பாரீஸில் கம்பன் விழா:
1. இன்றும் நாளையும் (செப்.14, 15 -2013 ) பாரீஸ் கம்பன் கழகம் ஒவ்வொரு வருடமும் தவறாமல் நடத்தும் நிகழ்ச்சி. கம்பன் கழகத் தலைவர் கி.பாரதிதாசன்குறித்து ஏற்கனவே இவ்வலை தளத்தில் எழுதியிருக்கிறேன். அவருடைய தமிழ்ப் பற்று அளப்பதற்கரியது. ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டிலிருந்து இன்றைய சிறந்த பேச்சாளர்களை அழைத்து மிகச்சிறப்பாக நடத்துகிறார். இரண்டு நாள் விழாக்களில் பொதுவாக கம்பன் விழாக்களில் என்ன நடக்குமோ அதனை எதிர்பார்க்கலாம். இவ்வருடம் தமிழ்நாட்டிலிருந்து முனைவர் பர்வீன் சுல்தானா கலந்துகொள்வதாக அவர்கள் அழைப்பு தெரிவிக்கிறது
நிகழ்ச்சி நடைபெறும் இடம்
சனி மாலை 2.30லிருந்து
ஞாயிறு மாலை 10.00 மணியிலிருந்து
L’Espace Associatif des Doucettes
Rue du Tiers Pot
95140 Garges les Gonesse
———————————————————-
2. மனதிற் பதிந்த கவிதை: ஒரு யானை அங்குச தாரியாகிறது – ஆதவன் தீட்சண்யா
அண்மைக் காலங்களில் பல நேரங்களில் கவிதைகள் என்ற பெயரில் பல அபத்தங்களை வாசிக்க நேர்ந்திருக்கிறது. சிற்றிதழ்கள்கூட பக்கத்தை நிரப்ப கவிதைகள், என்ற போக்கில் பிரசுரமாவதைக் கண்டு இந்த வேதனை. மாறாக அண்மையில் தீராநதியில் வந்த கவிதைத் தெம்பை அளித்தது. எழுதியவர் ஆதவன் தீட்சண்யா.
ஒரு யானை அங்குசதாரியாகிறது
– ஆதவன் தீட்சண்யா
யானையின் நிறம்
கருப்பு, சாம்பல், கருஞ்சாம்பலெனக் குழம்பி
எலிபண்ட் ப்ளாக் எனச் சொல்லி
மாவுத்தனே நழுவும்போது
யானை குறித்து ஏதுமறியாத நீங்கள்
அதை வாங்கி வந்ததுதான் முதற்பிழை
அந்தஸ்துக்காக அரசர்கள் வைத்திருக்கும்
யானையை
அன்னாடங்காய்ச்சிகள்
தூர இருந்து பார்க்கலாம்
தொடை நடுங்காதிருந்தால்
தொட்டும் தடவலாம்
வளர்க்க ஆசைபட்டு வாங்கினது கெடுவினை
கொஞ்சுவதற்கும் ஏவுவதற்கும் தோதாக
கைக்கடங்கிய வளர்ப்பு மிருகங்கள்
எத்தனையோ இருக்க
ஒரு யானையை இழுத்துவந்த தவறுக்கான
விலையை
நீங்கள் கொடுத்துத்தானாக வேண்டும்
காற்சங்கிலி
இரும்பிலா தங்கத்திலா
கட்டிவைப்பதெனில்
மரத்தடியிலா மாட்டுத் தொழுவிலா
கட்டாந்தரையிலேயே காற்றாட விட்டுவிடுவதா
கவரிவீசி கண்மூட வைப்பதா
ஏசியில் உறங்குமென்றால்
எந்த ஓட்டலில் ரூம் போடுவதென
எதையுமே யோசியாது யானையை
வாங்கிவிட்டீர்
மூங்கிக்குத்துகளையும் கருப்பங்காடுகளையும்
இஷ்டம்போல் தின்று வளர்ந்த யானை
நீங்கள் தரும் கூபா புற்கட்டுக்கு
பசியடங்காமல்
வேலியைப் பிய்த்தெறிந்து
விளைச்சலைத் தின்னும்
விரட்டத் துணிந்தோரை
மிதித்தே கொல்லும்
கழுதை குதிரை எருமை எருதென
எதன்மீதும் சவாரிபோக முடியாதபோது
காலொடிய நடந்தகதை மறந்து
உங்களைச் சுமக்குமென ஓட்டிவந்த
யானையை
நீங்கள் சுமக்கத் தொடங்கிய தலைகீழ்
நொடியிலிருந்து
உங்கள் நெற்றி புடைத்து மந்தகமாகிறது
அங்குசமோ அதன் தும்பிக்கையில்.
