முதல்நாள்மாலை ஐந்துமணிக்குமேல், எங்கள் விடுதியிலிருந்து புறப்பட்டுச்சென்றோம். இருமருங்கிலும் அணிவகுத்துநிற்கும் மரங்கள். எதிர்ப்படும்மனிதர்களைகவனமுடன் தவிர்த்து, எழுத்தோடும் நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்தபடி, கும்பல்நடுவே “வைராசாவை“ என நம்மைப் பார்த்து தூண்டில்போடும் ‘மூணுசீட்டு‘ ரக மங்காத்தா ஆசாமிகளின் வசீகரிக்கும் குரலை சாமர்த்தியமாக ஒதுக்கிவிட்டு, வேற்றுலக மனிதர்கள்போலவும், இடைக்கால மனிதர்கள் போலவும், வரலாற்று புருஷர்கள்போலும் வேடம்பூண்டு ஜீவிக்கும் மனிதர்களையும், பூக்கடைகளையும், ஐரோப்பாவின் பெரியநகரங்களின் சுற்றுலாப்பகுதிகளில் காண்கிற பிறஅம்சங்களையும் போகிறபோக்கில் ரசித்து, மகிழ்ச்சியுடன் உலாவர உதவும் ரம்பலா வீதியைக்குறித்து நிறைய எழுதலாம். பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் லாரம்பலாவென்று எங்கள் கைவசமிருந்த வழிகாட்டிக் குறிப்பில் சொல்லப்பட்டிருந்தாலும் கட்டலோன் மொழியில் லெரம்பால்என்கிறார்கள்; அரபுச் சொல்லான ரமலாஸ் அதற்கு மூலம் என்கிறார்கள்
பிலாசா தெ கட்டலோனாவில் ஆரம்பித்து இறங்கி கிழக்கே நடந்தால் கொலம்பஸ் நினைவுத் தூண்வரை லாரம்பலாவின்ஆதிக்கந்தான். கொலம்பஸ்நினைவுத்தூணைக்கடக்கிறபோது, சிலுசிலுவென்றுகாற்று, உப்புநீரின்மணம், வரிசை வரிசையாக அணிவகுத்து நிற்கும் உல்லாசப்படகுகள், வலதுபக்கம்சற்றுதூரத்தில் துறைபிடித்துநிற்கும் உல்லாசக்கப்பல்கள், துறைமுகம், சரக்குக்கப்பல்கள்– துறைமுகத்தை நெருங்கியதும் அனுமதிக்காகக் காத்திருக்கும் சரக்குவாகனங்கள்.
கரையோரங்களில் கலைஞர்கள் உருவாக்கியுள்ள மணற்சிற்பங்களை வியந்துமகிழலாம். மனமிருந்தால்அக்கலைஞர்களுக்கு உதவலாம், கிராஸியாஸ் என்றுசொல்லி வாங்கிக்கொள்கிறார்கள். பிறகு தண்ணீர்தண்ணீர்… மத்தியதரைக்கடல்: பார்த்தவுடன் ஸ்படிகம்போன்றகடல்நீரைக் கைகொள்ள அள்ளிக்கொள்ளத்தோன்றும். நீலநிற மஸ்லினைப்போர்த்திக்கொண்டதுபோல கடலுக்கடியில் மணல்மூடியதரை; அதில் நொடிக்கொருதரம் நட்சத்திரக் கும்பலொன்று நிதானமாய் அசைந்து செல்வதுபோல மீன்கள்நீந்தும் அழகையும், கரகாட்டக்காரியின் பாவடைபோல விரிந்து பின்னர்நிலைக்குத்திரும்பும் நீர்த்திரைகளையும் பார்த்துமகிழநேரம் போதாது.
லாரம்பலாவை வீதி என்பதைக்காட்டிலும், அகன்ற நடைபாதை என்றுசொல்வதுமிகவும் பொருத்தமானது. சுமார் 150 அடி அகலங்கொண்ட அச்சாலையில் சுமார் ஐம்பது அடிகளை இருமருங்கிலும் வாகனங்களின் போக்குவரத்துக்கென்று ஒதுக்கியிருக்கிறார்கள், மீதியுள்ள சாலை மக்கள் நடமாட்டத்திற்கென்று தாரைவார்க்கப் பட்டிருக்கிறது. பார்சலோனா நகரில்பார்க்கவேண்டியவை என்று நாங்கள்தீர்மானித்திருந்த அல்லது அப்படியொருதீர்மானத்திற்கு எங்களைக் கொண்டுவந்திருந்த புகழ்வாய்ந்த இடங்கள், கட்டிடங்கள், போதைதரும் வெளிகள் அனைத்துமே இந்தரம்பலாவைச் சுற்றியிருந்தன என்பதால், பார்சலோனாவில் தங்கியிருந்த ஐந்துநாட்களிலும் ரம்பலாவின் காலைநேரங்களும்மாலை நேரங்களும் பழகியிருந்தன.
ரம்பலா பாதசாரிகளை,கடற்கரையைநோக்கிச்செல்லுபவர்கள், கடற்கரையிலிருந்து திரும்புபவர்கள் என இருவகையாகப் பிரித்தாலும் உலகின் எல்லா பெரியநகரங்களின் பாதசாரிகளின் கால்களுக்குள்ள குணங்கள் ரம்பலா பாதசாரிகளுக்கும் உண்டென்பதை மறுப்பதற்கில்லை, அர்த்தமற்று கால்போனபோக்கிலே நடப்பவர்கள், அவசரகதியில் எதையோஅல்லது எவரையோ தேடிப்போகிறவர்களைப் போலநடையும் ஓட்டமுமாய் விரைந்துசெல்பவர்கள், தேவதைகள், தேவர்கள், பரத்தைகள், அசுரர்கள், பணம்படைத்தவர்கள், பிச்சைஎடுப்பவர்கள், கலைஞர்கள், ஓவியர்கள், ரோஜாவிற்கும் பாகிஸ்தானியர், குளிர்பானங்கள் அடைத்த சிறுடின்களைக் கூவிவிற்கும் சிவப்பிந்தியர், ஏமாளிகளுக்காகக் காத்திருக்கும் கிழக்குஐரோப்பிய ஆண்கள், பெண்கள், சிறுவர்கள்; மலைப் பாம்புபோலமரத்தில் சுற்றிக்கொண்டு கஞ்சாபுகைக்கும் ஆசாமி, அவனருகே வானத்தை விழிவெண்படலத்தால் அளந்தபடிசொள்ளொழுகஉறங்கும் பெட்டை, திரிசடை சிவனார் போன்ற தலைமுடியும் சிவந்தகண்களுமாய் வயலினா, மாண்டலினா எனத் தீர்மானிக்கமுடியாத இசைக்கருவியை வாசிப்பதில் லயித்திருக்கும்மனிதர்; புராண இதிகாசநாயகர்களாக, சரித்திரபுருடர்களாகவும், வேடம்தரித்து வெள்ளை அல்லது பொன்வண்ணத்தில் நாள்முழுக்க, பாதசாரிகள் இரக்கப்பட்டுஅல்லது தாமாக மனமுவந்துதரும் ஒற்றைநாணயத்தை வாங்குகிறநேரங்கள் தவிர்த்துபிறநேரங்களில் அசைவின்றி மணிக்கணக்கில் சிலைபோலநிற்கும் வீதிக்கலைஞர்களென ரம்பலாபற்றிச் சொல்லநிறைய இருக்கிறது
– – தொடரும்