அ. இரண்டு லட்சுமிகள்
இக்கணத்தில் இரண்டு லட்சுமிகளை நினைவுகூரவேண்டியவாக இருக்கிறேன். எனது புதிய நாவலோடு சம்பந்தப்பட்ட லட்சுமி ஒருவர், மற்றவர் மொழிபெயர்ப்போடு சம்பந்தப்பட்டவர். இரண்டு நூல்களுமே விரைவில் வர இருக்கின்றன. இரண்டுமே காலச்சுவடு சம்பந்தப்பட்டவை. ஒன்றுகாலச்சுவடு க்காக நான் எழுதியுள்ள புதிய நாவல், மற்றது காலச்சுவடின் முயற்சியால் பிரெஞ்சு பெண்மணி ஒருவருடன் இணைந்து பணியாற்றிய மொழிபெயர்ப்பு. மூல நூலின் ஆசிரியர் அம்பை என்கிற மற்றொரு லட்சுமி.
உயிர்நிழல் லட்சுமி.
பிரான்சு என்றதும் பல இலக்கியவாதிகளுக்கு பாரீஸில் உள்ள லட்சுமி என்ற பெயர் நன்கு அறிமுகமான பெயர். ‘உயிர் நிழல் லட்சுமி விளம்பரமின்றி, தன்னை ஒளித்து இலக்கியபணி ஆற்றிக்கொண்டிருக்கும் பெண்மணி. காலச்சுவடு வெளியிட உள்ள எனது நாவலுக்கு சில அத்தியாங்களில் பாத்திரங்களுக்கு ஈழத் தமிழ் சொற்கள் அவசியமாகப்பட்டன. லட்சுமி தகுதந்த ஈழத்தமிழ்ச் சொற்களை இட்டு உரையாடலுக்கு ஜீவனைக் கொடுத்திருக்கிறார் நாவல் பேசப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பேசப்படின் அவ்வெற்றியில் அவருக்குள்ள பங்கை மறுக்க முடியாது.
அம்பை லட்சுமி
வரும் ஜனவரியில் அம்பையின் சிறுகதைகள் De Haute lutte என்ற பெயரில் ZULMA பிரெஞ்சு பதிப்பகம் கொண்டுவருகிறது. Doiminique Vitalyos என்ற பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளருடன் நான் இணைந்து பணியாற்றியது. அம்பையின் சிறுகதைகள் மிக நன்றாக வந்திருக்கின்றன. நாளை இம்மொழி பெயர்ப்பு பேசப்படுமெனில் அம்பையின் கதைகளுக்காக மட்டுமல்ல டொமினிக் என்ற பெண்மனியின் உழைப்பிற்காவும் பேசப்படவேண்டும். டொமினிக் வித்தாலியோ மலையாளம் ஆங்கிலம் இரண்டிலிருந்தும் பல இந்திய நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.
ஆ. புதிய நூல்கள்
இவ்வருட தொடக்கத்தில் மொழிபெயர்ப்பைத் தவிர்த்து எனது நான்கு நூல்கள் வருகின்றன. நாவலொன்றையும் இலக்கிய கட்டுரைகளையும் காலச்சுவடு கொண்டுவருகிறது. சிறுகதைத் தொகுப்பையும் பயணக்கட்டுரைகள் தொகுப்பையும் நற்றிணை பதிப்பகம் கொண்டுவருகிறது.
நாவல் – எனது பிராஹா பயணத்தின் தாக்கம் என்று சொல்லவேண்டும், பெயர் முடிவாகவில்லை, முடிவானதும் அறிவிக்கிறேன். காலச்சுவடு வெளியிட உள்ள மற்றொரு நூலான கட்டுரை தொகுப்பின் பேயர் ‘தத்துவத்தின் சித்திர வடிவம்’. நற்றிணை வெளியிட உள்ள சிறுகதை தொகுப்பு: மகாசன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்’. பயணக்கடுரைகள் தொகுப்பிறகு ‘காப்காவின் பிராஹா – (பயணக்கட்டுரைகள்)’ எனப் பெயர் வைத்திருக்கிறோம்.
