18. எழுத்தாளன் முகவரி -: எழுத்து, சில யோசனைகள்

படைப்பு என்பது படைத்தல்- பகிர்தல் என்ற இருவினைச்சொற்களின் உழைப்பால் உருவானது. கலைஞன் ஒருவனின் சுயசம்பாத்தியம், ஒருவகையில் அவனுடைய கலகக்குரல். எழுத்தோடு ஒப்ப்டுகிறபோது, மேடைபேச்சுக்குள்ள சிக்கல் அதனை ஒரு முறைதான் மேடையேற்றமுடியும். பேச்சாளர்கள் சொல்வதைத் தெளிவாகச் சொல்லவேண்டும், தவறினால் விமர்சனத்திற்கு உள்ளாவார்கள், அவர்கள் திருத்திக்கொள்ள வாய்ப்புகள் இல்லை. எழுத்திலும் இதுபோன்ற ஆபத்து இருக்கிறது என்றாலும் பலமுறை திருத்தங்கள் செய்யவும், நிறைவாக இருக்கிறதென உணர்ந்த பிறகே பிரசுரிக்கப்படவும் எழுத்தில் வாய்ப்புகள் உண்டு, பிரசுரித்த பிறகும் தவற்றைத் திருத்தி அடுத்த பதிப்பாகவேணும் கொண்டுவரமுடியும்.

உங்களுக்கு நாவல் எழுதும் எண்ணம் உண்மையிலேயே இருக்கிறதா? கவிதை எழுதுகிறோம் சிற்றிதழ்களில் பிரசுரமாகின்றன, அவற்றைப் புத்தகமாகக் கொண்டுவரலாமென்றால் பதிப்பாளர் தயங்குகிறார், இந்நிலையில் நாவலொன்றை எழுதி வடவேங்கடம் – தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம் கொண்டாடிட வழிதேடும் நண்பர்களுக்கு அருள்வாக்கு போல சில நல்ல யோசனைகளை ஓர் அமெரிக்க எழுத்தாளர் – பெயர் Salvatore Lombino ‘ – எழுத்தாளர் கையேடு’ (The Witer’s Handbook ) என்ற நூலின் கட்டுரையொன்றில் வழங்கியுள்ளார். எட் மக்பெய்ன், எவன் ஹன்ட்டர், ரிச்சர்ட் மார்ட்ஸன் என பல புனைபெயர்களில் எழுதிஎழுதி புகழையும் பொருளையும் ஒரு சேர அடைந்தவர். வரலாறு என்பது வெற்றிபெற்றவர்களால் எழுதப்படுவது என்பதால், நாமும் அவருடைய யோசனைகளைக் கவனத்திற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். குற்றவியல் புனைவுகளுக்குப் பெயர் பெற்ற இந்த எழுத்தாளருடைய படைப்புகள் சிலவற்றை, பிரான்சு நாட்டில் பிரெஞ்சு இலக்கியங்களில் கவனம் செலுத்தும் ‘கலிமார்’ பதிப்பித்திருக்கும் அதிசயமும் சேர்ந்துகொள்ள இவருடைய ஆலோசனைகளுக்குக் கவனத்துடன் காது கொடுக்க வேண்டியிருக்கிறது.

 

