1 அல்பெர் கமுய் கூற்றை பொய்யாக்கிய பாரீஸ் மெட்ரோ பயணிகள்
1893 ஆம் ஆண்டு அப்துல்லா சேத், காந்தியை வழக்கறிஞ்ராக பணியமர்த்திய இந்தியர். தனது வழக்கறிஞரின் தகுதி மற்றும் பணி நிமித்தம் கருதி இரயிலில் பயணம் செய்ய முதல் வகுப்பு பயணச்சீட்டொன்றை அவருக்கு கொடுத்தார். டர்பன்னிலிருந்து பிரிட்டோரியா பயணம் செய்வதற்கான பயணச்சீட்டு அது. இருந்தும் இடையில் ஏறிய ஓர் ஐரோப்பியர், ஓர் இந்தியருக்கு முதல் வகுப்பில் பயணம் செய்யம் உரிமை இல்லை என்பதைச் சுட்டிக்காடி வலுக்கடாயமாக முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து காந்தியை வெளியேற்றுகிறார். காந்தியின் சுயவரலாற்றில் இடம்பெறும் இச்சம்பவத்தை மறுப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்களுக்கு களமாக தென் ஆப்ரிக்கா இருந்தது என்பதை வரலாறு சொல்கிறது. அங்கு போராடிய கறுப்பின மக்கள் சொல்கிறார்கள்.
நாம் இருப்பது பத்தொன்பதாம் நூற்றாண்டு அல்ல, இருபத்தொன்றாம் நூற்றாண்டு. இனவாதத்தைக் கொள்கையாகக் கொடிண்ருந்த தென் ஆப்ரிக்காவில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவமுமல்ல., ஒரு மாதத்திற்கு முன் ‘சுத்ததிரத்திற்குப்’ பங்கம் ஏற்பட்டுவிட்டதென ஊர்கூடி தேர் இழுத்த பிரான்சு நாட்டில் நடந்திருக்கிறது. பாதிக்கப்படவர் காந்திஅல்லவென்றாலும், சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என முழங்குகிற ஒரு நாட்டின் குடிமகன், அவர் செய்த குற்றம் கறுப்பராக பிறந்தது.
‘Richelieu – Drouot’ பாரீஸிலுள்ள மெட்ரோ ரயில் நிலையம், தட எண் 9 செல்லும் இரயில் நிலையம். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 7.30 மணி அளவில் நடந்த சம்பவம். அன்றிரவு பாரீஸிலுள்ள Parc des Princes காற்பந்தாட்ட மைதானத்தில் பாரீஸ் விளையாட்டுக் குழு ஒன்றிற்கும் ( PSG) இங்கிலாந்து குழு ஒன்றிற்கும் (Chelesa) இரவு சுமார் 9 மணி அளவில் காற்பந்துபோட்டி இருந்தது. போட்டியைக்காண இங்கிலாந்திலிருந்து வந்திருந்த சம்பந்தப்பட்டக் குழு இரசிகர்களில் சிலர் மேற்கண்ட தட எண் 9 மெட்ரோவில் பயணித்திருக்கிறார்கள். ‘Richelieu-Drouot’ இரயில் நிலையத்தில் இப்பெட்டியில் ஏறப்போன ஓர் ஆப்ரிக்கரை ” நிற வெறியர்கள் நாங்கள் ” எனக் த் தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்திக்கொண்டு அவரை இந்த ரசிகர்களில் ஒரு சிலர் ஏறவிடவில்லை. இரண்டொருமுறை அவர் முயன்றும் தங்கள் பெட்டியில் அவரைத் தடியர்கள் அனுமதிக்கவில்லை. காந்திக்கு நேர்ந்ததாகச் சொல்லப்படுகிற அதே சம்பவம். இச்செயல் காலம் தாழ்ந்து, வீடியோவாக இணைய தளங்களில் வலம் வர ஆரம்பித்த பிறகு அனைவரும் கண்டிக்க ஆரம்பித்தார்கள். கண்டித்தவர்களில் இரு நாட்டுத் தலைவர்களும் அடக்கம். பிரெஞ்சு அரசாங்கம் சட்டப்படித் தண்டிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. இங்கிலாந்து காற்பந்தாட்ட அமைப்பும் குற்றவாளிகளைத் தண்டிக்க பிரெஞ்சு அரசாங்கத்தோடு ஒத்துழைப்பதாக தெரிவித்திருக்கிறது
