புத்திஜீவி கே.யின் வாழ்வும் பணியும்
கே. பற்றிய இந்தச் சுருங்கிய வாழ்க்கை வரலாற்றை அவனுடைய மரணத்திலிருந்து தொடங்குவது தவிர வேறு வழியில்லை.அவன் மரணம் சம்பவித்தோ இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு.
அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் கோடை விடுமுறையில், இந்தோ-ஆரியமொழிக் குடும்பத்தைச்சார்ந்த அவன் தாய் மொழியைப் பயிற்றுவிக்க, அமெரிக்க சமஸ்கிருத பேராசிரியர் வால்டர் வில்ஃபோர்ட் கே.யை அழைத்தபோது கே.யின் கால்கள் தரையில் பாவவில்லை. நானும் கே.யும் அதுபோல், கே.யின் நிரந்தர விரோதியான என் நண்பன் ஆனந்ததீர்த்தனும் (எனக்கு அந்நியமான) அந்த ஊரில் ஒரு மொழி நிறுவனத்தில் வேலை பார்த்தோம்.
ஆனந்ததீர்த்தனை நான் என்னுடைய மொழியைச் சேர்ந்த நண்பர்களுக்கு ஒரு தோற்றுப்போன எழுத்தாளன் (எ ஃபெயில்ட் ரைட்டர்) என்று அறிமுகப்படுத்துவதும் போது, ஆனந்ததீர்த்தன் ஏனோ உள்ளூர மகிழ்வான்.
ஆனந்ததீர்த்தன்தான் கே.யின் மரணத்தை, கைப்பேசி அறிமுகமாகியிராத, 70களில் அவ்வப்போது மக்கர் செய்யும் என்வீட்டு லேண்ட் லைனுக்கு அழைத்துச் சொன்னான்.
“புஸ்வாணம் மேலே போய், போனவேகத்தில்
எரிந்து புஸ்ஸென்று கீழே விழுந்து விட்டது” என்றான்.
“ஐ டோண்ட் அன்ட்ரஸ்டான்ட் யு.”
என்றேன் ஆங்கிலத்தில். ஆனால் எனக்கு உறுதியாகத் தெரியும் கே. பற்றித்தான் ஏதோ சொல்ல வருகிறான் என்று.
“கே.டைய்ட் டுடே அட் ஸெவன் இன் த மார்னிங். புஸ்வாணம் மேலே போய் அப்படியே விழுந்துவிட்டது”.
தொண்டையிலிருந்து பேசிய ஆனந்ததீர்த்தன் சொன்னமுறை எனக்கு அவன் வருத்தத்தோடு உண்மையைச் சொல்கிறான் என்று புலப்படுத்தியது. கே. திடீரென இறந்த செய்தி இப்படித்தான் அந்த நகரத்தில் பரவியது.
கே. அப்போது மொழிநிறுவனம் எங்களுக்கு ஒதுக்கியிருந்த குவார்ட்டர்ஸில் தங்கியிருந்ததால் அவன் வீடு என் வீட்டுக்கு அருகில் இருந்தது. நான் என் இரு சக்கர வாகனத்தில் அவன் வீட்டுக்குப் போன போது அவன் வீட்டின் முன் ஒரு மழை மேகம் கவிந்திருந்த அந்த ஜுலை மாதத்தில் பார்த்தவை எல்லாம் நன்றாக நினைவிருக்கின்றன. சிறு கூட்டம் ஒன்று கூடியிருந்தது. அவனிடம் பி.எச்.டி செய்யப்போய் அவனால் பாலியல் தொல்லைக்கு ஆளாகி மொழிநிறுவனத்தின் இயக்குநருக்கு முன்பொருமுறை கம்ப்ளயண்ட் எழுதிய பெண் அழுதுகொண்டு ஒரு மரத்தின் அருகில் தரையில் அவளுடைய சுடிதாரில் மண் ஒட்டுவதையும் பொருட்படுத்தாது அமர்ந்திருந்தாள்.
நான் அந்தப் பெண்ணை அறிவேன். எனவே அவளருகில் சென்றபோது அவள் கே.யின் சாவைப் பற்றிப் பேசாமல் அவளுக்கு முன்பு நடந்தது பற்றி ஏனோ பேசினாள். “கம்ப்ளய்ண்டைத் திரும்பப் பெறாவிட்டால் தற்கொலை செய்து விடுவதாக எங்க வீட்டுக்கு வந்து கே. மிரட்டியதைப் பார்த்து அப்பா உண்மையில் பயந்துபோனார். அதனால் கம்ப்ளயண்டை வாபஸ் வாங்கியதோடு பிஎச்டியும் கே.யிடம் செய்துகொண்டேன். இப்போது இப்படி ஆகிவிட்டது” என்றாள் மூக்கைச் சிந்தியபடி.
கே. போன்ற அறிவாளியிடம் ஆய்வு செய்தால் அவர்கள் மொழி பேசுபவர்கள் உடனே வேலை வழங்குவார்கள் என்ற தகவலையும் அந்தப் பெண் சொன்னாள். இவளைப் போல் பல பெண்களுக்குப் பாலியல் தொல்லை தந்து பிஎச்டியும் தருவான் கே. என்று ஆனந்த்தீர்த்தன் ஜோக் அடிப்பான். இறந்தவன் உடலையாவது பார்ப்பதற்கு ஆனந்ததீர்த்தன் வருவான் என்று நான் நினைத்தேன். அப்போது அந்தப் பெண், வேறு ஒரு பெண் வருவதைச் சுட்டிக்காட்டி
“அவளிடமும் முதலில் தவறாக நடக்க முயன்று பின்பு அவளது பிஎச்.டி நெறியாளராய் ஒழுங்காய் இருந்தான் கே.” என்ற தகவலைத் தரவும் புதிய இளம்பெண் அழுதபடி எங்களருகில் வந்து சேரவும் சரியாய் இருந்தது.
