“வீடுமுறவும் வெறுத்தாலும் என்னருமை
நாடு பிரிந்த நலிவினுக்கென் செய்கேனே” (பாரதியார்)
முதலாளித்துவமும் நவீன சமூக அமைப்பும் மென்று உமிழ்ந்த மனிதர்களிடத்தில் அக்கறைகொள்கிற படைப்பிலக்கியவாதி ஒருவர் அமெரிக்காவில் இருக்கமுடியுமெனில் அது அநேகமாக ரஸ்ஸல் பாங்க் ஆக மட்டுமே இருக்க முடியும். சொந்தநாடுகளைக் கடந்து பிறநாடுளின் இலக்கிய விமர்சகர்களால் ஏற்றுகொள்ளபட்டவர்களையே உலக எழுத்தாளர்கள் என அழைக்கிறோம். இவர்கள் அனைவருமே கைவசப்பட்ட மொழியைக்கொண்டு தங்கள் எடுத்துரைப்பில் உலக நடப்புகள் சிலவற்றுள் தங்களுக்குள்ள உடன்பாடின்மையைப் பதிவுசெய்கிறார்கள். ஆண்குறி பெண்குறி, உடல் உறவுகளுக்கு இரண்டு பக்கங்கள் என்பது போன்ற திட்டமிடல்கள் உலக எழுத்தாளர் தகுதியை நிர்ணயித்து விடாது. படைப்பு மானுடத்தின்மீது அக்கறை கொண்டதாக இருக்கவேண்டும். தமது அனுபவங்களுக்கு கலைவடிவம் கொடுப்பது மட்டுமல்ல, அக்கலை வடிவங்கள் ஊடாக உற்ற அனுபவத்தினைப்பற்றிய கருத்தையும் சாதுர்யமாக எடுத்துரைக்க வேண்டும். மகிழ்ச்சியை தெரிவிக்கத் தவறினாலும் ஏமாற்றம், நிராசை, அவநம்பிக்கை, சிறுமையின் அதிகாரம் ஆகியவற்றுக்கு எதிரான அறச்சீற்றத்தைப் பதிவுசெய்யும் பொறுப்பு வேண்டும்.
அமெரிக்காவை வல்லரசு என்றோ, பணக்கார நாடு என்றோ ரஸ்ஸல் பாங்க் ஒருபோதும் ஏற்றுக்கொண்டவரல்ல. அவரது புனகதைகள் பலவும் கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்ப அக்கருத்தை வற்புறுத்தி வந்திருக்கின்றன. சமூகத்தால் கைவிடப்பட்ட மனிதர்களுக்கு ஆதரவளிப்பதே தமது எழுத்தின் குறிக்கோளென்று ரஸ்ஸல் செயல்படுகிறார். திக்கற்ற மனிதர்களே அவரது கதை மாந்தர்கள். கடைநிலைமனிதர்களின் தலைவிதியை எழுத்திலேனும் திருத்திவிடலாம் என்ற கனவுகளுடன் எழுதிக்கொண்டிருப்பவர். இரந்தும், கேட்பாரற்றும், வீதிகள் பாலங்களின் கீழ் உயிர் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய வக்கற்று நடைபிணமாகித் திரிந்தலையும் மனிதர்களைப்பற்றியதாக அவர் புனைகதைகள் இருக்கின்றன. ஒரு தொண்டு நிறுவனமாக தம்மை உருமாற்றிக்கொண்டு செயல்படும் தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தி தருகிறது. வன்முறை, வன்புணர்ச்சி, கொலை, களவு, களவாணித்தனம் ஆகிய குற்றப் பண்புகளைக் காட்டிலும் அக்குற்றத்திற்குக் காரணமான சமூகத்தைத் தண்டிப்பதில் அவருக்கு ஆர்வம். அவரைப் பொறுத்தவரை உணர்ச்சிக்குப் பலியாகி குற்றமிழைக்கிறவர்கள் தண்டனைக்குரியவர்களல்ல மன்னிக்கப்படவேண்டியவர்கள், அவர்கள் நோயாளிகள்: உரிய சிகிச்சைக்குக் காத்திருப்பவர்கள். சமூகத்தின் கயமைக்கு யார் பொறுப்பு, எப்படி நிகழ்கிறது, அதனை அளவிடுவதால் கிடைக்கும் நன்மை தீமையென்ன என்ற ஆய்வு நோக்கில் அவர் படைப்புகளை அணுகவேண்டும். சட்டமும் நீதியும் குற்றவாளிகளை தண்டிக்கமட்டுமே செய்கின்றன. பலியாடுகளுக்கு தங்கள் பாதுகாப்புகுறித்த பிரக்ஞயை உணர்த்தும் பொறுப்பு சமூகத்தின் பங்குதாரனான தனக்குமுண்டு என்றுணர்ந்து ரஸ்ஸல் வினையாற்றுகிறார்.
