அ. இலக்கிய சொல்லாடல்கள் -3
கலை கலைக்காக (Art pour l’art)
“கலை கலைக்காக” அல்லது ‘art pur’ ( ‘தூய கலை’ அல்லது அசல் நெய் என்பதுபோல ‘அசல் கலை’ ) என்ற குரல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், ஒலிக்கத் தொடங்கியது. படைப்பிலக்கியம் சுதந்திரமாக இயங்கவேண்டி பலரும் தீவிரமாக செயல்பட்ட நேரத்தில் இக்குரல்கள் கேட்டன. “எவ்வித விசாரணைக்கும் உட்படுத்தவேண்டிய அவசியம் படைப்புகளுக்கில்லை”, “தமது முடிவைத் தாமே தீர்மானிக்கக்கூடியவற்றை மட்டுமே படைத்தல்” போன்ற கனவுகளுக்குரியவையாக அக்குரல்கள் இருந்தன. இன்றைய நவீன இலக்கியத்தில், ஒரு பிரிவினரின் முன்னோடிகள் அவர்கள். “மக்களைப் பற்றியும், தங்கள் சமூகத்தைப் பற்றியும் அக்கறை கொள்ளாத மனிதர்களுக்கு இவையெல்லாம் ஒரு சால்ஜாப்பு” என எதிர் தரப்பினர் (கலை மக்களுக்காக) குற்றம் சாட்டினார்கள். கலையின் அனைத்து சாத்தியகூறுகளையும் முயற்சி செய்ததோடு, அறிவோடு முரண்பட்டு, உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த கற்பனை நவிற்சி வாதமும் (Romanticisme) ஒருவகையில் “கலை கலைக்காக” என்ற வாதத்திற்குக் காரணம், குறிப்பாக அதன் “சுயாதீன உத்வேகம்” (Libre inspiration).
‘பல்ஸாக்'(Balzac)க்கின் ‘Illusions Perdues’ கதை நாயகனிடம், எந்த வாழ்க்கையைத் தேர்வு செய்வாய்? என்கிற கேள்வியை முன்வைக்கிறபோது:எளிமையான படைப்பாளிகள் கூட்டத்தோடா? ஆடம்பரமான பத்திரிகையாளன் வாழ்வா? – அவன் தேர்ந்தெடுப்பது படைப்பாளிகள் கூட்டத்தை, அதுமட்டுமே கலைஞனுக்குரிய வாழ்வாக இருக்க முடியும் என நம்புகிறான். ‘கலை கலைக்காக’ என்றவர்களுக்கு எதிராக ஒரு பெரிய சொற்போரே நடந்தது. எதிரணியில் இருந்தவர்கள் உங்கள் படைப்பில் அப்படி என்ன இருக்கிறது? அதன் உபயோகம்தான் என்ன? எனக்கேட்டபோது தெயோபில் கொத்தியெ ( Théobile Gautier): “அழகைபோற்றுகிறோமே, அது போதாதா, வேறென்ன வேண்டும்? ” எனக்கேட்டார்?
‘கலை கலைக்காக’ என வாதிட்டவர்களுக்கும், அவர்களின் எதிராளிகளுக்குமிடையே 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த யுத்தம் நீதிமன்றம் வரை சென்றது. எங்கள் செயல்பாட்டில் எவரும் குறுக்கிட சகியோம், என்றவர்கள் நீதிமன்றத்திற்குப் போக நேர்ந்தது ஒரு முரண் நகை. கொத்தியெ, பொதுலெர், பொபெர், கொங்க்கூர் சகோதரர்கள் எனப்பலரும் தங்கள் கொள்கையைப் பறைசாற்ற தேர்வு செய்த இடம் “Le salon de Madame sabatier” ( மதாம் சபாத்தியெ ஒரு Demi-mondaine – அதாவது தாசி அபரஞ்சி ரகம்) “.
‘தூய கலை’ என்ற பெயரில் அழகியலை சுவீகரித்துக்கொண்டவர்களை, சமூகம் சார்ந்து செயல்பட்ட இலக்கியவாதிகள் நிராகரித்தனர். “அழகியல் குறித்து வாய்கிழிய பேசுகிறார்கள் ஆனால் அதில் சமூகத்தின் எதார்த்தநிலைக்கும் இடமுண்டு என்பதை எப்படி மறந்துபோனார்கள்” என்பது இவர்களுக்கு எதிராக வைக்கப்பட்ட குற்றசாட்டு.. மார்க்ஸிய அபிமானிகள் குறிப்பாக Ecole de Francfort, எங்களிடம் இதுபற்றி பேசவே வேண்டாம் என ஒதுங்கிக் கொண்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே இக்குரல்கள் அடங்கி ஒலிக்கத் தொடங்கின. சமூகம் சார்ந்த விழுமியங்களை நிராகரிக்கிற இக்குரல்கள் இன்றுங்கூட அவ்வப்போது கேட்கின்றன. ஒட்டுமொத்த சமூகமே அழிந்தாலும் பிரச்சினை இல்லை ஆனால் எனக்கு (எழுத்தாளனுக்கு – இந்திரலோகத்து பிரஜை? ) ‘நகச்சுத்தி’ வந்தால் கூட அது அழகியல் – “கலை கலைக்காக” என்கிற சவடால் கூட்டம் பாரீஸில் மட்டுமில்லை சுங்குவார்பட்டியிலும் இருக்கிறது.
