மொழிவது சுகம் டிசம்பர் டிசம்பர் 28 – 2013

புத்தாண்டு வாழ்த்துகள் –2014

 spectaclereveillonno-kyip

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துகள்.  நிறைகுறைகள் இல்லாதது வாழ்க்கை அல்ல! இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. சொந்த வாழ்க்கையிலும் சரி குடும்பம், நாடு, உலகம் என அனைத்திலுமே மேடுபள்ளங்கள் இருக்கவே செய்கின்றன.  மகிழ்ச்சி மழையில் நனைந்த தருணங்களும், கையறு நிலையில், சாய்ந்துகொள்ள தோள்கிடைக்காதா என வாடிய சூழலும் இல்லாமலில்லை. எனக்கு உங்களுக்கு, அடுத்த நபருக்கு என இருக்கவே செய்கின்றன, எனினும் ஓடும் நீராக வாழ்க்கையை தொடரவே  இப்பிறவி வாய்த்திருக்கிறது.

அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிதுவரம் கிடைத்திருக்கிறது, நோய் நொடிகள், எனவந்தாலும் ஆரோக்கியத்தை பெற்று ஆயுளை நீட்டிக்கொள்வதற்கான சூழலும் நிலவும் உலகம். ஆக 95 விழுக்காடுகள் வாழ்க்கை நம் கையில்.  ‘எதிர்பார்ப்புகளைநம்மால் மட்டுமே பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கைக்கு இடமளித்து வினையாற்றுவது அந்த 95 விழுக்காடுகளை முடிந்த அளவு மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். மிச்சமுள்ள 5 விழுக்காட்டினை எதிர்பாராத சோகங்கள், மகிழ்ச்சிகள் நடத்துகின்றன என வைத்துக்கொண்டாலும் அதனை பக்குவமாக கையாளுவோமானால் நிறைவான வாழ்க்கைக்கு தொடர்ந்து உத்தரவாதம்.

வாழ்க்கைத் தேர்வும் நண்பர்களும்

முன்பு தென் ஆற்காடு மாவட்டத்திலும் தற்போது விழுப்புரம் மாவட்டத்திலும் இருக்கும் கொழுவாரிஎன்ற சிறுகிராமத்தில் எனது வாழ்க்கை ஆரம்பித்தது, பின்னர்  அங்கிருந்து அதே தென்னாற்காடு மாவட்டத்தை சேர்ந்த கழுப்பெரும்பாக்கம், அனுமந்தை; செங்கல்பட்டு மாவட்டத்தில் மாம்பாக்கம்; புதுச்சேரி மாநிலத்தைச்சேர்ந்த காலாப்பட்டு,  புதுச்சேரி -(இந்திய வாழ்க்கையில் பெரும் பகுதியைக் கழித்த ஊர்);  அடுத்து சென்னை.  1985க்கு பிறகு பொருள் தேடி புலம் பெயர் வாழ்க்கை: பிரான்சு நாட்டில் ஸ்ட்ராஸ்பூர், (பிரான்சு நாட்டின் கிழக்குப் பகுதி)Strasbourg 1  இந்நெடிய வாழ்க்கை பயணத்தில் அரிதான பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தொடக்கக் கல்வி, உயர்நிலைப் பள்ளிகல்லூரி  என்ற கல்வி வாழ்க்கையில்; விக்ஸ் பிரதிநிதியாக, பயன முகவர் அலுவலக ஊழியனாக, புதுச்சேரி கென்னடி டுட்டோரியலில் ஆசிரியப்பணி, பிறகு 1985வரை புதுச்சேரி வருவாய் துறையில் பணி, பிரான்சுநாட்டில் மீண்டும் பல்கலைகழ்கத்தில் சேர்ந்து இந்திய படிப்பை முறைபடுத்திக்கொண்டது, கணக்கியலில் பட்டயம், ஸ்ட்ராஸ்பூர் நகராட்சிக்குட்பட்ட அமைப்பொன்றில் உதவி கணக்காயர் பணி, மாலைக் கல்வியில் மொழிபெயர்ப்பு பட்டயத்திற்கான கல்வி, தொடர்ந்து 1991ல் சுயமாக தொழில் செய்ய ஆரம்பித்து சிறியதொரு மளிகைகடை. என்னை நிலை நிறுத்திக்கொண்டபிறகு இளமைக்கால எழுத்து ஆர்வம் அக்கினிக் குஞ்சாக என்னுள் தகிக்க எழுத்திற்குத்  1999ல் திரும்பவும் வந்தேன்.

