1. மீண்டும் மீளும் அந்தத் தெரு.
என்னுள் இருக்கும் அந்தத் தெரு
சோம்பல் முறித்த அதிகாலைக்கு
தேத்தண்ணி விநியோகிக்கும்
காசாம்பின் கைப்பட்ட இட்டலியை
சூட்டில் வருந்தும் தாமரை இலையிலிட்டு
மீன் குழம்பை அபிஷேகிக்கும்
குமரிகள் கைபட்ட
கூடுதல் சந்தோஷத்தை
ஒற்றைக் கைப்பம்பில் குரலெடுத்துப் பாடும்
அவர்கள் இடுப்பை எச்சலிட்டு
குடங்களிற் பருவமாய்த் தளும்பும்
ரிக்ஷா மணியின் இருமலுக்குப் பயந்த
திண்ணைக் குழந்தையாய்
திடுக்கிட்டு அழும்
“சாமியேய் ஐய்யப்பா!”
விளித்த காற்றாய்
வீட்டு முற்றம்வரை வந்து விழும்
பாற்கார ரங்கனின் கைப்பிடியில்
குவளையா? குளம்படியா?
குழப்பாமாய் மிஞ்சும்
நாசி எழுப்பி,
வெல்லப்பாகில் பிறப்பெடுக்கும்
வேம்புலி நாய்க்கர் பொரியுண்டை
மெல்லப் பேசும் இனியவை நாற்பது
வாழ்க்கைப் பயணத்தின்
வழிச்செலவுக்குதவுமென
சிக்கனமாய்ச் சேர்த்த
சில்லறை காலைகள்
சந்தோஷத் திரியில்
பண்டிகை நாட்களில்
வெடித்துத் சிதறும்
சிவகாசி சிறுவர்களாய்
சூல்கொண்ட மனவுண்டியல்
உடைக்கப்படாமல்
எண்ணப்படும் நாள்களில்
மீண்டும் மீளும் அந்தத் தெரு….
__________________________________
2. . கனவிடைத் தோயும்
நாணல் வீடுகள்!
சருகுகளான ‘நினைவுகளில்’:
பச்சையம் இழக்கா முதல் வீடு.
தோட்டக்கால் மண்ணில் ‘க(¡)ல்’ அறுத்து
மூச்சுக்காற்றில் முகம் தேய
செங்கற் சூளைக்கு மரங்கள் தேட
காய்த்துக்குலுங்கிய புளியமரமும்
களையெடுத்த பனைமரங்களும் சாம்பலானது.
சுபுமுகூர்த்தத்தில் சூளைபிரிக்கவும் மனைகோலவும்
சுத்த வாக்கிய தம்பிரான் மொழி.
உள்ளூரில் கிணறுகள் கட்டிப்
பழகியிருந்த சின்னச்சாமி வகையறாக்கள்
உதவிக்கு வந்த ஒரிருமாதங்களில் தெருவைப்பார்த்த
முதல் வீடு -அப்பாவீடு.
அடுப்படியில் அம்மாவின் குரல்
தெருத் திண்ணையில் அப்பாவின் குரல், ‘உச்சு’கொட்டும் அவர் சகாக்களின் குரல்
இடப்புற இருட்டறை இடைக்கிடைத் துப்பும் ‘பாட்டி’யின் குரல்
பின்னிரவு பூனையின் குரல் முன்னே கிரீச்சிடும் எலியின் குரல்
தூண்களான தோட்டத்துமரங்களில் தொட்டால் உதிரும் புள்ளினக்குரல்கள்.
அம்மா: கோ(டி)ட்ட பால், மோர் கணக்கு அடுக்களை முதுகு,
மஞ்சள்குங்குமம் தின்று செரிக்காத நடுவீடு,
முருங்கைகீரை சாம்பார் மணம்.
காலம்: கட்டிய சிலந்தி குளவிக் கூடுகள் பலியுண்ட மூட்டை பூச்சிகள்
உடலொட்டிக்கிடக்கும் உதிராதச் சிவப்பு
சிந்திய மஞ்சள் சளியின் முதிராத கறுப்பு.
அக்கா: தலைச்சன்பிள்ளைக்காக தூலத்திலிட்ட கூறைப்புடவை தூளி,
மூத்திரவாடை, முலைப்பால் கவிச்சை.
அப்பா அம்மா நிழல் விளையாட்டைக் கண்ட
விளிம்பு இரவின் விழிப்பு,
இருபாலரையும் அருவருத்த இரண்டாம் நாள்.
காரணம் சிலிர்க்க கனவுற்ற வீடு
நிழலும் ‘நானு’மாய் பறந்து மாய்ந்து
இறக்கைகள் குறைத்து பூமிக்கு வீங்கி
ராஜஸ்தான் மார்பிள்,பிரெஞ்சு விண்டோஸ்,
கார் நிறுத்த போர்டிகோ, குளிரூட்டிய அறை,
அட்டாச்டு பாத்ரூம்…மனைவி பிள்ளைகள் சூழ
மனையில் உட்கார்ந்து கிரகப்பிரவேசம்.
மறுநாள் தெருக்கதவில் ‘வாடகைக்கு விடப்படும்’
பிறந்தமண் புது வீடு
கால மக்மாவில் கரியும் ஆயுள்
காதோரம் நரைக்கும் அக்கரைப்பச்சைகள்
நிகழ்காலத்தில் தளும்பும் கடந்த காலத்தின் கானல் நீர்
கால் இடற படிகள் ஏறவும்,
கை நடுங்கத் தீ மூட்டவும் –
பால்காய்ச்சவும் அலையும் ‘இருப்பு’.
நாணல் வீடுகள் கனவிடைத் தோயும்
——