாசம் என்பதற்கு அரசாங்கத்தின் வரிப்பணத்தில் கணிசமாக ஒரு பகுதியைச் செலவிட வேண்டியக் கட்டாயம் இருக்கிறது. ஆகக்கொலையாளிகள் பிரான்சுநாட்டினை விரோதமாகப் பாவித்தபின்பு, அவர்கள் செலவில் தங்கள் உயிரைப் பேணுவது எவ்விதத்திலும் நியாயமுமில்லை. ஏதோவொரு காரணத்தை முன்னிட்டு தங்கள் உயிரை தாங்களே முடித்துக்கொள்ள அவர்களுக்குப் பூரண உரிமை இருப்பதாகவே வைத்துக்கொள்வோம், ஆனால் அப்பாவி உயிர்களைக்கொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? நீட்சே கூறுவதுபோல “அவர்கள் என்னுடைய விரோதிகள், வீழ்த்துவதொன்றுதான் அவர்கள் விருப்பம், சுயமாக படைப்பதல்ல”. என்றுதான் நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
பிரெஞ்சுமக்களுக்குள்ள பொறுப்பு
“குர்ஆனை படித்த எந்த முஸ்லீமும் இந்த மாதிரி தீவிரவாத செயலில் ஈடுபடமாட்டான். உலகின் எல்லா ஜமாஅத்களிலும், இந்த ISIS தீவிரவாதிகளை அழித்து ஒழிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டு ஐ.நா . சபைக்கு அனுப்பி உலக மக்கள் அனைவரையும் இதில் ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொள்ளவேண்டும்.” _என்று முகம்மது நைனாமுகம்மது என்ற நண்பர் ‘தி இந்து’ (நவம்பர்14) தமிழ் தினசரியில் கருத்துத் தெரிவித்ததை வாசித்தேன். இவர் கருத்தொப்ப மனிதர்கள் இஸ்லாமிய சமயத்தில் நிறையபேர் இருக்கிறார்கள். பாரீஸிலுள்ள இஸ்லாமியத் தலைவர்களில் பலரும் நவம்பர் 13 பாரீஸ் சம்பவத்தைக் கண்டித்திருக்கிறார்கள். பாரீசில் பிரெஞ்சு அரசாங்கத்தின் கீழ் பேசுகிற இஸ்லாமியத் தலைவர்களைக்காடிலும் திரு நைனா முகம்மது’ போன்றவர்களின் பதிவு முக்கியமானது. பிறரைக்காட்டிலும் கொடிய வன்முறைச்சம்பவங்களை இஸ்லாமியச்சகோதரர்களே முன்வந்து கண்டிக்கிறபோது அது கூடுதலாகக் கவனம் பெறும்.
இந்நிலையில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பிரெஞ்சு மக்களக்கும் பொறுப்புகள் இருக்கின்றன. முதலாவதாக இவர்களைக் குழப்பவென்றே காத்திருக்கிற தீவிர வலதுசாரிகள் விரிக்கின்ற வலையில் விழமாட்டார்கள் என நம்புகிறேன். ISIS தீவிரவாதிகள் இழைத்தக்குற்றத்திற்காக நாம் தினம்தோறும் சந்திக்கிற எதிர்கொள்கிற, உங்களைப்போன்றும் என்னைபோன்றும் சமூகத்துடன் இணக்கமாக வாழும் இஸ்லாமிய குடும்பங்களை சந்தேகிக்க முடியாது. ஒன்றினைந்து வாழ நினைக்கிற சமூகத்தில் குழ்ப்பத்தை உண்டுபண்ணுவதுதான் ISIS அமைப்பின் நோக்கம் அதன் மூலம் கூடுதலான இஸ்லாமியர் ஆதரவை பெறமுடியுமென்பது அவர்கள் கனவு, அக்கனவினை நிறைவேற்ற பிரெஞ்சு மக்கள் உதவமாட்டார்களென நம்புவோம். இஸ்லாமிய அறிவுஜீவிகளுக்கு உள்ள பொறுப்பு மேற்குலக அறிவுஜீவிகளுக்கும் இருக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டின் பிரச்சினைகளில் அமெரிக்காவிற்கும் மேற்குநாடுகளுக்கும் கணிசமாக பங்குண்டு. ஒரு சில நாட்களுக்கு முன்பாக பிரெஞ்சு தொலைகாட்சிகளில் பிரான்சு நாட்டின் அண்மைக்கால சாதனையாக ர•பால் (Rafale) என்ற போர் விமானங்களின் விற்பனை அதிகரித்திருப்பதை பெருமையுடன் செய்தியில் தெரிவித்தார்கள். எகிப்துக்கு 24, கத்தார் நாட்டிற்கு 24, இந்தியாவிற்கு 36 என்கிற அவ்விற்பனை நமது கற்பனைக்கு எட்டாத தொகையை, பிரான்சுக்கு வருமானமாக கொண்டுவருமெனச் சொல்கிறது. மேற்குலக நாடுகளின் இதுபோன்ற காரியங்களும் பயங்கரவாதம்தான். எதிராளியைக் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு முன்பாக நம்மையும் விசாரணைக்குட்படுத்துவது அவசியம்.
இறுதியாக நாம் அனைவரும் விளங்கிக்கொள்ளவேண்டியது இன்றைய உலகம் பன்முகத்தன்மைக்கொண்டதென்ற உண்மையை. மனிதர்க்கிடையே முரண்பட்ட நம்பிக்கையும், கொள்கைத் தேர்வும் தவிர்க்கமுடியாதவை. எனினும் ஒரு சமூகத்தின் அமைதியான பொதுவாழ்க்கைக்கு அச்சமூகத்தைச் சேர்ந்த அங்கத்தினர்களிடையே இணக்கம்வேண்டும் தவறினால் குழப்பங்களும் கலவரங்களுமே மிஞ்சும்.
நன்றி. சொல்வனம் நவம்பர் 15
————————————-