பிரான்சு: நிஜமும் நிழலும் -1

காலை பத்து மணி. விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள், வாசனை தைலங்கள் விற்பனைக்குப் பிரசித்தமான பாரீஸின் புகழ்பெற்ற ஷான்ஸெலிஸே (Champs-Elysées) அவென்யு. மேட்டுக்குடி உல்லாசப்பயணிகள் அதிகம் புழங்குகிற இடம். சீனக் குடியரசைச் சேர்ந்த உல்லாசப்பயணிகளைச் சுமந்துவந்தப் பேருந்தொன்று சட்டென்று பிரேக் அடித்து குலுங்கி நிற்கிறது, முன் கதவு பக்கவாட்டில் ஒதுங்கியதும், சொர்க்கவாசல் திறக்கப்பட்ட சந்தோஷத்தில் இறங்குகிறார்கள். ஷாப்பிங் நேரத்தை வீணாக்கிவிடக்கூடாது என்பதுபோல வேகமாக அவரவவருக்கு விருப்பமான கடைகளுக்குள் நுழைகிறார்கள். தங்கள் உருப்படியான நோக்கம் நிறைவேறிய திருப்தியுடன் நான்கைந்து மணிநேரம் கழித்து திரும்புகிறார்கள். ஒவ்வொருவர் கையிலும் பிரார்த்தனைபோல உலகின் பிரசித்திபெற்ற நிறுவனங்களின் வர்த்தகக்குறி கொண்ட பைகள் (சராசரியாக நபர் ஒன்றுக்கு 2011ம் ஆண்டின் கணக்குப்படி 1470 யூரோ வரை சீனர்கள் இங்கே செலவிடுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது). அவர்களை இடை மறிக்கும் பாரீஸ்வாழ் சீனர்கள் குழுவொன்று சீன மொழியில் அச்சிட்ட நாளிதழை இலவசமென்று கொடுக்க முன் வருகிறது. ஆனால் பேருந்துகளில் வந்தவர்களோ அந்த நாளிதழை வாங்க மறுப்பதோடு, ஒருவகையான அச்ச முகபாவத்துடன் பேருந்தில் ஏறுகிறார்கள். செய்தித்தாளின் பெயர் “The Epoch Times”. சீனாவில் தடைசெய்யப்பட்டுள்ள நாளிதழ். .மக்கள் குடியரசு என்று சொல்லிக்கொள்ளும் சீன நாட்டிலிருந்து உல்லாசப் பயணிகளாக வந்தவர்கள் பயணம் வந்த இடத்தில்கூட வாய்திறக்க அஞ்ச, பிரான்சு நாட்டிற்கு அகதிகளாக வந்தவர்களுக்கு தங்கள் குரலை வெளிப்படுத்தவும், அச்சில் பதித்து பகிர்ந்துகொள்ளவும் உரிமை இருக்கிறது.

