1. பிரான்சு நாட்டின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு சுதந்திற்காக அது எந்தவிலையையும் கொடுக்கக்கூடிய நாடென்பது தெரியும்
பிற ஐரோப்பியநாடுகளைப்போலவே பிரான்சுநாட்டில் உலகின் அத்தனை நாட்டவரும், அத்தனை இனமக்களும், நிறத்தவர்களும் வாழ்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக பிரிட்டனிலும், பிரான்சிலும் காலனி ஆதிக்கத்தினால், பொருளாதாரக் காரணங்ககளால் புலம்பெயர்ந்த மக்கள் என்பதற்கு அப்பாற்பட்டு அரசியல் மற்றும் வேறுகாரணங்களால் பாதிக்கப்படுகிறவர்களுங்கூட இங்கு அடைக்கலம் கோரி வருகிறார்கள். எத்தனை சிரமபட்டாவது, எவளவு செலவானாலும் பரவாயில்லை நிம்மதியான வாழ்க்கைக்கு மேற்கு மட்டுமே உத்தரவாதம் என நம்பி இலட்சக்கனக்கானவர்கள் நேர்வழியிலும், பிற வழிமுறைகளிலும் மேற்கத்திய நாடுகளைத் தேடி வருவது – மேற்குலகு நாடுகள் பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிற இக்காலத்திலும் – தொடரவே செய்கிறது. கற்கால மனிதன் கூட்டமாக புலம்பெயர்ந்து சென்றதும் பாலையை நோக்கியல்ல, ஆற்றோரங்களையும் புல்வெளிகளையும் நோக்கி. இவ்விஷயத்தில் பிரான்சுக்கென தனி வரலாறு உண்டு. நாஜிகள் காலத்திலும், அதன் பிறகு கிழக்கு ஐரோப்பியநாடுகள் கம்யூனிஸத்தின் பிடியில் சிக்கித் தவிதபோதும், ஆளுகின்ற வர்க்கத்துடன் அல்லது உள்ளூர் அமைப்பு முறையுடன் சமரசம் செய்துகொள்ள விரும்பாத இஸ்லாமிய அறிவு ஜீவிகள் ஆகியோரும்- சுதந்திரமாக சுவாசிக்க வேண்டுமென நினைக்கிறவர்கள் – மேற்கு நாடுகளுக்கே குறிப்பாக பிரான்சு நாட்டையே நம்பிவருகிறார்கள்.
இன்று இரண்டாவது மதமென்ற தகுதியை இஸ்லாம் பிரான்சுநாட்டில் பெற்றிருக்கிறதெனில், அதன் வளர்ச்சிக்கு பிரெஞ்சுக் காரர்களும் காரணம். இங்கே எவித பேதமுமின்றி பிரெஞ்சின் இறையாண்மைக்கு ஒத்துழைக்கிற பெரும்பான்மையான இஸ்லாமியரை குழ்ப்பத்தில் ஆழ்த்த, நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த சிறுகூட்டம் முயன்றுவருகிறது. ஒரு பெரும் அணியாகத் திரண்டு உலகில் முதன்முதலாக முடியாட்சிக்கு எதிராக புரட்சிசெய்து வரலாற்றில் இடம்பெற்றவர்கள் பிரெஞ்சுக் காரர்கள். அவர்கள் சுதந்திரத்திற்கு கொடுத்த விலை அதிகம். அதற்கான விலையைக் கடந்தகாலத்தைபோல எதிர்காலத்திலும் கொடுக்கும் நெஞ்சுரம் அவர்களுக்குண்டு என்பதை பிரான்சு நாடெங்கும் வன்முறைக்கு எதிராகத் திரண்ட கோடிக்கணக்கான மக்களின் கூட்டம் நேற்று நிரூபித்தது. ஷார்லி ஹெப்டோ இதழ் வழக்கம்போல புதனன்று விற்பனைக்கு கிடைக்குமென சொல்லியிருக்கிறார்கள், இம்முறை பல மில்லியன் பிரதிகள் விற்பனைக்கு வருகின்றன.
தி இந்து தினசரியில் ஆங்கிலத்திலும், தமிழிலும் நல்ல தலையங்கங்கள் வந்துள்ளன
படிக்க: http://tamil.thehindu.com/opinion/editorial/பேனாவைக்-கொல்ல-முடியாது/article6
2. எனது கதைகளின்கதை -வே.சபாநாயகம்
தங்கத்திற்குச் செம்புசேர்ப்பதுபோல கதையின் முழுமைக்கு கற்பனை துணை எவ்வளவு அழகாகச்சொல்லியிருக்கிறார். திரு வே. சபாநாயகம் தமது வலைப்பூவில் புதிதாக ஒரு தொடரை தொடங்கி யிருக்கிறார். தலைப்பு ‘எனது கதைகளின் கதை’ – அவருடைய கதைகளுக்கான வேரினை அறிய இத் தொடர் நமக்கு உதவுமென நம்புகிறேன். வே.சபாநாயகம் என்ற படைப்பாளியையும் நாமறியச் செய்யும். படைப்புத்துறையில் சோர்வின்றி செயல்படும் மூத்த எழுத்தாளர். விருதுகளை நம்பி எழுத்தாளர்களை வாசிப்பவன் இல்லை நான். முதல் இரண்டுவரிகளே போதும் ஓர் எழுத்தின் மனத்தையும் பலத்தையும் உணர்வதற்குப் போதுமென நம்புகிற பல்லாயிரக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன். அதனாலேயே திரு வே. சபாயகம் தனது முதல்கதையின்”தொடக்கவரி’ வாசிப்பவரை ஈர்க்குமாறு இருக்கவேண்டும் என்பதற்காக ‘கல்கி’ ‘துமிலன்’ பாணியில் எழுதியதாக கூறி இருப்பதை இரசிக்க முடிந்தது, எனக்கும் அதில் உடன்பாடுண்டு. வாசகரை ஈர்ப்பதென்பது ஓர் எழுத்தின் முதற்படி. விளையும் பயிர் முளையிலே என்பது எழுத்துக்கும்பொருந்தும். வே. சபாநாயகத்தின் விளைச்சலுக்கு அவர் நல்ல நாற்றாக இருந்திருக்கிறார். கலை இலக்கிய நாட்டம் என்பது ஒரு வரம், அவ்வரம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வாய்த்தவர்களில் ஒருசிலரே, அவ்வரத்தின் பயனை பிறருக்கும் அளிக்கும் திறன்கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவருடைய ஆசிரியர் பற்றியும் பிற செய்திகளையும் அவரது நினைவுத் தடத்தில் வாசித்திருக்கிறேன், அவற்றை நினைவூட்டி ‘எனது கதைகளின் கதைத்’ தொடரை ஆரம்பித்திருக்கிறார். வே. சபாநாயகம் போன்ற்வர்கள் எதுபற்றி பேசினாலும் கேட்கவும் வாசிக்கவும் சுவாரஸ்யமாகவே இருக்குமென்ற நம்பிக்கையில் தொடரை வாசிக்கக் காத்திருக்கிறேன்.
