ஓர் உயிரி தனது இருப்பை உறுதிபடுத்தவும், தன்னை முன்னெடுத்துச் செல்லவும், தொடக்கக்காலத்தில் ‘இயற்கை’ நெறியின்படி வினையாற்றியது. காலப்போக்கில் தனிமனிதன் கூட்டமாக வாழ முற்பட்டபோது சமூகம் என்ற அமைப்பு அனைத்து உயிர்களுக்கும் பொதுவான வாழ் நெறிகளை அமைத்துக்கொடுத்து அதன்படி வாழவேண்டுமென ‘உயிரியின் இருப்பை’ நிர்ப்பந்தித்தது, ஒரு கூட்டுச் சமூகத்தில் தனிமனிதனின் விருப்பு வெறுப்புகள், அவை கற்பிக்கும் செயல்பாடுகள், பிற மனிதர்களின் இருப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஓர் உயிரியின் இருப்பை உறுதிபடுத்தும் முனைப்பு, மற்றொரு உயிரியின் இருப்பை மறுக்ககூடாதென்பதுதான் நவீன சமுதாயத்தின் எதிர்பார்ப்பு. நாம் விரும்புவதும் விரும்பாததும்; உண்பதும் உடுத்துவதும்; கட்டுவதும் இடிப்பதும் நம்முடைய தேவை நிமித்தம் நடைபெறவேண்டுமென்றாலும், நம்மைச் சார்ந்த நம்மோடு கூட்டாக இயங்குகிற பிற உயிரிகளின் தேவைகளையும் குறைந்தளவேனும் அவை பூர்த்திசெய்யாதுபோனால் குழப்பமும் கலகமுமே மிஞ்சும், காரணம் இச்சமூகத்தில் ஒரே நேரத்தில் நாமாகவும் பிறராகவும் நாம் இருக்கிறோம்.
எல்லா உயிர்களையும் நேசிக்கிறேன் என்பதே கூட ஒருவகையில், சிலரைக்கூட குறிப்பிட்டு நேசிக்க நாம் தயாரில்லை என்பதாகத்தான் பொருள். பேச்சுக்கு என்று வைத்துகொண்டால் கணவன் என்றால் மனைவி, காதலன் என்றால் காதலி அல்லது இதற்கு எதிர்மாறாக; அடுத்து பிள்ளைகள் என்றால் பெற்றோரிடத்திலும்; பெற்றோர்கள் என்றால் பிள்ளைகளிடத்திலும்; சகோதரர்கள் சகோதரரிகளுக்கிடையிலும் பரஸ்பர அன்பு நிலவுமென சமூகம் நம்புகிறது, பிறகு நட்பின் அடிப்படையிலும் ஒருவர் மற்றவரை நேசிக்கிறோம் அன்பு பாராட்டுகிறோம். எனினும் நவீன உலகில் இவ்வுறவுகளின் ஆயுட்காலம் பரஸ்பர அன்பைக் காட்டிலும், பரஸ்பர எதிர்பார்ப்புகளால் தீர்மானிக்கப்படுகிறது.
