நமது பெருமைகளெல்லாம் கடந்த காலத்துக்கு உரியவைகாளாகிவிட்டன. ‘தமிழ் பேசும் நிலப்பரப்பு’ கடந்தபகுதிகளில் தமிழர் பெருமைச் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. அதைக்குறித்த வெட்கமோ அவமானமோ நமக்கில்லை. எங்கள் ஊரில் ‘காந்தி ரெஸ்ட்டாரெண்ட்’ என்ற பெயரில் ஓர் உணவகம் இருக்கிறது அதை முதலில் நடத்திவர் ஒரு பாகிஸ்தானியர். தற்போது இலங்கையைச்சேர்ந்த தமிழ்ச் சகோதரர் ஒருவர் நடத்துகிறார். பாகிஸ்தானியர் நடத்தியபொழுது அந்த உணவு விடுதியில் மாமிச உணவு விற்கக்கூடாதென ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்தார். யாரென்று நினைக்கிறீர்கள்? எதிர்த்தது எந்த இந்தியரும் அல்ல (என்னையும் சேர்த்துத்தான்). நமக்கேன் வம்பு? என்ற நடுநிலையாளர்களின் குணம்தான் உங்களுக்குத் தெரிந்திருக்குமே, அதிலும் ‘பிழைக்க வந்த இடத்தில்’ எதற்கு வம்பு என்கிற புத்தி சாதுர்யத்துடன் நாங்கள் இருக்கிறபொழுது, இதுபோன்ற கூடாத காரியங்களை எப்படி செய்வது? இந்தியர்கள் எங்களைப் பற்றி ஐரோப்பியர்கள் என்ன நினைப்பார்கள்?. ஆக இந்த அறத்தின் பேரால் நாங்கள் வாய்மூடி இருந்தோம். எதிர்ப்புத் தெரித்தவர் ஒரு பிரெஞ்சுக்காரர், காந்திய அபிமானி. சட்டபடி அவரால் அதை ஒன்றும் செய்ய இயலாமல் போய்விட்டது. ( உங்களில் சிலரைப்போலவே, எங்களுக்குத் தெரியாதா? இதெல்லாம் வேலைக்கு ஆகுமா? என்று அந்த வெள்ளையரை விமர்சித்த இந்தியப் பெருந்தகைகள் உண்டு.) ஐரோப்பிய நாட்டர்வர்களும் அண்மைக்காலங்களில் சைவத்துக்கு மாறிவருவது உண்மையென்றாலும், இன்றளவும் 99 விழுக்காடு மக்கள் மாமிசப் பிரியர்கள்தான். உணவக உரிமையாளரான பாகிஸ்தானியருக்கு ஜின்னா என்ற பெயரைக்காட்டிலும் காந்தி என்ற பெயருக்கு வாடிக்கையாளரை ஈர்க்கும் சக்தி அதிகமென்ற ‘வணிக சாதுர்யத்தை தாண்டி வேறுகாரணங்கள் இருக்கமுடியாது.
கடந்த வாரத்தில் வேறொன்று நடந்தது. பிரெஞ்சு நண்பர் ஒருவர் இங்குள்ள பத்திரிகையொன்றில் வந்த செய்தியை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அவர் என்னுடன் இந்தியா வந்திருந்தார். அவர் பெயரிட்ட செய்தி ஆங்கில தினசரியொன்றில் அப்போது வந்தது. இந்தியாவில் பத்திரிகையாளர்களாக போடும் செய்திகள் ஒருபக்கம், கவர்கொடுத்து தனதுபெயரை பத்திரிகையில் போட்டுக்கொள்வது இன்னொரு பக்கம் என்பது நமக்குத் தெரியும். ஆனால் நிச்சயமாக ஆங்கில தினசரியில் வந்த செய்திக்கு அவர்காரணமல்ல. அவரைவைத்து தன்னை முன்னிருத்த முனைந்த ஓர் ஆசாமியின் யுக்தி அது. பிரெஞ்சு நண்பர் புதுதில்லியில் காந்தி அருங்காட்சியகத்தில் வைத்திருந்த படங்களில், காந்தியின் கண்களை மாத்திரம் (ஓர் இருபது இருபத்தைந்து படங்கள் )எடுத்துவந்திருந்தார். இந்தியாவிலிருந்து வந்ததுமுதல் அந்த ஆங்கில தினசரியை வாரத்தில் ஒன்றிரண்டு முறை வாசிக்கிறார், குறிப்பாக ஞாயிற்றுகிழமைகளில். அதிலும் காந்தியைப் பற்றிய செய்தியெனில் மிகவும் உன்னிப்போடு வாசிப்பார். அவர்தான் அண்மையில் வந்த செய்தியை மின்னஞ்சலில் அனுப்பிவைத்தார். நானும் வாசித்திருந்த செய்தி அது.
