மாரியோ வார்கஸ் லோஸா ((Mario vargas Llosa)
உலகின் தற்போதைய முன்னணி எழுத்தாளர்களென ஓர் இருபதுபெயரை குறிப்பிட்டால் அதில் முதல் வரிசையில் நினைவுக்கு வருபவர் பத்திரிகையாளர், கட்டுரையாளர். இலக்கியத்திற்கான நோபெல் பரிசை 2010ம் ஆண்டு பெற்றவர், அவருடைய ஒவ்வொரு நாவலும் வித்தியாசமான கதை சொல்லலுக்கும், உண்மைப் பாத்திரங்களை புனைவுடன் கலந்து எது நிஜம் எது நிழல் என பிரித்துணர முடியாத கதையாடலுக்கும் பெயர் பெற்றவை.
91 இறுதியில் சொந்தமாக ஏதேனும் தொழில் செய்வதென ஆரம்பித்து வாடகைக்கு ஓர் இடத்தைப் பிடித்து ஓர் சிறிய இந்திய அங்காடியை ஆரம்பித்தேன். எங்கள் கடைக்குப் பின்புறம் Association ‘Amérique Latine என்ற ஓர் அமைப்பு ஒன்றிருந்தது. 95ல் கடையை விரிவாக்க நினைத்து, அருகிலேயே சொந்தமாக ஓர் இடத்தை வாங்கி மளிகைக் கடையை புதிய இடத்திலும், பழைய இடத்தில் இந்தியக் கைவினைப்பொருட்கள், படக்கொப்பிகள், அகர்பத்திகள் என விற்பனையை நடத்தினோம். ஆனால் அக்கடை இலாபகரமாக இயங்காததால் மூட நினைத்து வெளியேற நினைத்தபோது. அமெரிக்க லத்தீனியர் சங்கம் தங்களுக்கு வேண்டுமெனக் கேட்டது. அவர்கள் அங்கே ஓர் நூலகமொன்றைத் திறக்கபோவதாகக் கேட்டதும், இடத்துக்குச் சொந்தக்காரர் எனது நெருங்கிய நண்பர் என்பதால் அவரிடம் அதைக்கூறி ஏற்பாடு செய்தேன். ஒரு முறை நூலகத்தில் நுழைந்து பார்த்தேன். நூல்கள் மொத்தமும் ஸ்பானிய மொழியில் இருந்தன. நூலகப்பொறுப்பாளரிடம் கேட்டேன். எங்கள் சங்க உறுப்பினர்களுக்கான நூலகம், வேறு எந்த மொழியில் இருக்குமென எதிர்பார்த்தீர்கள்? என்று அதற்கான நியாயத்தை விளக்கினார். பிரேசில் நீங்கலாக தென் அமெரிக்க நாடுகள் அனைத்தும் ஸ்பானிய மொழியை அரசாங்க மொழியாக ஏற்றுக்கொண்டவை. அதனால்தானோ என்னவோ பிரெஞ்சு மொழிக்கு அடுத்து ஐரோப்பிய மொழிகளில் ஸ்பானிய மொழி இலக்கியங்கள் கவனம் பெற்றவையாக இருக்கின்றன. முழுத்தேங்காயைப் புரட்டுவதுபோல ஸ்பானிய மொழியில் இருந்த அப்புத்தகங்களை தடவி பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.
நூலகத்திற்குள் 2002ல் ஒரு காப்பி பார் திறந்தார்கள், போகும் சந்தர்ப்பம் வாய்த்தது, போனேன். என்னை வியப்பில் ஆழ்த்துவதுபோல பிரெஞ்சில் சில புத்தகங்கள் இருந்தன. சங்கத்தின் உறுப்பினர்களைத் தவிர மற்றவர்களுக்குப் புத்தகங்கள் தருவதில்லையென நூலகப் பொறுப்பாளர், பொறுப்பாக பதிலளித்தார். ஆனால் இம்முறை அங்கிருந்த சங்கத்தின் தலைவர் தமது பொறுப்பில், இதை வாசித்துப்பாருங்கள் நன்றாக இருக்குமெனக் கூறி “La ville et les Chiens” (The Time of the Hero) நூலை இரவலாகத் தந்தார். அப்போதெல்லாம் நான் அறிந்த ஒரே ஸ்பானிஷ் எழுத்தாளர், கப்ரியெல் கார்சியா மட்டுமே. ஆனால் கார்சியாவைக்காட்டிலும் மரியோ வார்கஸை, இந்நூலை வாசித்த நாள் முதல் நேசிக்க ஆரம்பித்தேன். அவரது கதைசொல்லும் பாணி எனக்குப் பிடித்திருந்தது. அதுவும் தவிர தொடக்கத்தில் பிடெல் கஸ்ட்ரோவை ஆதரித்து பின்னர் அலுப்புற்ற ஆசாமி. கம்யூனிஸம் ஏட்டு சுரக்காய் என புரிந்துகொண்ட புத்தி ஜீவி என்பதும் ஒரு காரணம்.