நித்தம் நித்தம் பிறரைச் சந்திக்கிறோம். மனைவி, மக்கள், அண்டைவீட்டுக்காரர், உடன் பயணிப்பவர், அலுவலகங்கள், கடைகள், பொது இடங்கள்: எத்தனை மனிதர்கள், எத்தனை முகங்கள். இவற்றில் ஒரு சில முகங்களே ஏதோ சில காரணங்களால் திரும்பத் திரும்ப எதிர்கொள்ள நேரிட்டு, நம்மில் இருக்கின்றன, பெரும்பாலாவை பனிபோல, மலர்போல, மழைபோல இயற்கை நிகழ்வாக வருவதும் போவதுமாக இருக்கின்றன. இக்கூட்டத்திடை எவ்வித நிர்ப்பந்தமுமின்றி, எதிர்ப்பார்ப்புகளின்றி ஒரு சில முகங்களை, அம்முகங்கள் தாங்கிய மனிதர்களை நேசிக்கிறோம். ஓர் வாசகன் எழுத்தாளனை நேசிப்பது, ஒரு ரசிகன் தன்னுடனை நடிகன், நடிகைக்கு, பாடகன் இப்படி யாரோ ஒருவனை ஆராதிப்பது, சமூக நலனில் அக்கறைகொண்ட ஒருவன் சமூக ஆர்வலர் ஒருவரிடம் காட்டும் மரியாதை ஆகியவை நிர்ப்பந்தகளற்ற எதிர்பார்ப்புகளற்ற அன்பு. சிற்சில நேரங்களில் நாம் முரண்பட நினைக்கும் விஷயங்களில், இன்னொருவர் முரண்படுகிறார்; நாம் நமது எதிர்ப்புக்குரலை பதிவு செய்ய தயங்குகிறபோது, துணிச்சலின்றி முடங்குகிறபோது வேறொருவர் அதனைச் செய்கிறார். அது எதிர்ப்புகுரலாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை பிறரிடத்தில் காட்டும் கரிசனமாக இருக்கலாம், அந்த வினைக்காக, நமது மனநிலைக்கு ஒத்திசைந்து ஆற்றும் செயலுக்காக அம்மனிதரை போற்றுகிறோம். அப்படி நமது அன்பிற்குரியவர்களாக, நமக்கு மனதுக்கு இசைந்தவர்களாக, நமது விருப்ப இலக்கணங்களுக்கு உட்பட்டவர்களென்று ஒரு கூட்டத்தையா கைகாட்ட முடியும். விரல்விட்டு எண்ணிச் சொல்லிவிடலாம் அவ்வகையில் பெண்கள் நால்வரைப்பற்றி பதிவு செய்ய விருப்பம். ஏன் பெண்கள், ஆண்களில்லையா? “பெண் உயராவிட்டால் ஆண் ஏது?” என்பான் பாரதி, ஆணித்தரமான உண்மை. அரசியல், நிர்வாகம், அறிவியல், பொருளாதாரம் எனப் பலதுறைகளிலும் சாதனைப் படைத்துள்ள பெண்களிடம் ஆண்களின் ஆளுமையும், கம்பீரமும் ஒருபுறமிருக்க, ஆண்களிடம் காணக் கிடைக்காத கருணையும் தாயுள்ளமும் அவர்களை -பெண்களை உயரத்தில் நிறுத்துகிறது.
அ. பாரதி கண்ணம்மா:
கண்ணம்மா ஓர் அழகு தேவதை, மித். ‘கண்ணம்மா’ என்ற சொல்லின் அடர்த்தியை, அதன் திரட்சியை, மணத்தை, பசுமையை ‘கற்பனை நவிற்சியின்’ ஒட்டுமொத்த பருமையை, உபாசிப்பவனாய் அதன் இண்டு இடுக்குகளைதொட்டுப் பரவசத்தில் திளைக்கிற பாரதியைக் ‘கண்ணம்மா’ பாடல்களில் காண்கிறோம். கண்ணம்மா பாரதியுடைய செல்லம்மா. குயிற்பாட்டில் தத்துவத்தை சொன்னவனுக்கு, ‘கண்ணம்மா’ பெயரில் ஒரு செல்லம்மா கிடைத்திருக்கிறாள். பாரதி பாடிய, ஆராதித்த, மருவ ஆசைகொள்ளும் கண்ணமாக்களை இன்றளவும் படிமங்களாக, ஜீவன் சொட்டும் காட்சிகளாக மனதில் அசைகின்றன, மல்லிகை மணம் தோய்ந்த ஈரக்காற்றாக நெஞ்சைக் குளிருவிக்கின்றன. அந்நாட்களில் : தெருவாசலில் கோலமிடும்போதும், அன்றலர்ந்த பூசனிப் பூவை கோலத்திடை பூக்கவைக்க நடத்தும் ஒத்திகையின்போதும், கோலமிட்டு பாவாடைத் தடுக்க தலைவாசலைக் கடக்கிறபோதும்; தெருவாசலில் அண்டைவீட்டுப் பெண்ணுடன் உரையாடியபடி பார்வையைத் தெருவில் சிந்துகிறபோதும் ; ஒரு கையில் ஊஞ்சல் சங்கிலியும் மறுகையில் புத்தகமுமாக, ஊஞ்சலில் ஒருக்களித்துப் படுத்திருப்பவள், ஆண்வாசனை உணரரப்பட்ட கணத்தில் ஓடி மறைகிற போ¡தும்; கிணற்று நீர்ல் முகம் அலம்பி புழக்கடையின் முந்தானை விசிற நடந்து வருகையிலும் சந்தித்தத இளம்வயது செல்லம்மாக்கள் பலரும் கண்ணம்மாக்கள்தான்.
