அ. ஜெயகாந்தன் – குந்த்தர் கிராஸ்
“எப்போதாயினும் கூற்றுவன் வருவான்” என்பதை ஜெயகாந்தன் விஷயத்தில் மரணம் மீண்டும் உறுதி செய்திருக்கிறது.
ஜெயகாந்தன் என்ற மனித உயிரிக்கு மரணம் நேர்ந்திருக்கிறதே யன்றி, ஜெயகாந்தன் படைப்புகளுக்கு இல்லை. மரபுகளில் விடுபடாது, நடுத்தர குடும்பத்தைப் பற்றி பேசுகிறபோதும்கூட மேட்டிமை மையை நிரப்பி தீபாவளி பட்ஷணங்களிடை தங்கள் ரோமாண்டிஸத்தை கடைவிரித்தவர்கள் காலத்தில்; விளிம்பு நிலை மக்களை, அவர்கள் வாழ்க்கையை, அதன் அழகை, ஆபாசத்தை, அறுவறுப்பை கலைப்படுத்தவும், மனம் சுளிக்காமல் வாசிக்கவும் செய்த படைப்பாளி.
ஒரு நவீன இலக்கியத்தின் உபாசகனாக நான் கொண்டாடுபவர்கள் தமிழில் இருவர்: ஒருவர் ஜெயகாந்தன் மற்றவர் சுந்தர ராமசாமி. செயற்கை இழைகளில் பின்னாமல், சித்துவேலைகள் செய்யாமல் இயல்பாய் படைப்பிலக்கியத்தை ஒளிரச் செய்த கலைஞர்கள். இருவரும் வெவ்வேறு பாதையில் வெவ்வேறு வாகனங்களில் பயணித்தவர்கள் என்பதும், அப்பயணங்கள் கால நேர வர்த்த்மானங்களுக்கு உட்பட்டவை என்பதும் மறுக்க முடியாதவை.எனினும் அவர்கள் சாலைகள் இணையானவை, ஒருவருடையது குண்டும் குழியுமான சாலையுமாகவும், மற்றவருடையது வழுவழுப்பான தார்ச்சாலையாகவும் (நேர்மையான ஒப்பந்ததாரர் ஒருவர் போட்ட சாலையென்று வைத்துக்கொள்ளுங்கள்) இருந்தபோதும் அவை இரண்டுமே ஒரு திசை ஓர் இலக்கு என்று செயல்பட்டவை. நாடாபுழுக்களின் தொல்லையால் சோகைப்பட்டுக்கிடந்த நவீனத் தமிழிலக்கியம் ஆரோக்கியமாக எழுந்து உட்கார காரணமானவர்கள். ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்’, சுந்தர ராமசாமின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ இரண்டுக்கும் நிகராக வேறொரு தமிழ்ப் படைப்பை வைத்து சமன்படுத்த எனது நவீன இலக்கிய அறிவு ஒப்பவில்லை. அவற்றைப் பற்றி நிறைய பேச இருக்கிறது. ஜெயகாந்தனை நவீன படைபுலகின் பிரம்மனாக காண்கிறபோதெல்லாம், படைப்பின் நுட்பங்களிலும் நுணுக்கங்களிலும் தேர்ந்த பெருந்தச்சனாக எனது நினைவில் வடிவம் கொள்கிறவர் சுந்தர ராமசாமி.
ஜெயகாந்தன் என்றபெயரை உச்சரிக்கிறபோது நினைவுகூரமுடிகிற மற்றொரு பெயர் மகாகவி பாரதி – கம்பீரமாக முண்டாசுகட்டிய மீசை பாரதி. பாரதியைப் பற்றி அறிந்ததெல்லாம் அவனுடையை கவிதைகள் ஊடாகத்தான். அவனைக்குறித்து நாம் கட்டமைத்துள்ள வடிவம் எத்தனை கம்ப்பீரமாக அக்கவிதைளிடையே தோற்றம்தருகிறதென்பதை, அவற்றை வாசிக்கிறபோதெல்லாம் உணர்ந்திருக்கிறேன். பாரதி ஒரு கவிதை ஜெயகாந்தனென்றால், ஜெயகாந்தன் ஒர் உரைநடை பாரதி. பாரதி கவிதைகளை வாசிக்கிற அதே அனுபவம் ஜெயகாந்தன் எழுத்தில் கிடைத்திருக்கிறது. ஜெயகாந்தன் இறுதிக்காலத்தைக் குறித்த விமர்சனங்கள் எதுவாக இருப்பினும் அவன் கம்பீரமாக உலாவந்த காலத்தில் எனது மனதில் கட்டியெழுப்பி இதுநாள் வரை போற்றிவருகிற ஓர் அசல் படைப்பாளியியகவே இருந்துவந்திருக்கிறான். ஜெயகாந்த்னை நேரில் கண்ட அனுபவம் உண்டு -அவனுடைய மேடைப்பேச்சைக் கேட்டக் கூட்டத்திடையே. மனதில் பட்டதை துணிச்சலாக கூறும் அந்த அறம், இன்றையத் தமிழரிடத்தில் நமது எழுத்தாளர்களிடத்தில் எனக்குத் தெரிந்து இல்லை. எதற்கு அஞ்சாத மேடைப்பேச்சு, தனது மனதில் இருப்பதை, பிறர் அபிப்ராயத்திற்குக் காத்திருக்காது பேசும் துணிச்சல்; எண்ணம் -எழுத்து- செயல் மூன்றையும் இணைத்து ஓர் வில்லம்புபோல செயல்பட்டவன். கூழைக்கும்பிடு, கால் பிடித்தல், நின்பாதமே சரணம் என வீழ்ந்து மேடைவரம் கேட்கும் மனிதப் பிழைகளுக்கு அவன் மகத்துவம் புரியாது.
இடதுசாரி சிந்தனையாளர், இலக்கியத்திற்கான நோபெல் பரிசை 1999 ஆண்டு பெற்றவர் ஜெர்மன் நாட்டில் நேற்று (13-4-2014) தனியார் மருத்துவம¨னையில் இறந்ததாக செய்தி. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகறியப்பட்ட ஜெர்மன் எழுத்தாளர். ஜெயகாந்தனைப்போலவே அரசியல் சமூகம் இரண்டுடனும் தமக்குள்ள உடன்பாடுகளையும் முரண்களையும் அஞ்சாமல் எழுத்தில் தெரிவித்தவர் அதனால் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறார். இவருடைய நாவல்களில் Le tambour ( The tin drum), புகழ்பெற்ற நாவல் பின்னர் சினிமாவாகவும் வெளிவந்து பிரெஞ்சு கான் திரைப்பட விழா பரிசையும், ஆஸ்கார் விருதையும் வென்றது வில்லிப் பிராண்ட்டுடன் இணைந்து பணியாற்றிய இவர், இட்லர் காலத்தில் நாஜிகளில் இளைஞர் அணியில் உறுப்பினராக இருந்தார் என்ற செய்தி பெரும் புயலைக் கிளப்பியது.
இவருடைய நாவல் ஒன்றைப் பற்றி உயிர்மை இணைய இதழில் எழுதிய கட்டுரை
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=1117
ஆ. சுடப்பட்ட தமிழர்கள்
செம்மரம் வெட்டுவதற்குக் தினக்கூலிக்குச்சென்ற தமிழர்கள் சுடப்பட்டிருக்கிறார்கள். பற்வைகளை சுடவும், மீன் பிடிக்கவும் விதிகள் வைத்திருக்கிறார்கள். உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடென்று சொல்லிக்கொள்கிற இந்தியாவில்தான் இந்தக் கூத்து அரங்கேறுகிறது. ஓடவைத்து ஓர் ஆப்ரோ -அமெரிக்கனை சுடும் ஒற்றை அமெரிக்க மிருகத்திற்கும், இருபதுபேரை கட்டிவைத்து சுடும்காட்டுமிராண்டிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை. ஐஎஸ் தீவிரவாதிகளைபோல கத்தியைப்போல உபயோகிக்கவில்லை. அவர்களுக்கும் இவர்களுக்குமுள்ள வித்தியாசம் இந்த மயிரிழைதான். அநேகமான சுடப்பட்ட துப்பாக்கிகளை ஏந்திய கைகள் இரண்டொரு தமிழருக்கும் சொந்தமாக இருக்கக்கூடும். செந்தப்பிணங்களுக்கு நமது தமிழகக் கட்சிகளும் மிகப்மிகப்பரிவோடு அவர் வசதிக்கேற்ப விலைகொடுக்க முன்வருகிறார்கள். அவர்கள் உயிரோடு இருக்கும்போது ஒரு ஓட்டுக்கு ஆயிரமோ வேறு இலவசங்களோ கொடுக்கவேண்டியிருந்திருக்கும் அத்துடன் ஒப்பிடுகிறது அரசியல் கட்சிகளுக்கு கூடுதலான செலவுதான், ஆனால் ஓட்டு அரசியலைவைத்து பார்க்கிறபோது நியாயமான முதலீடு என அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். வாழ்க ஜனநாயகம்!
—————————————–