மற்றொரு காட்சி : Ernst & Young என்ற அமைப்பும், L’express தினசரியும் ஆண்டுதோறும் வழங்கும் “உலகின் சிறந்த தொழிலதிபர்” என்ற விருதை கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘மொனாக்கோ'(Monaco) நாட்டில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ‘Mohed Altrad’ என்பவர் வென்றதாக செய்தி. பிரெஞ்சு தினசரிகளும் தொலைக்காட்சிகளும் முதன்முறையாக ஒரு “Français” (பிரெஞ்சுக்காரர் அல்லது பிரெஞ்சு குடியுரிமை உள்ளவர்) இவ்விருதை வென்ற செய்தியை பெருமிதத்துடன் தெரிவித்தன. ஆனால் இவருடைய பூர்வீகத்தைத் தெரிவிக்க ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் விரும்பவில்லை என்பதால் உண்மை இல்லை என்றாகிவிடுமா? விருதை வென்றவர் ஓர் இஸ்லாமியர், சிரியாவிலிருந்து பிரான்சுக்கு வந்தவர், உழைத்து முன்னேறியவர். அவர் இஸ்லாமியர் என்றாலும் பிரான்சு நாட்டின் புகழுக்குக் காரணமாக இருக்கிறார் எனவே பிரெஞ்சுகாரர்களுக்கு வேண்டியவர். மற்றொரு சம்பவவத்தில் வேறொரு காட்சி: ஓர் அமெரிக்க விமான நிறுவனம் தனது நாட்டிற்குப் பயணம் செய்யவிருந்த ‘மெதி'(Mehdi) என்ற இளைஞரிடம் துர்வாசம் இருப்பதாகக் கூறி பாரீஸ் விமான தளத்தில் இறக்கிவிட்டது. செய்திவாசித்தவர்கள் அவர் ஒரு பிரெஞ்சுக் காரர் அல்லது பிரெஞ்சு குடுயுரிமைப்பெற்றவர் என்பதைச் சாதுர்யமாகத் தவிர்த்து, அவர் அல்ஜீரிய நாட்டைச்சேர்ந்தவர் என்ற சொல்லை உபயோகித்தார்கள். பிரெஞ்சுக் காரர்களின் விசித்திரமான இந்த மனப்போக்கையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மேற்கத்திய நாடுகள் என்றால் என்ன? பிரான்சும் பிரிட்டனும் பூமிப்பந்தின் எப்பகுதியில் இருக்கின்றன? என்பதை அறியாத வயதில் கிராமத்திளிருந்து மூன்று கல் நடந்து, பேருந்து பிடித்து அரைமணி ஓட்டத்திற்குப்பிறகு “அஜந்தா டாக்கீஸ் பாலமெல்லாம் இறங்கு” என்று நடத்துனர் கூவலில் அறிமுகமான புதுச்சேரிதான் அப்போது எனக்குப் பிரான்சாகத் தெரிந்தது. புதுச்சேரியைப்பற்றி ஓரளவு நினைவுபடுத்த முடிவது 1962ம் ஆண்டிலிருந்து. எங்கள் கிராமத்திற்கும் புதுச்சேரிக்கும் நெருக்கம் அதிகம். பெரும்பாலான உறவினர்கள் புதுச்சேரியில் இருந்தார்கள். உறவினர்களுக்கு கிராமத்தில் நிலங்கள் இருந்தன. அறுவடைகாலங்களில் எங்கள்வீட்டில் தங்கிவிட்டு கிளம்பிப்போவார்கள். அவர்கள் வீட்டிற்கு நாங்களும் போவதுண்டு. அப்படித்தான் புதுச்சேரி அறிமுகமானது. நேருவீதிக்கு வடகே இருந்த உறவினர்கள் வசதிபடைத்த குடும்பங்கள், Notaire ஆகவும், Huissier ஆகவும் இருந்தனர் மாறாக நேரு வீதிக்கு தெற்கே இருந்தவர்கள் பால் வியாபாரம் செய்பவர்கள் (பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் -தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும் மொழிபெயர்த்த தேசிகப்பிள்ளை குடும்பம் இதற்கு விதிவிலக்கு). புதுச்சேரிக்குச் செல்லும்போதெல்லாம் பிரெஞ்சு கலாச்சாரத்தை பிரித்துணர முடியாத வயதென்றாலும், திண்டிவனம், கடலூர், விழுப்புரம் ஆகியவற்றிலிருந்து புதுச்சேரி வேறுபட்டது என்பதை விளங்கிக்கொண்டிருந்தேன். இந்த வேறுபாட்டை வலியுறுத்திய தனிமங்களில் கள்ளுக்கடை, சாராயக் கடைகள்; அரைக்கால் சட்டையில் மஞ்சள் தொடைதெரிய சைக்கிளில் செல்லும் திரட்சியான ஆஸ்ரமத்துப் பெண்களும் அடக்கம். தொடக்கப்பளிக்கே கூட பக்கத்து கிராமத்திற்கு போகவேண்டியிருந்த நிலையில், நாங்கள் அம்மம்மா என்று அழைத்த அம்மா வழி பாட்டியுடன் 60களில் புதுச்சேரியில் தங்கிப் படிக்கலானோம். காந்திவீதியின் தொடக்கத்தில் ஐந்தாம் எண் வீடு. புதுச்சேரி சற்று கூடுதலாக அறிமுகமானது அப்போதுதான். ராஜா பண்டிகையும், மாசிமகமும், கல்லறை திருவிழாவும், கர்னவாலும் பிரம்பிப்பைத் தந்தன நாங்கள் குடியிருந்த வீட்டிற்குச் சொந்தக்காரர் பிரெஞ்சு காவல்துறையில் பணியாற்றிவர், அவர் ‘சிப்பாய்’ ஆக இருந்தபோது எடுத்துக்கொண்ட படத்தைப் பெருமையுடன் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு வருடமும் ’14 juillet’ ( பஸ்த்தி சிறையைக் பிரெஞ்சு பிரெஞ்சு புரட்சியின்போது கைப்பற்றிய தினம் – இன்று தேச விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது.) அன்று புதுச்சேரியில் விழா எடுப்பார்கள். தொடர்ந்து பிரெஞ்சு தூதரகத்தில், சிறிய அளவிளான விருந்திருக்கும், அவ்விருந்திற்கு குடியிருந்த வீட்டுக்காரர் அழைப்பினைப் பெற்றிருப்பார், என்னையும் அழைத்து செல்வார். அவர் ஷாம்பெய்ன் அருந்துவதில் ஆர்வத்துடன் இருக்க, எனது கவனம் கொரிக்கின்ற பொருட்கள் மீது இருக்கும். பிரெஞ்சுக்காரர்களையும் அவர்கள் பேசிய பிரெஞ்சு மொழியையும் பிரம்மிப்புடன் அவதானித்த காலம் அது. நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும், கல்வி, பணி, மணம் அனைத்தும் புதுச்சேரியோடு என்றானது. எனது மனைவி உறவுக்காரபெண். அவருக்குப் பிரெஞ்சு குடியுரிமை இருந்தது. அவரால் எனக்கும் கிடைத்தது. எனினும் வருவாய்த்துறை பணியைத் துறக்க சங்கடப்பட்டேன். ஏதோ ஒரு துணிச்சலில் புதுச்சேரி அரசு பணியைத் துறந்துவிட்டு இங்கு வந்தது சரியா என்ற கேள்வி இன்றைக்கும் இருக்கிறது. எனினும் தொடங்கத்தில் இருந்த உறுத்தல்கள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன. பிரான்ன்சு நாட்டில் சட்டத்தை மதித்தால் சங்கடங்கள் இல்லை.

