1. கீற்று இணைய தளம்: க. பஞ்சாங்கத்தின் கட்டுரைகள்
அண்மையில் கீற்று இணைய இதழில் நண்பர் க. பஞ்சாங்கத்தின் கட்டுரைகள் இரண்டை வாசிக்க நேர்ந்தது. அவரது இலக்கிய திறனாய்வு கட்டுரைகளை தற்போது அக்கறையுடன் வாசித்துவருகிறேன். தற்கால இலக்கியவெளியில் தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கிற பலரின் கட்டுரைகளில் இருக்கும் புழுக்கம், வெற்று சுமைகள் இவர் எழுத்தில் இல்லையென்பது வாசகர்களுக்குள்ள சௌகரியம். எடுத்துரைக்கும் பொருளும், எடுத்தாளும் சொற்களும் அவரொரு மூதறிஞர் என்பதை உறுதிபடுத்துபவை. அவர்மொழியின் வாயசைவையும், தொனியின் முழு பரிமாணத்தையும் உள்வாங்கிக்கொள்ள குறைந்த பட்ச அக்கறை போதுமானது. எழுத்திலுள்ள அபூர்வ கவர்ச்சிக்கு, அடிப்படையில் அவரொரு கவிஞர் என்பது காரணமாக இருக்கலாம். வழக்கம் போலவே நுட்பமானதொரு அவதானிப்பு. .
அ. தொல்காப்பியரின் நன்நயப் பொருள்கோள்
தொல் இலக்கியங்களைப் பற்றிய அவரது பார்வை ஒருபோதும் பொதுவில் பலரும் பயணிக்கிற தடத்திற்கு உரியதல்ல. நம்மை வியப்பில் ஆழ்த்துவதெற்கென்றே சில கேமரா கோணங்களை பிரத்தியேகமாக உபயோகிக்கும் திறன் அவருக்குண்டு. நவீன இலக்கியத்தின் பல சிந்தனைகளை தொல் காப்பியர் அன்றே முன் மொழிந்திருக்கிறாரென நண்பர் சான்றுகளை முன் வைக்கிறபோது, வியப்புடன் பெருமிதம் கொள்ளவேண்டியிருக்கிறது
ஆ. ஞானியும் தமிழ்தேசியக் கருத்தாக்கமும்
கோவை ஞானியின் தமிழ் தேசியம் குறித்து விரிவானதொரு பார்வை இக்கட்டுரை. ஆசிரியர் ‘தேசியம்’ என்ற உணர்வின் விளை நிலம் மேற்கு நாடுகளாக இருக்க முடியாது, தமிழகமாக இருக்கலாமென்ற ஊகத்துடன் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறார். கோவை ஞானி வழக்கமாக நாம் எதிர்கொள்கிற காம்ரேட் அல்ல, கார்ல் மார்க்ஸைக் உணர்ச்சியுடன் வாசிப்பவரல்ல அறிவுடன் வாசிப்பவர் அதனால்தான் அவரால் தமிழ் தேசியம் பேசமுடிமிகிறது. நண்பர் பஞ்சுவின் இக்கட்டுரை, ஞானி தமிழ் தேசியத்தைக் கட்டமைக்க கையிலெடுத்த உபகரணங்கள் என்ன, அவர் வடிவமைத்த தேசியத்தின் அடிப்படை பண்புகள் என்ன என்றெல்லாம் சொல்லிக்கொண்டு போகிறது. நூல்களிலுள்ள ஞானியின் கருத்துகளை போகிறபோக்கில் வழிமொழிந்துவிட்டுச்செல்லாமல் நண்பர் பஞ்சு தமிழ் தேசியத்தின் இன்றைய நிறைகுறைகள் குறித்தும் விவாதிக்கிறார்.
http://www.keetru.com/index.php?option=com_aisection&id=24989&Itemid=139
2. நூல் தொகுப்பாளர் பழங்காசு ப.சீனுவாசன்
நண்பர் மு.இளங்கோவன் தமது இணையதளத்தில் அறிமுகம் செய்துள்ள பெருந்தகை. சொல்லப்பட்டிருந்த தகவலைப் படித்தபோது சுவாசமே நின்று போய்விடும்போல இருந்தது. இந்தியா போன்ற ஒரு நாட்டில், இந்த யுகத்தில் இப்படியும் சில மனிதர்கள். ஒரு நூற்றாண்டு அறிவு கருவூலத்தை தாய்க் கருவை சுமப்பதுபோல கட்டிக்காத்து வருகிறார். வாழ்க நீ எம்மான்! நண்பர் இளங்கோவனுக்கு நன்றிகள்.
http://muelangovan.blogspot.in/
3. பிரான்சில் என்ன நடக்கிறது?
நேற்றைய பிரெஞ்சு தினசரியில் இப்படியொரு செய்தி, வாசித்து முடித்தபோது வியப்பாக இருந்தது.
கடந்த 26 செப்டம்பர் 2013 அன்று பிரான்சு நாட்டைச்சேர்ந்த ஓர் இளம் மலையேறி ஆல்ப்ஸ் மலையில் சிறியதொரு பேழையை கண்டெடுத்திருக்கிறார். திறந்து பார்த்தபோது அதனுள் சிறு சிறு சுருக்குப் பைகளில் விலையுயர்ந்த கற்கள் இருந்திருக்கின்றன. அப்பைகளில் ‘Made In India’ என்ற வாசகம் இருந்தனவாம். அவற்றின் மதிப்பு 130000 யூரோவிலிருந்து ளூ246000 யூரோவரை எனசொல்லபடுகிறது. இளைஞர் கண்டெடுத்த புதையலை, தனக்கென ஒதுக்கிகொள்ளாமல் காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார். தொலைத்தவர்களோ அவர்களின் வாரிசுதாரர்களோ கேட்டுவந்தால் அவர்களிடம் ஒப்படைப்பார்களாம், வரவில்லையெனில் புதையல் கண்டெடுத்த இளைஞருக்கு கிடைக்குமென செய்தி சொல்கிறது உடையவர்கள் இந்தியர்கள் எப்படி?
இரண்டு விமான விபத்துகள்
இந்திய நாட்டிற்குச் சொந்தமான இரண்டு விமானங்கள் ஆல்ப்ஸ் மலையில் விபத்துக்கு உள்ளாகியிருக்கின்றன
முதல் விபத்து நடந்தது 1950ல். ஏர் இந்தியாவிற்குச் சொந்தமான Malabar Princess 1950ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ந்தேதி விபத்திற்கு உள்ளாகியிருக்கிறது பயணம் செய்த 58 பேரும் இறந்திருக்கிறார்கள். இரண்டாவது விபத்து, பதினாறு ஆண்டுகள் கழித்து அதாவது 1966ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ந்தேதி நடந்திருக்கிறது. விபத்துக்குள்ளான விமானத்தின் பெயர் கஞ்சன்ஜுங்கா. இவ்விமானமும் ஏர் இந்தியாவிற்குச் சொந்தமானது. நியுயார்க்- பம்பாய் என பயணித்த அவ்விமானம் 117 பயணிகளுடன் அதே இடத்தில் விபத்திற்குள்ளாக ஒருவரும் தப்பவில்லையாம். ஆக அவ்வப்போது ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியான் மோன் -பிளாங் மலையில் இப்படி ஏதாவது கிடைப்பது வழக்கமாம்.
http://alpes.france3.fr/2013/09/26/un-alpiniste-trouve-un-incroyable-tresor-sur-le-massif-du-mont-blanc-326057.html
—————————————