செய்தி தெளிவாகவே இருந்தது. இருந்தும் என்னிடம் கருத்தைக் கேட்டார். தண்டிக்கபட்டத் தங்கள் தலைவரை விடுவிக்கவேண்டுமென புது தில்லியில் காந்திசிலைக்கு முன்னால், செஞ்சோற்று கடனுக்காக போராடிய சம்பந்தப்பட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் படமும் செய்தியும் சம்பந்தப்பட்ட விஷயமது. நல்லவேளை அந்த பிரெஞ்சு நண்பர் தமிழர் என்ற வார்த்தையை உபயோகிக்கவில்லை. இந்தியர்கள் காந்தியை அவமதித்ததுபோல ஆகாதா? எனக்கேட்டார். அவருக்கு இப்படி சொன்னேன்:” இந்தியன் தனிநபராக இருக்கிறபோது உலகத்தில் எல்லோரையும்போல (சமாளிக்க வேறு வழி?) நல்லவன். எண்ணிக்கையில் கூடுகிறபோது தவறிழைக்கும் துணிச்சல் வந்துவிடுகிறது. காந்திபோன்ற தனி நபர்கள், தங்கள் தூய சிந்தனையை அழுக்கில்லாமல் பார்த்துகொண்டவர்கள். அழுக்கடைநேரும்போதும் அதை வெளுத்து உடுத்தும் பக்குவம் அவர்களுக்கு இருந்தது. தங்களை வேலியிட்டுக் காத்ததால், ஆடுமாடுகளின் மேய்ச்சலை தவிர்க்கமுடிந்தது. விலங்குகளின் அத்துமீறலைத் தடுத்து நீதியையும் தங்களையும் காப்பாற்ற முடிந்தது. அது மகாத்மாக்களுக்கு மட்டுமே சாத்தியம்” – என்றேன்.
பிற இனத்தைக் காட்டிலும் நம்மிடம் மந்தைகளாகத் திரண்டு கல்லெறியும் நாகரீகம் கூடுதலாக இருக்கிறது. தமிழ்த்துறையில் முனைவர் ஆய்வு செய்பவர்கள் இப்படியொரு தலைப்பை எடுத்துக்கொண்டு கொஞ்சம் சிங்கப்பூருக்கு, திருவனந்தபுரத்திற்கு, கல்கத்தாவிற்கு, மும்பைக்கு, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று ஆய்வு செய்யவேண்டும்- இதில் வேறொரு உண்மையும் அடங்கியிருக்கிறது கல்லெறிவதில் கூட்டமாகவும், வளர்ச்சியில்- அதாவது இந்த நூற்றாண்டின் பிழைக்கத் தெரிந்த வளர்ச்சியில் தனித்தன்மையுடனும் இயங்கும் மனோபாவம் அது. வீழ்ச்சிக்கு, உண்மைக்கு மாறான, சிற்றில் சிதைத்தலில் ஆர்வமுள்ள சிறுபிள்ளைத்தன இனமாக நாம் இருப்பது காரணம். நமது தலைவர்கள் இறைவன் கொடுத்த வரமல்ல கையூட்டின் அடிப்படையில் வாக்களித்துப்பெற்ற தலையெழுத்து.
