அன்பினிய நண்பர்களே
வருகிற 23-5-2015 அன்று மாலை ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ என்ற எனது புதிய நாவல் புதுச்சேரி தமிழ்ச் சங்க அரங்கில் வெளியிட உள்ளோம்.
நிகழ்ச்சியில் திருவாளர்கள் பிரபஞ்சன், க. பஞ்சாங்கம், இந்திரன், பழ. அதியமான் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். நிகழ்ச்சி பற்றிய முழு விபரத்தை அடுத்த வாரம் பதிவிடுகிறேன். நேரில் அழைத்ததாகக் கருதி நண்பர்கள் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கவேண்டும்.
__________________________________________________
‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பிறந்த கதை
‘காஃப்காவின் நாய்க்குட்டி’ என்ற நாவலின் தலைப்பினைப்போலவே, ‘பிராஹா நகரப் பயணம்’, ‘பயணத்தின் மூன்றாம்நாள்’ ‘காப்கா பிறந்த இல்ல’த்தைக் கண்டது, ‘நாவல் கருதரித்தது’ அனைத்துமே தற்செயல் நிகழ்வுகள். திட்டமிடல்களைக் காட்டிலும் எதிர்பாராதவைகளே நமது வாழ்க்கையை அதிகம் தீர்மானிப்பவை என்பதை உறுதி செய்த மற்றோர் சம்பவம். பொதுவாக கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் தலைநகரங்கள் புகழ்வாய்ந்தவை, வரலாற்றுப் பெருமையும் கலைவளமும் கொண்டவை. மேற்கு ஐரோப்பாவில் பல நகரங்களை பார்க்கும் வாய்ப்பு அமைத்திருக்கிறது, மாறாக கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நகரங்களுக்கு சென்றதில்லை. பிராஹா¡விற்கு செல்லவேண்டும் என்ற எண்ணத்தை அதிகம் ஏற்படுத்தியவர் மார்கரெஃப் என்ற எங்கள் மருத்துவர். அவரிடம் செல்கிறபோகிறதெல்லாம், உடல் நலனைப்பற்றிய விசாரிப்புகள் அதுத் தொடர்பான தகவல் பரிமாற்றங்கள் என்பதைக் காட்டிலும், எங்கள் இருகுடும்பங்களைப் பற்றிய தகவல் பரிமாற்றங்கள், விடுமுறையைக் கழித்த இடம், உள்ளூர் அரசியல் இன்ன பிற தவல்களாக இருக்கும். நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் காத்திருக்கிற நாட்களில்கூட ஓர் அரைமணிநேரமாவது உட்காரவைத்து இப்படி எதையாவது இறக்கிவைக்கவில்லையென்றால் அவர் தலைவெடித்துவிடும் என்ற முற் பிறப்பு சாபமோ என்னவோ? பிராஹா நகரம் பற்றி அவர் எங்களிடம் பேசியது அதிகம். இந்நிலையில்தான் சென்ற வருடம்(2014) ஜூன்மாதத்தில் திடீரென்று பாரீஸிலிருந்து ஒரு தமிழ்ச் சங்கத்தைச்சேர்ந்த குழுவொன்று பிராஹா செல்ல இருக்கிறோம் வருகிறீர்களா என அழைத்தனர். உடன் வந்திருந்த புதுச்சேரி நண்பர்களைப் பற்றி தெரியும் ஆதலால், காஃப்காவைப் பற்றி துளியும் சிந்தனையில் இல்லை. எனினும் மூன்றாம் நாள் புகழ்பெற்ற வெல்ட்டாவா நதியில் படகில் காலை பதினோரு மணி அளவில் பயணித்த போது, காஃப்கா மியூசியம் என்றெழுதிய பெயர்ப் பலகைக் கண்ணிற்பட்டது, நண்பர்களிடம், அதைப் பார்க்கும் எனது ஆசையைப் பகிர்ந்துகொண்டேன், ஆனால் அவர்கள் முகங்களில் வேறுவகையான பதில்களிருக்க அமைதியானேன். படகுப் பயணம் முடிந்ததும் பிற்பகல் நகரில் அவரவர் விருப்பம்போல சுற்றிவிட்டு பேருந்து நிறுத்தத்திற்கு இரவு எட்டு மணிக்கு வந்துவிடவேண்டும் என்பது பயணத் திட்டம். படகுச் சவாரி