1. வ.ஐ.ச.ஜெயபாலனின் ‘குறுந்தொகை’ -இந்திரன்
தீராநதி அக்டோபர் இதழில் க்ரியா வெளியீடாக வந்துள்ள கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் ‘குறுந்தொகை’ கவிதைத் தொகுப்புக் குறித்து இந்திரன் நூல் மதிப்புரை எழுதியுள்ளார். இன்று தமிழ்க் கவிதை வெளியில் இயங்குகிறவர்களுள் வ.ஐ.ச. ஜெயபாலன் எனக்கும் மிகச மிக மிக முக்கியமான கவிஞர். ‘இந்த வாரத்திற்கு ஒன்று, அந்த இதழுக்காக ஒன்று’ என எழுதும் படைப்பிலக்கியவாதியல்ல. ஓர் அசலானக் கவிஞர்.
சிலவற்றை சிலர்தான் மதிப்பிடவேண்டும். தங்கத்தை உரசிப்பாரென்று இரும்பு அடிக்கும் கொல்லனிடம் கேட்கமுடியாது, பொற்கொல்லனைத்தான் அனுகவேண்டும். வ.ஐ.ச. ஜெயபாலன் குறித்தும் அவர் கவிதை நரம்புகளைச் சுண்டி அவற்றின் உறுதிப்பாட்டையும் நெகிழ்ச்சியையும் பேசவல்லவர் இந்திரன். மதிப்புரையில் ஜெயபாலன் கவிதைக்குறித்து சற்று கூடுதலாக எழுதியிருக்கலாம் என்கிற மனக்குறை எனக்கு இருந்தபோதிலும், அக்கவிதை தொகுப்பைக் குறித்து முன்வைத்திருக்கும் கருத்து புறம் தள்ளக்கூடியது அல்ல. தமிழகத்து எழுத்தாளர்களின் புனைவுகளோடு ஒப்பிடுகிறபோது அண்மைக்காலங்களில், கவிதைகளில் நமது எதிர்பார்ப்பு மழுங்கடிக்கப்டுகிறது என்பது உண்மை. எனது மனநிலைக்கு இசைவாக நண்பர் இந்திரன் கருத்து இருப்பதால் அதனை நண்பர்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி:
“தற்கால தமிழகத்துக் கவிஞர்களுக்கு வாழ்க்கையிலிருந்து சவால்கள் ஏதுமில்லை. எனவே அவர்கள் மொழிக்குள் சவால்களை உருவாக்கிக்கொண்டு கவிதைகளைப் புனைகிறவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஈழத்துக் கவிஞர்களின் முன்னால் வாழ்க்கை பல்வேறு சவால்களை முன்வைத்திருக்கிறது. எனவே ஈழத்துக் கவிஞர்கள் தாங்கள் பாடுபொருள்களை அன்றாட வாழ்க்கையிலிருந்து எடுத்துக்கொள்கிறார்கள். அடுத்ததாக வ.ஐ.ச.ஜெயபாலன் போன்ற கவிஞர்கள் நார்வே போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கிறபோது தான் ஒரு தமிழன் என்று சொல்லவேண்டிய கட்டாயம் அவர்கள் வாழ்தலுக்கு அத்தியாவசியமாகிறது. ஆனால் தமிழகத்துக் கவிஞனுக்கு தமிழ் அடையாளம் பேசவேண்டிய கட்டாயமில்லை. அவன் தன்னை ஒரு சர்வதேசக் கவிஞனாகக் கருதிக்கொள்வதற்கான உல்லாசமும், தான் தமிழனல்ல இந்தியன் என்று பேசக்கூடிய ஒரு மருட்சியும் வாய்த்திருக்கிறது. அடுத்ததாக தமிழகத்தில் தோன்றிய புதுக்கவிதையின் பிறப்பே மரபுக் கவிதையை மறுதலித்து அதற்குப் பதிலியாக வேறொரு கவிநடையை உருவாக்கும் நோக்கம் கொண்டதாக இருந்திருக்கிறது எனவேதான் சங்கக் கவிதை நோக்கி புதுக்கவிதை நகரவேண்டும் எனப் பல தமிழகத்து நவீன கவிகள் பேசிய போதிலும் வ.ஐ.ச. ஜெயபாலனைப்போல சங்கத் தமிழின் மரபார்ந்த மொழி வெளிப்பாட்டை அவர்கள் கைக்கொள்ளவில்லை” (தீராநதி இதழ் அக்டோபர் 2013 பக்கம் 47)