இப்போது 1998 நடந்துகொண்டிருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு நான் கே.யை நினைப்பதற்கான ஒரே காரணம் கே.யின் இந்த வாசகம்: “ஒரு நிகழ்வை நிரூபிக்க வேண்டுமென்றால் அந்த நிகழ்வை இன்னொரு நிகழ்வோடு தொடர்பு படுத்துவதைவிட வேறு வழியில்லை”.
கடந்த 40 ஆண்டுகளில் இந்த வாசகம் அவர்கள் மொழியில் மிகவும் புகழ்பெற்றுவிட்டது. கே. இறந்தபின் முதல் பதினைந்து ஆண்டுகள் அவனுக்கு நினைவுக் கூட்டங்களை ஒழுங்காய் நடத்தினாள் அவனுடைய மனைவி சரஸ்வதி. (கே. வாழும்போது அப்படி நடத்தும் எண்ணம் அவள் கொண்டிருக்கவில்லை) அதன்பிறகு இப்போது நடத்துகிறாளோ என்னவோ தெரியாது.ஏனெனில் அந்த ஊரைவிட்டு நானும் எப்போதோ வந்துவிட்டேன். இந்த வாசகத்தை நான் பழைய புத்தகங்களை அடுக்கும்போது ஒரு பத்திரிகையின் பழைய மஞ்சள் படிந்த பக்கத்தில் யாரோ அடிக்கோடிட்ட பகுதியில் பார்த்தேன். அப்போதிருந்த புகழ் ‘கே’க்கு இப்போது இல்லை என்பேன் என்றாலும் சிலர் இப்போதும் ‘கே’யை புகழ்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ‘கே’ யின் வயதொத்தவர்கள். இழந்துபோன அவரவர் வயதை அப்படிக் கௌரவிக்கிறார்கள் என்பான் ஆனந்த தீர்த்தன்.
கே. ஒருமுறை ஓவியரான தேசத்தின் புகழ்பெற்ற கவிஞரைப் பற்றி எழுதியிருந்தான். தாடி வைத்துக் கொண்டிருக்கும் அந்த உலகப் புகழ்பெற்ற கவிஞரைப் பின்பற்றி தானும் தாடி வைத்திருப்பதாகக் கூறிய ‘கே’ அந்தக் கவிஞரைப் பற்றி ஒரு கட்டுரை 2 பக்கத்தில் எழுதியிருந்தான். அது என் கவனத்தையும் ஈர்த்தது. அதாவது அக்கவிஞர் முதுமையில் எத்தகைய கற்பனை சக்தியைக் கொண்டிருப்பார் என்ற அபூர்வமான கேள்வி அவனுக்குத் தோன்றியிருந்தது. ஆனந்த தீர்த்தனிடம் அது அபூர்வமான கேள்வி என்ற என் எண்ணத்தைக் கூறிய போது ஆனந்த தீர்த்தன் இப்படிச் சொன்னான்.
“நீ வயதானவர்கள் யாரும் எழுதாத மொழியிலிருந்து வந்துள்ளாய். கே. வயதானவர்கள் மட்டுமே எழுதும் மொழியில் எழுதுகிறான். எனவே வயதானவர்களின் கற்பனைபற்றி யோசிப்பது கே. போன்றவர்களுக்கு எளிது.”
நான் குழப்பமடைந்தேன்.
எனினும் ‘கே’ என்ன சொல்லவருகிறான் என்று சிந்தித்தேன். எனக்கும் ஆனந்த தீர்த்தனுக்கும் கே. தேசியப் புகழ்பெற்ற கவிஞரின் எல்லாப் படைப்பையும் படித்தவனல்ல என்பது தெரியும்.
‘கே’ தேசியப் புகழ்பெற்ற அந்தக் கவிஞரின் ஓவியக் கண்காட்சியைப் பார்த்திருக்கிறான். அழகற்ற தோற்றமுள்ள அவ்வோவியங்களைக் கூர்ந்து பார்த்து ஒரு கருத்தைச் சொல்கிறான். பல ஓவியங்களில் மறைந்திருக்கும் பெண் சாயை ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறான். அக்கருத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறான்.
“மறைவாக, பல ஓவியங்களில் ரகசியமாய் வெளிப்படும் பெண்சாயல் உண்மையில் ஓவியங்களில் காணப்படுவதில்லை”.
இந்த வாசகம் எனக்குப் பெரிய தலை வேதனையைக் கொடுத்தது. பெண்சாயல் இருக்கிறதென்கிறான். ஆனால் அது இல்லாததென்கிறான். எனக்கு இவ்வாக்கியத்தின் முரண் புரிய இன்னொரு வாக்கியம் உதவியது.
“இருப்பது இல்லாததுபோல் தென்படுவது உணர்வின் அதீதத்தால் ஆகும்”.
இந்தமாதிரி விசயங்களை நினைவில் கொண்டு வந்த நான் கே.யின் வறுமைகொண்ட இளமைக்காலம் பற்றி நினைத்தேன் ஊரில் கிராமத்தில் திருவிழாவுக்கு நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவு தயாராக்கும்போது வயிற்றுப் போக்கு ஏற்படுத்தும் மாத்திரைகளை வாங்கிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் உணவில் கலந்திருக்கிறான். இது அவன் மிக அதிகமான இறை மறுப்பாளனாக இருந்தபோது நடந்தது. இதனை அவனது பாலிய காலத்தில் அவனோடு இறைமறுப்பாளர்களாக அலைந்து இப்போது பெரிய பக்தர்களாக மாறி அரசியலில் புகுந்துள்ளவர்கள் கூறுகிறார்கள்; இவர்கள் சிலரே.