தண்ணீர் குழாய்ப் பழுதுபார்க்கும் தொழிலாளியான ரஸ்ஸலின் தந்தைக்குக் குடிபழக்கமும் உண்டு. சகோதரன் வியட்நாம் யுத்தத்தால் சீரழிந்து போனவன், மற்றொரு சகோதரன் சண்டையும் சச்சரவும் நிறைந்த குடும்ப மரபுப்படி, காணாமற் போகிறான். குடிகாரத் தந்தை, வறுமை, திக்கு தெரியாமல் பயணித்த பெற்றோர்கள், அவர்கள் இழைத்த கொடுமைகள் ஆகியவற்றிலிருந்து தப்ப நினைத்த ரஸ்ஸலுக்கு வார்த்தைகள் ஒளிகீற்றாக அவர் சிறைவாழ்க்கைக்குள் நுழைந்தன. அக்காலங்களில், சிறுவன் ரஸ்ஸல், ஒத்த வயதினரிடம் தேடிச்சென்று அளந்த கதைசொல்லலுக்குக் கிடைத்த வரவேற்பு அவனை உறசாகமூட்டியது, குடும்ப நரகத்திலிருந்து விடுவிக்கும் பிராணவாயுவாகவும் அமைந்தது தொடர்ந்து ஆர்வமுடன் செயல்பட்டான். பின்னாளில் ரஸ்ஸல் சிறந்த படைப்பாளியாக உருவானதின் பூர்வாங்கக் காரணமிது. அவர் வரையில், “வார்த்தைகள் என்பது அர்த்தமற்றவைகளுக்குப் பொருள் தேடும் முயற்சி, நிஜத்தை எட்ட நம்மை வழி நடத்தும் ஓர் அரூப சக்தி” தவிர “எழுத்திடம் அடைக்கலம் வேண்டுவது சிறுமைகளிடமிருந்து தப்புவதற்கு அல்ல மாறாக அதனை அடக்கி ஆளவும், நெறிபடுத்தவும், நடந்த வற்றைச் சாட்சிப்படுத்தவும், இறுதியாக படைப்பாளி தனது மனதிற்கு உகந்த மாற்றுலகை கட்டி எழுப்புவதுமாகும் (1). பதினாறு வயதிலேயே தனக்கு மனதளவில் சிகிச்சை தேவைப்பட்டதெனவும் அதன் பொருட்டே சொற்களின் உதவியை நாடியாகவும் தெரிவிக்கிறார். ஆனாலும் அப்போதைக்கு அவரது முயற்சிகள் இலக்கியம் என்பதைக் காட்டிலும் ஒருவகை சுயதேடல்களாகவே இருந்திருக்கிறது. எழுத்தை கையிலெடுக்கிற பெரும்பான்மையோர் சிறைவாழ்க்கையை தேர்வுசெய்து கதவை அடைத்து வாழ்கிற இந்நாளில், ரஸ்ஸல் எழுத்துகளென்ற சிறகை விரித்து விசும்பைத் தொட விரும்பினாராம் (1)
ரஸ்ஸல் பாங்க்கின் கதை மாந்தர்கள் விளிம்புநிலை மனிதர்கள். சமூகம் விலக்கிவைத்த கடை நிலை மனிதர்கள். இரந்தும், குற்றம் புரிந்தும் வீதியோரங்களிலும் பாலத்தின் அடியிலும் ஆதரவு கரம் தேடி வாழும் உயிர்களாகவே அவர்களைச் சந்திக்கிறோம். தங்கள் ஆசைகளுக்குத் தடங்கல்களாக இருக்கிற வாழ்க்கை முறை, வரையரைகளுடன் கூடிய கனவுகள், எதிர்கொள்ள முடியாத சக்திகள் தரும் நெருக்கடி ஆகியவற்றைப் பற்றிய புரிதலெல்லாம் அவர்களுக்கு நிறையவே உண்டு. இம்மனிதர்களின் தலைகளின் சுமையாக இருப்பது, அவர்களின் பெற்றோர்கள், அவர்கள் பூர்வீகம் அதாவது அவர்களை இன்னார் வழிவந்தவர்கள் என அறிமுகப்படுத்தும் ‘இன்னார்கள்’ இவர்கள் மீது பெரும் பாரத்தை இறக்கியிருக்கிறார்கள். என்னதான் உழைத்தாலும், சோபித்தாலும் ‘இன்னார்’ என்ற சொல் அவர்கள் தலை