நன்றி : தீராநதி ஆகஸ்டு 2013
3. அப்பாவின் துப்பாக்கி – ஹினெர் சலீம்
– பிரெஞ்சிலிருந்து தமிழில் – வெங்கட சுப்புராய நாயகர்
பிரெஞ்சு லிருந்து நண்பர் வெங்கட சுப்புராய நாயகரின் மொழிபெயர்ப்பில் அண்மையில் வெளிவந்துள்ள நாவல். நம்மில் பலருக்கு குர்தின மக்களின் அவலமான நிலமை தெரியாதிருக்கலாம். துருக்கியில் ஆரம்பித்து, ஈரான், ஈராக், சிரியா என மேற்கு ஆசியா முழுவது பரவிக் கிடக்கும் குர்தின மக்கள் அகதிகளாக உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழ்கிறவர்கள். சொந்த நாடொன்றிற்கு ஏங்குகிற ‘கவனிப்பாரற்ற பிள்ளைகள்’. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு, இவர்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை, ‘எங்கள் வாசலில் வந்து நில்லுங்கள் மிச்சமிருந்தால் போடுகிறோம் என்கிற’ பரந்த மனப்பாண்மைதான் அவர்கள் காட்டும் பரிவு. ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்கிற வாய்ச்சொல் வீரர்களுக்கு அமெரிக்கா என்கிற பூச்சாண்டி கனவில் வராதவரை திடுக்கிட்டு எழுவதில்லை என்ற கோட்பாடு இருக்கிறது. அரபு நாடுகளின் ஷேக்குகளுக்கோ வேறு கவலை: ஆசியப் பெண்களை மைதுனத்திற்கும், ஐரோப்பிய மாடல்களை படுக்கைக்குமென இறக்குமதிசெய்யவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது, பாலஸ்தீனியர்கள் விஷயத்திலேயே அக்கறை செலுத்தாதவர்கள் அதிகச் சிக்கலுள்ள குர்திஸ்தான் பிரச்சினையிலா?…
குர்திஸ்தான் மக்களும் சுதந்திர நாடென்கிற கானல்நீருக்கு ஏங்குகிறார்கள். கனவில் கூட அது சாத்தியமில்லையென தெரிந்தும் போராடுகிறார்கள், உரிமைக்குரல் எழுப்புகிறார்கள் அவர்கள் போராட்டத்தைப் புரிந்துகொள்ள உதவும் திட்டிவாசல்தான் அப்பாவின் துப்பாக்கி. ஹினெர் சலீம் (Hiner Saleem) என்ற குர்தினத்தைச் சேர்ந்த எழுத்தாளரின் புனைவு. ஈராக் நாட்டிலிருந்து சதாம் உசேன் காலத்தில் தப்பிவந்த அறிவு ஜீவி. பிரான்சு நாட்டில் வாழ்கிறார். பல திரைப்படங்களையும் எழுதித் தயாரித்திருகிறார். ஒரு வகையில் இந்நாவல் அவருடைய சுயகதை. நண்பர் நாயகர் வழக்கம்போலவே மிக எளிமையாக மொழி பெயர்த்திருக்கிறார். வாசகர்கள் தாகசாந்தி செய்வதுபோல நூலை வாசித்துப் போகலாம், அப்படியொரு அனுபவத்திற்கு வழியுண்டு. தானொரு தேர்ந்த மொழிபெயர்ப்பாளன் என்பதை நாயகர் மீண்டும் தமது உழைப்பூடாக தெரிவித்திருக்கும் சாட்சி. பணத்தையும் புகழையும் எளிமையாக சம்பாதிக்க என்ன வழி என அலைகிற ஆசிரியர்களுக்கிடை இப்படி அக்கறைகாட்டுகிற நாயகர் போன்றவர்களை உற்சாகப்படுத்தும் வாய்ப்பினை நாம்தான் உருவாக்கித் தரவேண்டும்.
அப்பாவின் துப்பாக்கி ஒரு “காலச்சுவடு” வெளியீடு.
————————————