பெண்ணியம் பற்றி தமிழில் அதிகம்பேசிய ஆண் பாரதி. இன்று வரை அவன் அளவிற்கு பெண்கள் உட்பட கவிதைகளிலும் கட்டுரைகளிலும் பெண்விடுதலைக் குறித்து மேசியவர்கள் குறைவு. பெண்களைக் காட்டிலும் கூடுதலாக எதிர்பாலினத்திடம் கிறங்கிக் போகிறவர்கள் ஆண் கவிஞர்கள். பாரதி அழுது ஆர்பாட்டம் பண்ணுபவனல்ல, மறந்துங்கூட கண்ணைக் கசக்கியவனில்லை; தமிழைத் தாயென்றும், இந்திய நாட்டைப் பாரதமாதாவென்றும், பாரத தேவியென்றும் உருவகப்படுத்தியவன்; எந்த நேரமும் நின்மையல் ஏறுதடீ குறவள்ளி, சிறுகள்ளி எனப் பொங்கினவன். வீரத் தாய்மார்களை வேண்டியவன். “அந்நாட்களில் மாதர்கள் காட்டிய வீரத் தன்மையையும் இந்நாட்களிலே ஆண்மக்கள் காட்டும் பேடித்தன்மையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆ நமது உயர்வு கொண்ட பாரத ஜாதி இந்தனை தாழ்ந்த நிலைக்கு வருவதைக்காட்டிலும் ஒரே அடியாக அழிந்து போயிருந்தாலும் சிறப்பாகயிருக்குமே என்று மனம் குமுறுகின்றது” (1) என இந்திய நாட்டைக் குறித்து வருந்துகிற நேரத்திலும் பெண்களைத் தோளில் சுமக்கிறான். அவனுடையக் ‘கண்ணம்மா’ இந்த பெருமிதத்தின் விளைச்சல். அவள் மாசறு பொன், அப்பழுக்கற்ற நீதி. மனித இன உயர்பாலினத்தின் ஒரு துளியென்றாலும் பாரதியின் கவிதைக் கடலிற் கலந்து ஆண்கள் மனதில் ஒரு பெரும் சூறாவளியையை வாசிப்புதோறும் ஏற்படுத்திக்கொண்டிருப்பவள்.
கண்ணம்மாவைக் காதலியாகக் காண்கிறபோது, காதலில் திளைப்பது போலவே பாரதியிடம் வார்த்தைகள் வந்து விழுகின்றன. தெற்கத்திய காற்றின் அணுகுமுறை அவனிடம் தெரிகிறது, அவளுடைய வட்ட கருவிழிகள், மலரொளியொத்த புன்னகைகள், நீலக்கடலையொத்த நெஞ்சின் அலைகள், குயிலோசையொத்த குரலோசை இன்னும் இதுபோன்ற தகுதிகள் அனைத்துமே காதல்வயப்படும் எல்லா ஆண்களுக்கும் – அவனொரு கவிஞனாகவும் இருப்பான் எனில் எளிதாக அமையக்கூடும். மாறாக அவள் “பொங்கித் ததும்பித் திசையெங்கும் பாயும் புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக்கோலம் வாய்த்த செல்லம்மாவாக, கண்ணம்மாவாக வாய்க்கும் பேறு ‘பாரதி’க்கு மட்டுமே வாய்க்கும். அந்தக் கண்ணம்மாவை ‘மருவ’, பாரதி ‘மூத்தோர் சம்மதி’க்குக் காத்திருந்தது வியப்புதான், மாறாக அவளைக் கொண்டாடவும் குலதெய்வாகப் போற்றவும் ஒருவர் சம்மதியும் அவனுக்கு மட்டுமல்ல எனக்கும் அவசியமல்ல, தமிழும் அதன் சொற்களும் சம்மதிக்க வேண்டும், அதொன்றுதான்.