விதியைத் தீர்மானிப்பதாக இருக்கிறது. இதனுடன் சமூகத்துடனான அவனுடைய கொடுக்கல் வாங்கல்கள், இயற்கையை எதிர்கொள்ள முடியாத பலவீனம், மூலதன உலகின் அமைப்புமுறையென வேறு பல காரணிகளும் கால்களைப் பிணைக்கின்றன. எனினும் சிறிதுகூட இரக்கமற்ற சமூகப்பாட்டையில் தட்டுத் தடுமாறியோ, நொண்டிக்கொண்டோ, அவ்வப்போது விழுந்தெழுந்தும் மெல்ல என்றாலும் தொடர்ந்து நடக்கவே செய்கிறான். நீந்தத் தெரியாதவனைக் காப்பாற்ற முனைவதிலுள்ள சங்கடம் வாசிக்கிறபோது ஏற்படுகிறது. அவன் மூழ்குகிறபோது அவனுடன் சேர்ந்து மூழ்குகிறோம், அவன் நீர்மட்டத்திற்கு மேல் வந்து மூச்சுவிடும்போது, வாய்கொள்ள காற்றை உள்வாங்கி ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம். “நவீன உலகு ஆக்ரமித்துள்ள மனிதர்களின் இயல்பான நடவடிக்கைகள் ஊடாகவே பிரபஞ்ச உண்மைகளை நாவலாசிரியர்கள் நிலைநிறுத்த விரும்புகிறோம், அவற்றை தொடர்ந்து உயிர்ப்பிக்கவும் நம்மால் முடியும்”(2) என்று கூறும் ரஸ்ஸல் அம்மனிதர்களை தனது கதையாடலைக்கொண்டு தொடர்ந்து இயங்கச் செய்கிறார்.
அண்மையில் (2012) பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் வெளிவந்த ரஸ்ஸல் பாங்க்கின் நாவல் Lointain souvenir de la peau (3) (Lost memory of skin). இநாவலில் ரஸ்ஸலின் கவனம் பாலியல் குற்றவாளிகள் பக்கம் சென்றிருக்கிறது. ரஸ்ஸலை பொறுத்தவரை குற்றவாளிகளைக்கொண்டே ஒரு சமுதாயத்தின் ஆரோக்கியத்தை அளக்க முடியும். வெப்பமானி, பால் மானிபோல சமூகத்தின் நோயை அளக்க உதவுபவர்கள் அவர்கள். இப்பாலியல் குற்றவாளிகளைத் தங்களின் ஒரு பிரிவினர் என்பதை பெரும்பாலோர் ஏற்பதில்லை. அந்தப் பிறருக்கு இவர்களெல்லாம் சமூகத்தை சீரழிக்கும் புல்லுருவிகள், ஊருக்கு ஒதுக்குப்புறமாய் வாழவேண்டியவர்கள். நடுத்தர அல்லது பணக்கார குடும்பங்களின் வம்சாவளியில் வந்தவர்களாக இருப்பின் அவர்களை அமெரிக்க்காவின் முதுகெலும்பென கொண்டாடுவர், அரசும் அவர்கள் வாழ்வில் அக்கற்றை கொண்டிருக்கும். இவர்கள் அருவருப்பான சாக்கடை புழுக்கள் என்ற எண்ணத்துடன் பாலியியல் குற்றவாளிகளுக்கென ஒரு காலனியை (ரஸ்ஸல் கற்பனையின்படி)உருவாக்குகிறது, தவிர அவர்கள் கண்ணிற்படும் சிறுவர் சிறுமியர்கூட பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகலாம் என்கிற அச்சத்துடன் மக்கள் குடியிருப்புகளிலிருந்து காலனியை குறைந்தது 760 மீட்டர் தள்ளி அமைக்கவேண்டும் என்ற நியதிப்படி உருவான காலனி அது. அங்கு குற்றவாளிகளைக் கண்காணிக்க மின்னணு காப்புகள் இல்லை. பதிலாக உலோக குண்டுகளுடன் கூடிய சங்கிலியாலான தளை.