‘கே’யின், ஒரு கதை பற்றிய விமர்சனம் என்னைக் கவர்ந்தது. அதுபற்றிக் கூறாவிட்டால் ‘கே’ பற்றிய என் மனப்பதிவு முழுமையடையாது. அக்கதைச் சம்பவம் வெயிலில் நடக்கிறது. அக்கதை, வெள்ளைக்காரர்கள் கொடூரமாய் ஆண்ட சமயத்தில், அச்சிட்ட பத்திரிகையின் தாள் போலீஸால் கறுப்புமைப் பூசி அழிக்கப்பட்டது. அப்போதெல்லாம் போலீஸ் பற்றி ஏதும் பத்திரிக்கைகளில் எழுதமுடியாது. அச்சுறுத்தலுக்கு ஆளான அந்தக் கதையில் முழுவதும் வெயில் கொடூரமாய் அடித்தது. அக்கதையானது கர்ப்பமான ஒரு பெண்ணை அவளுடைய தாய் பேற்றுக்குத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போவது பற்றியது. பஸ் நிலையத்துக்கு அப்பெண்ணும் அவளது கிராமப்புறத் தாயும் வந்து நிற்கும்போது, போலீஸ் எல்லோரையும் விரட்டுகிறது. அப்பெண்ணுக்கோ தாகம். அப்போது பார்த்து வெயில் சுள்ளென்று அடிக்கிறது. தாயால் பெண்ணை விட்டுவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் எடுக்கப் போக முடியாது. எல்லா இடத்திலும் போலீஸ் பரவுகிறது. யாரோ பஸ்ஸில் கல்லடிக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண் என்னாகுமோ தன் குழந்தைக்கு என்று புலம்புகிறாள். அவளுக்கு வேறு ஏதும் தோன்றுவதில்லை.
நான் சொல்ல வந்தது ‘கே’ எழுதிய விமரிசனம் பற்றி. ஒரு டேப்ளாய்ட் பத்திரிகையின் தரங் குறைந்த தாளில் அச்சிட்ட தன் ஒரு பக்கக் கட்டுரையில் அக்கதை வெயில் பற்றியது என அடம்பிடிக்கிறான் கே. அக்கட்டுரை வெளியான அடுத்த நாள் ‘கே’யின் பாதத்தில் பெருவிரலில் ஒரு கோபக்கார இளைஞன் தன் பூட்ஸ் கால்களால் மிதித்தபடி ‘கே’யின் சட்டைக்காலரைப் பிடித்தான். வெயிலாம் வெயில் என்றான் இளைஞன். ‘கே’ அசராமல் தன் எழுத்தின் புரட்சிகரத் தன்மையால் உருவான எதிரிகளின் வேலை இது என்று கூறிக்கொண்டு தலையைக் கீழே போட்டபடி நடந்து போனான்.
இந்த நிகழ்ச்சி நானும் ஆனந்ததீர்த்தனும் ‘கே’ யும் நாங்கள் வேலை பார்த்த மொழிநிறுவனத்தின் கான்டீனில் காபி குடிக்கப்போனபோது நடந்தது. சிலவேளை இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கவேண்டுமென்பதற்காக, வேண்டுமென்றே இப்படி எழுதுகிறானோ இவன் என்றும் தோன்றியது.
கே. பார்ப்பதற்கு அழகற்றவனாக இருப்பான். கரிய நிறமுகம்; சுருட்டைமுடி. கண்கள் பெரியவை. அவன் சிரிக்கும்போது நாசித்துவாரம் தேவைக்கதிகமாக விரிந்து சுருங்கும். அப்படி விரிந்து சுருங்கும் நாசித்துவாரத்தைக் காட்டி ஒருமுறை ஆனந்ததீர்த்தன்தான் எனக்கு, “சின்ன பறவைகள் உள்ளே போய்விட வாய்ப்பிருக்கிறது, சொல்லிவை ” – என்றான். கறுப்பு நிறமான முகத்தில் வெள்ளையான பெரிய பற்கள். அதில் ஒரு தாடி வேறு. எதிர்மறையான பிற அங்கங்களின் தன்மையை அவனது உயரம் ஓரளவு சரி செய்து நேர்மறையாக மாற்றியது எனலாம். ஒருமுறை என்மொழியில் ஒரு குறிப்பிட்ட கவிஞர் எப்படி எழுதுவார் என்று கேட்டான். நான் மொழிநிறுவனத்தில் எனக்கு வகுப்பு இருக்கிறது என்று வேகமாய்ப் போய்விட்டேன். ஒரு மணிநேரம் வரை அதே இடத்தில் நின்றபடி சிகரெட் இழுத்துக்கொண்டும் வானத்தைப் பார்த்துக்கொண்டும் நின்றிருக்கிறான். வகுப்பை முடித்துக்கொண்டு நான் அவன் கேட்ட வேள்வியை அனாயசமாய் மறந்து வந்து கொண்டிருந்தேன். “நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவில்லை” என்று என் தோளைத் தொட்டான். நான் நின்றேன்.
