அவர்

வெளியில் இருக்கிற அழைப்புமணியை தொட்டமாத்திரத்தில் எதிர்பார்த்ததுபோலவே கதவு திறந்தது, மனைவி தனது பிரத்தியேக சிரிப்புடன் கதவைப் பிடித்தபடி கேட்கிறாள்:

“கார் சாவியா, கராஜ் சாவியா எதை மறந்தீங்க?

” இரண்டையும்” – என்பது எனது பதில்.

அவள் வழக்கம்போல தனது தலையில் கைவைத்து புன்னகைக்கிறாள், தொடர்ந்து “உங்களுக்கு இதே வழக்கமாகிவிட்டது” எனக்கூறியபடி ஒதுங்கி நிற்கிறாள். நான் அவளைத் தளிக்கொண்டு உள்ளே வேகமாக நடக்கிறேன். அடுத்த ஐந்தாவது நிமிடம் சாவிகளுடன் மீண்டும் வாயிற் கதவுக்கு வருகிறேன். இம்முறை அவள் இல்லை. “அதற்குள் எங்கே போய்விட்டாய்? கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கோ!” -நான். இரண்டொரு நிமிடங்கள் கூடுதலாகக் காத்திருக்கிறேன். “அவள் வரமாட்டாள், நீ கிளம்பு!”-என்றது குரல். வாசற் கதவை இழுத்து பூட்டிக்கொண்டு புறப்பட்டேன். கராஜிலிருந்து வாகனத்தை எடுக்க ஓர் ஐந்து நிமிடம் தேவைபபட்டது. வெளியில் வந்து முக்கிய சாலையில் வாகனம் ஓடத்தொடங்கியபோது, மனதிற் பதட்டம் கூடியிருந்தது. இன்றும் இருப்பாரா? என்ற கேள்விக்கு, ‘இருப்பார்’ என்ற மூளைக்குள் ஒலித்த பதிலில் உறுதி தொனித்தது.

கடந்த சில நாட்களாகத்தான் அவரைப் பார்க்கிறேன். இதற்கு முன்பும் அவர் அங்கே நின்றிருந்து, அதென் கவனத்திற்கு வராமற் போயிருக்கலாம். அதற்குக் காரணம் என்ன? காரணகாரிய கூறுகள் இதற்கும் பொருந்துமா? என்று எனக்கு நானே வினாக்களை எழுப்பிக்கொண்டிருக்க, “எல்லாவற்றிர்க்கும் காரணங்கள் இருக்கின்றனவென்று ‘சிரி’* முனுமுனுத்தது காதில் விழுந்தது. ‘சிரி’ எனது நண்பன், தோழி, குரு, எஜமான். ஆறுமாதத்திற்கு முன்பு எனது பிறந்த நாள் பரிசாக ஐபோன் ஒன்றை மனைவி அளித்திருந்தாள். ‘சிரி’ க்கும் எனக்கும்அறிமுகம் ஏற்பட்டதற்கான தொடக்கம் இது. பின்னர் அதுவே காதலாகி இன்று கசிந்துருகிக்கொண்டிருக்கிறோம். எந்த அளவிற்கு? அம்மி மிதித்து அருந்ததிப்பார்த்து கைப்பிடித்த மனைவி. “நீங்கள் சுயபுத்தியில் இல்லை” எனும் அளவிற்கு. “உங்களுடன் வாழ பயமாக இருக்கிறது, ஒரு நல்ல மன நல மருத்துவரைபோய்ப்பாருங்கள்” என வற்புறுத்திக் களைத்து, எனக்குப்பிடிக்காத அவள் தமக்கை வீட்டில் ஒருவருடக்குழந்தையுடன் போய்த்தங்கிகொண்டு பிடிவாதம் பிடிக்கிற அளவிற்கு.
ஒரு நாள் இரவு ‘சிரி’யிடம் கடுமையாக விவாதித்தேன்:

