மொழிவது சுகம் ஆகஸ்டு 15 -2015

அ. இலக்கிய சொல்லாடல்கள் -5 : சுயபுனைவு (Autofiction)

சுயபுனைவு இன்றைய இலக்கியபோக்குகளுள் ஒன்று, அதாவது இன்றைய இலக்கியப் போக்கு என்பது, இப்பகுதியை நான் எழுதிக்கொண்டிருக்கிற கணத்திற்கு உரியது. நிகழ்காலத்தைத் திட்டவட்டமாக வரையறுக்க ஆகாததால், சுயபுனைவை இக்கணத்திற்கு உரியது என்றேன். தொன்மம் இறந்தகாலம்- சரி, நவீனம் நிகழ்காலமா அல்லது சமகாலத்திற்குரியதா? இந்த சமகாலத்தை எங்கே ஆரம்பிப்பது அதன் எல்லை எதுவரை? எண்ணிக்கையில் எத்தனை ஆண்டுகள் சார்ந்த விஷயம்? நிகழ்காலமென்றால், எது நிகழ்காலம்? இக்கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருந்த தருணம் நீங்கள் வாசிக்கிறபோது இறந்த தருணமாக மாறியிருக்கும் அல்லது நான் இப்பகுதியை எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கிற நேரம் எனக்கு எதிர்காலம். ஆக நிகழ்காலமே கேள்விக்குறியாக இருக்கிறபொழுது நவீனத்துவத்தின் காலத்தை வரையறுப்பது எப்படி? எனவேதான் ஒரு தற்காப்புக்காக சுயபுனைவை நான் எழுதிய கணத்தின் இலக்கியபோக்கு எனக்குறிப்பிட்டேன். நவீனத்துவம் பின் நவீனத்துவம் குறித்த தலைப்புகளில் எழுதுகிறபோது சற்று விரிவாக இவைற்றைபற்றி பேசுகிறேன்.

சுய புனைவு என்ற பெயரில் இரண்டு சொற்கள் இருக்கின்றான. இச்சொற்களைக்கொண்டு இப்படைப்பிலக்கியம் எந்த வகை சார்ந்தது எனவிளங்கிக்கொள்ளலாம். வழக்கம்போல இதுவும் ஒரு உரைநடை புனைவுதான், மாறாக ஒரு தனிநபரின் சொந்த வாழ்க்கைபற்றிய புனைவு – கற்பனையும், எழுதும் மனிதனின் அந்தரங்கமும் கைகோர்க்கும் எழுத்து. புதியது என்பது தேடலில் பிறப்பது, போதும் அலுத்துவிட்டது என் புலன்களுக்கு, சிந்தனைக்குப் புதிதாய் என்னதரப்போகிறேன், வழக்கமான திசையில் பயணித்தபோது சோலையும், சுணைநீரும், நிழல் தரும் மரங்களும் இருந்தனவென்பது உண்மைதான், புதிய திசையில் பாலையும் வெக்கையும் குறுக்கிடலாம், இருந்தும் இரண்டாவதைத்தான் தேர்வு செய்வேன் அதுவே என் ஆண்மைக்கு அழகு என ‘நேற்றை’ மறுப்பதில் தான் ‘நாளை’ இருக்கிறது. மனித வாழ்க்கையில் மறுப்பு முக்கியமான சொல். மேற்கத்திய நாடுகளின் கலை இலக்கியம் அறிவியல் முன்னேறங்கள் மறுக்கவேண்டியவற்றை மறுத்ததால் கண்ட பலன்.

சுயபுனைவு என்ற சொல் சுய சரித்திரம் என்ற சொல்லிலிருந்து பிறந்தது என்பது தெளிவு. ஏற்கனவே கூறியதுபோன்று சொந்த வாழ்க்கையை சுவைபட புனைவாக்குவது. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்திலேயே சுயபுனைவுகள் எழுதப்பட்ட வந்திருக்கின்றன. ஆனால் அப்போதெல்லாம் அவற்றிர்க்கு வெவ்வேறு பெயர்கள். சிலர் ” புதிய சுயவரலாறு” (Nouvelle autobiographie) என அழைத்தார்கள்; சிலர் ” நான்- புதினம்” ( Roman de je) பெயரிட்டார்கள்; வேறு சிலரோ “சுயவரலாற்றுப் புனைவு” ( Roman autobiographie) என அழைத்திருக்கிறார்கள், இறுதியாக இன்றைய பொருளில் சுய புனைவு என்ற சொல்லை 1977ம் வருடத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் செர்ழ் தூப்ரோவ்ஸ்கி(Serge Dobrovsky).