இது துறைசார்ந்த நண்பர்கள் கவனத்திற்கொள்ளவேண்டிய ஒன்று. இந்த இடத்தில் புலம்பெயர்ந்து தமிழ் படைப்பிலக்கியத்தில் ஆர்வம்காட்டுகிறவன் என்ற வகையில் எனக்கும் ஒன்றைச் சொல்லவேண்டும். சிறு புரட்சி என்று ஒன்றிருக்கிறது. ஆங்கிலத்தில் அதனை தற்போது Micro Revolution’ என்கிறார்கள். இது வேறொன்றுமல்ல தனிமனிதனின் மறுதலிப்பு, கலகக் குரல், உடன்பாடில்லை என்கிறபோது ‘இல்லை’ சரியல்ல எனும் குணம். ஆரோக்கியமான சமூகத்திற்கு இணக்கமாக இருப்பது எத்துணை அவசியமோ, மறுதலிப்பும் அவசியம். பிறரைக் காட்டிலும் அறிவையும் உணர்ச்சியையும் சமமாகப் பாவிக்கிற கலை இலக்கிய படைப்பிலக்கியவாதிகளுக்கு இப்பொறுப்புக் கூடுதலாக இருக்கிறது. தமிழ் நாட்டிலும் சவால்கள் இல்லாமலில்லை, ஆனால் அங்குள்ள பிரச்சினை அவர்கள் அதனைக் கணக்கில் கொள்வதில்லை. வெளிநாட்டில் வாழும் படைப்பாளிகள் வ.ஐ.ச. ஜெயபாலன்போன்றவர்கள் செயல்படுகிறபொழுது படைப்பு மட்டுமே அவர்கள் சிந்தனையில் குறுக்கிடுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் எழுதுகிற பலருக்கும் வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அவர்கள் கவனமெல்லாம் சக கவிஞனை, சக படைப்பாளியை, சக மொழிபெயர்ப்பாளனை, எப்படி வீழ்த்துவதென்ற சிந்தனைக்கு நேரத்தை அதிகம் செலவிடுகிறபோது எங்கிருந்து அதில் படைப்பு பிறக்கும்? இந்திரன் கருத்து போய்ச்சேரவேண்டியவர்களிடம் போய்ச்சேரவேண்டும்.
2. பிரான்சில் என்ன நடக்கிறது.
கொன்க்கூர் இலக்கிய பரிசு 2013.
கடந்த நவம்பர் 4ந்தேதி அன்று பிரெஞ்சு புத்திலக்கிய உலகு 2013ம் ஆண்டுக்கான கொங்க்கூர் இலக்கிய பரிசை (Le prix Goncourt ) அறிவித்திருக்கிறது. பரிசுபெற்ற நாவலின் பெயர் ‘Au Revoir Lதூ-Haut’ நாவலாசிரியர் Pierre Lematre. தேர்வு அனைத்தும் வெளிப்படை. பன்னிரண்டு சுற்றுகள் தேர்வு நடைபெற்றது இறுதிச்சுற்றில் பத்து நடுவர்களில் ஆறுவாக்குகள் மேற்கண்ட நாவலுக்கும், நான்கு வாக்குகள் Frederic Verger எழுதிய ‘Arden’ நாவலுக்கும் கிடைத்தன. இங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய இலக்கிய பரிசை இம்முறை ஓர் குற்ற புனைவு நாவலுக்கு முதன்முறையாக வழங்கியிருக்கிறார்கள்.
————————-