“ஆனந்த தீர்த்தன் ஒரு ………….. ………… …………. பாஸ்டர்ட்
அவனுடன் சேர்ந்து ஏன் கெட்டுப் போகிறாய்? நீ நான் நேசிக்கும் புராதன மொழியியலிருந்து வந்திருப்பவன் பதில் சொல்” என்றான். அவன் கை என் தோளை இறுக்கியது. அப்போதுதான் அவன் என் மொழியில் எழுதும் கவிஞன் பற்றி என்னிடம் கேட்ட கேள்வி ஞாபகம் வந்தது.
“வா, கே. என் அறையில் அமர்ந்து பேசுவோம்” என்றேன்.
“இல்லை. உன்மீது கோபம், என் கேள்வியை உதாசீனம் செய்தாயோ என்று. எனவே என் கேள்வியை வானத்திடம் கேட்டபடி ஒரு மணிநேரம் அதே இடத்தில் நின்றிருந்தேன்”.
“அய்யய்யோ, எதற்கு உன்னையே தண்டித்தாய்?” என்று கேட்டபடி கே.யின் கையைப் பிடித்தேன்.
வருகிறேன் என்று சிகரெட் பிடித்து அப்போதைக்கு மறைந்தவன் ஓரிரு நாளில் என் மொழிக்கவிஞன் பற்றி என்னிடம் தவல்களைப் பெற்று அவனுக்கே உரிய முறையில் அவற்றை வெட்டி ஒட்டி கட்டுரையை டெல்லியில் சிலருடைய தொடர்பின் மூலம் மதிப்புக்குரிய ஒரு கருத்தரங்கில் வாசித்துவிட்டு மகிழ்ச்சியோடு திரும்பிவந்தான். ஆனந்ததீர்த்தன் “உன் கருத்துக்களைத் திருடி வாசித்துவிட்டு வந்திருக்கிறான்” என்றான். ஒரு மாதம் கழித்து நான் அவசரமாக எங்கோ போய்க்கொண்டிருந்தபோது கே. தோன்றி அந்த என்மொழிக் கவிஞன் பெயரைச் சொல்லி அந்தக் கவிஞனைப் பற்றி உனக்கு ஏதேனும் தெரியுமா என்று கேட்டான். எனக்கு எரிச்சல் வந்தது. அது யார் என்று வேண்டுமென்றே கேட்டேன்.
“அப்புறம் விளக்குகிறேன். ஏ, ஃபைன் பொய்ட் என்றான்”.
உண்மையிலேயே என்னிடமிருந்து அக்கவிஞனைப் பற்றி முதன்முதலாக அவன் அறிந்து கொண்டதை முழுதும் மறந்திருந்தான்.
அவன் டெல்லியில் ஆங்கிலத்தில் படித்த கட்டுரையை என்னிடம் கொடுத்துவிட்டுப் புறப்பட்டதும் நான் அக்கட்டுரையை எடுத்துப்புரட்டினேன். முதல் பக்கத்தில் கட்டுரை இப்படித் தொடங்கியது.
“இலக்கியம் உயிர் வாழ்கிறது; புழுப்பூச்சிகள் உயிர் வாழ்வது போல”.
நான் அவ்வரிகளைப் படித்துக் கொண்டிருந்தபோது அவனுடைய மாணவி ஒருத்தி ஓடி வந்தாள்.
ஸார், கே. யின் கட்டுரையை அவர் உங்களிடம் கொடுத்து ஒரு வாரம் ஆகிறதாம். உடனே வாங்கி வரும்படி சொன்னார் என்றாள்.
நான் முதல் இரண்டு வரிகளைப் படித்த கட்டுரையை அப்படியே தூக்கி அவளிடம் கொடுக்க, பேண்ட் அணிந்த உயரமான அப்பெண் வேகமாகப் பின்புறத்தைக் காட்டியபடி நடந்தாள்.
ஆனந்த தீர்த்தனிடம் சொன்னால் வேண்டுமென்றே அவன் இப்படிச் செய்கிறான், அவனை மேதை என்று நீ நினைக்க வேண்டுமென்பதற்காக என்பான்.
கே. எங்கள் மொழித்துறையில் தயாரித்து எழுதப்பட்ட அவனுடைய மொழியின் இலக்கிய வரலாற்றில் ஒரு பகுதியை எழுதினான். அதனைப் பற்றி ஆனந்த தீர்த்தன் சொன்ன செய்திகள் எனக்கு கே. பற்றிய குழப்பத்தை மேலும் அதிகரித்தன. ஆனந்ததீர்த்தன் என்னைவிட இரண்டு வயது மூத்தவன். கே. என்னைவிட ஐந்து வயது இளையவன். ஆனந்ததீர்த்தன் ஆங்கில இலக்கியம் படித்துவிட்டுச் சிலகாலம் அமெரிக்காவில் வசித்து விட்டு வந்தவன். கே. எப்படியாவது அமெரிக்காவிற்குப் போய் அவனுடைய தாய்மொழியைக் கற்பிக்க வேண்டுமென்று விரும்பினான். ஆங்கிலத்தாலும், அறிவாலும் வித்தியாசமான இலக்கியச் சர்ச்சைகளாலும் அந்தந்த இடங்களில் காணப்படும் உயர் சமூகத்துப் பெண்களாலும் கவரப்பட்டு வாழ்வின் கவர்ச்சியை அடையும் வழியாக இலக்கியக் கோட்பாடுகளும் விமரிசனங்களும் எழுதத் தொடங்கியவன். அவனது அறையைப் பற்றி இங்குச் சொல்ல வேண்டும். எங்கள் மொழித் துறையில் எல்லோருக்கும் காற்றோட்டமான அறைகளும் தலைக்கு மேலே ஒட்டறை அடிக்கப்படாத மின்சார விசிறிகளும் உண்டு. ஆனால் கே. தேர்ந்து கொண்ட அறை ஒரு பழைய ஏடுகளை அடுக்கி வைக்கும் அறையினுள் நான்கடிக்கு நான்கடி பரப்பளவுள்ள ஒரு உள்அறை. ஒரு சிறு மேசையும் இரண்டு இரும்பு நாற்காலிகளும் மட்டும் வைக்கமுடிந்த அறை. ஒருமுறை கே.யின் அறைக்கு வந்த அவனுடைய இப்போதைய மனைவியும் எங்கள் மொழித்துறையின் முன்னாள் மாணவியுமான சரஸ்வதி கே.யிடம் கத்திவிட்டுப் போனாள் என்று மாணவர்கள் சொன்னார்கள்.
“ஏன்யா உன் புத்தி இப்பிடி, நீ ஏன் இந்த மாதிரி அறையில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியாதா?” என்று கத்தினாள் என்று கேள்வி. அவள் கத்தும்போது வாழ்க்கையில் ஏதும் பிடிப்பில்லாதவன்போல் சிகரெட் பிடித்தவாறு கே. சுவரைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தானாம்.
ஆனந்ததீர்த்தனிடம் ஏன் இருட்டறையில் வசதியில்லாமல் கே. அமர்ந்திருக்கிறான் என்று கேட்க நினைத்த எனக்கு ஆனந்ததீர்த்தன் கிடைக்கவில்லை. ஆனந்ததீர்த்தன் ஏற்கனவே எனக்குப் பழக்கப்படுத்திய கேயின் ஆய்வு ஆஸோசியேட் ஒருவன் ஒரு நாள் என்னுடன் பேசிக்கொண்டு வந்தான். கே. அந்த இளைஞன் முதுகலை படித்தபின்பு மிகவும் கஷ்டபட்டதை அறிந்து தன்னிடம் துணை ஆய்வாளனாகச் சேர்ந்துகொள்ளும்படி கூறியதைச் சொன்னான். கே.யின் வீட்டில்தான் அந்த இளைஞன் கொஞ்சநாள் தங்கியிருந்தான். கே.யைப் பற்றி ஒரு நாள் பேச்சு எடுத்தேன். கே. எப்போது அமெரிக்கா போகிறான் என்று. உடன் அந்த துணை ஆய்வாளன் தன் மனதில் இருந்ததைக் கொட்டினான்.
“ஸார், கே. போனவாரம் வீட்டுக்குப் பக்கத்து நிலத்தில் நின்றிருந்த பலாமரத்திலிருந்து இரண்டு பலாப்பழங்களை இரவில் பறித்ததற்காக அந்த நிலத்தின் சொந்தக்காரன் வந்து கே.யிடம் முன்பு தேங்காய் திருடினாய், இப்போது பலாப்பழம் திருடினாய் என்று சட்டையைப் பிடித்து இழுத்ததும் கே. தரையில் த்டால் என்று விழுந்தான் ஸார். நான் இடையில் புகுந்து கே.யைக் காப்பாற்றினேன். திடீரென்று கே. என்ன செய்தான் தெரியுமா? அயோக்கினை என் ஆசிரியன் என்று கூட இனி பார்க்கமாட்டேன். மரியாதையில்லாமல் தான் பேசுவேன். தேங்காயும் பலாப்பழமும் திருடியவன் இதோ நிற்கிறான் என்று என்னைப் பிடித்துக் கொடுத்தான், ஸார். அன்று கே.யின் வீட்டிலிருந்து வந்துவிட்டேன்” என்றான்.
ஆனந்ததீர்த்தனிடம் இதைச் சொன்னால் அவன் என்ன சொல்வானோ என்று எண்ணிக்கொண்டேன். இன்னொரு நாள் மொழித்துறையில் மாணவ மாணவியர்களுக்குத் தேர்வு நடந்து கொண்டிருந்தபோது விரைவாய், கண்ணாடியைக் கையில் சுழற்றியபடி என் அறைக்கு வந்த கே. ஒரு டைப் செய்யப்பட்ட வெள்ளைத்தாள் கத்தையைப் படி என்று கொடுத்தான். இந்திய இலக்கியத்தின் பொதுவான போக்குகள் என்பது கட்டுரையின் தலைப்பு. நானும் அவனும் முன்பு எனது மொழிக் கவிஞர்களின் கவிதைப்போக்கு என்று விவாதித்த கருத்துக்கள் பலமொழிக் கவிஞர்களின் கருத்துக்களாய் அவர்களின் பெயரின்றி டைப் செய்யப்பட்டிருந்தன. அக்காலத்தில் டைப் செய்வதுதான் வழக்கம். எனவே கரிகரியாய் ஓரளவு நிறம் மங்கிய ரிப்பனில் அடிக்கப்பட்டிருந்தது அந்தக் கட்டுரை. அடுத்த நாள் வந்து உன் கருத்துக்கள்தான் என்று கூறி சிகரெட்டை ஊதியபடி மோட்டு வளையைப் பார்த்து என்ன புழுக்கம் என்று சட்டைக் காலரைத் தூக்கிவிட்டான். அக்கட்டுரையில் இந்த மேற்கோள் என் மனதைக் கவர்ந்தது.
“நான் தேடக்கூடாது. கண்டுபிடிக்கவேண்டும்”.
எனக்குத் தெரியும். அந்த மொழியில் அந்த ஆண்டு முழுதும் பலர் அவனுடைய இந்த மேற்கோளை விவஸ்தை இல்லாமல் எடுத்தாளப் போகிறார்கள் என்று.
மொழித்துறை தொகுத்துப் பிரசுரித்த அவர்களின் இலக்கிய வரலாற்றைப் பலர் பகுதி பகுதியாகப் பிரித்து எழுதினார்கள். ஒருவர் இலக்கணம் பற்றியும் இன்னொருவர் 1100 ஆம் ஆண்டில் அவர்கள் மொழியில் இருந்த சமண இலக்கியத்தில் செடிகொடிகளின் ஆன்மா மேற்கொள்ளும் வாழ்க்கை பற்றியும் எழுதினார்கள்(ஒரு முள் செடி முந்திய பிறப்பில் இறந்துபோன தன் தந்தைக்காக இரண்டுநாள் அழுது அரற்றிய மூன்றடி பாடலான முள்செடியின் அழுகை அவர்கள் மொழியில் பிரசித்தம்.)இப்படி இப்படிப் பலர் எழுதினார்கள். கே. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர்களின் இலக்கிய வடிவங்கள் என்று கட்டுரை எழுதியிருந்தான். அக்கட்டுரையை வேறு யார் படித்தார்களோ இல்லையோ ஆனந்ததீர்த்தன் மட்டும் குறிப்பெடுத்துப் படித்தான். தேர்வுக்குப் போகிற மாணவனைப் போல் மிகச் சிரத்தையாகப் படித்தான். எனக்குத் தெரியும் விரைவில் சுவாரஸ்யமான செய்தி ஒன்றுடன் வருவான் என்று. ஆங்கில இலக்கியம் பல ஆண்டுகள் படித்து அமெரிக்காவில் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு ஒரு வெள்ளைக்காரியுடன் குடும்பம் நடத்துகிறான் என்ற சந்தேகம் வந்தவுடன் ஆனந்த தீர்த்தனுடைய மனைவி நாட்டுக்கு அழைத்தாள். அவனே இவற்றை எல்லாம் நகைச்சுவையுடன் என்னிடம் சொல்லியிருக்கிறான். ஆனால் கே. ஆங்கிலமும் படிக்கவில்லை; ஆங்கில இலக்கியத்தைப் படித்து அப்பாடத்தில் பட்டமும் பெற்றதில்லை. இளம் வயதில் கான்வெண்டில் படித்துவிட்டுப் பல்கலைக் கழகத்துக்கு வரும் பெண்களில் ஒருத்தியைக் காதலித்துத் திருமணம் செய்து வாழ்க்கையில் முன்னேறுவதுதான் ஏழைக் கிராமக் குடும்பம் ஒன்றில் படித்து வந்த அந்தக்கால இளைஞன் கே. யின் இறுதி இலட்சியம். அதனால் அப்பெண்களிடம் பழகுவதற்காக ஆங்கில சினிமாக்களைப் பார்த்தும் பத்திரிகைகளைப் படித்தும் ஆங்கிலம் கற்றவன் கே. இருபதாம் நூற்றாண்டில் எந்தெந்த ஆங்கிலக் கவிஞரிடமிருந்து உத்வேகம் பெற்று கே.யின் மொழி இலக்கியம் 20-ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் உருவானது என்று கே. அந்த இலக்கிய வரலாற்றுத் தொகுப்புக்குக் கட்டுரை அளித்திருந்தான். இங்கிலாந்தில் யாருக்கும் தெரியாத நபர்களின் பெயர்களை எல்லாம் இங்கிலாந்து கவிஞர்கள் என்று கே. எழுதியிருக்கிறான் என்று ஆனந்த தீர்த்தன் பொருமினான். பின்பு நகரத்திலிருந்து பாக்கு வியாபாரம் செய்யும் ஊர் இலக்கியச் சங்கத் தலைவரால் நடத்தப்படும் பத்திரிகையில் பல்கலைக்கழகம் வெளியிடும் இலக்கிய வரலாறு பற்றி “பாரெல்லாம் புகழும் நம் மொழியில் இறக்கப்பட்ட புளுகுமூட்டைகள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி ஆனந்த தீர்த்தன் தனது ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டான். ஆனந்ததீர்த்தன், டென்னிசனையும் வர்ட்ஸ்வர்த்தையும் கே. தனித்தனிக் கவிஞர்கள் என்ற அறிவில்லாமல் “டென்வர்த்” என்று ஒரு புதுப்பெயரை அறிமுகப்படுத்தியுள்ளான் என்று குற்றம் சாட்டினான். ஆங்கிலேயர்கள் தங்கள் மொழியில் ஒரு புதுக்கவிஞனை கே. அறிமுகப்படுத்தியதற்கு கே.யை இங்கிலாந்துக்கு அழைத்து கௌரவப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கட்டுரையை முடித்திருந்தான்.
இவ்விஷயம் பல்கலைக்கழகத்தில் உடனே பரவியதால் கே. ஒருவாரம் தலைமறைவானான். நெஞ்சை நிமர்த்தியபடி அந்த ஒரு வாரம் நடமாடிக் கொண்டிருந்த ஆனந்ததீர்த்தன் அடுத்த வாரம் பத்திரிகையில் வந்த சிறு விளக்கத்தைப் படித்துப் பல்லை நறநறவென்று கடித்தான். அந்த விளக்கத்தில் டென்னிசன் மற்றும் வர்ட்ஸ்வர்த் என்று கே. எழுதிக் கொடுத்ததைப் பத்திரிகையில் அச்சுக் கோர்ப்பவர்கள் தவறுதலாக “டென்வர்த்” என்று அச்சுக் கோர்த்துப் பிழை செய்துள்ளார்கள். அதற்காகப் பத்திராதிபர் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறார் என்றிருந்தது. ஒருவாரம் காணாமல் போன கே. உடல் நலமில்லாமல் இருந்ததாய் கூறியபடி நானும் ஆனந்ததீர்த்தனும் கான்டீனுக்குப் போகும்போது எதிர்பட்டு “எப்படி இருக்கிறீர் ஆனந்த தீர்த்தன்” என்று எதையும் அறியாதவன் போல் பேசிவிட்டுப் போனான். கொஞ்சம் மரியாதை கூடியிருந்ததைக் கவனித்தாயா என்று வினவினான் ஆனந்ததீர்த்தன்.