அமெரிக்காவும் (வட அமெரிக்கா) மேற்குலகும், நாம் விரும்பினாலும் விரும்பாவிடினும் நவீன யுகத்தின் ‘Avant-gardistes’ கள். நமது அன்றாடம் அவர்களால் எழுதப்பட்டது, எழுதப்படுகிறது. காலையில் கண்விழிப்பது முதல் இரவு உறங்கப்போவதுவரை சிந்தனை, உணவு, நகர்வு, தகவல் தொடர்பு, காட்சி, கலை இலக்கியம் இப்படி மனித இயக்கத்தின் எந்தவொரு அசைவிலும் மேற்கத்தியரின் தாக்கம் இருக்கிறது. நூறு குறைகள் இருப்பினும் மானுடத்திற்கு ஆயிரமாயிரம் நன்மைகள். மூச்சுக்கு முன்னூறுமுறை அமெரிக்காவையும் மேற்கத்தியர்களையும் திட்டிவிட்டு, பிள்ளகளை பொறுப்பாக ஏகாதிபத்தியத்திடம் ஒப்படைத்தபின் தங்கள் விசாவுக்காக கால்கடுக்க அவர்களின் தூதரகத்தில் காத்திருக்கும் காம்ரேட்டுகள் இருக்கிறார்கள்.. எனக்குத் தெரிந்த இடதுசாரி புதுச்சேரி தோழர் ஒருவர் பிரான்சிலிருந்து துடைப்பம், டெலிவிஷன் என்று வாங்கிக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இறங்கினார். எதிரிகள் கூட மேற்கத்தியரிடம் கடனாகவோ விலைக்கோ பெற்ற வாளைத்தான் அவர்களுக்கு எதிராகச் சுழற்றவேண்டியிருக்கிறது.

வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுவது. ஐக்கிய நாட்டு சபையில் ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள். இந்த ஐவரில் சீனா நீங்கலாக மற்றவர்கள் இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற்ற அணியைச் சேர்ந்தவர்கள். இனி மற்றொரு உலக யுத்தத்தை இப்பூமி தாங்காது எனத் தீர்மானித்தபோது,வெற்றி பெற்றவர்களே அதற்கான பொறுப்பையும் ஏற்றார்கள். அமெரிக்காபோல சீனா போல அல்லது ஒன்றிணைந்த சோவியத் யூனியன்போல பெரிய நாடுகள் என்று சொல்ல முடியாவிட்டாலும், காலனி ஆதிக்கத்தால் உலகின் பரந்த நிலப்பரப்பை தமது ஆளுகைக்கு உட்படுத்தியிருந்த பிரிட்டனும், பிரான்சும் ஐநா சபையில் நிரந்தர உறுப்பினர்கள் ஆனார்கள். அதனை இன்றுவரை கட்டிக்காக்கும் வல்லமை அவர்களிடம் இருக்கிறது. வல்லரசு என்றால் பொருளாதாரமும் ராணுவமும் என்றும் பலரும் நம்பிக்கொண்டிருக்க கலையும் இலக்கியமுங்கூட ஒரு நாட்டின் வல்லரசுக்கான இலக்கணங்கள் என இயங்குவதாலேயே இன்றளவும் தனித்துவத்துடன் நிற்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் நித்தம் நித்தம் புதுமைகளை விதைத்தவண்ணம் இருக்கிறார்கள். யுகத்தோடு பொருந்தக்கூடிய, யுகத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யவல்லது எதுவோ அதைமட்டுமே மனித இனம் பூஜிக்கிறது, அதை அளிப்பவர்களையே கொண்டாடுகிறது. ‘Survival of the fittest’ என்பது நிரந்தர உண்மை. அதன் சூட்சமத்தை மேற்கத்தியர்கள் நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதென் அனுமானம்.

பெருமைகளைப் பற்றி பேசுகிறபோது அதன் சிறுமைகளைப் பற்றியும் பேசத்தான் வேண்டும். பிரான்சு அப்பழுக்கற்ற நாடு அல்ல. 30 ஆண்டுகால பிரான்சு வாழ்க்கை பல ஏமாற்றங்களையும் தந்துள்ளது. அரசுக்குமேல் அதிகாரம் படைத்திருந்த மதத்தை எதிர்த்து சுதந்திரத்தின் மேன்மையை ருசிக்கவைத்த வொல்தேர் பிறந்த மண்ணில்தான் அச்சுதந்திரம் அனைவருக்குமானதல்ல, ஐரோப்பியருக்கு மட்டுமே பொருந்தும் என்று வாதிடக்கூடிய அறிவு ஜீவிகளையும் பார்க்கிறேன். அலுவலங்களில், அன்றாட பயணங்களில், உரிமைகளைக் கேட்டு நிற்கிறபோது குடியுரிமையைக் கடந்து எனது நிறமும், பூர்வீகமும் எனக்கான உரிமையைப் பறிப்பதில் முன்நிற்கின்றன. எனினும் இது அன்றாடப் பிரச்சினைகள் அல்ல ஆடிக்கொருமுறை அம்மாவசைக்கொருமுறை நிகழ்வது. சொந்த நாட்டில் சொந்த மனிதர்களால், ஒரு தமிழன் இன்னொரு தமிழரை அல்லது தமிழச்சியை நிறம், பொருள், சாதி, சமயம், செல்வாக்கு அடிப்படையில் நிராகரிப்பதை ஒப்பிடுகிறபோது இது தேவலாம்போல இருக்கிறது. இங்கே உழைப்பும் திறனும் மதிக்கப்படுகின்றன. இன்றைக்கும் ஏதொவொரு காரணத்தை முன்வைத்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் மேற்கத்திய நாடுகளை தேடி வருகிறார்கள்

