பாரிசீலிருந்து கவிஞர் கி.பாரதிதாசன் அனுப்பியிருந்த செய்தியைத் மின்ஞஞ்சலில் வாசித்தேன். பின்னர் திரு. முருக பத்மபாபனும் அச்செய்தியை தெரிவித்திருந்தார். சில கணம் துடித்து பின்னர் மனதைச் சமாதானபடுத்திக்கொண்டேன். திரு மதிவாணன் புதுசேரியில் இறந்தார் என்பதுதான் அச்செய்தி.
திரு மதிவாணன் ஆசிரியப்பணியில் இருந்தவர், அண்மைக்காலத்தில் பிரான்சுக்கு குடியேறியவர். இறப்பு தொட்டுவிடும் தூரத்தில் அவர் இல்லை. எப்போதும் நமது வாசலில் இறப்புக் காத்திருக்கிறது எனபது உண்மை. இன்றோ நாளையோ பிறந்தவர் அனைவரும் இறக்கவேண்டுமென்பது இயற்கை நியதி. எனினும் சில இழப்புகள் நம் நெஞ்சைப் பிழிகின்றன.
பாரீஸ் முத்தமிழ்ச்சங்கத் தலைவர் திரு செயராமன், நண்பர் பெஞ்சமின் லெபோ ஆகியோருடன் ஒரு முறை எங்கள் வீட்டிற்குவந்திருந்தார். அதுதான் மதிவாணன் என்ற இளைஞருடனான முதல் சந்திப்பு. அதற்கடுத்து எப்போதேனும் இரண்டொரு முறை பாரீஸ் தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் எதிர்கொள்ள நேரிட்டிருக்கிறது, மொத்த சந்திப்பைக் கணக்கிற்கொண்டாலும் சுமார் 30 நிமிடம் அவரோடு உரையாடியிருப்பேன். பல நேரங்களில் தமிழ் இனத்தின்மீது கசப்பும் வெறுப்பும் கோபமும் வருவதுண்டு, ஆனாலும் அவர் வேறுமனிதராக இருந்தார். வித்தியாசமானவராகத் தெரிந்தார். ஒரு மூன்றுமணிநேரம் விழா எடுத்து, ஆரவாரமாக தமிழின்பேரால் மேடையில் ஒரு கூட்டம் முட்டிமோதிக்கொண்டிருக்கும், ஆனால் இவரோ பரமசாதுவாக பார்வையாளர் கூட்டத்திடை, வாடும் செடிக்கு தேடித் தேடி நீர்வார்ப்பதுபோல வல்லினத்தைப் பெரிதும் தவிர்த்த வாய்மொழியால் மனிதர்களைப் உபசரித்து, தமிழ் வளர்த்த இளவல். புதுச்சேரி தமிழரில் ஓர் அபூர்வம், பசுமை மங்கா அருகம்புல். ஒதியமரங்களைக் காட்டிலும் அருகம்புல்தான் வழிபாட்டுக்குரியது
நா.கிருஷ்ணா