நண்பர் முனைவர் வெ.சுப்புராயநாயக்கரின் அறிமுகத்தால் வாய்த்த பேறு. கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் குறித்த திறனாய்வு ஒன்றை செஞ்சியில் புதுவை சீனு தமிழ்மணியின் நண்பர் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற முனைவர் பஞ்சாங்கம் நூலைக்குறித்து வைத்த கருத்துகள் அவருடன் நெருங்க வைத்தது. உலகில் மனிதமும் மனிதர்களும் அருகிவிட்டார்களோ என்ற அவ நம்பிக்கையில் வாழ்ந்தவன். அறுபது வயதில் உறவுகள், நண்பர்கள் கடந்தும் மறந்தும் வந்திருக்கிற பாதையைப் பார்க்கிறேன். இளமை வாழ்க்கை மிகக் கடினமானது. நாங்கள் வாழ்ந்து கெட்ட குடும்பம். கல்லூரி நாட்களில் தீக்கதிர் இதழ், மார்க்ஸியம், திராவிடக் கட்சிகளில் ஆர்வம் என்றிருந்தது. திராவிடக் கட்சிகளின் வேடதாரிகள் அதிகரித்த நிலையில் துக்ளக் சோ, ஸ்தாபன காங்கிரஸ் என்று ஒதுங்கினேன். இன்றைக்கு எந்த அரசியலும் உகந்ததாக இல்லை, எப்போதும் ஆளுகின்றவர்களுக்கு எதிரான மன நிலையில் இருப்பதும், பாதித்தவர் எவராயினும் அவர்பக்கம் துணை நிற்கும் உணர்ச்சிப்பிண்டமாகவும் உணருகிறேன். சட்டென்று கோபப்படவும் செய்வேன் மறுகணம் அதற்காக வருந்தி எதிர்தரப்பில் நியாயமிருப்பின் மன்னிப்புக்கேட்கவும் தயங்குவதில்லை. அநீதி இழைத்தவர்களை மன்னிப்பதுமில்லை. இந்த எனக்குள் ஒருவராக நான் கண்டெத்த நண்பர்தான் க.பஞ்சாங்கம். அவரது எழுத்துக்களை ஊடாக அறியவந்த நாள்முதல், அவருள் நானா என்னுள் அவரா என விளங்கிக்கொள்ள முடியாத குழப்பம். அவரது பாசாங்கற்ற மொழியும், நலிந்தோருக்கான குரலும் என்னை வசீகரிப்பவை. நண்பரின் நவீன இலக்கிய கோட்பாடுகளும், திறனாய்வு கட்டுரைகளும் கைக்கு கிடைத்துள்ளன வாசித்துக்கொண்டிருக்கிறேன். தமிழ் மொழியிலும், தொல் இலக்கியங்களிலும் எனக்குப் போதாமைகள் உண்டு, அவை அடக்கமல்ல உண்மையும் அதுதான் என்பதால் அவருடைய நவீன இலக்கியங்கள் திற்னாய்வுகளை முன்வைத்தும், பிற ஆளுமைகள் குறித்தும் (நாவல், கவிதைகள்) ‘பஞ்சாங்கமென்ற பிரபஞ்சம் ‘ என்றொரு தொடரை ஜனவரியிலிருந்து எழுத இருக்கிறேன். வேறு நல்ல தலைப்பு கிடைத்தால் அது மாறவும் கூடும்.
—————————-