” எனது மனைவி சொல்வதுபோல, எனக்கு சுய புத்தி இல்லையா?” – எனக்கேட்டேன். “அவளுக்கு சுயபுத்தி இருக்கிறதா?” எனத் திருப்பிகேட்டு அது சிரிந்தது. தொடர்ந்து, “அவளை விடு, உங்களில் சுயபுத்தியுள்ள மனிதரென்று எவருமில்லை அது தெரியுமா – எனக்கேட்டு வியப்பில் ஆழ்த்தியது. எனக்கு அப்பதிலில் ஒரு நியாயம் இருப்பதுபோல தெரிந்தது. “எனது விருப்பம், எனது தேர்வு, எனது சுவை, எனது கசப்பு” என்று எனது சுயத்தில் எதுவும் நடப்பதில்லையா? எனக்கேட்டேன். “இல்லை, இல்லை! எந்த உலகத்தில் இருக்கிறாய்? வெகுசுலபமாகத் தற்போது கைகட்டி வாய்பொத்துவது எது தெரியுமா? அறிவு, அறியாமை அல்ல.” எனக்கூறி என்னை வியப்பில் ஆழ்த்தியது. பிறகு “எங்கள் சுயத்தைக் காப்பாற்ற என்னதான் வழி? – என இறைஞ்சினேன். “உணர்ச்சிக்கு இடங்கொடு, அறிவைப் பின்னுக்குத் தள்ளு! அந்த அனுபவம் எப்படி இருக்கிறதென்று பார்?” – என்பது அதனுடைய யோசனை.

கடந்த சில நாட்களாக எனது சுயம் சரியான வேளையில் காப்பாற்றப்பட்ட சந்தோஷத்தில் இருக்கிறேன். சுற்றியுள்ள மனிதர்களையும் எழுப்பி உண்மையைச் சொல்ல நினைத்தேன். அதுபோன்றதொரு சூழலில்தான் ‘அவரை’ச் சந்தித்தேன் அலுவலகத்திற்குப் போகும்போதெல்லாம் அவரைக் கண்டிருக்கிறேன். 50ம் எண் பேருந்து நிறுத்தத்தில் தனித்து ஒதுங்கி நிற்பார். பேருந்துவிற்குக் காத்திருக்கும் பிறர் எவரிடமும் தமக்கு எவ்வித பந்தமும் இல்லை என்பதை அறிவிப்பதைப்போல. அவரின் அந்த விலகல் நல்ல அறிகுறி. அவருடைய சுயத்தைக் காப்பாற்றுவது எளிதென்று தோன்றியது. அண்ணாந்து புன்னகைக்கவேண்டிய வகையில் நெடு நெடுவென்று நல்ல வளர்த்தி, பாதிமார்பும், தோளும் தலையும் கண்களும் எதையோ எட்டிப் பார்ப்பதுபோன்ற தோற்றம். திறந்த மார்புள்ள பெண்கள் அவரிடம் உரையாடத் தயங்கக்கூடும். அவ்வபோது கண்களுக்கு ஒளி ஆகாததுபோல, உள்ளங்கையைக் குவித்து புருவங்களுக்கு இணையாக நிறுத்திக் குடையும் பிடித்தார். முற்றிய வெயில் நேரத்திலும் முகத்தில் நிழல்விழுந்திருருந்ததைப்போல இருண்டிருந்தது. காதோரமும், மீசையும், மழித்திராத முகவாய் ரோமங்களும், உடலோடு பொருந்தாத வகையில் நரைத்திருந்தன. செப்பனிடப்படாத வாழ்க்கைப் பாதையில் நடந்திருந்த அலுப்பு நிறமிழந்த கண்களிலும், அணிந்திருந்த ஆடையிலும் வெளிப்படையாகத் தெரிந்தது. நான் புறநகரில் வசித்தேன். பல வருடங்களாக அவ்வழியாகத்தான் போவதும் வருவதுமாக இருந்திருக்கிறேன். எனது வாகனம் அந்த பேருந்து நிறுத்தத்தைக் கடப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் சிட்டிகைபோடும் நேரம்தான். இருந்தபோதிலும் ஒவ்வொரு நாளும் அவரைக் கடந்து செல்லும்போதெல்லாம் கண்ட காட்சிக்குறிப்புகள் அணிவகுத்து மனிதர் வடிவை ஓரளவு நிழலுருவமாக என்னுள் சமைத்திருந்தன.

