கடந்த வாரம்?
கடந்த 3 ஆண்டுகளாக பாரீஸிலுள்ள ‘les comptoirs de l’Inde’ சங்கத்தினர் இந்திய புத்தக விழா என்ற ஒன்றை நடத்திவருகிறார்கள். இரண்டு நாட்கள் நிகழ்ச்சி. சனிக்கிழமை (16 நவம்பர்)அதில் கழிந்தது. மகன், மருமகள், பேரன் இளையமகள் என்று எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி பாரீஸில் இருக்கிறது. நவம்பர் மாதத்தில் குடும்பத்தில் மூவருக்குப் பிறந்த நாள் அதில் இருவருக்கு மாதத்தின் தொடக்கத்தில் வருகிறது. அதனை விமரிசையாக கடந்த ஞாயிறன்று பாரீஸில் கொண்டாடினோம். பேரன் உடல் நலம் சரியில்லாததால் கூடுதலாக இரண்டு நாட்கள் தங்க வேண்டியதாகிவிட்டது. எதிர்வரும் ஜனவரி 20, 21,22 தேதியில் கோவையில் தாயகம் கடந்த தமிழ் என்ற பெயரில் மாநாடொன்றை நடத்த இருக்கிறார்கள். நிகழ்ச்சிக் குழுவில் எனக்கும் இடம் அளித்திருக்கிறார்கள், கட்டுரை ஒன்றும் வாசிக்கிறேன். முதலில் எனக்கு ‘தாயகம் பெயர்தல் வலியும் வாழ்வும் ” என்ற தலைப்பில் கட்டுரை வாசிக்க கூறினார்கள், ஆனால் அமெரிக்க ஐரோப்பிய தமிழிலக்கியம் குறித்து கட்டுரை வாசிக்க இருந்த நண்பர் அதனைத் தவிர்த்ததால், அத் தலைப்பில் எனக்கு வாசிக்க சாத்தியமாவென நண்பர் மாலன் கேட்க சம்மதித்துவிட்டேன். சிறுகதைகளின் அடிப்படையில் ஐரோப்பிய அமெரிக்க எழுத்தாளர்களை அணுகுவது படைப்பாளிகளின் ஆளுமையை கூடுதலாக புரிந்துகொள்ள உதவுமென நினைக்கிறேன். நாவல்களை வாசிக்கிறபோது எல்லோருடைய படைப்புகளும் உரிய நேரத்தில்கிடைப்பதில்லை பல எழுத்தாளர்களை தவறவிட சாத்தியமிருக்கிறது. இணையத்தில் முக்கிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் கிடைப்பது மற்றொரு அனுகூலம்.
—————————————————
The Lunch Box
ஏறக்குறைய ஐந்து நாட்களை முழுவதுமாக வீணடித்துவிட்டு (எழுதாமல்) செவ்வாய் இரவு கிட்டட்ட ஐந்து நாட்களும் 1000 கி.மீட்டருக்கு மேல் காரோட்டிய களைப்பில் படுக்கசென்றவனின் மறுநாளும் சோர்வில் கழிந்ததென்று சொல்ல வேண்டும், கடுமையான காய்ச்சல் மனைவியை காலையில் கடையில் விட்டுவிட்டு வீட்டுக்குத்திரும்பிய பிறகு, அவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு. வாடிக்கையாளர் ஒருவர் The Lunch Box திரைப்படத்தின் பிரத்தியேகக் காட்சிக்கு இரண்டு அனுமதி சீட்டுகள் இருக்கிறதென்கிறார், வேண்டுமா என்று கேட்டார். திரைப்பட அரங்கில் படம் பார்த்து ஒரு மாமாங்கம் இருக்கும். எனினும் பெயரைக்கேட்டவுடனேயே காய்ச்சல், களைப்பு போயே போய்விட்டது. 2013 கான் திரைப்படவிழாவில் கலந்துகொண்டு தீவிர விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டுதலைப் பெற்றிருந்த படம். எனவே படத்தைப் பார்த்தே ஆகவேண்டும், அழைப்பிதழைக் கடையில் கொண்டுவந்து கொடுக்கச் சொல் என்றேன். நேற்று மாலை ஏழுமணிக்கு எங்கள் கடைக்குசென்று அழைப்பிதழை பார்த்தபோதுதான் டிசம்பர் 12ல் ஐரோப்பாவெங்கும் திரையிட இருக்கும் படத்தின் பிரத்தியேக காட்சி என்று புரிந்தது. படம் துவக்குவதற்கு முன்பாக படத்தின் மகாத்மியங்களை மிகையின்றி தெரிவித்த அறிவிப்பாளர் பெண்மணி, திரையிட்டு முடிந்ததும் படக் குழுவினருடன் உரையாடலாம் எனத் தெரிவித்தார். இதனை நான் எதிர்பார்க்கவில்லை. கையில் புகைப்பட கருவி இல்லாதது ஏமாற்றத்தை தந்தது ஒரு பக்க மெனில், கைத்தோலைபேசி காமெராவை சோதித்து பார்த்தபோது பாட்டரி காலி என்றது. நொடிந்து போய்விட்டேன்.