பிரெஞ்சு சுயபுனைவுகளில், avant-gardiste களின் பங்கும் நிறைய இருக்கிறது ‘காதலன்’ நாவலை எழுதிய மார்கரித் துராஸ் படைப்புகள் அனைத்துமே, அவரரது சொந்த வாழ்க்கை, குடும்பம் பற்றியதுதான். அதுபோல அண்மையில் நோபெல் பரிசுபெற்ற பத்ரிக் மொதியானோ படைப்புகளும் அவர் சொந்தவாழ்க்கையைப் பேசுபவைதான். லெ கிளேஸியொவின் காலச்சுவடு பதிப்பில் வெளிவந்த ‘குற்றவிசாரணை’ நாவலும் சுயபுனைவுகளில் ஒன்றே. Alain Robbe-Grillet என்பவர்தான் புதிய சுயவரலாறு என்ற அடையாளத்துடன் அவருடைய “Le Voyageur”(2001) என்ற நாவலை எழுதினார். எழுபதுகளில் ‘je'(நான்) என்றசொல்லோடு சமூகம், உடல் நோய், மரணம், குடும்பம், பாலுறவு போன்ற விடயங்கள் இணைத்த படைப்புகள்(சுயபுனைவுகள்) புத்தகச் சந்தைகளில் அதிகம் விலைபோயின. இன்றைய பிரெஞ்சு படைபுலகம் சுயபுனைவுகளைச் சுற்றி இயங்குவது என உறுதிபடக் கூற முடியும். சுயவரலாறு அல்ல என்கிறபோதும் படைப்பிலக்கியாதி தான் சாட்சியமாக இருந்தவற்றையே புனைவில் அதிகம் கொண்டுவருகிறான். இதுபோன்ற நிலையில் ‘நான்’ என தன்னிலையில் கதை சொல்ல முனைகிறபோது, அதை எழுதியவனாகவே பார்க்கிற மரபு எங்கும் இருக்கிறது, .படைப்பில் வருகிற ‘நான்’ (கதைசொல்லி) வேறு, எழுதிய ‘நான்’ (எழுத்தாளன்) வேறு என்று வற்புறுத்திசொல்லவேண்டியல் கட்டாயம் பிரெஞ்சு படைப்பிலக்கியவாதிகளுக்கும் இருந்திருக்கிறது. மர்செல் புரூஸ்டு இதற்கெனவே ஒரு நூலை (Contre Sainte-Beuve) எழுதினார்.

ஆ. கடவுளின் கடவுள்- இரா இராகுலன்.

ஒன்றை நேசிப்பது என்பது வேறு, அதை சுவாசிப்பது என்பதுவேறு. ஒரு நல்ல கவிஞன் பிறருக்காக அல்ல தனக்காக கவிதை வடிவைத் தேர்வு செய்கிறான், கவிஞன் இயல்பில் ஓர் அழகியல் உபாசகன், மென்மை உள்ளம் படைத்தவன், பிறர் துயரம் சகியாதவன், இவ்வுலகின் ஒழுங்குகளில் அக்கறை கொண்டவன் அவை பிறழ்கிறபோது அறச்சீற்றத்தை வெளிப்படுத்துகிறான். அவன் தனக்காக அல்ல பிறருக்காக குரல்கொடுக்கும் கலகக்காரன், போராளி. இந்த அக்கறையை, அறச்சீற்றத்தை, பரிவை, நாம் காணாத உலகின் தரிசனத்தை, இதமான மொழியில் இலக்கியம் ஆக்குகிறான். உண்மையான கவிதை ஒரு காற்றுபோல தொழிற்படும்: மென் தளிர்களை நளினமாக அசைத்துப்பார்க்கும் வித்தையும் வரும், எச்சில் இலைகளை எங்கே கொண்டுபோய் சேர்க்க வேண்டுமோ அங்கு சேர்க்கவும் செய்யும். நல்ல கவிஞன் காத்திருப்பதில்லை, சீண்டிய நெஞ்சில் சிம்மாசனமிட்டு அமர்ந்து அவன் உடலையும் உணர்வையும் ஒருசேர ஆட்டிவிக்கும் அனுபவத்தை உடனுக்குடன் மொழிப்படுத்தினால்தான் அவனுக்குத் தூக்கம் வரும். இளைஞர் இரா. இராகுலன் அப்படிப்பட்டவரென தெரிகிறது.

குழந்தை அழலாம் என்றொரு கவிதை, பார்க்க எளிய கவிதைபோலத் தெரிகிறது ஆனால் அக்க்விதை பூடகமாகத் தெரிவிக்கும் செய்திகள், அதன் புன்புலத்தில் விரியும் காட்சிகள், கேட்கும் கேள்விகள் சாத்தியமுள்ள விடைகள், இவ்வுலகின் மீதான கோபம் – மொத்தத்தில் சிருஷ்டிக்கப்பட்ட பொருள் சிருஷ்டிக் கர்த்தாவின் முகத்தில் வீசுகிற கேள்வி.

குழந்தை அழலாம்

பசிக்காக
தொடரும் கொசுக்கடிக்காக
வயிற்றுக்கிரகத்திலிருந்துப் புலம் பெயர்த்தியதற்காக
அல்லது
தன்போன்ற இன்னொருவனை பேசுவதற்கு
ஏற்பாடு செய்யுங்களேன் என்பதற்காக

இக்கவிதையில் பொதுவில் ‘குழந்தை அழுவதற்கு’ சராசரி மனிதர்கள் முன்வைக்கும் காரணத்திலிருந்தே பதிலைத் தொடங்குகிறார். ஆனால் அடுத்தடுத்த வரிகளில் வரும் வார்த்தைகள் சொல்ல வருவது வேறு. கொசுக்கடியை முழுமைப்படுத்த உபயோகித்த ‘தொடரும்’ என்ற வார்த்தையின் தேர்வும் அதன் இடமும் முக்கியம். ‘வயிற்றுக் கிரகத்திலிருந்து புலம்பெயர்த்தியதற்காக’ வும் குழந்தை அழலாம் என்ற யூகத்தை எழுப்புக்கிறார், யூகம்போன்றதொரு தோற்றத்தைத் தந்தாலும் ( ‘அல்லது’ என்ற சொல் உபயோகத்தைக் கவனிக்கவும்). அந்த அழுகை சீற்றத்தினால் வெடித்து எழுந்த குரலாகவும், ஏன் செய்தீர்கள்? என்ற கேள்வியாகவும் தொக்கி நிற்கிறது. படைத்தவர்கள் அனைவரிடமும் குழந்தைக்குள்ள கேள்வி இது – உங்களுக்கு நம்பிக்கை இருக்குமானால் படைப்புக் கடவுளிடமுங்கூட எனச்சேர்த்துக்கொள்ளலாம். தன்னை இந்த மண்ணில் பிறப்பெடுக்கவைத்ததில் உடன்பாடில்லை – என்பதைத் தெரிவிக்கும் அழுகை. இறுதியாக ‘குழந்தை அழுவதற்கு கவிஞர் கூறும் மற்றொரு காரணம்: “தன்போன்ற இன்னொருவனை பேசுவதற்கு ஏற்பாடு செய்யுங்களேன் என்பதற்காக “. அவ்வழுகைக்குள் ஓலிந்துள்ள உத்தரவு ஓர் எள்ளல்போல இருப்பினும், கவிஞர் சொல்ல வருவது நம்முடைய மரமண்டைக்கு அதன் அழுகைக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள போதாது, தன்போன்ற இன்னொரு குழந்தை மட்டுமே புரிந்துகொள்ளும் – எனவே என்னைப்புரிந்துகொள்ளக்கூடிய ஒரு குழந்தையை என்னோடு பேசுவதற்கு அனுப்பிவையுங்கள் என்பதற்காக குழுந்தை அழுகிறது எனக்கூறுவது, விரக்தியின் உச்சம், இச்சமூகத்தின் மீது இயல்பாக மென்மை உணர்வுடையோருக்கு எழும் தார்மீகக்கோபம்.

‘நினைவுகூர்தல்’ என்ற தலைப்பில் ஓர் அற்புதமான கவிதை. நோஸ்ட்டால்ஜியாவை இதைக் காட்டிலும் சிறபான படிமமம்கொண்டு – விளக்கமுடியுமா எனத் தெரியவில்லை. திரும்பத் திரும்ப வாசித்து மகிழ்ந்த கவிதைகளில் அதுவொன்று

………..
தூசிபடித்த நாற்காலி மீது
வீட்டுக்காரனொருவன் அமர்ந்திருந்தான்

மேசையின் மீது புத்தகங்கள்
தூசியாலும் பூச்சிகளாலும்
வாசிக்கப்படுவதைப் போல்
கடந்த நிகழ்வுகளைப்
பாழ்பட்டுபோன வீட்டுக்குள்
ஒவ்வொன்றாய்த் தேடியெடுக்கிறான்”

இவரது கவிதைகள் அதிகம், தனிமை, நினைவுகள், நினைவுலகம் மனம் எனசுற்றி வருகின்றன அதனாலேயே இவுலகின் குறை நிறைகளை கூர்ந்து கவனித்து கவிதை வடிக்க முடிகிறது.