பிறகொருநாள் எனது வாகனம் பழுதடைய அப்பேருந்து நிறுத்தத்திற்குச் செல்லவேண்டியிருந்தது. அவரோடு காத்திருந்த பிறருள் நானும் ஒருவனானேன். எங்கள் இரு ஜோடிகண்களும் சந்தித்திருந்த தருணங்களைவைத்து என்னை நினைவுகூர்வார் என்ற நம்பிக்கையில், பேருந்து நிறுத்தத்தை நெருங்கும்போதே அவரை எதிர்கொண்டதும் புன்னகை செய்தேன். எனது புன்னகையை அவர் கவனத்திற்கொண்டாற்போல தெரியவில்லை, நிறுத்தத்தில் 50ம் எண் பேருந்துக்கென வைத்திருந்த கால அட்டவணைகளில் அவர் கவனம் சென்றது. கால்களைப் பின்னியதுபோல நடந்து கால அட்டவணையை நெருங்கினார். மடித்த கைகளிற் தூக்கிவைத்திருந்த ஐரோப்பிய பெண்ணின் நாயொன்று இவர் வாசத்தை நுகர்ந்ததுபோல ‘உர்’ என்றது. அவள் அடக்கினாள். உருமியது நாயா, அவளா? என்ற ஐயம் அவள் கண்களைப் பார்த்தபோது எழுந்தது. இரண்டு மூன்று நிமிட அவதானிப்பிற்குப் பிறகு தன் கையில் கட்டியிருந்த வாட்சைப் பார்த்தார். மணிக்கூட்டைத் தரையில் எரிவதுபோல கையை உதறினார். முதன்முறையாக வேற்று மனிதர்களைப் பற்றிய சிந்தனை வந்ததுபோல இரண்டுபக்கமும் பார்வையைச் செலுத்தினார். அதன்பின் ஏதோ தீர்மானத்திற்கு வந்தவர்போல என்னை நோக்கி வேகமாக நடந்து வந்தார்.

” கையில் மணிக்கூடு இருக்கிறதா? நேரம் என்ன சொல்ல முடியுமா?” -அவர்

” 9.30. பேருந்து வரும் நேரம்தான்”-நான்.

” நன்றிங்கோ? இந்தியாவோ?

” ஆமாம். புதுச்சேரி. உங்களை நான் அடிக்கடி இங்கே, இதேவேளையில் பார்த்திருக்கிறேன். நீங்கள்”

” யாழ்ப்பாணம், பக்கத்தில்தான் வீடு.”

அவர் கூறிமுடிக்கவும், பேருந்து வந்து நிற்கவும் சரியாக இருந்தது. அவர் உள்ளே சென்று தம்கைவசமிருந்த பயணச்சீட்டை ஓட்டுனரிடம் காண்பித்தார். மாதாந்திர பயணச்சீட்டாக இருக்கவேண்டும். அவர் நகர்ந்ததும் ஓட்டுனரிடம் ” எனக்கொரு பயணச்சீட்டு வேண்டும்” என்றேன். கைக்கு வந்ததும் அருகிலிருந்த எந்திரத்திற்கொடுத்து உபயோகிக்கப்பட்டது என்கிற முத்திரை பதித்துக்கொண்டேன். இலங்கை நண்பர் அதற்குள் ஓர் இருக்கைப் பிடித்து அமர்ந்திருந்தார். நான் சென்று அவர் எதிரே அமர்ந்தேன். பேருந்துக்கு வெளியே அவர் கவனம் இருந்தது. எனது கண்களிரண்டும் அவர்மீது படிந்திருந்தன, குறிப்பாக அவரது முகத்தின் வலது பக்கத்தைப் பார்த்தேன். சதைபற்றில்லாத கன்னம், கருமையான தோல் பேருந்துக்குள் மேலும் கறுத்திருந்தது. அவரது பாராமுகம் என்னை மிகவும் சோதித்தது. நடுநிசியை ஒத்த அவருடைய மௌனம் கனப்படுப்பின் அருகிலிருப்பதுபோல சுட்டது. என்னைப்பொருட்படுத்தவில்லை என்ற உண்மை எரிச்சலூட்டியது. எனது தூல உடலை முற்றாக நிராகரிப்பது எதுவாக இருக்குமென்றகேள்விக்கான பதில் தேடல், அவர் மீதான கவனிப்பை கூட்டவே செய்தது. அமைதியாக உட்கார வைத்திருந்த அவரது இருப்பிற்கு சில அசௌகரியங்களை ஏற்படுத்துவதென முடிவெடுத்தேன். பிற பயணிகளைப் பற்றிய உணர்வின்றி ‘நாங்கள் இருவர் மட்டுமே’ என்பதுமாதிரியானதொரு தனிமையைக் கட்டமைத்துக்கொண்டது எனது காரியங்களுக்கு எளிதாக இருந்தன. தற்போது அவரும் நானும், குத்துச்சண்டை களத்தில் இருந்தோம். எனக்கு அல்லது அவருக்கு ஆதரவாக குரலெழுப்பக்கூடிய பார்வையாளர்கள் எவருமில்லை. எங்கள் இருவருக்கும் இடையில் தவறுகளைச் சுட்டிக்காட்ட அல்லது முறையற்றதென அறிவிக்கிற ‘நடுவர்’ என்கிற மனிதத்தை நிராகரித்திருந்ததும் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்திருந்தன. வேண்டுமென்றே எனது கால்களை எதிர் இருக்கை திசையில் நீட்டுகிறேன். அவைகளின் மூச்சு அவருடைய கால்களின் தசைகளைப் பிசைந்திருக்கவேண்டும். அவர் அணிந்திருந்த காலுறைகள் வெப்பக்காற்றைத் தடுக்கப்போதாதவை. தவிர எனது கால்களின் மூச்சில் எரிச்சலும், கோபமும் கலந்திருந்தன. பின்னியதுபோல இருக்கையின் கீழ் கிடந்த அவரது கால்கள் அசைவற்றிருந்தன. எனது ஷ¤ முனைகொண்டு அவர் ஷ¥வை உரசினேன். கால்களை மடக்கிக்கொண்டு என்னைப்பார்த்தார். அனுதாபத்துடன் என்னைப் பார்த்த அவருடைய கண்களை வெறுத்தேன். அக்கண்களிரண்டும் தொடக்கத்தில் எனது கண்களை நேரிட்டுப்பார்ப்பதுபோல இருந்தன. பின்னர் எனது உடலை வளைத்துப்பிடித்து கால்களை இடற, நான் தலைக்குப்புற விழுந்தேன். எனது புறங்கையை வளைத்து முதுகின்பின் இறுகிப்பிடித்து நான் எழுத்திருக்க முடியாமற் செய்தன. நான் தோற்றிருந்தேன். எனது சட்டை வியர்வையில் நனைந்திருந்ந்து. அவரைப் பார்க்கத் திராணியற்று இமைகளை அழுந்தமூடி இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தேன். கால்களை இருக்கையின் அடியில் சுருட்டிக்கொண்டேன். பாதிக்கண் மூடியிருக்க சில நொடிகள் அவரிடத்தில் கவனமிருந்தது. சாம்பல் பூத்திருந்த அவர் உதட்டோரத்தில் ஓருவித அலட்சியம் மின்னல் போல தோன்றி மறைந்தது. எனது பயணதூரம் ஓர் அரைமணி நேரம் நீடிக்ககூடுமென்று தோன்றியது அந்த அரைமணிநேரமும் இப்படியே இருப்பதா? என்ற கேள்வி மீண்டு அவரைப் பார்க்கவைத்தது. எழுந்து நின்றேன். என்னையே கண்ணாடியில் பார்ப்பதுபோல இருந்தது. அவர் அரைக்கண்மூடி நித்திரையில் இருந்தார் அல்லது அதுபோல பாசாங்கு செய்தார். அடுத்த நிறுத்தத்தில் எனது தோல்வியை ஒப்புக்கொள்வதுபோல அவரைத் தொட்டு “இறங்கிக்கொள்கிறேன்” – என்றேன். மறுகணம், கால்களை மடக்கி நேராக உட்கார்ந்தவர், ” சரிங்கொ”- என்றார்.

அன்றிரவு எனக்கு சரியாக உறக்கமில்லை. பெரும்பானமை கூட்டத்திலிருந்து என்னைபோல அவரையும் விலக்கி வைக்கவேண்டும் என்ற முயற்சியில் இதுவரை ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை. நாளை மறுபடியும் பேருந்துப்பிடித்தே வேலைக்குப் போவதென்றும், அவருடன் இரண்டு வார்த்தைகளாவது பேசிவிடவேண்டுமென்றும் சபதம் எடுத்துக்கொண்டவன்போல, சற்று முன்னதாகவே பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிட்டேன். மழைபெய்துகொண்டிருந்தது. அதிலிருந்து தப்பிக்கும் பொருட்டு, பயணிகள் பலரும் பேருந்துநிறுத்தக் கூரையின்கீழ் குவிந்திருந்தனர். கூட்டத்தில் அவர் இருக்கிறாரா என்று தேடினேன். அங்கு நின்றிருந்த ஐரோப்பியரிடையே ஜித்தான் என அழைக்கும் நாடோடிக்கும்பல் ஒன்றிருந்தது. வயதான அல்ஜீரியர் ஒருவர் தமது இளம்மனைவியுடனும் மூன்று பிள்ளைகளுடனும் நின்றிருந்தார். கனத்த சரீரத்துடன் ஆப்ரிக்க நடுத்தரவயது பெண்ணொருத்தி இருக்கமான ஆடைகளுடன் இருந்தாள். நாவற்பழம்போன்றிருந்த தடித்த உதடுகளில் உதட்டுசாய ஸ்டிக்கைக் அழுந்ந்தத் தேய்த்துக்கொள்வதும், அருகிலிருந்த ஐரோப்பியனை சாடையாகப் பார்ப்பதுமாக இருந்தாள். இருவருக்கும் இடையில் கைக்குழந்தை வண்டியுடனிருந்த இளம்தாய் அவர்களுக்கு இடைஞ்சலாக இருந்திருக்கக்கூடும். ஒரு பாகிஸ்தானியர் குடும்பமும் வெயிஸ்ட்கோட், ஷெர்வாணி, ஷல்வார் கமீஸ், தலையில் துப்பட்டா, ஐந்தாறு பிள்ளைகளுடன் நின்றிருந்தனர். இலங்கை நண்பர் மட்டும் அக்கூட்டத்தில் இல்லை. ஏமாற்றமாக இருந்தது. குடையை விரித்துக்கொண்டு கூட்டத்திலிருந்து விலகி நின்றேன். நேரம்கூடிக்கொண்டிருந்தது. அவர் வரமாட்டார் என்று உள்ளுணர்வு தெரிவிக்க மீண்டும் வீட்டிற்குத் திரும்பி காரை எடுத்துக்கொண்டு அலுவலகத்துக்குப் போகலாமென குடையைச் சுருக்கியபோது மழையில் நனைந்தபடி அவர் வரவும், 50ம் எண் பேருந்து வந்து நின்றது. இம்முறை அவருக்குமுன்பாக ஓட்டுனரிடம் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு ஓர் இருக்கையைத் தேடி அமர்ந்து, என்ன நடக்கிறது பார்ப்போம் என காத்திருந்தேன். என்னை ஏற்கனவே அறிந்தவர் என்றவகையில் நேராக என்ன்னிடத்தில் வரவேண்டும். இந்த நாட்டில் முன்பின் தெரியாத இருவர் தனித்து எதிர்கொள்கிறபோதேனும் முகமன் கூறுகின்ற வழக்கம் இருக்கின்றது. அதற்காகவாவது என்னிடம்வருவார், என்று நினைத்திருந்தேன். நான் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. எனது பக்கத்தில் இடமிருந்தும் அவர் வராதது சப்பென்று ஆயிற்று. அன்று நான் எங்கே இறங்கினேன் அவர் எங்கே இறங்கினார் என்று நினைவில்லை.

பத்துநாட்கள் கழிந்திருந்தன. அன்று விடுமுறைதினம். நகரத்தின் இதயப்பகுதியில் இருந்தேன். எதற்காக விடுமுறை என்று காரணத்தைக்கூறும் மனநிலையில் நானில்லை. இந்த உலகத்தைத் திரட்டி “நாளையிலிருந்து நீங்கள் சுயபுத்தியுடன் நடந்துகொள்ளவேண்டும், தவறினால் உங்கள் தலைகள் வெட்டப்படும். ” என ஆணை பிறப்பிக்கும் வெறி மனதில் இருந்தது. காலையில் மனைவிக்குப் போன் செய்திருந்தேன். “வீட்டுக்கு வரலைன்னா தற்கொலை பண்ணிக்குவேன், சுய புத்தியுடன் நடந்துகொள்! ” – எனக்கூறினேன். ” என்ன பூச்சாண்டி காட்டறீங்களா? காலையிலேயே குடியா? முதலிலே நீங்க சுயபுத்திக்கு வாங்க”- போனை வைத்துவிட்டாள். கால்போனபோக்கில் நடந்தேன் பிராஸரியில் நுழைந்து, கௌண்ட்டர் ஸ்டூலில் உட்கார்ந்து, “ரிக்கார்” கொடுக்குமாறு கேட்டுக்குடித்தேன். உப்பிட்ட ஆலிவ்கள் துணைக்கு வைத்தார் பார்-மேன். வெளியில் வரும்போது மாலை ஐந்து மணி ஆகியிருந்தது. பகல் போல வெயில் குறையாமல் இருந்தது. நகரத்தின் இதயப்பகுதியில் திடல்போன்றிருந்த வெளியைச் சுற்றி நான்கு சிறிய சாலைகள். அச்சாலைகளில் பெரிய நிறுவனங்களின் கடைகள் இருந்தன. வாகனங்களை முழுவதுமாக தடைசெய்து மனிதர் நடமாட்டத்தை மட்டும் அனுமதித்த பகுதி. வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக மக்கள் இருந்தனர். கோடை நாள் என்பதால், உடுத்தியிருந்த ஆடைகளில் சிக்கனம் தெரிந்தது. என்னைத் தவிர ஒற்றையாக நடக்கிற மனிதரென்று எவருமில்லை. தோழியர் அல்லது நண்பர்கள் சூழவோ, கணவன் மனைவியாகவோ, காதலர்களாகவோ முகத்தில் அந்தி வெயிலையும், சந்தோஷத்தையும் சுமந்தவண்ணம் நடந்தார்கள். திடலில் இரண்டாம் உலகப்போரில் நகரத்தை நாஜிகளிடமிருந்த விடுவித்த இராணுவத் தளபதியின் சிலையொன்றிருந்தது. சிலைக்கு எதிரே செவ்வகப் பரப்பில் சற்று பெரிய நீரூற்றுகளுடன் கூடிய நீர்த் தடாகம். நீருற்றைச்சுற்றி கற்பலகை பெஞ்சுகள் இருந்தன. புறாக்கள் இரண்டு நீரில் சிறகடித்து பறப்பதும், நீரூற்றின் சிறிய தடுப்புசுவரில் உலாத்துவதுமாக இருந்தன. பெரியவர் ஒருவர் கையில் வைத்திருந்த ரொட்டி ஒன்றை பிய்த்து அவற்றின் கவனத்தை தன்பக்கம் ஈர்க்க நினைத்தார்.

நீரூற்றின் அருகேயிருந்த ஒரு கற்பலகை இருக்கையில் ‘அவர்’ உட்கார்ந்திருந்தார். அவர் கையில் சிகரெட் இருந்தது. அவரை நெருங்கினேன்: “வணக்கம்” என்றேன். புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டை இடது கையில் எடுத்துக்கொண்டு “வணக்கம்” என்று தலையாட்டிவிட்டு கை குலுக்கினார். திடீரென்று ஒரு பெண்ணின் நளினத்துடன் ஒதுங்கி “இதில் அமருங்கோ!” என காலியாகவிருந்த இடத்தைக் காட்டினார். ” என்ன அல்கஹால் எடுத்தீர்களா?” என்றார். “ஆம்” என்றேன். “வழமைக்கு அதிகமோ?” என்றார். வெட்கத்துடன் தலையை ஆட்டினேன். தொடர்ந்து “ஒருவகையில் நீங்களும் அதற்குப் பொறுப்பு” என்றேன். “நானா” என வியப்புடன் கேட்டு அவர் நிமிர்ந்து உட்கார்ந்தபோது பெண்ணொருத்தி உட்கார்ந்திருப்பதுபோலவும், கொத்தாக முன்னால் விழுந்து முகத்தை மறைத்த மயிர் கற்றையைக் காதுக்குப் பின்புறம் ஒதுக்கிவிட்டு, மெலிதாகச் சிரிப்பது போலவும் இருந்தது. அச்செய்கையில் இரண்டொரு நிமிடங்கள் மெய்மறந்து ஆர்வத்துடன் இரசித்துவிட்டு உரிமையுடன் பேசினேன்:

“ஆம், நீங்கள்தான் பொறுப்பு, நான் உங்களை நெருங்கும்போதெல்ல்லாம் அதை விரும்பாததுபோல நீங்கள் நடந்துகொண்டீர்கள். என்னை அவமானப் படுத்துவதுபோல அச்செய்கைகள் இருந்தன.” – குடித்திருந்த மது கண்களைக் கசக்க சொன்னது.

” கண்களைத் தொடையுங்கோ! சனங்கள் பார்க்கினம். குடும்பம், பிள்ளைகள்?

” இருக்கிறார்கள். ஆனால் மனைவியும் பிள்ளையும் என்னுடன் இல்லை. பிள்ளையை அழைத்துக்கொண்டு அவள் தனியே இருக்கிறாள். எனது நடவடிக்கைகள் பிடிக்கவில்லையாம்.”?

” ஏன், என்ன பிரச்சினை?”

” இரவில் நான் விழித்திருப்பதும், விளக்கை எரியவிட்டு இரவு முழுக்க நடப்பதும் அவளுக்குச் சங்கடமாக இருக்கிறதாம். கோபித்துக்கொண்டு அவள் தமக்கை வீட்டிற்குப் போய்விட்டாள். நீங்கள்?”

” இந்த நாட்டிற்கு வந்ததிலிருந்து தனியாளாகத்தான் சீவனம். என்ரை மனுசியும் பிள்ளைகளுங்கூட ஆளுக்கொரு திசையில்தான் இருக்கினம். திருச்சியில் மகளும் மனுஷியும். பிள்ளைகள் இலண்டனிலும் கனடாவிலுமென்டு இருக்கினம். எதெண்டாலும் வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளத்தான் வேணும். ” கூறிமுடித்தபோது அவர் வாக்கியங்களுக்கிடையே எனது கதைகளும் பசியாறிய விலங்கைப்போல கண்மூடி படுத்திருந்தன. இனி உன்னிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதுபோல, சிகரெட் ஒன்றைப் பற்றவைத்து பற்களுக்கிடையிற் கடித்திருப்பதுபோல பிடித்திருந்தார். பில்ட்டர் ரக மால்புரோ. வெகுநாளாயிற்று அதுபோன்றதொரு சிகரெட்டைப் பிடித்து. “எனக்கொரு சிகரெட் கொடுங்களேன்” – எனக்கேட்டேன். அவர் தனது பாக்கெட்டிலிருந்து சிகரெட் ஒன்றை வெளியில் எடுத்தார், தீப்பெட்டியையும் கொடுத்தார். சிகரெட்டைப் பற்றவைத்து ஒரு மிடறு புகையை உள்ளுக்கிழுத்ததும். அவரிடத்தில் தீப்பெட்டியைத் திருப்பிக்கொடுத்தேன். அவர் பிம்பம் மெல்ல சிதைவதுபோல இருந்தது சிகை இருபுறமும் விழுதுகள் போல இறங்கி நெளிய ஆரம்பித்தன. முகத்திலிருந்த கருமை குறைந்து கவர்ச்சியான ஐரோப்பிய நிறம். மேலுதட்டில் கம்பளிப்புழுபோல நெளிந்துகொண்டிருந்த மீசை இருந்த இடத்தில், பூசணம் பிடித்ததுபோல ரோமங்கள், கன்னங்களிரண்டும் எதையோ வாயில் அடக்கியதுபோல உப்பிக்கொண்டு.. அந்திவெயிலில் தலைமயிரும், நெற்றியின் மேற்பரப்பும், கன்னக்கதுப்புகளும், முகவாயும் மஞ்சள் நிறத்திற்கு வந்திருந்தன. சிகரெட் பாக்கெட்டை அவர் திரும்பவும் பாக்கெட்டில் வைக்கப்போனபோது சட்டையின் காலர் இறங்கிக்கொள்ள கண்ணிற்பட்ட அந்த மார்பு, உடலை நடுங்கச்செய்தது. தொடவேண்டுமென நினைத்த என்கையை மெல்ல தட்டிவிட்டார். அவர்கையைத் தொட்டு அழைத்தேன்.

” என்னோடு நீங்கள் வரவேண்டும்” ”

” எங்கே?”

” என்னுடைய அப்பார்ட்மெண்ட்டிற்கு”

” வருகிறேன், உங்கள் முகவரியைக்கொடுங்கள்”

‘ இல்லை இப்ப்போதே. ஒரு விஸ்கிப் பாட்டில் திறக்கபடாமல் இருக்கிறது. அறிவை ஒதுக்கிவிட்டு உணர்சிகளுக்கு ஏன் இடம்கொடுக்கவேண்டும் என்பது பற்றி விவாதிக்கலாம். உணர்ச்சிதான் சுயபுத்தியுடனிருக்க வழிகாட்டுமாம். ”

” நல்ல கதை, நான் நம்பத் தயாரில்லை.”

” நீங்கள் அப்படிசொல்லகூடாது, என்னைபோல நீங்களும் வித்தியாசமானவர், உங்களுக்கு என்னால் விளக்கிச் சொல்லி புரியவைக்கமுடியும். விடிய விடிய பேசலாம்”

” இல்லை விடுங்க! எனக்கு நேரமில்லை” – அவர் மறுத்தார். நான் விடுவதாக இல்லை, கையைபிடித்து இழுத்தேன். கூட்டம் கூடிவிட்டது.

கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆணும் பெண்ணுமாக காவலர் இருவர் எங்களை நெருங்கினார்கள். அவரை பெண் காவலர் தனியாக அழைத்துப்போனார். வாகனத்தில் உட்காரவைத்துவிசாரித்தார், பின்னர் திரும்பவந்தார். ஆண்காவலர் காதில் எதையோ மெல்ல கூறினார். இருவரும் அவர்கள் வாகனம் நிறுத்தியிருந்த இடத்தில் தற்போது என்னை அழைத்துபோனார்கள். எனது அடையாள அட்டயைக் கேட்டார்கள். கணினியில் தட்டினார்கள். ஆண் காவலர் பேசினார்:

“நீங்கள் என்ன குற்றம் செய்திருக்கிறீர்கள் தெரியுமா?”

” …’

” ஓர் இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டிருக்கிறீர்கள். அவள் மார்பைத் தொட முயன்றீர்களாம். நல்லவேளை அப்பெண் உங்கள் மீது புகார் அளிக்கவிரும்பவில்லை. இதற்கு முன்பு இது போன்ற குற்றச்சாட்டு எதுவுமில்லை என்ற காரணத்தால் இத்துடன் விட்டோம். ”
” எந்தப் பெண்? ”

அவர்கள் காட்டியதிசையில் ‘அவர்’தான் உட்கார்ந்திருந்தார். எனக்குக் குழப்பமாக இருந்தது.

அன்று மாலை எனது அப்பார்ட்மெண்ட்டிற்குத் திரும்பியிருந்தேன். கதவடைத்திருந்தது. சன்னல்களும் மூடியிருந்தன. வெகு நேரம் திறக்குமென்று காத்திருந்தேன். அண்டைவீட்டுக்காரர் வெளியிலிருந்து வந்தார்.

“வீட்டில் ஒருவருமில்லையா? – எனக்கேட்டேன்.

” கணவனும் மனைவியும் நன்றாகத்தான் இருந்தார்கள். பிறகென்ன நடந்ததென்று தெரியவில்லை. ஒரு நாள் அப்பெண் குழந்தையுடன் டாக்ஸிபிடித்துப்போனதை என் மனைவி பார்த்தாளாம். அவர் என்ன ஆனார் என்று தெரியாது.. நீங்கள் அவருக்கென்னவேண்டும்.? -எனக் கேட்டார்.

“என்னைத் தெரியவில்லையா?” எனக்கேட்டேன். இல்லை என்பதுபோல தலையாட்டினார். நல்லதெனக் கூறிவிட்டு இறங்கி நடந்தேன்.

—————————————————————————————————————–
* சிரி (Siri) ஆப்பிள் நிறுவனம் தமது ஐபோன் 4ல் அறிமுகப்படுத்தியுள்ள மென்பொருள். ஒரு புத்திசாலியான ஆலோசகர். நமது கேள்விகளுக்கு அதனிடம் உரிய பதிலைத் தருவதோடு வழிநடத்தவும் செய்கிறதாம்.

ஆகஸ்டு 14ந்தேதி பிரெஞ்சு தினசரி l’express நாளிதழில் ஒரு செய்தி. அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த கேன்ஸ்வீல் நகரில் ஒரே அறையில் தங்கியிருந்த இரு நண்பர்களில், ஒருவரின் கொலை செய்யப்பட்ட உடலைக் கண்டெடுத்த போலீஸார் மற்றொரு நண்பன்மீது குற்றம் சுமத்தி வழக்குப் போட்டிருக்கிறார்கள். குற்றத்திற்கு சொல்லப்பட்டக் காரணம் ஒரு நண்பனின் பெண்தோழியை மற்றொரு நண்பன் அபகரித்தது. வழக்கின் போது குற்றத்தை புலன்விசாரணை செய்தவர்கள், குற்றவாளியின் ஐபோனில் ஒரு ஆதாரத்தைக் கண்டிருக்கிறார்கள். குற்றல் சாட்டப்படுள்ள நண்பர் தமது ஐபோன் 4எஸ் ஸிடம் கேட்டிருந்த கேள்வி, “எனது ரூம்மேட்டை எங்கே புதைப்பது? சிரியும்(Siri) உள்ள வாய்ப்புகளை எடுத்துக்கூறி ஆலோசன வழங்கியிருக்கிறது.
—————————————————————————

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s