ஆனந்ததீர்த்தன் அன்று மாலையிலிருந்து இலக்கிய வரலாற்று தொகுப்புக்குக் கே. கொடுத்த கே. யின் கையெழுத்திலிருக்கும் மூல கையெழுத்துப் படியைத் தேடிக் கண்டுபிடிப்பதில் மும்முரமாய் ஈடுபட்டான்.
கே. மறைந்த மறுவருடம் பல்கலைக்கழகக் குவர்டர்ஸின் அவனுடைய வீட்டை அவன் குழந்தைகள் படித்து முடிப்பது வரை காலி செய்ய வேண்டாம் என்று முதலமைச்சர் ஆணை பிறப்பித்திருந்தார். (அவர்கள் மொழியில் சிறுசிறு இலக்கிய சண்டைகளில் எல்லாம் முதலமைச்சர் ஈடுபடுவார்.)அதற்கும் அவன் வாழ்ந்த வீடு இருந்த வீதிக்கு அவனுடைய புகழ்பெற்ற ஒரு நூலின் பெயரை வைக்கவும் ஒரு விழா நடந்தது. அந்த நூலின் பெயர், சமஸ்கிருதச் சொல்லால் ஆன பெயர். “விஸ்மிருதி”. அதற்கு அர்த்தம் ‘மறதி’ என்பதாகும். அந்தப் புத்தகத்தை ஆனந்ததீர்த்தன் ஆங்கிலத்தில் எனக்கு மொழிபெயர்த்து விளக்கினான். எல்லோரும் ‘நினைவால்’ கவிஞர்களும் நாவலாசிரியர்களும் எழுதுகிறார்கள் என்று விளக்குவார்கள். கே. என்ன செய்தானென்றால் கவிஞர்கள் மறதியிலிருந்து எழுதுகிறார்கள் என்று விவாதித்ததான். அதனால் அவனுடைய நூல் மிகவும் புகழ்பெற்றது. இதை வழக்கம்போல் ஆனந்ததீர்த்தன், வேறு ஒரு மொழியிலிருந்து அடித்த காப்பி என்றான். கே. அந்தச் சொல்லை இன்னொரு மொழியிலிருந்து எடுத்திருக்கலாம். அவனுடைய மொழியின் முக்கியமான கவிஞரின் கவிதைகளை அவர் குடிபோதையில் எழுதியதை – எல்லாவற்றையும் அவர் மறந்தபோது – எழுதியதை அவர் இறந்த பிறகு அவர் எழுதிய டைரியைத் தேடி எடுத்து எந்தெந்த தேதியில் குடித்தார் எந்தெந்த தேதியில் குடித்துவிட்டுக் கவிதை எழுதினார் என்ற தகவலைத் திறமையாய் 10 பக்க அளவு தொகுத்து முக்கியமான கவிதைகள் என்று அந்த மொழிப் பள்ளிப்பிள்ளைகளுக்கு வைக்கப்பட்ட கவிதைகளை ஆதாரத்துடன் ‘குடிபோதைக் கவிதைகள்’ என்று எழுதி இறுதியில் “நாம் எல்லோரும் நினைவுடன் கவிதை எழுதுவதாய் நினைக்கிறோம், நம் மொழியின் தேசியக் கவிஞர் மறதியில் தான் முக்கியமான கவிதைகளை எழுதி நம்மொழிக்கு உலகப் புகழைத் தந்தார் என்று விவாதித்தான். எட்டுப் பதிப்புகள் மூன்று ஆண்டுகளில் கண்ட அந்த நூலுக்கு சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்தபோது குடிபோதைக் கவிதைகள் என்பதை “விஸ்மிருதிக் கவிதைகள்” என்று தலைப்பைத் திறமையாக மாற்றியிருந்தான். இப்படி இலக்கிய வரலாற்றையே மாற்றினான்.கடந்த 20, 25 ஆண்டுகளாய் விஸ்மிருந்தி பற்றியும் கே.யின் பெயரையும் குறிப்பிடாமல் இலக்கியக் கூட்டங்களும் டி.வி. விவாதங்களும் நடைபெறாது என்ற அளவு விஸ்மிருதி என்ற சொல் புகழ்பெற்றுவிட்டது.
