1. அண்மையில் வெளியான எனது புத்தகங்கள்
அவருக்கு உலகத்து பாஷைகளில் 32 தெரியும் என்பார்கள். அத் தமிழரின் பன்மொழிப் புலமையைப் பாராட்டுபவர் யாரென்று பார்த்தால் மற்றொரு தமிழராக இருப்பார். இவ்வளவு திறமையாக ஆங்கிலம் எழுதுகிறீர்கள் என்று ஓர் ஆங்கிலேயரோ இத்தனை திறமையாகப் பிரெஞ்சு பேசுகிறீர்கள் என்று ஒரு பிரெஞ்சுக் காரரோ பாராட்டினால்தான் அந்த மொழியைக் கற்று உபயோகிக்கிறவருக்குப் பெருமை மட்டுமல்ல அதில் நியாயமும் இருக்கிறது. இது மொழி பெயர்ப்பிற்கும் பொருந்தும். தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படும் படைப்புகள் குறித்து தமிழர்களே விமர்சித்து பாராட்டி சீராட்டி, மொழிபெயர்த்தவருக்கு கிளுகிளுப்பூட்டுகிற கட்டுரைகளையெல்லாம் வாசிக்கிறபோது மேற்கண்ட காரணத்தை முன்வைத்து சிரித்திருக்கிறேன். ஆகையால் அம்பை சிறுகதைகள் பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டதென்பதை ஒரு தகவலாகவே அளிக்கிறேன்.நண்பர்களிடம் பாராட்டுதலை எதிர்பார்ப்து நியாயமில்லை. இத்தொகுப்பை பிரெஞ்சுக் காரர்கள் பாராட்டினால்தான் மொழிபெயர்த்த எங்களுக்குப் பெருமை. இதைத் தனியாகச் செய்ய இல்லை ஒரு பிரெஞ்சு பெண்மணியோடு சேர்ந்து செய்தது. மொழி பெயர்ப்பை தாய்மொழிக்குக் கொண்டுபோகிறபோதுதான் சிறப்பாக செய்யமுடியும். தமிழ் படைப்பு ஆங்கிலத்திலோ பிரெஞ்சிலோ கொண்டுபோகவும் அதை உலகறியவும் செய்ய வேண்டுமென்றால் கட்டாயம் அதனை நேரடியாக ஓர் ஆங்கிலேயரோ அல்லது பிரெஞ்சுக்காரரோ (தாய்மொழிக்கே மொழிபெயர்ப்பைக் கொண்டு செல்லவேண்டும் என்ற விதிப்படி) மொழிபெயர்க்கவேண்டும், அல்லது தாய்மொழியாகக்கொண்டவரின் பங்களிப்பு அதில் இருக்கவேண்டும். இல்லையென்றால் “எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்” என்ற கதைதான்.
De haute lutte –Ambai – Diffusion Seuil – 18€
Nouvelles traduites du tamoul par Dominique Vitalyo et Krishna Nagarathinam
Editions ZULMA
18, rue du Dragon
Paris 6ème
ஆ. தத்துவத்தின் சித்திர வடிவம்
அல்பெர் காம்யூவையும், •பூக்கோவையும் தெரிந்துகொள்வது தேவைதான், ஆனால் அது கட்டாயமுமல்ல. இளைஞர்களைத் தயார்படுத்த இன்றைக்கு என்ன நடக்கிறது என்கிற புரிதல் முக்கியம். பிற துறைகளைப்போலவே சமகாலப் பார்வை இலக்கியத்திற்கும் அவசியமென நினைக்கிறேன். “அண்டைவீட்டுக்காரனின் தகப்பன், பாட்டன் பெருமைகளை காட்டிலும், அவனுடையசொந்த சாதனையை, இன்றையை வளர்ச்சியைப் புரிந்துகொள்வதிலேயே என்னுடைய வளர்ச்சியிருக்கிறது” என நம்பும் பலரில் நானும் ஒருவன். உலக இலக்கியங்களில் தற்போது என்ன நடக்கிறதென்ற ஒப்பீடு மட்டுமே நவீனத் தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுக்க உதவுமென்பது எனது நம்பிக்கை. அதன் அடிப்படையில் எழுதப்பட்டதே இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள்.