எனினும் சில கேள்விகளுக்கு நமக்கு விடைகள் தேவைப்படுகின்றன. இங்கே காந்தியைப்போல பாதிக்கபட்டவர் தமது சுயவரலாற்றை எழுதுவாரா எனத் தெரியவில்லை. அப்படி அவர் எழுதினால், அதுபோன்றதொரு சம்பவமே நடக்க இல்லை எனக்கூற இப்போதும் ஆட்கள் இல்லாமலில்லை. ஆனால் அவர்களுக்கு சில சங்கடங்கள் உள்ளன. காந்திகாலத்தில் ஸ்மார்ட் போன்களோ ஐ பாட்களோ இல்லை. இப்போதெல்லாம் உடனுக்குடன் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பிரசுரிக்கவென தன்னார்வ பத்திரிகையாளர்கள் நம்மில இருக்கிறார்கள். எனவே இப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லையென்றெல்லாம் மறுக்க முடியாது. பிரெஞ்சு குடிமகன்களும் அந்தத் தடியர்கள் ஆங்கிலேயர்கள்! எங்களுக்கும் நிறவெறிக்கும் சம்பந்தமில்லை எனக்கூறி தப்பித்துவிடமுடியாது. குற்றத்தைச் செய்தது ஆங்கிலேயர்கள் எனில் கறுப்பர் இனத்தவரை பெட்டியில் ஏறக்குடாதென நிறவெறி மனப்பான்மையுடன் சில குண்டர்கள் தடுத்ததை (அந்த ஆப்ரிக்கரை ஏறவிடாமல் தடுத்ததோடு ‘Dirty Black man’ என்று வருணித்திருக்கிறார்கள்.) அங்கே பயணிகாளாக இருந்த பல பிரெஞ்சுக்காரர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதுமாத்திரமல்ல நடைமேடையிலும் நூற்றுகணக்கானவர் இருந்திருக்கிறார்கள். எல்லோரும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்களே தவிர ( இதில் காவல் துறையும் அடக்கம், பொதுவாக பிரச்சினைகளெனில் இரயில் நிலையங்களில் உடனுக்குடன் காவலர்கள் தலையிடுவது வழக்கம்.) ஆனால் இங்கு அதிசயம்போல பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக ஒருவரும் முன்வரவில்லை.
அல்பெர் கமுய் தன்னுடைய ‘போராளி’ நூலொன்றில் போராளி என்பவன் யார் எனக்கேட்டு விளக்கம் சொல்கிறார். முழுமையான விளக்கம் இங்கு அவசியமில்லை. அதன்படி ஒவ்வொரு சம்பவத்திலும் நேரடியாக பாதிக்கப்படுகின்றவனே கிளர்ச்சியாளனாக மாறுவான் என்பதில்லை. வேறொருவர் பாதிக்கபடுதைக் காண்கிறவனும் பாதிக்கபட்டவன் இடத்தில் தன்னைவைத்து போர்க்குரல் எழுப்ப முடியும், போராளியாக உருமாற முடியும் என்கிறார். அவரின் கூற்று இங்கே பொய்த்துவிட்டதென்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த இழிவான சம்பவத்திற்கு சாட்சிகளாக இருந்த ஐரோப்பியர்களின் அமைதிக்குள்ள அறம் நாம் அறிந்தததுதான். ஆனால் நித்தம் நித்தம் மேற்கத்திய மண்ணில் நிறவெறியால் பாதிக்கபடுகிற பலர் அக்கூட்டத்தில் இருந்திருப்பார்கள் : ஆப்ரிக்கர்கள், இந்தியர்கள், இலங்கையர்கள், சீனர்கள் அல்ஜீரியர்கள், துனீசியர்கள் இப்படி உலகத்தின் அத்தனை நாட்டவரும் ஐரோப்பியர் நீங்கலாக ஒருவகையில் கறுப்பரினம்தான். ஆனால் எல்லோருக்குமே ‘நமக்கென வந்தது” என்ற மனப்பாங்கு இருந்திருக்கிறது.
பொதுவில் போராளி என்பவன் பொது பிரச்சினையையும் தன் பிரச்சினையாக பார்ப்பவன். இன்று வேறான மனநிலையைக் நம்மிடம் காண்கிறோம். ‘என் பிரச்சினையை ஊர் பிரச்சினையையாகக் காண்பேன்’ ஆனால் ஊர்ப்பிரச்சினையெல்லாம் என் பிரச்சினையல்ல’ இது இருபத்தோராம் நூற்றா¡ண்டு மனநிலை. எனக்கு முன்னால் பத்துபேராவது ஓடவேண்டுமென நினைக்கிற மாரத்தான் கும்பல் மனநிலை. இந்த மன நிலைக்கு பதில் என்ன? நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?
பாரீஸ் சம்பவம் வீடியோவில்: