1, சியாட்டல் and வான்க்கூவர்
மூன்று வாரங்கள் சியாட்டலில் கழிந்தன. நான்கு வயது பேரன் பிறந்த நாளும் இடையில் குறுக்கிட்டது. ஐரோப்பாவின் அழகு வேறு. மேற்கு நாடுகள் மிடுக்கான வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள். அவர்கள் அரசியலில் மட்டுமல்ல கலை, இலக்கியம். பண்பாடு, அறிவியல் அனைத்திலும் இந்த மிடுக்கு எதிரொலிப்பதுண்டு, சில நேரங்களில் ஆணவ நெடி நமக்கு எரிச்சலைத் தரக்கூடியதாக இருப்பினும் புரிந்துகொள்ளகூடியதாக இருக்கிறது, மேற்கத்தியர்களின் மரபு பெருமைகள் எதுவும் அமெரிக்காவிற்குக் கிடையாது அவர்கள் வாழ்க்கையும் தேடலும் நேற்றை குறித்ததல்ல, நாளை பற்றியது. கவனத்துடன் காலெடுத்து வைக்கிறார்கள். அமெரிக்கர்களின் எதிரிகள் தங்கள் பலத்தை மட்டுமே அறிந்திருக்க அமெரிக்கர்களுக்கு தங்கள் பலம் பலவீனம் இரண்டைப்பற்றிய தெளிவு இருக்கிறது அதனாலேயே அவர்கள் வீழ்ச்சி என்பது பலரும் கனவு காண்பதுபோல கிட்டத்தில் இல்லை. சியாட்டல் வானுயர்ந்த கட்டிடங்கள் நிறைந்த அமெரிக்காவின் பிற நகரங்களைப் போலவே இருந்தது. எனினும் குட்டிக்குடித் தீவுகள் போல நீர் சூந்ந்த புற நகர்கள், மலைப்பிரதேசங்கள் நிறைய, குளிர் காலத்தில் நாங்கள் சென்றிருந்த போதிலும் ஐரோப்பிய குளிர் சியாட்டலில் இல்லை, இதமான தட்பவெப்ப நிலை. இலண்டன்போல குடையுடன் வெளியிற்கிளம்பவேண்டும், சியாட்டல் வாஷிங்டன் மாவட்டத்தில் இருக்கிறது, இம்மாவட்டத்தின் இதரப் பகுதிகளும் அப்படியா எனத்தெரியவில்லை. இரண்டரை மணிநேர காரோட்டத்தின் முடிவில் கனடாவின் வான்க்கூவர் நகரம் இருக்கிறது. வார்த்தைகளால் சொல்ல முடியாது அப்படியொரு அழகான நகரம். ஒரு வீக் எண்டிற்கு வான்கூவர் சென்றிருந்தோம்.
2. காப்காவின் நாய்க்குட்டி
பிராஹாவிற்குச் சென்ற பயண அனுபவத்தினைக்கொண்டு நான் எழுதிய புதிய நாவல். பிற பதிப்பகங்கள் போலல்லாமல் காலச்சுவடு கூடுதலாக நாட்களை எடுத்துக்கொள்கிறார்கள். கடந்த நவம்பர் மாதத்தில்தான் அவர்களுக்கு அனுப்பினேன். கண்ணன் அவசரப்படவேண்டாம் என்றார். வேறு பதிப்பகங்களாக இருந்தால் ஜனவரியிலேயே வந்திருக்கக்கூடும், ஆனால் தாமதம் நாவலின் தரத்திற்கு உதவி இருக்கிறது, சில அத்தியாயங்களை மாற்றி எநுதினேன். சில பகுதிகளைத் திருத்தினேன், சியாட்டலில் அதிகாலை ஒன்றரை அல்லது இரண்டு மணிக்கு எழுந்துவிடும் வழக்கமிருந்தது. கூடுதலாக நேரத்தைச் செலவிட்டு நாவலை செப்பனிட்டிருக்கிறேன், காலச்சுவடிற்கு நன்றி சொல்ல வேண்டும்,