உலகத் தினசரிகளில் அமெரிக்கா பிரிட்டனுக்கு அடுத்தபடியாக ஏதோவொரு காரணத்தால் செய்தியில் பிரான்சு இடம் பெறுகிறது. உலக நாடுகளில் அதிகம் சுற்றுலா பயணிகளைக் ஈர்க்கிற நகரமாக பாரீஸ் இருப்பதைப்போலவே, உலக நாடுகளின் தலைவர்களுக்கு பிரான்சு அதிபர் அழைப்பும், பாரீஸ் நகரில் கால்பதிப்பதும் கனவாக இருக்கிறது. ஐக்கிய நாட்டு சபையின் நிரந்தர உறுப்புநாடாக இருப்பதைபோலவே, உலக நாடுகளின் நலன் கருதி (?) இயங்குகிற அத்தனை அமைப்புகளிலும் (எதிரெதிர் அணிகளிலுங்கூட ) பிரான்சு இடம்பெற்றிருப்பதென்பது ‘புவிசார் அரசியலில்’ இநாட்டுக்குள்ள முக்கியத்துவத்தைத் தெரிவிக்கிறது. உலகமெங்கும் பிரெஞ்சு மொழி பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலத்திற்கு நிகராக அல்லது ஆங்கிலத்திற்கு அடுத்தப்படியாக பரவலாக பேசப்படும், கற்கப்படும் முக்கிய மொழிகளில் பிரெஞ்சும் ஒன்று. உலகில் அதிகமக்களால் பேசப்படுகிற மொழியென சொல்லப்படும் மாண்டரின், இந்தி, ஸ்பானிஷ், அரபு மொழிகளைக்காட்டிலும் செல்வாக்குள்ள மொழி. அதுபோல நாம் முழக்கங்களாக மட்டுமே அறிந்த கடமையும், கண்ணியமும், கட்டுப்பாடும் மக்களின் மூச்சுக்காற்றாக இருப்பதும் பிரெஞ்சு சமூகத்தின் வெற்றிக்கு காரணம். பிரான்சுநாட்டின் நிலம், நீர் மலைகள், பூத்துகுலுங்கும் கிராமங்கள், பரந்த வயல்வெளிகள், நகரங்கள், கிராமங்கள், பனிப் பூ சொரியும் குளிர்காலம், பூத்து மணம் பரப்பும் வசந்தம், சிலுசிலுக்கும் காற்று, இதமான வெயில் ரெம்போவின் கவிதைகள், குளோது மொனேயின் ஓவியங்கள், புதுப் புது நுட்பங்களையும் ரசனைகளையும் படைப்பிலக்கியத்தில் கொண்டுவந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், சேனல் 5 பர்ப்யூம், பொர்தோ ஒயின், பிரெஞ்சு பாலாடைக்கட்டிகள், ஏர்பஸ், சேன் நதி, லூவ்ரு, லூர்து அனைத்துக்கும் மேலாக ‘பெண்கள்’ என்று ஒரு மாமாங்கத்திற்கு சொல்ல இருக்கின்றன.

(தொடரும்)

நன்றி: சொல்வனம்

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s