http://ninaivu.blogspot.fr/
3. மிஷெல் ஹூல்பெக்:
ஷார்லி ஹெஃப்டோ படுகொலை சம்பவத்திற்கு முன்பாக பிரெஞ்சு ஊடகங்களில் பரபரப்புடன் விவாதிக்கபட்ட விஷயம் மிஷெல் ஹூல்பெக்கின் நாவல் Soumission. மிஷெல் ஹூல்பெக் மூத்த பிரெஞ்சு எழுத்தாளர்களில் ஒருவர். ஒவ்வொரு முறையும் அவரது நூல் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் வெளிவரும். இம்முறையும் பெயரை மிகவும் ரகசியமாக வைத்திருந்து இம்மாதம் முதல்வாரத்தில் புத்தககக் கடைகளில் விற்பனைக்கு வந்திருக்கிறது. புதல் பதிப்பே ஒன்றரை மில்லியன் பிதிகள் எனச்செய்திகள் சொல்கின்றன. தன்னிலையில் சொல்லப்படும் கதை, ஓர் அறிவு ஜீவி கதை சொல்கிறார், அவர் வாழ்க்கையில் எதிர்கொள்கிற சம்பவங்கள் கதையாக வருகின்றன. நாவலில் இன்றைக்கு பிரெஞ்சு அரசியலில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் அனவரும் வருகிறார்கள். 2022ல் பிரான்சுநாட்டு அதிபர் தேர்தல் வருகிறது. முதல் சுற்று தேர்தல் முடிவில் தீவிர வலதுசாரி வேட்பாளரான திருமதி லெப்பென் (Marie Le Pen) முதலாவதாகவும், அடுத்த வேட்பாளராக இஸ்லாமிய வேட்பாளரும், மூன்று நான்கு இடத்தில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் வருகிறார்கள். வலது சாரி பெண்மணியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, பிரதான கட்சிகள் தங்கள் வேட்பாளரைத் தேர்தலிலிருந்து விலக்கிக்கொண்டு இரண்டாவது இடத்திலிருக்கும் இஸ்லாமிய வேட்பாளரை ஆதரிக்கின்றன. நாட்டின் பிரதான இடது சாரி கட்சிகளும் ( Partie Socilaiste, Communist…) மிதவாத வலதுசாரிகளும் ( UMP etc..), நாட்டின் பொது எதிரியாக தீவிர வலதுசாரியைக் கருதி அவருக்கு எதிராக இஸ்லாமிய வேட்பாளரை ஆதரிக்கிறார்கள். ( முந்தைய தேர்தல்களில் எப்போதெல்லாம் தீவிர வலதுசாரிக்கு வெற்றி வாய்ப்பு வந்ததோ அப்போதெல்லாம் மேற்கண்ட கட்சிகள் கூட்டுசேர்ந்து தோற்கடித்திருக்கிறார்கள்) தேர்தல் முடிவில் வழக்கம்போல தீவிர வலதுசாரி வேட்பாளர் மரி லெப்பென் தோற்கடிக்கப்படுகிறார். இனி மரபான குடும்பம், அதாவது ஆண்களுக்கு மட்டுமே கல்வி பெண்கள் வீட்டில் இருக்கவேண்டும் என்பது போன்ற விஷயங்கள் தீவிர கிறிஸ்துவர்களையும் ஈர்ப்பதால் மிதவாத இஸ்லாமியர் பிரான்சு நாட்டின் அதிபராகிறார். பிறகென்ன நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை தீர்ப்பது எளிதாகிறது (பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும் எபதால்) வளைகுடா நாடுகளின் முதலீட்டால் நாட்டில் பல்கலைகழகங்கள் இஸ்லாமியப் பல்கலைகழகங்களாகின்றன என்றெல்லாம் ஒருவகை இஸ்லாமியா ஃபோபியாவுடன் எழுதப்பட்டுள்ள நாவலை விமர்சகர்கள் ஜார்ஜ்ஜ் ஆர்வெல்லின் 1984 நாவலுடன் ஒப்பிடுகிறார்கள்.
——-