ஆ. சுதா ராமலிங்கம்:
“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்” என்ற குறள் நினைவுக்கு வருகிறபோதெல்லாம் தோழியர் சுதா இராமலிங்கத்தை நினைத்துக்கொள்வேன். ஆண்நண்பர்களென்றாலும் பெண் நண்பர்கள் என்றாலும் பரஸ்பர தேவைகளை ஒட்டியே நட்பு உருவாகிறது. அதன் ஆயுளும் அத்தேவைகள் நீட்சியைப் பொருத்தே அமையும். என் வாழ்நாளில் பல நண்பர்கள் குறுக்கிட்டிருக்கிறார்கள், பழகி இருக்கிறார்கள் பள்ளி, கல்லூரி, பணி, இருந்த நாடு, இருக்கிற நாடு, என்ற கூறுகளுக்கேற்ப நட்பு உருவாகிறது. உருவாவது போலவே சில ஆண்டுகளுக்குப் பிறகு உருக்குலைந்து சருகாகி காற்றில் கலந்தும் போகிறது. காரணங்கள் இரு தரப்பிலும் இருக்கின்றன. நானே கூட காரணமாக இருக்கலாம். அவர்களது எதிர்பார்ப்பிற்கு நானோ எனது எதிர்பார்ப்பிற்கு அவர்களோ பொருந்தாதது நட்பின் முறிவுக்குக் காரணமாக இருக்கலாம். வழக்கறிஞர் சுதா இராமலிங்கம் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமானவர். இன்றைக்கும் இலக்கிய எல்லைக்கு அப்பால், இரத்த உறவுகளைக் கடந்து இந்தியாவிற்கு வருகிறபோதெல்லாம் தவறாமல் நேரில் சந்தித்து பரஸ்பர நலன் விசாரிப்புகளை பரிமாறிகொள்ளும் அளவிற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் நட்பு தொடருகிறது.
நட்பு தொடங்கிய காலத்தில், அவர் நாடறிந்த வழக்கறிஞர் என்பதோ, அவருடைய இடது சாரி சிந்தனையோ, மனித உரிமை ஆனையத்தில் தீவிரமாகச் செயல்படுகிறவரென்றோ, எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் தமது ‘யாதுமாகிநின்றாய்” கட்டுரைத் தொகுப்பில் அவரைப்பற்றியும் எழுதியிருப்பாரென்றோ எனக்குத் தெரியாது. அப்போதைய நிலையில் ஏன் இப்போதும் கூட அவரது சமூகத் தகுதி என்னிலும் பார்க்கக் கூடியதே. எனினும் எங்கள் இருவரிடத்திலும் பாசாங்கற்ற, உண்மையான அப்பிப்ராயங்கள் இச்சமூக அமைப்பின் மீதும், அதன் செயல்பாட்டின் மீதும் சொல்ல இருந்தன, இருக்கின்றன. அநீதிக்கு எதிராக கோபமும், பாதிக்கபட்டோரிடம் சுயாதீன உத்வேகத்துடன் கூடிய அக்கறையும் பரிவும் இருப்பதை உணரும் சந்தர்ப்பங்கள் இருவருக்கும் அமைகின்றன. நட்பு என்பது ஏதோ ஒரு தளத்தில் – ஒரு புள்ளியில் – இரு வேறு மனிதர்களிடை உணர்வு ஒத்துப்போகவேண்டும், அது மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படவும் வேண்டும். ஒத்தக் கல்வியோ, ஒந்த பொருளாதார நிலமையோ, ஒத்த துறையோ அதனைக் கையளிப்பதில்லை. அவர் இந்தியாவிலும் நான் பிரான்சு நாட்டிலென்று வாழ்ந்தாலும்; அவர் மூத்த வழகறிஞராகவும், People’s Union for Civil Liberties உறுப்பினர் எனத் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்க; நான் எழுத்து, வாணிகம் எனக் கவனம் செலுத்த நேரிட்டாலும் பல்வேறு அலுவல்களுக்கிடையிலும் தொலைபேசி, முகநூல், சந்தர்ப்பம் அமைகிறபோது நேரில் என்று அளவளாவிக்கொண்டு இருக்கிறோம். “மாத்தா ஹரி” என்ற எனது நாவலில் கற்பனை மாந்தர்களைத் தவிர்த்து வாழும் காலத்து படைப்புலக நண்பர்களும் இடம்பெற்றிருப்பார்கள். படைப்புலகம் சார்ந்திராது நாவலில் இடம்பெறுகிற ஒன்றிரண்டு பெயர்களில் வழக்கறிஞர் சுதா இராமங்கமும் ஒருவர்.