மதியம் சுமார் பன்னிரண்டரை மணிக்கு முடிந்தது. கரை இறங்கியதும் உடன் வந்தவர்கள் சிறுசிறு குழுவாய் பிரிந்து நடக்கத் தொடங்கினார்கள். பகலுவுணவின் தேவையை முடித்துக்கொண்டு காஃப்கா மியூசியத்தை பார்க்க முடியாததற்காக வருந்தியவாறு பழைய நகரைச் சுற்றிவந்தோம். மாலை ஐந்து மணி அளவில் காப்பிக் குடிக்காலாமென ஒரு ரெஸ்ட்டாரெண்டிற்குள் நுழைந்தோம். கோடைகாலம் என்பதால் சில நாற்காலிகளும் மேசைகளும் வெளியில் இருந்தன, ஒன்றில் அமர்ந்து காப்பி வரவழைத்துக் குடித்துவிட்டு உரையாடிக்கொண்டிருந்தபோதுதான் சற்று தூரத்தில் மற்றொரு ரெஸ்டாரெண்ட் கட்டிடத்தின் முகப்பில் கஃப்கா மார்பளவு சிலையைப் பார்த்தேன். காஃப்காவிற்கும் அந்த இடத்திற்கும் சம்பந்தமிருக்கிறதென்று உள்ளுணர்வு தெரிவித்தது. நண்பர்களை இழுத்துக்கொண்டு ஓடினேன். அங்கிருந்தவர்களிடம் விசாரித்தேன், ‘காஃப்கா பிறந்த இல்லம்’ என்றார்கள், அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் போதாது. விடைபெற்றபோது அங்கிருந்த நாய்க்குட்டி என் கவனத்தைப் பெற்றது’, கிழட்டு நாயொன்றை மையமாகக்கொண்ட காஃப்காவின் சிறுகதையொன்றும் நினைவுக்கு வந்தது. வெளியில் வந்தபோதும் பேருந்தில் பயணித்தபோதும் நாய்க்குட்டித் திரும்பத் திரும்ப மனதை ஆக்ரமித்து அலைக்கழித்தது. இது ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பிறந்த கதை.
இந்நாவல் கடந்த ஜனவரியில் வந்திருக்கவேண்டும், ஆறுமாதங்கள் கூடுதலாக பதிப்பகத்தார் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் அப்போதைக்கும் தற்போதைக்குமான இடைவெளியில் செய்தவை சிற்சில மாற்றங்கள் என்கிறபோதும் அப்பெருமை நண்பர் கண்ணனுக்கே உரியது. “அவசரப் படவேண்டாம் என்றார்”. அது நியாயமானதென்பதை இந்நாவலின் முதல் வாசகன் என்ற வகையில் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறேன். இநாவலை வாசித்துபார்த்து கவிஞர் மோகனரங்கன் சிற்சில கருத்துகளை முன்வைத்தார், அதன் அடிப்படையில் சில திருத்தங்களையும் கொண்டுவந்தேன். அவரைப்போலவே நாவலின் ஆக்கத்திற்கு உதவிய வேறு மூன்றுபோர் இருக்கிறார்கள். ஒருவர் பாரீசிலுள்ள உயிர்நிழல் ஆசிரியை லட்சுமி, நாவலில் வரும் 90 விழுக்காடு ஈழத் தமிழ்சொற்களை தந்து உதவியவர், மற்றவர் ஸ்ட்ராஸ்பூரிலுள்ள நண்பர் சூசை பாக்கியராஜ். இக்கதையில் வரும் பாரதி என்ற பெண்ணின் உண்மைப் பெயர் விமலினி, அவர் ஸ்ட்ராஸ்பூர் நகரில் வசிக்கிறார். கதையில் அதிகம் இடம்பெறுகிற ‘நித்திலா’, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக மொழிபெயர்ப்பு நிமித்தமாக நான் சந்தித்த பெண். ஆக வழக்கம்போல உண்மையும் புனைவும் இடம்பெற்றிருக்கின்றன. நாவல் வரவேற்பை பெறுமென்ற நம்பிக்கை இருக்கிறது. நல்ல நாவல் என நீங்கள் நினைத்தால் மேலே சுட்டிய மனிதர்களுக்கெல்லாம் அப்பெருமையில் பங்குண்டு, நாவல் உங்களை ஏமாற்றினால் அதற்கு நான் மட்டுமே பொறுப்பு.
. (காஃப்காவின் நாய்க்குட்டி முன்னுரையில்)
– நா.கிருஷ்ணா
nakrishna@live.fr
சிறந்த கருத்துப் பகிர்வு
தொடருங்கள்