————————————–
ஆ. காஃப்காவின் கையெழுத்து பிரதிகள்
காஃப்காவின் கையெழுத்துப் பிரதிகளுக்காக அவற்றின் தற்போதைய உரிமையாளருக்கும் -இஸ்ரேல் மற்றும் ஜெர்மன் நாட்டுக்கும் நடக்கும் சட்டப்போர் பற்றி ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் ஏழுதியிருந்தேன். கிட்டத்தட்ட அது முடிவுக்கு வந்துவிட்டதெனலாம்.
காஃப்கா இறக்கும் தருவாயில், தான் இறப்பிற்குப் பிறகு அழித்துவிடவேண்டுமென தன் நண்பர் மாக்ஸ் பிராட் என்பவரிடம் ஒப்படைத்திருந்த (1924)கையெழுத்து பிரதிகளின் தலையெழுத்து வேறாக இருந்தது. செக்கோஸ்லோவாக்கியாவை ஜெர்மன் கைப்பற்றியபோது, காஃப்காவின் நண்பர் பாலஸ்தீனத்திற்குத் திரும்பினார்(1939), பின்னர் இஸ்ரேல் குடிமகன் ஆனார். இவரும் தன் பங்கிற்கு ஒரு உயிலை எழுதி பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கையெழுத்துப்பிரதிகளை தமது அந்தரங்கப் பெண் செயலாளர் ‘எஸ்த்தர் ஹோஃப். என்பவருக்கு உரிமை ஆக்கினார் (1968). காஃப்காவின் நண்பர் எழுதிய உயிலி வாசகம், ” இஸ்ரேல் பல்கலை கழகத்திற்கோ, தெல் அவிவ் மாநகராட்சி நூலகத்திற்கோ, வேறு நிறுவனத்திற்கோ அல்லது அந்நிய நாடொன்றிர்க்கோ “அப்பெண்மணி விரும்பினால் கொடுக்கலாம் என்றிருந்தது. உயிலிலிருந்த “அந்நிய நாடொன்றிர்க்கும் கொடுக்கலாம்” என்ற வாசகம் பிறவற்றைக்காட்டிலும் பொன் முட்டை இடுவதாக இருந்தது. எப்படியோ பல ஆண்டுகள் காஃப்காவின் கையெழுத்துப்பிரதிகளில் ஒரு சில இஸ்ரேல் நாட்டில் -டெல் அவிவ் நகரில் பெண்மணி வீட்டிலும்; பெரும்பாலானவை சுவிஸ் வங்கியொன்றின் காப்பகப் பெட்டியிலும் இருந்தன. ‘விசாரணை’ நாவலின் கையெழுத்துப் பிரதியை ஜெர்மன் தேசிய ஆவணக் காப்பகத்திற்கு விற்கவும் செய்தார். இந்நிலையில் காரிதரிசிப் பெண்மணி 2007ல் இறந்தார். இவர் தன்பங்கிற்கு ஒரு உயிலை எழுதி தமது இருமகள்களுக்கும் சீதனமாக அவற்றைக் கொடுத்தார். அன்றிலிருந்து காஃப்காவின் வேர் எங்கள் மண்ணுக்குச்ச்சொந்தம், எனவே கையெழுத்துப் பிரதிகள் எங்களுக்கேச் சொந்தமென ஜெர்மன் அரசாங்கமும், அவர் மாக்ஸ் பிராட் எங்கள் குடிமகன், அவர் உயிலும் எங்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது எனவே கையெழுத்துபிரதிகள் எங்களுக்கேச் சொந்தம் என இஸ்ரேல் அரசாங்கமும், எஸ்தெர் ஹோபின் வாரிதாரர்களுக்கே சொந்தமென காரிதரிரிசியின் பெண்களும் வாதிட, டெல் அவிவ் நீதிமன்றம் இஸ்ரேல் நாட்டின் தேசிய ஆவணக் காப்பகத்திடம் கையெழுத்துப்பிரதிகள் அனைத்தும் ஒப்படைக்கப்படவேண்டுமென தீர்ப்பளித்துள்ளது.
——————————–