தத்துவத்தின் சித்திரவடிவம்
– நாகரத்தினம் கிருஷ்ணா
விலை ரூ 90
காலச்சுவடு பதிப்பகம்
669 கே.பி.சாலை
நாகர்கோவில் -629001
2. பிக்காஸோவும் எலெக்ட்ரீஷியனும் (இத்தலைப்பில் சிறுகதை ஒன்று எழுதும் எண்ணமிருக்கிறது)
இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது இந்தியாவில் இருந்தேன். திடீரென்று மழைபெய்திருந்த ஓர் இரவு, தெருக்கம்பத்திலிருந்த வீட்டிற்குக் கொடுத்திருந்த மின் இணைப்பு வயர் எரிந்துவிட்டது. புதுச்சேரி மின் துறை ஊழியர்கள் வந்திருந்தார்கள். இந்தியாவில் எதுவும் ‘அது’ கொடுக்காமல் நடக்காது என்பது விதி. (ஊழலில் தண்டிக்கப்பட்டால் கூடுதல் வாக்கு என்பது புது மொழி). புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் வந்திருந்தார்கள். ஆளுக்கு ஐந்நூறு கொடுக்கவேண்டும் என்றார்கள். எதற்கு என்று கேட்டேன்? மின்கம்பத்திலிருந்து உங்கள் வீட்டிற்கு வருகிற வயர் இணைப்பு முழுதும் உங்கள் செலவு என்றார்கள். பொதுவாக இரண்டாயிரம் ரூபாய் வாங்குவோம், நீங்கள் 1500 கொடுக்கவேண்டும் என்றார்கள். வேலை செய்யுங்கள் தருகிறேன் என்றேன். முடித்துவிட்டு பணத்திற்கு வந்தபோது பணம் ரெடியாக இருக்கிறது அதற்குப் பில் தருவீர்களா எனக்கேட்டேன். ஓர் அற்ப புழுவைப்போல பார்த்த ஊழியர்களில் ஒருவர், ” நாங்கள் இனாமா செஞ்சதா இருக்கட்டும் நீங்களே அதை வச்சுக்குங்க” எனக் கூறிவிட்டு முறுக்கிக்கொள்ள எனது அண்ணன் மகன் இந்திய அறத்திற்கேற்ப சமாதானம் செய்வித்து அவர்களை மலையேற்றினான்.
இதுவும் எலெக்ட்ரீஷியன் சம்பந்தப்பட்ட கதைதான் கொஞ்சம் வித்தியாசமான கதை. பிரபல ஓவியர் பிக்காஸோவோடு சம்பந்தபட்டது. அவர் பிரான்சு நாட்டில் தங்கி யிருந்தபோது நடந்த சம்பவம். அவர் அண்டைவீட்டுக்காரராக இருந்த பியெர் லெ கென்னெக் (Pierre Le Guennec) ஒரு எலெக்ட்ரீஷியன். மின்சாரம் சம்பந்தபட்ட பிரச்சினைகளுக்கும், சின்ன சின்ன இதர வேலைகளுக்கும் இந்தப் பியெர் லெ கென்னெக் உதவியை பிக்காஸோ நாடினாராம். அவரும் தன்னால முடிந்தபோதெல்லாம் வந்து செய்துகொடுத்திருக்கிறார். ஜாக்லீன் பிக்காஸோ அதாவது பிக்காஸோவின் துணைவி, ” ஏதோ அந்த பிள்ளை நீங்கள் கூப்பிடும்போதெல்லாம் நேரம் காலம் பார்க்காம வந்து உதவி செய்யுது வெறுங்கையோட அனுப்பினா எப்படி? ஏதாவது பதிலுக்க்கு நாம் செய்வதுதானே முறை” எனப் புலம்ப, “நம்மகிட்ட என்ன இருக்கு கொடுக்க, வேணுமான நான் கிறுக்கி வச்சிருக்கிற படங்களை அந்த புள்ளைகிட்டே கொடு” ன்னு பிக்காஸோ மறுமொழிசொல்ல அந்தம்மா சுருட்டிவைத்திருந்த கணவரின் ஓவியங்களில் சிலவற்றை கொடுத்ததாக பியெர் லெ கென்னெக் துண்டைபோட்டுத் தாண்டுகிறார். எலெக்ட்ரீஷியன் வார்த்தைப்படி, அவர் கைக்கு ஓவியங்கள் வந்த ஆண்டு 1971 அல்லது 72. ஜாக்லின் பிக்காஸோ, அவர் கனவர் சம்மதத்துடன் அப்படி கொடுத்தது ஒன்றிரண்டல்ல, பல மில்லியன் மதிப்புள்ள 271 ஓவியங்கள். அத்தனையும் 1905 -1932 வருடங்களில் தீட்டப்பட்டவை. அதற்குப்பிறகு அந்த ஓவியங்களைச் சுத்தமாக மறந்துபோனாராம். நினைத்திருந்தால் பணமாக்கியிருக்கலாம் என்கிறார். 2010ல் திடீரென்று நினைவுக்கு வர ஒவியங்களை மதிப்பிட பிக்காஸோ வாரிசுகளிடமே உதவியை நாடியிருக்கிறார். அங்குதான் பிரச்சினை வந்தது. அவர்கள் “இத்தனை ஓவியங்களை பிக்காஸோ சும்மா தூக்கிக்கொடுத்திருக்க வாய்ப்பே இல்லை. பிக்காஸோவிற்கு அப்போதெல்லாம் அவருடைய ஓவியங்களின் மதிப்பு என்னவென்று தெரியும், அவர் இப்படியெல்லாம் தானம் பண்ணுகிற ஆளல்ல” என்பது அவர்கள் வாதம். கடந்தவாரத்தில் கிராஸ் (பிரான்சு) நகர நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட அத்தனை சாட்சியங்களும் எலெக்ட் ரீஷியனுக்கு எதிராகவே இருக்கின்றன. தீர்ப்பு மார்ச் 20ல் சொல்லபட இருக்கிறது. சற்று விரிவாக தீர்ப்பிற்குப் பிறகு எழுதுகிறேன்.
—————————-