1. எழுதும் நேரம்

இரவு பகலாக நாவலெழுதும் எண்ணம் உங்களை அலைக்கழிக்கிறது.  உங்கள் நண்பர்களிடத்தில் அடுத்த புத்தககக் கண்காட்சியில் நாவல் வந்துவிடும் என சவடாலும் விட்டாயிற்று.  மனைவியும் தோழிகளிடம் நீங்கள் நாவல் எழுதவிருக்கும் இரகசியத்தை உடைத்தாயிற்று (மனைவி எழுதுகிறாள் என்பதை வெளியிற்சொல்லி பெருமைப்படும் ஆண்கள்?) எனவே எழுதவேண்டும்.  ஏதேதோ திட்டங்கள் சிந்தனைகள் யோசனைகள் – கதைகருக்கள்? இரவு நித்திரைகொண்டால் கனவிலுங்கூட கதை எழுதுகிறீர்கள். கனவில் எழுதியதை உறக்கம் கலைந்து நிஜத்தில் எழுதத் துடிக்கிறீர்கள். அதற்கு முன்பாக அவ்வாறு செய்யலாமா என சல்வட்டோர் லாம்பினொ விடம் கேட்பது நல்லது. அவர் என்ன சொல்கிறார்? அதற்கு அவசியமில்லை என்கிறார். திரும்பவும் கட்டிலிற் சென்று நிம்மதியாக உறங்குங்கள் என்கிறார். ஏனெனில் எழுதும்போது பாதிஉறக்கத்தில் நாம் இருந்துவிடக்கூடாதாம். அவரது யோசனைப்படி புத்துணர்ச்சியுடன் எழுதுவது முக்கியம். எனக்கும் அது நியாயமாகப்படுகிறது. அவர் சொல்வதைப்போல ஏதே என்னுள் படைப்புக்கடவுளே இறங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு எழுத உட்கார்ந்து அடுத்த அரைமணி நேரத்தில் சோர்ந்து முடங்கியிருக்கிறேன். இரவு அதிகப்பட்சம் பத்துமணி, அதற்குமேல் விழித்திருப்பதில்லை, படுத்துவிடுவேன். உறங்க சிக்கல்கள் இருப்பதில்லை. இரவு உணவை எளிமையானதாக மாற்றிக்கொண்டிருப்பதால் படுத்ததும் உறங்க (குறட்டையுடன்) முடிகிறது. அதிகாலையில் விழிப்பு என்பது வெகு நாளாகக் கடைபிடிக்கும் பழக்கம்.  மூளையும் புத்துணர்ச்சியோடு இருப்பதைப்போன்ற உணர்வு. இரவு நேரங்களில் கண் விழித்து நான் எழுதுவதே இல்லை, வாசிக்க மட்டுமே செய்கிறேன், பெரும்பாலான நாட்களில் இரவு ஒன்பது ஒன்பதரைக்கெல்லாம் படுத்துவிடுவேன். ஆக எழுதுவதற்கு உகந்த நேரம் அதிகாலை. உங்களால் பின்னிரவுவரை சுறுசுறுப்பாக சோர்வின்றி எழுதமுடியுமென்றால் தாராளமாக காரியத்தில் இறங்கலாம். ஆனால் அரைத்தூக்கத்தில் எழுதாதீர்கள்.

 

2.குரலும் தொனியும்

என்ன எழுதப்போகிறீர்கள் என்பது பற்றிய தெளிவு உங்களிடம் இருக்ககும், எனவே தற்போதைக்கு கதைச் சுருக்கமென்றோ, அவுட்லைன் என்றோ எதையாவது மெனக்கெட்டு எழுதிக்கொண்டிருக்கவேண்டாம். அதற்கு முன்பாக நாவலில் கதைசொல்லியின் குரல் எப்படி ஒலிக்கவேண்டும் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். கதைசொல்லியின் குரலும், தொனியும் மிகவும் முக்கியம். இக்குரலையும் தொனியையும் எப்படித் தீமானிப்பது? இரண்டு கேள்விகள் இவ்விஷயத்தில் நமக்கு உதவ முடியும். முதலாவது கதை சொல்வது அல்லது கதையில் பேசுவது யார்? இரண்டாவது ஏன் அதைச் சொல்கிறார்கள் அல்லது எதற்காக அவ்வாறு பேசுகிறார்கள்? கதை மாந்தர்களோடு மட்டும் இக்கேள்விகளை இணைத்துப் பார்க்கக்கூடாது, கதையைப் படைக்கிற நம்முடனும் இக்கேள்விகளுக்குப் பந்த மிருக்கிறது. அதுபோலவே படைக்கிறவன் வயதுக்கும், கதைக் குரலின் வயதிற்கும் தொடர்பிருக்கிறது. கதை எழுதத்தொடங்கிய காலத்தில் ‘அழகான ராட்சசி’, ‘இது ஒரு விவகாரமான கதை’ என்றெல்லாம் பெயர்கள் சூட்டி எடுத்துரைப்பிலும் இளமை, தொனி இரண்டையும் பேசவைத்திருக்கிறேன்.