இ. சிமொன் தெ பொவ்வார் (Simone de Beauvoir):‘
பொவ்வார்’ ஓர் அக்கினி தேவதை. இருபதாம் நூற்றாண்டின் பெண் அதிசயம்.”நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச்செருக்கு” எனப் பாரதி எதிர்பார்க்கிற புதுமைப் பெண் இலக்கணத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தும் பெண்மணி. ” நான் சந்தித்த பெண்களிலேயே சிமொன் தெ பொவ்வார் ஒருத்திதான் புத்தி கூர்மையும் அழகும் ஒருங்கேப் பெற்ற பெண்மணி அல்லது உங்களுக்கு அப்படி யாரேனும் தெரிந்தவர் ஒருவர் இருந்தால் அவர்களில் இவரும் ஒருவர்” என ஜெர்மன் பத்திரிகையாளரும் பிற்காலத்தில் பெண் இயங்களில் ‘சிமொன் தெ பொவ்வாருடன் இணைந்துகொண்ட அலிஸ் ஷ்வார்ஸெர் சொல்கிறார். பெண்கள் அழகாகவும் புத்திகூர்மையுடைவர்களாக இருப்பவர்கள் அரிது, அதிசயமாக நடைபெறக்கூடியது. பெண்களுடைய ‘பைபிள்’ எனப்படும் அவருடைய ‘இரண்டாம் பாலினம்’ என்ற அரியதொரு படைப்பை வாசிக்க நேர்ந்தது. பெண்கள் படைப்பை, உயிரியல் கட்டமைப்பை, மானுட இருப்பை அவர்கள் உயிர் வாழ்க்கையை அத்ன் சிக்கல்களை, காலம் காலமாய் அந்த அழகியலுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, அன்றாட அவலங்களை அமிலச் சொற்கள் கொண்டு நிரப்பியிருந்தார். சமயத்தின் பேராலும், மரபின்பேராலும் பெண்களை இழிவுபடுத்தும் மூடர்களின் இழிந்தப் போக்கை அவரளவிற்கு கண்டித்தவர்கள் உலகிலில்லை. அறிவு, அழகு, நுண்ணுணர்வு, அள்ப்பரிய மனோபாவம், நினைத்ததைச் சாதிக்கும் ஆற்றல்:சிமொன் தெபொவ்வார்.
அரசியல் இலக்கியம் இரண்டிலுமே சில பக்கங்கள் அவர் காலத்தில் பிரான்சு நாட்டில் ஒளிர்ந்ததெனில் அதில் சிமொன் தெ பொவ்வாரின் பங்களிப்பு பிறர்கவனத்தில் கொள்வதற்குரிய நியாயங்களுடன் இருந்துள்ளது. “நான் நானாக இருப்பதிலுள்ள சவால்களை எதிர்கொள்ள தயார்” என்ற வாக்கியம் “கடமை தவறாத இளம்பெண்ணொருத்தியின் நினைவுகள் என்றொரு நூலில் இடம்பெறுகிறது. பெற்றோர் நிழலிலிருந்து மீளத் துணிந்த இள்ம்பெண்ணின் அசட்டுக்குரலென அதை ஒதுக்கிவிடமுடியாது. பெண்ணாய்ப் பிறந்த ஒவ்வொருவருவரிடத்திலும் வயது பேதமின்றி, சமயங்களைக் கடந்து, எல்லைகளை மறந்து ஒலிக்கவேண்டிய குரல். இந்த நூற்றாண்டிலும் குறிப்பாக, விளக்கப்போதாதா அல்லது நியாயப்படுத்த சாத்தியமற்றவைகளை மதம், மரபுகொண்டு பெண்களை அடிமைப்படுத்தி சுகங்கண்ட மனிதர் கூட்டத்துக்கு ( இதிலும் பெண்களும் அடக்கம் என்பதை கிஞ்சித்தும் மறக்கக்கூடாது) எதிராக ஒலிக்கவேண்டிய குரல். அது நாள்வரை சிமோனுடைய தேவைகளையும் விருப்பங்களையும் முடிவுகளையும் தீர்மானிப்பவர்களாக இருந்த அவருடைய தந்தையும் தாயும், பிறரும் ஆதி அந்தமின்றி அவர் நிறுத்துகிற ‘நான்’ என்ற வார்த்தையின் முன்பாக துவளுகிறார்கள். எதை விரும்பவேண்டுமோ அதை விரும்ப எதை நிராகரிக்கவேண்டுமோ அதை நிராகரிக்க, சிந்தனைக்கு உகந்ததைச் தேர்வு செய்ய தன்னைத் தயார்படுத்திக்க்கொண்டு காலத்தை எதிர்கொண்ட சிமொன் தெ பொவ்வாரை, நாம் விரும்பாமற் போனால்தான் ஆச்சரியம்.