இனி படத்திற்கு வருகிறேன்:
பம்பாய் என்றவுடன் எது ஞாபகத்திற்கு வருகிறதோ இல்லையோ டப்பா வாலாக்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள். இவர்களைப்பற்றி முழுமையாக தெரியவந்தது, ஓர் பிரெஞ்சுக்காரர் தயாரித்திருந்த குறும்படத்தின் மூலமாக. ஒரு தேர்ந்த ராணுவப் படையைப்போல காலம் மற்றும் ஒழுங்கில் இம்மியும் பிசகாமல் இயங்கும் அம்மனித ரொபோக்களின் வினைத்திறன் கண்டு பிரம்மித்திருக்கிறேன். பம்பாய் நகரின் எஸ்தெட்டிக்கில் நீளமான சுமைகூடைகளில் பயணிக்கும் Lunch Box களும் ஓர் அங்கம். ஆனாலும் அதனை முதன் முறையாக ரித்தேஷ் பத்ரா என்ற இளைஞர் நன்றாக பயன்படுத்திக்கொண்டு தானொரு சிறந்த கலைஞர் என்பதை நிரூபணம் செய்திருக்கிறார். வாழ்க்கை என்பது எதிர்பாராத சம்பவங்களால் முன் நகர்த்தப்படுவது. ஒழுங்குடனும் தவறுதலுக்கு வாய்ப்பே இல்லை என நம்பப்படுகிற டப்பாவாலாக்களின் செயல்பாட்டில் எங்கோ ஓரிடத்தில் தவறு நிகழ்ந்துவிடுகிறது, அப்படியான தவறு நிழ்வதற்கான சாத்தியத்தையும் நடந்தால் விளைவு என்னவாக இருக்குமெனவும் இளஞர் ரித்தேஷ் மித்ரா யோசித்ததின் பலன் இத்திரைப்படம். நல்ல சிறுகதைகளில் இடையில் திடீரென்று கதையோட்டத்திற்கு முரண்படுவதுபோல ஒரு பத்தி வரும், வாசகனுக்கு அவகாசம் கொடுக்க கதையாசிரியர் இந்த உத்தியைக் கையாண்டிருப்பதுபோல தோன்றினாலும், அச்சிறுகதைக்கான பொறியே அந்த விதிவிலக்கான பத்தியில் இருக்கிறதென்பது தெரியவரும். இந்தியாவின் கோடானுகோடி மத்திய வர்க்கப் பிரிவுக்குள் ஒர் இளம் பெண் – ‘இலா சிங்'(நிம்ரத் கௌர்)கிற்கு ஏழெட்டு வயதில் ஒரு மகளும் உண்டு. அவள் குடியிருப்புக்கு மேலே வசிக்கும் ஓர் வயதான ஆண்ட்டியின் சமையல் ஆலோசனையின்படி கணவனுக்கு அலுவலகத்திற்குக் கொடுத்தனுப்ப மதிய உணவு தயார் செய்கிறாள், டப்பாவாலா வருகிறார் ஒரு பெரிய சங்கிலித்தொடர்போல பயணித்த அந்த லன்ச் பாக்ஸ் அரசாங்க அலுவலகமொன்றை அடைகிறது, மனைவியை இழந்த வயதான அரசாங்க உத்தியோகஸ்தர் ஒருவர் சாப்பாட்டு அடுக்கைப் பிரித்து ருசித்து சாப்பிடுவதாக அடுத்த காட்சி. வீட்டிற்கு லன்ச் பாக்ஸ் மாலை திரும்ப வருகிறது. அது காலியாக இருப்பதைப்பார்த்து அவளுக்கு சந்தோஷம். முன்னிரவு அழைப்பு மணி கேட்டு, இளம்மனைவி கதவைத் திறக்கிறாள். உள்ளே நுழைய இருப்பவன் வயதான அரசு அலுவலன் என நாம் நினைக்க அவள் கணவனாக வேறொருவனை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர். இவள் தயாரித்து அனுப்பிய மதிய உணவை சாப்பிட்ட ஆசாமி (Irrfan Khan) வேறு ஆள் என நமக்குப் புரிகிறது. பிறழ்வதற்கு வாய்ப்பே இல்லையென நம்பப்படுகிற டப்பாவாலாக்கள் செயல்பாட்டில் தவறு நிகழ்ந்திருப்பதும் கணவனுக்குப் போகவேண்டிய லன்ச் பாக்ஸ் வேறொருவருக்குப் போய் சேர்ந்ததையும் எப்பொது அறிய வருகிறோமோ அப்போதே திரைப்படம் நம்மை அணைத்துக்கொள்கிறது. வீடு திரும்பிய கணவனிடம் மாடிவீட்டு ஆண்ட்டியின் யோசனையின்படி செய்த சமையல் நன்றாக இருந்ததா? எனகேட்கிறாள் அவள் செய்தனுப்பாத காய்கறியின் பெயரைக் கூறி நன்றக இருந்தது என போகிற போக்கில் கணவன் கூறுகிறான். இளம் மனவிக்கு என்ன நடந்திருக்கும் என்பது