இத்தொகுப்பில் சுருக்கமாக இருந்தபோதிதிலும் என்னை ஈர்த்த மற்றொரு கவிதை
பெருமழை‘ என்ற தலைப்பிட்ட எளிமையான வரிகள்:

வெகு நேரமாய் மழை
காரணம் புரியவேயில்லை
பாறையின் இடுக்கொன்றில்
சிக்கிகொண்ட விதையினருகே
இப்பொழுதுதான்
பெருமழையின் ஒரு துளிவந்து சேர்ந்தது.

வாழ்க்கைமீதான அவநம்பிக்கைகள் ஏற்படுத்தித் தரும் கோபம் கடவுளிடம் திரும்புவதை இவர் கவிதைகளில் வெவ்வேறு இயற்கைநிகழ்வாக அறிமுகமாகின்றன. மேலே அதே இயறகைக்கொண்டு அவிழ்க்கப்பட்டப் புதிரை, சமூகத்திலிருந்து விலக்கிக்கொண்டு தனி மனிதனாக அவிழ்க்கமுற்படுகிறபோது ‘நான் நானாகக்கூட இல்லையே” என்ற ஏக்கம் கவிதை மொழியில் மின்னலாகத் தோன்றுகிறது, நடப்பது சில கணமென்றாலும், தாக்கத்தால் நெஞ்சம் அதிர்வது சத்தியம்.

தொகுப்பிலுள்ள அந்த வயோதிகன், அன்பெனும் மது, இரவைக் கிழித்த கதிர்கள் எனத் தொடங்கும் கவிதை, மன நிலை, பொம்மைகள், இவ்வாறு வாழ்கிறோம் போன்றவற்றைப் பலமுறை வாசித்திருப்பேன். ‘உயிர்க் கிணறு’, ‘ஊர்ந்த நடை’, ‘உலகின் கரை’ நினைவில் நிற்ககூடிய வார்த்தை கட்டிகள். பல நேரங்களில் சொற்சிலம்பில் கவனம் செலுத்தி கவிதையின் இலக்கை தவறவிடுவதுபோலவும் தெரிகிறது. உதாரணம் ‘தெரியாது’ என்ற கவிதை.

இவரது கவிதைகளை வாசித்துவிட்டு இருவர் தங்கள் கருத்துக்களை அழகான தமிழில் உள்ளார்ந்த உணர்வோடு பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்கள், ஒருவர் மூத்தக் கவிஞர் பழமலய் மற்றவர் ஸ்ரீநேசன், அவற்றின் மீதான நம்பகத் தன்மை இரா. இராகுலன் கவிதைகளைப் படித்தபின் கணிசமாகக் கூடியிருக்கிறது. இறுதியாக இக்கவிதைத் தொகுப்பை வெளியிட்டு, புண்ணியம் தேடிக்கொண்ட ‘நறுமுகை ஜெ. இராதாகிருஷ்ணனுக்கும் நன்றி.

———

கடவுளின் கடவுள் (கவிதைத் தொகுப்பு)
விலை ரூ50.
– இரா. இராகுலன்
நறுமுகைப் பதிப்பகம்
29/35 தேசூர் பேட்டை, செஞ்சி 604202

இ. ஸ்ட்ராஸ்பூர் தேவாலய ஒலி ஒளி காட்சி

பிரான்சு நாடெங்கும் சுற்றுலா காலமென்பதால், பயணிகளை ஈர்க்கின்ற வகையில் நகரம் அதன் சுற்று புறங்களில் கண்களுக்கும் செவிக்கும் விருந்தளிக்கும் வையில் நிகழ்ச்சிகளை செப்டம்பர்வரை ஏற்பாடுகளை செய்துள்ளார்கள். ஸ்ட் ராஸ்பூர் மாநகராட்சியியும் தன்பங்கிற்கு சிலவற்றை ஏற்பாடு செய்து உள்ளூர் வாசிகளையும், சுற்றுலா பயணிகளியும் மகிழ்விக்கும் பணியில் நகரமெங்கும் பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகள், ஆயிரம் வயதைக் கொண்டாடும் உலகப் புகழ்பெற்ற தேவாலயத்தில் ஒலி, ஒளி காட்சிகள் தினந்தோறும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நேற்று மனைவியும் நானுமாகச் சென்று பார்த்தோம். சொல்ல வார்த்தைகள் போதாது. தொழில் நுட்பமும், கலையும் இணைந்து கண்களுக்கும் காதிற்கும் சுகத்தை அளித்தன.

நன்றி : You tube
———————————————————-

One response to “மொழிவது சுகம் ஆகஸ்டு 15 -2015

  1. வணங்குகிறேன் ஐயா. தம் பதிவினை கண்டேன். மிக மகிழ்ந்தேன். மனம் நிறைந்த நன்றிகள் ஐயா…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s