வாழ்க்கைத் தேர்வில் தெளிவாக இருந்திருக்கிறேன். தொடக்கத்தில் சங்கடங்களை அளித்த போதிலும் முடிவுகள் தேர்வை நியாயப்படுத்தியிருக்கின்றன. பெற்றோர்கள் பார்த்துவைத்த திருமணம் என்றாலும், எனது மனைவியைப் பார்த்தபோது இவளால் நான் உயர்வேன் என மனம் உரைத்தது. அதுபோலவே பிரான்சுக்கு வர செய்த முடிவு. என்னுடன் பணிசெய்த பலர் வருவாய்துறையில் உயர்பதவியில் இன்று இருக்கிறார்கள், இருந்திருந்தால் .. என்ற எண்னமெல்லாம் சில நேரங்களில் மனதை அலைக்கழிக்கும், இருந்தும் அச்சமயம் எடுத்த முடிவில் தவறில்லை. அங்கே கையூட்டுகளோடு காலம் தள்ளினாலொழிய வளர்ந்திருக்க சாத்தியமில்லை. இங்கேவந்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கலைஞர்களுக்கே உரிய சுதந்திர உணர்வில் சுயதொழில் செய்ய ஆரம்பித்து ஒரு பிரெஞ்சு நண்பரோடு சேர்ந்து வணிக செய்ய ஆரம்பித்தபோது, இந்தியப்பொருட்கள் தொடர்பான விஷயங்கள் என்பதால் எனக்கு முழுசுதந்திரமும் வேண்டும், என்றேன். குறுக்கிடக்கூடாது எனத் தெளிவாக கூறினேன். அவர் கணிசமான தொகையை முதலீடு செய்ய இருந்த நேரத்தில் எனது இந்த பதிலில் அதிர்ச்சி அடைந்து விலகிகொண்டார். ஒரு வாரம் கழித்து திரும்பவும் அதே தொகையுடன் வந்தார். உனது பதில் பிடித்திருந்தது, நீ மட்டுமே தொழில் செய் எனக்கூறி  காசோலையைத் திரும்பவும் என்னிடம் தந்தார், முடிந்தபோது திருப்பிக்கொடுக்க சொன்னார். அவருடனான நட்பு இன்றுவரை தொடர்கிறது. தனி ஆளாக வியாபாரத்தில் இறங்கிய முடிவில் தவறில்லை கடையின் வளர்ச்சி, அதன் தொடர்ந்த இயக்கம் தெரிவிக்கும் உண்மை. 2005ல் ஜெர்மனியிலுள்ள Global Foods உரிமையாளர், M. Pandari பாரீஸின் கிழக்கு பகுதியில் ஒரு மொத்த விற்பனை அகத்தை திறக்கவேண்டுமென்றுகூறி சேர்ந்து செயல்படலாம் எனத் தெரிவித்தார். ஆனால் எழுத்தில் முழுமூச்சாக இறங்குவதென தீர்மானித்து அவரது யோசனையை நிராகரித்தேன். பிரெஞ்சு நண்பர் முட்டாள் தனமான முடிவென்றார். எனினும் எடுத்த முடிவில் தவறில்லை என்பதை இப்போது உணர்கிறேன்.

 இக்கால பயணத்தில் நண்பர்களும் அந்தந்த வாழ்க்கைக்கு ஏற்ப மாறிகொண்டு வந்திருக்கிறார்கள். பிறந்த மண், கல்வி நிலையங்கள், வாழுமிடம், செய்யும் தொழில், ஆர்வம்காட்டும் துறைகள், உறவுகள் ஆகியவை  நமது நண்பர்களை தீர்மானிக்கின்றன. அகம் புறம் இரண்டும் அதனதன் தேவைக்கேற்ப, பாரதூரங்களின் அடிப்படையில் நண்பர்களை தேர்வுசெய்கின்றன. இதில் யாரையும் குற்றம் சொல்ல இயலாது இதுதான் வாழ்க்கை. நேற்றிருந்ததை மறந்ததாகச்சொல்லும் பலநண்பர்கள் தங்களுடைய நேற்றுகளைசௌகரியமாக மறந்திருப்பார்கள். நமக்கு மேலாக வளர்ந்துவிட்டதாக இவர்கள் நம்பும் ஒருவர் நம்மை மறந்துவிட்டார் என குற்றம் சாட்டுகிறபோது, நமக்கு கீழேயாகிப்போன எத்தனை நண்பர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்  என்பதை யோசிக்க வேண்டுமில்லையா? பள்ளிகாலத்தில் பள்ளி நண்பர்கள், கல்லூரி காலத்தில் கல்லூரி நண்பர்கள், பணிக்காலத்தில் சக அலுவலக ஊழியர்கள் நண்பர்கள். தவிர வாழுமிடமும் சமூக நிகழ்வுகளும் சில நண்பர்களைக்கொண்டுவந்து சேர்க்கின்றன. எல்லா நட்புமே நீடிப்பு என்பது இரு தரப்பினரின் ஒத்த சிந்தனையை பொருத்தது. அதற்கு உத்தரவாதம் இருக்குமெனில் அல்லது அது தொடரும் வரை நட்பும் தொடரும்.