பிரான்சுக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. ஒரே ஒரு யூரோ கையூட்டாக கொடுத்த அனுபவமில்லை. அதாவது சராசரி குடிமகனுக்கு இங்கே கையூட்டுக்கொடுக்கும் அனுபவங்களுக்கு வாய்ப்பில்லை. இங்கே தலைவர்களெல்லாம் யோக்கியமாவென்றால்? இல்லை இல்லையென நூறு தரம் சத்தியம் செய்யலாம். அவர்கள் வரி ஏய்ப்பு, அன்னியச்செலவாணி, பிறநாடுகளுடனான ஒப்பந்தத்தில் கமிஷன், தனக்கு அல்லது தன்னைச் சார்ந்தோருக்குச் சலுகைகள் என்பதுபோன்ற குற்றங்களுக்குசொந்தக்காரர்கள். Perfect crime என்று ஒன்று கிடையாது நீதிக்கு முனைப்புடன் செயல்படவேஎண்டும் அவ்வளவுதான். தமிழர்களை இருபெரும் பிரிவில் எளிதாக அடக்கிவிடலாம். தண்டிக்கபட்ட குற்றவாளிகள், தண்டிக்கப்டாத குற்றவாளிகள். ‘பிழைக்கு’ அஞ்சிய காலம்போக ‘பிழைக்கத் தெரிந்தவன்’ என பிறர்கூறக் கேட்க தேன் வந்து பாய்கிறது, நீதிகூட தமிழரல்லாத மண்ணில்தான் கிடைக்கும் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. இதற்குமேல் சொல்ல ஒன்றுமில்லை. “நாம் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்” என நம்மை நாமே கேட்டுக்கொள்ளதவறினால் இது தொடர்கதையாகும். . வாழ்கத் தமிழ்! வளர்க தமிழர் பெருமை!
————————
ஐயா, கட்டுரை அருமை. இந்தியர்களின் குணநலன்களை படம்பிடித்ததுபோல் இருக்கிறது. பெங்களூரு தீர்ப்பின் பின்னணியில், பல நிகழ்வுகள் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன. அவற்றில் பல, ‘நாயும் பிழைக்குமிந்தப் பிழைப்பு’ என்ற பாரதியின் வரிகளுக்கு மிகப்பொருத்தமான உதாரணங்கள்.
தனியார் பள்ளிகள் சங்கத்தினர் கூடி, நீதிமன்றத் தீர்ப்பை கண்டித்து ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து விட்டார்கள். பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியபிறகே பின்வாங்கினர். பல்வேறு தொழில் வர்த்தக அமைப்பினர் எல்லாம் கூடி, ஒரு நாள் கடையடைப்பு, நிறுவனங்களுக்கு விடுமுறை விட்டனர்; உண்ணாவிரதம் கூட இருந்தனர். நடிகர்கள் உண்ணாவிரதம் இருந்ததை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.
எங்கள் ஊர் அருகில், உண்ணாவிரதத்தில் பங்கேற்ற ஒரு தொண்டர், பாதி தலையை மொட்டை அடித்துக் கொண்டு, பாதி மீசையை எடுத்துக் கொண்டு, அமர்ந்திருந்தார். பிற மாநிலத்தவர் மத்தியில், தமிழகமும், தமிழர் குணநலமும் எள்ளி நகையாடப்படும் என்று தெரிந்தே இத்தனையும் நடக்கின்றன. வேதனைப்படுவதை தவிர, வேறென்ன செய்ய முடியும்?
மிக்க நன்றி, நண்பரே.
அன்புடன்
நா.கிருஷ்ணா
வணக்கம்
ஐயா
சொல்ல வேண்டிய விடயத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி, நண்பரே.
தங்களுக்கும் தங்கள் துணைவியார் பிள்ளைகள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்
அன்புடன்
நா.கிருஷ்ணா
Ungal katturai thoguppai aavaludan ethirpaarkirane
Thanks Sir