 

“எங்களுக்குள் ஒரு ஸ்நேகம். ஸ்நேகம்னா மாலை சூரியன் நிறத்தில் அதிகம் ஒப்பனையில்லாமல், ‘லெ மோந்து’ ‘பிகாரோ’ போன்ற விஷயமுள்ள பிரெஞ்சு பத்திரிகைகளை கைகளில் இடுக்கிக்கொண்டு , சிரமத்துக்கிடையில் அவள் தனது ‘பெழோ 206’ லிருந்து கடைக்குச் சென்று திரும்பியதன் அடையாளமாக “விட்டல்” தண்ணீர் பாட்டில்களையும் “டெட்ராபாக்” பாலையும் இறக்கும் போதெல்லாம் உதவி செய்திருக்கிறேன். அவளைப்பார்க்கும்போதெல்லாம் ஒரு “ஹாய்” ஒரு “போன்ழூர்” அத்துடன் சரி. பெருசாக ஒன்று மில்லை. ஆனா அந்தப் “பெருசு”க்குத்தான் தூண்டிலோடு காத்திருந்தேன் -(இது ஒரு விவகாரமான கதை – கனவுமெய்ப்படவேண்டும் – சிறுகதைத் தொகுப்பு)

 

குறிப்பாக தன்னிலையில் கதை சொல்லபடுகிறபோது  கூடுதல் கவனம் தேவை. வயதுகேற்ற கதைக்கருவையும், கதை மாந்தரையும் தேர்வு செய்வது,  எடுத்துரைப்பை நீர்ப்பரவல்போல் முன்னெடுத்துச் செல்ல உதவும். அறுபது வயது படைப்பாளி, தனது புனைவொன்றில் இருபத்தைந்து வயது இளைஞனின் குரலை தொனியை பதிவு செய்யமுடியாதா? ஏன் முடியாது? ஆனால் மிகவும் கவனத்துடன் கையாளவேண்டும். ‘கரடிபொம்மை’ சிறுகதை அப்படியொரு முயற்சிகுரியது:

 

“ரஜனி அங்க்கிள் தோள்ல உட்கார்ந்துகிட்டும், கமல் அங்கிளோட கையைப் பிடிச்சுகிட்டும் பாட்டு பாடியிருக்கன். ஜெயா ஆண்ட்டிக்கூடவும் நடிச்சிருக்கன். இப்பக்கூட அவங்கக்கூட ஒரு படம் பண்ணேன். என்ன பேரு? என்னோட மெமரியில இல்ல.. உங்களுக்கு ஞாபகம் இருக்கா? ஆங் வந்திடுச்சி…..”அம்மாவும் நீயே அப்பாவும் நீயே”ங்கிற படம். அந்தப் படத்தின் ஷூட்டிங் முழுக்க அவங்க என்னோடதான் இருந்தாங்க. சிங்கப்பூர்லிருந்து வரவழைச்சதுன்னு சொல்லி நிறைய ‘கிண்டர்’ சாக்லேட் கொண்டு வருவாங்க. கை நிறைய “சூப்பா-சப்ஸ்’ கொடுத்துட்டு, ஷாட்ஸ் இல்லாதப்ப பக்கத்துலே நிப்பாங்க. அதிலும் போன சாட்டர்டே கடைசி ஷூட்டின்போது புற்றுக்குள்ள கையை விட்டு பாம்பைக் கையில் எடுக்க, ஜெயா ஆண்ட்டி ‘மை காட்!’னு சொல்லி என்னைக் கட்டிப் புடிச்சுகிட்டு நிறைய முத்தம் கொடுத்தபோது, யூனிட் மொத்தமும் வாயைப் பொளந்துகிட்டு நின்னுச்சி” ( கரடிபொம்மை – கனவு மெய்ப்படவேண்டும் – சிறுகதைத் தொகுப்பு)

 

படர்க்கையில் சொல்கிறபோது, பாத்திரங்களின் தன்மைக்கேற்ப அவ்வப்போது கதைமாந்தரின் குரலை மாற்றுவது கட்டாயம். ‘மாத்தா-ஹரி’ நாவல் படர்க்கையில் சொல்லபட்டிருந்தாலும், பாத்திரங்களுக்கேற்ப தொனி மற்றும் குரலைக் கொடுக்கக்கூடிய சொற்களை கையாண்டேன். நீங்களும் இம்முறையை முயற்சி செய்து பார்க்கலாம்.

 

“கண்களை இறுக மூடிக்கொள்கிறாள். வந்தவளை விழிமடல்களுக்குள் சிறைபடுத்தியாயிற்று . அவள் முரண்டு பிடிக்கிறாள். தப்பிக்கும் எண்ணமிருக்கிறது; தான் அனுமதிப்பதில்லை என்று தீர்மானித்தாயிற்று. அனுமதித்தால் சிறுக சிறுகச் சேர்த்துவைத்திருந்த அத்தனை நினைவுகளையும் கனவுகளையும் கூடவே கொண்டுபோய்விடுவாள். அவளுக்கு நினைவுகளின் வதை புரியாது. போடீ.. பெரிய பராசக்தி என்கிற நினைப்பு. உன்னைப்பற்றிய அர்ச்சனைகள் தப்பு, துதிப்பாடல்கள் தப்பு. இந்த உலகை ஏதோ இரட்சிக்கவந்தவளென்கிற நினைப்பும் ஆணவமும் உனக்கு நிறைய இருக்கிறது. பூச்சூடவோ, பொட்டுவைத்துக்கொள்ளவோ நிழலாய்த் தெரிகிற பற்களுக்கிடையில் விரல்வைத்து நகங்கடிக்கவோ, விழிகளைத் தாழ்த்தி நாணப்படவோ தெரியாமல் என்ன பெண் நீ?” ( மாத்தாஹரி – நாவல் )

 

இங்கே உங்கள் காதில் விழுகிற குரல் யாருடையது? படைப்பாளியுடையதா? கதைநாயகிக்குரியதா? படர்க்கை கதைசொல்லலிலும் கதைமாந்தரைத் தன்மையிற்பேசவைக்க முடியும் என்பதற்கு இதொரு உதாரணம். எனவே நாவல் தன்மையிற் சொல்லபடுகிறதெனில் எழுதுவதற்கு முன்பாகவும், படர்க்கையிற் சொல்லப்படுகிறதெனில் கதைமாந்தரை மனதில் நிறுத்தியும் பேசுவதற்கு அனுமதியுங்கள், குரலும் தொனியும் கதைகேற்ப பொருத்தமாக அமையும். குரலைத் தேர்வு செய்தானபிறகு, எழுதவிருக்கிற புனைவின் அவுட்லைனை எழுத உட்காருங்கள். அப்படி எழுதுகிறபோது, தயவு செய்து “நவராத்திரி என்ற பெயர்வைத்து ஒன்பது வேடங்கள் செய்தார், நான் தசாவாதாரம் பெயரில் பத்துவேடங்கள் செய்தால்தானே பெரிய நடிகன் என்பதுபோன்ற வீம்பெல்லாம் வேண்டாம். அவர் கதைக்கு ஆயிரம் பக்கங்கள் தேவைப்பட்டிருக்கலாம், உங்கள் கதைக்கருவிற்கு நூறுபக்கங்கள் போதுமென்றால், நூற்றி ஐம்பது பக்கங்களில் நிறுத்திக்கொள்ளுங்கள். அதுதான்  நல்லது. அதன் பிறகு அத்தியாயங்களைப் பிரித்துக்கொள்ளுங்கள். இருநூறுபக்க நாவலெனில் இருபதிலிருந்து நாற்பது அத்தியாயங்கள்வரை பிரித்துக்கொள்வது எனக்குத் தெரிந்த யோசனை. இனி அவுட் லைனுக்கு வருவோம்.

 

3. நாவலின் அவுட்லைன் அல்லது திட்டவரை.

புனைவொன்றின் கருவைத் தேர்வு செய்திருப்போம், அதாவது எதைக்குறித்து அல்லது எவ்வித விஷயத்தை மையமாக வைத்து எழுதப்போகிறோமென்பதில் நமக்குத் தெளிவு இருக்கக்கூடும். அவிஷயத்தை நினைவூட்டும் வகையில் ஒரு பெயரை அல்லது தலைப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். அது நாவலின் பெயராக இருக்கவேண்டிய கட்டாயமில்லை. மாறாக மையப்பொருளைச் சுற்றிவர அல்லது அதை மறந்துவிடாதிருக்க இத்தலைப்பு அல்லது குறிப்பு நமக்கு உதவக்கூடும். மாத்தாஹரி நாவலின் அவுட்லைனுக்கு வைத்த பெயர் ‘புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட பெண்ணின் கதை’ அதுபோல ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்ன எழுதபோகிறோம் என்பதிலொரு தெளிவு வேண்டும் அதற்கேற்ப ஒரு பெயரைச் சுருக்கமாக வைத்துக்கொள்ளலாம். சம்பவம், இடம் பெறும் மாந்தர்கள் என ஒரு முடிவுக்குவந்த பின்னர் நமது கற்பனைகளுக்குச் சொற்களை அணிவிக்கலாம். படித்துப்பார்க்கிறபோது அத்தியாயங்களுகிடையில் தொடர்பில்லை எனக்கருதினால், குறித்து வைத்து நாவலை முடித்தபிறகு அதனை எழுதிச்சேர்க்கலாம். அப்படி இரண்டொரு அத்தியாங்களை சேர்க்கவும், கதைக்கு எவ்விதத்திலும் உதவாது, பக்கங்களை மட்டுமே கூட்ட உதவுகிற அத்தியாயங்களைத் தவிர்க்கவும் செய்யலலாம்.