இ. தன்னைத் தானறிந்தால் தனக்கொரு கேடுமில்லை
தமிழ்நாட்டில் பொய்யான காவலதிகாரியாக, சுங்க அதிகாரியாக, இலஞ்ச ஒழிப்பு அதிகாரியாக நடித்து பின்னர் கைதான மனிதர்களைப்பற்றிய செய்திகளைப் படித்திருப்போம். இம்மனிதர்களின் தேர்வு தமிழ்நாட்டில் மேற்கண்ட சிலதுறைகளை மட்டுமே குறிவைக்கிற காரணத்தை, பத்திரிகைகளில் வரும் செய்திகளும், அவர்கள் தண்டிக்கபட்ட வழக்குகளும் தெரிவிக்கின்றன. மனிதர்கள் இயல்பும் தேடும் பொருளின் குணமும் இவ்வினையை எழுதுகின்றன. இதற்கான ஆதாரங்களை மனித மனங்களில்தான் தேடவேண்டும். இரு பூதவியல் விஞானிகளில் ஒருவர் ஆக்கத்திற்கும் மற்றவர் அழிவிற்கும் உதவுகிறார். எனக்குத் தெரிந்த, பிரான்சில் வாழ்ந்த ஒரு தமிழர் நல்ல வேலையில் இருக்கவேண்டியவர், தமது தொழில் நுட்ப அறிவை தவறான காரியங்களில் முதலீடு செய்து சிறைதண்டனை பெற்றார். சிலர் கள்ள நோட்டு அடிப்பதில்லையா? மனித மனங்களை வளைப்பவை அவர்களுக்கமையும் சந்தர்ப்ப சூழல்கள்தான், அதனடிப்படையில் அவர்கள் விதியைத் தீர்மானிக்கறபொறுப்பை அவர்கள் சொந்த அறிவு எடுத்துக்கொள்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு பிரெஞ்சு தினசரியில் வந்த செய்தியும் அப்படியொரு தேர்வை பற்றியதுதான். பிரெஞ்சு ஆசாமி குறிவைத்த துறைவேறு, நாட்டைப்பொறுத்து குற்றங்கள் தேர்வும் அமையும் போலிருக்கிறது. அவர் பாரீஸ் நகரசபையில் பணியாற்றுகிறவர், சாலை பராமரிப்பில் ஊழியம். சந்தர்ப்பங்கள் வாய்க்கிறபோது கலை இலக்கியங்கள், இசை பண்பாட்டிற்கென சேவைசெய்துவரும் அரசு வானொலியின் (France Culture) பத்திரிகையாளராக (பொய்யாக) தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பிரபல பாடகர்கள், நாடக- திரைப்படக் கலைஞர்கள் ஆகியோரை பேட்டிக் கண்டிருக்கிறார். ஆனால் எழுத்தாளர்களை நெருங்கவில்லை. பேட்டி அளித்தவர்கள் தாங்கள் பேட்டி அளித்தபின் சம்பந்தப்பட்ட வானொலியில் அந்நிகழ்ச்சி ஒலிபரப்பப்பரப்பாகிறதா என்பதில் அக்கறை காட்டுவதில்லை. “என்னுடைய பேட்டி இதில் வருகிறது அதில் வருகிறது” என மெனக்கிட்டு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிற மனிதர்களும் இல்லை என்பதால் பேட்டிக்குப் பிறகு என்ன நடந்ததென்பது ஒருவருக்கும் தெரியாமலேயே போயிருக்கிறது. இது தவிர பிரான்செங்கும் கலை விழாக்கள், இசைவிழாக்கள், திரைப்படவிழாக்கள் நடக்கிறபொழுது பத்திரிகையாளராகக் கலந்துகொண்டிருக்கிறார். ஆனால் சாமர்த்தியமாக சில காரியங்களைச் செய்திருக்கிறார். மற்ற பத்திரிகையாளர்கள்போல நட்சத்திர ஓட்டல், முதல் வகுப்புப் பயணம் போன்ற சலுகைகளை விழா ஏற்பாட்டாளர்களிடம் கேட்பதில்லை, சாதாரண ஓட்டல்கள், இரண்டாம் வகுப்பு பயணம் என அடக்கிவாசித்திருக்கிறார். தவிர எந்த ஏற்பாட்டாளராவது இவருடைய பத்திரிகையாளர் அடையாள அட்டையின் ஒரிஜினலைக் கேட்டால் நழுவி விடுவாராம். ஒரு முடிவு இருக்குமில்லையா எத்தனை நாளைக்கு ஏமாற்ற முடியும், மற்றொரு பத்திரிகையாளர் சந்தேகப்பட்டு போட்டுக் கொடுத்துவிட்டார். ஆனால் இப்படியொரு தவறான தேடலைத் தொடங்கியது இன்று நேற்றல்ல சுமார் இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1987ஆம் ஆண்டு. ஏன் அப்படி நடந்துகொண்டார்? நடச்சத்திர மனிதர்களை நெருங்குவதற்கும் அவர்களுடன் கூடுதலாக நேரத்தைச் செலவிடவும் வேறுகாரணங்கள் தனக்குக்கிடைக்கவில்லை என்கிறார்.
நேற்றுவரை நாம் எதைத் தேடினோமோ அதுதான் நம்மைக் கட்டமைத்திருக்கிறது. நமது ‘இன்று’ நேற்றைய தேடலால் கிடைத்தது. ஒரு கும்பலில் ஆறுமுகத்தைத் தேடினால் ஆறுமுகம்தான் கிடைப்பார், அங்கே ஆறுமுகம் இல்லையேன்றால் வெறும் கையோடு திரும்பவேண்டியதுதான். ஆறுமுகத்தைத் தேடிவிட்டு ராமசாமி கிடைக்கவில்லையே எனப்புலம்புவதால் எவ்வித பயனுமில்லை. தன்னைத் தானறிந்தால் தனக்கொரு கேடுமில்லை என்பதொரு சொலவடையுண்டு, தான் தேடியது எதை, அல்லது தேடுவது எதை என்பதில் தெளிவு வேண்டும். ஐம்பது வயதிலும் அறுபதுவயதிலும் உண்மையை விளங்கிக்கொள்ளாமல் அல்லது போதாமல் மிஷெல் ஒபாமா மாதிரி மனைவி அமைந்தால், அவர் பிள்ளைகள்போல எனக்குப் பிள்ளைகள் அமைந்தால், அந்தத் தேதியில் பிறந்திருந்தால் அமெரிக்க ஜானாதிபதியாகியிருப்பேன், சூப்பர் ஸ்டாராராகி இருப்பேன் என்பதெல்லாம் அபத்தம். ஒபாமாவும், ஏ. ஆர் ரஹ்மானும் ஜெயகாந்தனும் எதைத் தேடினார்களோ அதைப் பெற்றிருக்கிறார்கள். நாளோ, கோளோ, மனைவியோ, சுற்றமோ நட்போ அவர்களுக்கு உச்சத்தை கொடுப்பதில்லை.
—–