விளங்குகிறது. மறுநாளும் மேல் மாடி ஆண்ட்டியிடம் யோசனை. ஆண்ட்டி தனது சமையற் குறிப்பின் பலாபலனை தெரிந்துகொள்ளும் ஆவலில், லன்ச் பாக்ஸைப் பிரித்து உணவைச் சாப்பிட்டவனைத் துண்டுக் காகிதம் எழுதி விசாரிக்கத் தூண்டுகிறாள். முகம் தெரியாத ஆசாமியுடனான கடித உறவு லன்ச் பாக்ஸ் மூலமாக தொடருகிறது. தொடக்கத்தில் மேல் மாடி ஆண்ட்டி தூண்டுதலில் கடிதம் எழுதினாலும், பின்னர் இளம்பெண்ணுக்கும் சரி வயதான அலுவக ஊழியருக்கும் சரி அதைத் தொடர்வதற்குக் காரணங்கள் உள்ளன. மெல்ல இரு தரப்பிலும் காதற்கோட்டைவகையினாலான காதல் அரும்புகிறது. டப்பாவாலாக்கள் தவறை இருவருமே சுட்டிக்காட்டுவதில்லை. எத்தனை நாளைக்கு இப்படி எழுதிக்கொண்டிருப்பது சந்திக்கலாமே என்கிறாள். வயதான ஊழியரும் சம்மதிக்கிறார், சந்திக்க வந்த அரசு ஊழியர் தனது வயது உறைக்க, இளம்பெண்ணை சந்திக்காமலேயே, மாற்றல் கேட்டு பெற்று நாசிக் போய்விடுகிறார்
தமிழில் அடிக்கடி நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்கள் என்பார்கள். அப்படித்தான் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் இர்பான் கான், நிம்ரத் கௌர், இர்பான் கானிடம் பயிற்சி பெற வரும் சித்திக் என்ற நடிகர் எவரையும் நடிகர்களாகப் பார்க்க முடிவதில்லை. திரைப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லை. லன்ச் பாக்ஸ்யையும் நடிகர் பட்டியலில் சேர்க்கவேண்டும். மேல் மாடி ஆண்ட்டியின் முகத்தை கடைசிவரை இயக்குனர் காட்டவில்லை. பார்வையாளர் ஒருவர் கலந்துரையாடலில் ஆண்ட்டியாக நடித்தவரை ஏன் கடைசிவரை காட்டவில்லை எனக்கேட்டதற்கு. இயக்குனர், “பெண்கள் இருவருமே சிறையில் இருக்கிறார்கள் (மேல் மாடி ஆண்ட்டியின் கணவன் கோமாவில் இருக்கிறான், அவனைப் பராமரிப்பதன்றி அவருக்கு வேறுவேலைகள் இல்லை என இடையில் வசனம் வருகிறது) பக்கத்து சிறைவாசியுடன் பேசுகிறபொழுது ஒரு முகம் போதும்”, என்றார். இன்னொரு ரசிகர் டப்பாவாலாக்கள் மெல்ல எண்ணிக்கையில் குறைத்துவருவதாகக் கேள்விபட்டேன், அதுவும் தவிர நவீனமயமாகிறது என நம்பப்படும் நகரத்தில் டப்பாவாலாக்கள் தொழில் நீடிக்க முடியுமா எனக்கேட்டதற்கு, இயக்குனர் கூறிய பதில்: “டப்பா வாலாக்கள் பம்பாய் வாழ்க்கையின் ஓர் அங்கம், மரபாக ஒரு நூற்றாண்டுக்கு மேலாக எங்களுக்குப் பழகிவிட்டது, இன்னொரு நூறாண்டுக்குப் பிறகும் எங்கேனும் ஒரு டப்பாவாலாவை நீங்கள் பம்பாயில் எதிர்கொள்ள நேரும் அதுதான் இந்தியா என்றார். படம் முடிந்த போது பார்வையாளர்கள் வெகு நேரம் எழுந்து நின்று கைத்தட்டினார்கள். நடிகை படத்தில் தோன்றியதைவிட மிகவும் இளபெண்ணாக இருந்தார். நல்ல ஆங்கிலத்தில் உரையாடினார். முதல் நாள் சென்ற லியொன் (Lyon) நகரைவிட இந்த நகரில் (Strasbourg) குளிர் அதிகம் நல்ல வேளை ஒயின் என்னைக் காப்பாற்றியது எனச்சொல்லி சிரித்தார்.
—————————————————————-
வணக்கம்
ஐயா
இன்னொரு நூறாண்டுக்குப் பிறகும் எங்கேனும் ஒரு டப்பாவாலாவை நீங்கள் பம்பாயில் எதிர்கொள்ள நேரும் அதுதான் இந்தியா என்றார்
அருமையாக எழுதியுள்ளிர்கள்..வாழ்த்துக்கள் ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-