 எழுத்தில் என்ன சாதித்தேன் என்பது கேள்வியில்லை, ஆனால் எண்ணத்தால் உயர்ந்தமனிதர்களோடு உரையாட முடிகிறது, சில மணித்துளிகளை அவர்களோடு கழிப்பதற்கான தருங்களை எழுத்து ஏற்படுத்தி தருக்கிறது. படுத்தால் சங்கடங்களின்றி உறங்கும் வாழ்க்கை, இதைக்காட்டிலும் வேறென்ன செல்வம் வேண்டும்?

ஜே.டி. குரூஸ் சாகித்ய அகாதமி பரிசு.

கொற்கை நாவலை படிக்கவில்லை. அவரது ஆழிசூழ் உலகை படித்திருக்கிறேன். மனதிற்கு மிக சந்தோஷ்மாக இருந்தது. இவருக்கு கொடுக்கவில்லை அவருக்குக் கொடுக்கவில்லை என்ற புலம்பல் வேண்டாம். ஜே.டி.குரூஸ் அதற்கு முற்றிலும் தகுதியானவர். அது தவறான தேர்வல்ல  என்பது நமது மனதிற்குத் தெரியும். அவர் தொடர்ந்து பல நல்ல படைப்புகளை அளிக்கவேண்டும். தமிழ் படைப்புலகம் செழிப்புற ஜே.டி. குரூஸ் போன்ற படைப்பாளிகள் அடையாளம் பெறவேண்டிய தருணம். எந்தப் பின்புலமும் அல்லாமல் முழுக்கமுழுக்க படைப்பினை முன்வைத்து தேடிவந்த விருது. வாழ்த்துகள், எங்களுக்காக நிறைய எழுதுங்கள்.

அமெரிக்க தேவயானி

இந்தியாவா? என மூக்கில் விரலைவைத்த சம்பவம். இந்தியா தூதரக அதிகாரியை விசா தவறுதலுக்காக அமெரிக்கா நடத்தியவிதம் கண்டு கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர்வரை பிறகு உலகெங்கும் இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் இந்தச் சொரணை நமக்கு எல்லாவற்றிலும் வேண்டும், தொடர்ந்தும் பேண வேண்டும். வழக்கம்போல அமெரிக்கா என்பதால் காம்ரேட்டுகள் கொதித்துபோனார்கள், இப்பிரச்சினையில் சிக்குண்ட அந்த வேலைக்காரி பெண்ணைக் குறித்து மருந்துக்கும் வார்த்தையில்லை. அநேகமாக சொல்லியிருந்தால் தோழர் நல்லகண்ணு சொல்லியிருக்கலாம், முணுமுணுத்திருக்கலாம். வேறு தோழர்கள் சொல்ல வாய்ப்பில்லை. இலங்கைத் தமிழர்கள் செத்தொழிந்ததோ, நாள் தோறும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு நடத்தும் விதமோ அவர்கள் காதில் விழவும் விழாது, கிருஸ்துமஸ் கேக் வெட்டலுக்கிடையில் நேரமிருக்கும்போது கொஞ்சம்  அடித்தட்டு மக்களையும் அவர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். அரசியல்வாதிகளில் மனசாட்சிக்கு செவிசாய்க்கிறவர்கள் ஒரு சிலர் இருப்பார்கள் எனில்  அவர்கள் மார்க்ஸியவாதிகளாகத்தான் இருப்பார்கள் என இன்னமும் என்னைப்போன்ற மனிதர்கள் நம்புகிறார்கள் அதனைப் பாழ்படுத்தவேண்டாம்.

ஊழல் ஆசாமிகளை ஒதுக்காதவரை ஒலிம்பிக்கில் இடமில்லை என சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு இந்தியாவை நீக்கியது குறித்த கவலை இன்மையும், தூதரக அதிகாரி தவறே செய்யவில்லையென வக்காலத்துவாங்குவதில் காட்டும் அவசரமும் இந்தியாவின் பிம்பத்தை பெரிதாய் உயர்த்திவிடாது.

டில்லி கெஜ்ரிவால்

முதன் முறையாக ஆம் ஆத்மி என்ற மக்கள் நலனை முன்னிலைபடுத்தக்கூடிய ஓர் அரசு டில்லியில் பதவி ஏற்றிருக்கிறது. விளைவு அவசர அவசரமாக லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. அவர்கள் நிதானமாக செயல்படவேண்டும். கேலிக்குரியவர்களாக மாறிவிடக்கூடாது. அத்தியாவசியமானவற்றிற்கு முன்னுரிமை அளித்து ஊழலற்ற ஆட்சியை அவர்கள் ஆட்சியில் இருந்த குறைந்த காலத்தில் தந்திருக்கிறார்கள் என்கிற எண்ணத்தை மக்களிடத்தில் ஏற்படுத்துவதைப் பொருத்தே அவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல இந்தியாவில் எதிர்காலமும் தீர்மானிக்கப்டும். அவ்வாறு இல்லையெனில் இந்தியாவின் எதிர்காலம் வழக்கம்போல ஊழல் ஆசாமிகளின் பிடியில் தான்.

 ——————————

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s