பல வருடங்களாய் அவன் பெயர் அந்த மொழியில் ஒரு முக்கிய முத்திரைபோல் ஆகியிருந்தது. அவனை விமரிசிப்பவர்கள் இருந்தார்கள். அவர்களின் பேச்சு எடுபடவில்லை. அவனுடைய மாணவர்களும் மாணவிகளும் நாங்கள் கே.யின் மாணவர்கள் என்று சொல்வதில் பெருமைப்பட்டார்கள். தலைநகரில் அவனுடைய பெயர் பரவியிருந்ததுபோலவே சிறுகிராமங்களிலும் அவனுடைய பெயர் பரவியிருந்தது. அதை நானே கண்கூடாகப் பார்த்தேன். ஏதோ வேலையாய் நான் மலைப்பக்கத்துக் கிராமத்தில் இருந்த ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது ஹோட்டலில் என் முகவரியை எழுதிய லெட்ஜரின் மூலம் தலைநகரின் மொழித்துறையில் நான் கே.யுடன் வேலைபார்த்தவன் என்பதை அறிந்த ஹோட்டல் மானேஜர் “உண்மையிலேயே நீங்கள் கே.யுடன் வேலை பார்த்தவரா” என்று கண்கள் அகலவிரிய என்னை ஒரு அதிசயப் பொருளாய் பார்த்தான். கே.யைப் பற்றி 5-ஆம் வகுப்பில் சில ஆண்டுகளாய் கே.யின் உருவப்படத்துடன் பாடம் ஒன்று இருந்தது. ஏழைக்குடும்பத்தில் அவன் பிறந்ததும் அவர்களின் 1 ½ கோடி மக்கள் – அம்மக்கள் கழுதைப்புலி வம்சராஜர்களின் வழித் தோன்றல்கள் என்பது பெருமைக்குரியது என்ற பிரஸ்தாபத்துடன் – பேசும் சிறிய மொழியை அமெரிக்காவில் கற்பித்தவன் என்பதும் முக்கியக் கருத்துக்களாக இருந்தன. அதுபோல் அம்மக்களின் மலைப்பிரதேச பாரம்பரிய கதைகளைப் பல்வேறு சிரமங்களுக்கிடையில் தொகுத்தவன் என்பதும் அதனால் அவன் பெரிய இலக்கியவாதி (ஸாகிதி) என்றும் அவனுக்குரிய புகழுக்குக் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டன. ‘ஸாகிதி’ என்பவர்கள் எப்போதும் புகழுக்குரியவர்கள் என்று அம்மக்களிடம் ஒரு கருத்து இருந்தது.
அவன் இறந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு (அவன் இறந்தபோது அவனுக்கு 46 வயது) விழாக்குழு அவனுடைய நினைவைப் போற்ற ஒரு பெரிய இலக்கிய விழாவை நடத்தியது. மேடையில் கே.மீது ஒருமுறை அவதூறு பேசிய அவனுடைய துணை ஆய்வாளன் அமர்ந்திருந்தான். 25 ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கிறேன். மூன்று நாள் விழாவில் மூன்றாம் நாள் அந்த மாநில முதலமைச்சர் கே. பெற்ற புகழும் அவனுடைய இலக்கிய விளக்கங்களும் எவ்வளவு புதுமையானவை என்று ஒரு சொற்பொழிவு செய்தார்.
மேடையில் கே.யின் மனைவி சரஸ்வதி அமர்ந்திருந்தாள். மிகப்பெரிய, குருவிக் கால்கள் போன்று தோற்றம் தரும் அவர்களின் மொழியில் நான் இதுவரை கேள்விப்படாத கே.யின் பொன்மொழி எழுதப்பட்டிருந்தது.
“வெற்றி என்பது ஒழுங்கு; ஒழுங்கில்லாதது Evil” என்று கடைசி சொல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
இந்தமாதிரி ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவதை ஒரு மரபுபோல அவர்கள் மொழியில் செய்தவன் கே. என்று ஒரு கருத்தைச் சிலர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அது உண்மையோ பொய்யோ கே.யின் பெயரைச் சொன்னால் எல்லோரும் தங்களுக்கும் தாங்கள் சொல்வதற்கும் அங்கீகாரம் அந்த மக்கள் அளிப்பார்கள் என்று எண்ணியது என்னவோ உண்மை.
வெகுநேரம் ஆடல்பாடல்கள், கவிதை வாசிப்பு என்று தொடர்ந்த விழாவில் கே. தொகுத்த மலைப்பிரதேச கதைகள் நடித்துக் காட்டப்பட்டன. எல்லா கதைகளையும் கே.யின் ஆவி சொல்வதுபோல் கற்பனை செய்து நடித்துக் காட்டினார்கள். எனக்கு எப்போதோ இறந்துபோன ஆனந்ததீர்த்தனும் ஞாபகத்துக்கு வந்தான். யாருக்கும் தெரியாதவனாய் ஆனந்ததீர்த்தன் மாறிப்போனதை நினைத்த எனக்கு ஆனந்ததீர்த்தனின் ஆவி இப்போது இந்த விழாவைப் பார்த்தால் எத்தகைய விமரிசனத்தை முன்வைக்குமென்று விநோதமாய் ஒரு கேள்வி தோன்றியது. அத்துடன் அந்த ஆவி மேடையில் அமர்ந்து அன்றைய துணை ஆய்வளான் கே.யைப் பற்றி இன்று “தன்னை ஆளாக்கியவன் கே.” என்று கண்ணீர் விட்டதைப் பற்றி என்ன நினைக்கும் என்றும் கேட்கத் தோன்றியது. அந்த கே.யின் துணைவனாக அந்தக் காலத்தில் இருந்த ஆய்வாளன் கே. தன் விரோதிகளும் அவனைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கும்படி கருத்துக்களைத் தன் நூல்களில் வைத்துள்ளதால் இன்னும் ஒரு நூறு ஆண்டுகளுக்கு அவன் புகழ் மறையாது என்றான். “சரித்திரத்தில் பல விஷயங்கள் புரியாதவை” என்ற கே.யின் மேற்கோள் இப்போது எனக்கு ஞாபகம் வந்தது.
(உயிரெழுத்து இதழில் வந்தது.)