இ. பிரான்சுவா சகான் ( Françoise Sagan):
“அழகான இளம் ராட்சஸி” என பிரான்சு நாட்டின் புகழ்பெற்ற இலக்கிய விமர்கர் ‘மொரியாக்’ (François Mauriac)கினால் வர்ணிக்கபட்டவர். “பதினெட்டு வயதில் 188 பக்கங்களால் நான் அடைந்த புகழ் ஒரு வாணவேடிக்கை” என நேர்காணலில் தெரிவித்திருந்தார். அவருடைய அந்த நூலின் பெயர் “வணக்கம் துயரமே” ( Bonjour tristesse), எனது மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக கொண்டுவந்தது. அந்த எழுத்தாள பெண்மணியை நேசிக்க நேர்ந்தது அப்படித்தான். சமகால பிரெஞ்சு பெண் எழுத்தாளர்களில் உலகமெங்கும் பரந்த அள்வில் கொண்டாடப்பட்ட எழுத்தாளர் ஒருவர் உண்டென்றால் அவர் பிரான்சுவா சகன் மட்டுமே. ஏற்கனவே பல மில்லியன் பிறதிகள் விற்பனை கண்ட அவரது நாவல் இன்றளவும் விற்பனையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது.
இவரது பலவீனமாகக் மதுவும் போதைப் பொருட்களூம், தன்னைத் திடப்படுத்திக்கொள்ள அவருக்கு மது தேவைபட்டது. விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்கள் விருப்பமானவை. விபத்தொன்றில் ஆறுமாதத்திற்கு மேல் மருத்துவமனையில் இருந்து வெளிவந்தபோது வலிகளிலிருந்து நிவாரணம் பெற போதைமருந்துக்கு அடிமையானார். அவரைச் சந்திக்க பத்திரிகயாளரும் ஊடகத்தினரும் சூதாட்ட விடுதிக்கும், இரவு விடுதிகளுக்கும் தேடிப்போகவேண்டும். பந்தயக் கார்களில் மோகம் கொண்டவர் என்பதால் வேகம், விபத்து, கோமாவென அடிக்கடி மருத்துவமனை, மரணத்தோடு நெருக்கம் என வாழ வேண்டியிருந்தது. தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்த உலகப் புகழ்பெற்ற அவருடைய சிறுநாவலை எழுதிய நிகழ்வும் விபத்தென்று தான் சொல்லவேண்டும். பிரென்சுக் கவிஞர் ரெம்போ (Arthur Rimbaud) வின் கவிதை ஒன்றை (Illuminations) படித்து முடித்துவிட்டு அதன் பாதிப்பில் நாவலை எழுதப்போக, பிரெஞ்சு படைப்பிலக்கிய உலகில் ஒரு பெரும் புயலை உண்டாக்கியது. இந்நாவலில் 17 வயது இளம்பெண்ணொருத்தியின் உடல், மன, பாலுணர்வு உளைச்சல்களை மிகுந்த எதார்த்தத்துடன் கூறியிருப்பார். நாவல் வெளிவந்த காலத்து சமூக நெறிகளை, பத்தாம் பசலி கொள்கைகளை நிராகரித்திருந்தது. இருபது புதினங்கள், திரைப்படங்கள், கட்டுரைகள் கவிதைகள் என இவர் எழுதிக்குவித்திருந்தபோதிலும் எனக்கு ‘வணக்கம் துயரமே’ பிரான்சுவா சகனை மட்டுமே பிடிக்கிறது, பிடிக்கிறது என்ற வார்த்தை எனக்கு அவர் மீதுள்ள காதலை ஒரு சதம்கூடத் தெரிவிக்கப்போதாது.
——————————————————————————————
1. பக்கம் – 10 – மலாலவி பாரதியாரின் பெண்ணியக் கட்டுரைகள் -தொகுப்பு முனைவர் க.பஞ்சாங்கம்.