கதை நாயகன் லெ கிட் இருபத்திரண்டு வயது இளைஞன். செய்த குற்றத்திற்கு மூன்று மாத சிறை தண்டனை அனுபவித்துவிட்டு காலனி வாழ்க்கைக்கு வருகிறான். அவன்செய்தகுற்றம் வலைத்தளத்தில் பாலியல் தொடர்பான படங்களைப் பார்ப்பது,. போலீஸார் விரித்த வலையில் வெகு எளிதாகச் சிக்கப் போதுமானதாக இருக்கிறது. தந்தையை இழந்தவன், தாய்க்கு மகனைக் காட்டிலும் வேறுவகையான தேவைகள் இருக்கின்றன.புறக்கணிக்கப்ட்ட ‘கிட்’ போர்னோ போதைக்கு அடிமையாக நேர்ந்தது அவ்வகையில் தான். தண்டனைப்பெற்று திரும்பும் மகனை தாய் வெறுத்த நிலையில் அவனுக்கென்று கிடைத்த ஒரே ஆதரவு அவன் வளர்க்கிற பச்சோந்தி., அதனுடன்தான் அவன் வளர்ந்தான். பாலத்தின் கீழிருக்கும் குற்றவாளிகள் சேரியில் இவனைப்போல சங்கிலிக்குண்டை சுமந்து அரசுக் கண்காணிப்பின்கீழிருக்கும் நண்பர்கள் கிடைக்கிறார்கள், பொழுதும் போகிறது. அங்குதான் ஒருநாள் மாமிச மலைபோன்ற ஒரு சமூகவியல் பேராசிரியரைச் சந்திக்கிறான். பேராசிரியருக்கு நடுத்தெரு நாராயணர்களிடம் அக்கறை கொள்ள காரணம் இருக்கிறது, அவர் செய்யும் ஆய்வுக்கு அவர்கள்தான் பொருள். ஆக லெ கிட் அவருடைய ஆய்வுக்கு உதவமுடியுமென நம்புகிறார். இவர்கள் இருவரையும் கொண்டு எஜமானரான ரஸ்ஸல் தனது வேட்டையைத் தொடங்குகிறார். அவருக்கு குறி அமெரிக்காவின் அரசியல். ஒரு பக்கம் பாலியல் தொடர்பான வங்கிரங்களுக்குக் காரணமாக இருந்துகொண்டே இன்னொரு பக்கம் ஏமாந்த மனிதர்களைத் தண்டிக்கும் சொந்த நாட்டின் அரசியலை வழக்கம்போல மிகக் கடுமையாக ரஸ்ஸல் விமர்சிக்கிறார்.
குறைந்த பட்ச அன்பைக்கூட அறிந்திராத ரஸ்ஸல் பான்க்கின் கதைமாந்தர்கள் நிராதரவான நிலையில் நாவலெங்கும் அன்பிற்கு ஏங்குவதை உணரமுடிகிறது. மனம் இளகுகிறது. விழியோரங்களில் நீர்கசிவதை தடுக்க இயலவில்ல. ஏன் சிலருக்கு மட்டும் இப்படியான வாழ்க்கை? அவர்கள் செய்த குற்றமென்ன? இச்சமூகத்திற்கு அதில் பங்கில்லையா? ரஸ்ஸல் மட்டும் கேட்கவில்லை நமக்குள்ளூம் கேட்டு அழுது புரளுகிறோம். அதுதான் எழுத்தின் வெற்றி.
வெளிவந்துள்ள படைப்புகள்:
பன்னிரண்டு நாவல்கள்
Family Life (1975)
The Sweet Hereafter(1991)
The Rule pf the Bone (1005)
Affliction(1989)
Lost Memory of Skin (2011)
அவற்றுள் முக்கியமானவை.
சிறுகததைகள் 6 தொகுப்புகள் வந்துள்ளன
Searching for survivors (1975)
The Angel on the Roof (2000)
இரண்டு கவிதை தொகுப்புகள்
இவற்றை தவிர அவரது படைப்புகள் திரைவடிவமும் பெற்றுள்ளன. ‘Affliction’ முக்கியமான திரைப்படம்
——————————————————-
1. Transfugeஇதழுக்கு (Sep.2005) அளித்த செவ்வி ஒன்றில்
2. Le Magazine Littéraire, page 16 (août 2012)
3. Lointain souvenir de la peau, Russel Banks, Traduit de l’anglais (Etats-unis) par Pierre Furlan -Edition Actes Sud
சிறந்த திறனாய்வு chandramurthy1947@h0tmail.com