 

4. நாவலை நகர்த்துதல்

அதிக பக்கங்களில் ஒரு புனைவை எழுதவேண்டிய நிர்ப்பந்தமிருக்கிறபொழுது ஒரு நாளைக்கு இத்தனைப் பக்கங்கள் என ஒதுக்கிக்கொண்டு அவற்றை அந்த நாளில் முடிப்பது நல்லது. பிறகாரியங்களைபோலவே எழுத்திற்கும் திட்டமிடல் இன்றியமையாததென பலமுறை இத்தொடரில் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். ஏதேனும் ஒரு அத்தியாத்தை எழுதுவதற்குக் குறிப்பாக சரித்திர நாவல்களை எழுதுகிறபோது உரிய தகவல்கள் உரிய காலத்தில் கிடைக்காமல் போகலாம். அதற்காக எழுதுவதைத் தள்ளிபோடக்கூடாது. அச்சமயங்களில் ஆதாரங்களின் தேவையின்றி எழுதக்கூடிய அத்தியாயங்கள் இருக்கக்கூடும் அவற்றை எழுதி முடிக்கலாம். எழுதியவுடன் படித்துபார்க்காமல் மறு நாள் தொடங்குவதற்கு முன்பாக அதைப் படித்துபார்ப்பது நல்லது. மொத்த அத்தியாயத்தையும் எழுதிமுடித்திருந்தபோதிலும் அதனை முதற்படியாகவே கருதவேண்டும். எனக்கு இதுபற்றிய தெளிவு இரண்டாம் நாவலின் போதுதான் கிடைத்தது. நீலக்கடல் நாவலை முதலில் ஒரு பதிப்பகத்திற்கு அனுப்பியிருந்தேன். அவர்கள் உடனடடியாக அதனைப் பதிப்பிக்கவில்லை. அவர்கள் காலதாமதம் செய்வதாகப் புரிந்துகொண்டு வேறொரு பதிப்பகத்திடம் கொடுத்தேன். அவர்கள் உடனடியாகப் பதிப்பிக்கவும் செய்தார்கள். அவர்கள் கால அவகாசம் எடுத்து ஒழுங்காகச் செப்பனிட்டு கொண்டுவருபவர்களாக இருந்திருந்தால் நீலக்கடல் நாவல் கூடுதலாக வரவேற்பைப் பெற்றிருக்கும் என்கிற ஆதங்கம், இன்றைக்கும் உண்டு. நாம் எழுதி முடிக்கிற முதற்படி சுத்திகரிப்பு செய்யாத ஒன்று, பட்டைத் தீட்டப்படாத கல். நாம் நினைப்பதையெல்லாம் எழுத்தில் கொட்டிவிடவேண்டுமென்கிற ஆர்வக்கோளாரின் வெளிப்பாடு அது. எனவே தயவுசெய்து ஒருமுறைக்கு இருமுறை செப்பனிட்டு அனுப்பிவையுங்கள். மாற்றம் செய்யத் தயங்க வேண்டாம், தயங்கினால் உங்கள் எழுத்திற்குச் சிறுமை.
——————————————————

One response to “18. எழுத்தாளன் முகவரி -: எழுத்து, சில யோசனைகள்

  1. ஒரு நாவலை எப்படி படிப்படியாக உருவாக்கம் கொடுப்பது, எந்தெந்த விஷயங்களில் சிரத்தை எடுப்பது, எப்படியெப்படி செயலாக்குவது என்று பல யோசனைகளை தெள்ளந்தெளிவாக முன்வைத்துள்ள அற்புதமான பகிர்வு. நாவல் எழுதவிரும்பும் ஒவ்வொருவரும் கட்டாயம் மனத்திலேற்றவேண்டிய யோசனைகள். பகிர்வுக்கு மிகவும் நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s