மாரியோ வார்கஸ் லோஸா நூல்களில் தவறாமல் வாசிக்க வேண்டியவை: Captain Pantoja and the Special Service, Aunt Julia and the Scriptwriter, The Way to Paradise. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் வாசிக்க நேர்ந்த Le Rêve du Celteம் ஓர் முக்கிய மான நாவல். தமிழில் மொழிபெயர்க்கப் படவேண்டிய நாவலுங்கூட. இந்நாவலில் ஐரோப்பாவெங்கும் பரவிக்கிடக்கும் கெல்ட்டியர் இனப்பிரிவைச்சேர்ந்த புகழ்பெற்ற ரோஜெர் காஸ்மெண்ட்தான் (Roger Cassement – 1864-1916) கதை நாயகன். முரண்பாடான ஆசாமி. அயர்லாந்து பூர்வீகம். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் பணியாற்றியபோதிலும் ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்கள் காங்கோவின் வளத்தை உறிஞ்சியதோடல்லாமல் அங்கே உள்ளூர் மக்களுக்கு இழைத்தக் கொடுமையை வெளிப்படையாக விமரிசிக்கிறார், ஓர் அறிக்கையாகத் தயாரித்து, பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு அதனை அனுப்பியும் வைக்கிறார். அதுவே பின்னர்அவரை அயர்லாந்தில் பிரிட்டிஷ் நிர்வாகத்தை எதிர்த்து போராடவும் காரணமாக அமைந்தது. அடிப்படையில் அவரொரு பிராட்டஸ்டண்ட், எனினும் பிராட்டஸ்டண்ட்கள் கையில் அயர்லாந்து போவதை விரும்பவில்லை. உள்ளூர் மக்களை ஆளும் நிர்வாகத்திற்கு எதிராகத் திரட்டினார், முதல் உலகப்போரின்போது ஜெர்மானியருடன் இணைந்துகொள்ளவும் தயங்கவில்லை. கடைசியில் பிரிட்டிஷ் அரசு தேசத்துரோகி எனக் குற்றம் சாட்டி அவரைக் கொலை செய்தது. முரண்பாடுகளையே கையாளுவதில் தேர்ந்த மாரியோ வார்கஸ் லோஸாவுக்கு, ரேஜெர் காஸ்மெண்ட் போன்ற முரண்பாடான ஆசாமிகள் தமது கதையாடலுக்குப் பொருத்தமான ஆசாமியாகத் தெரிந்திருக்கவேண்டும்.
அவரது சுயகதை எனச்சொல்லப்படும் Aunt Julia and the Scriptwriter அவருடைய நாவல்களிலேயே மிகசிறந்ததென்கிறார்கள். எனக்கென்னவோ இங்கே குறிப்பிட்ட எந்தப்படைப்பும் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. சிறிது கவனத்துடன் வாசிக்கவேண்டும், ஒவ்வொரு சொல்லும் வாக்கியமும் முக்கியம். ஒரு வகையில் இரட்டைப் பிறவிகளான குழந்தைகள் ஒன்றையொன்று துரத்திவிவிளையாடுவதைப்போல உண்மையும் புனைவும் ஒன்றை மற்றொன்று துரத்திசெல்கின்றன. சந்தோஷத் தவிப்புடன் அவர்களை மடக்கிப் பிடித்து கட்டி அணைத்து கிளர்ச்சியுறும் தாயின் நிலையில் நாம் – வாசகர்கள். பதினெட்டு வயது, முதிராத இளைஞன், விதவை ஒருத்தியிடம் காதல் கொள்கிறான். இதிலென்ன தப்பு என்பீர்கள், பிரச்சினை அதுவல்ல, அவள் வயது. அவள் பெண்ணல்ல பெண்மணி. 32 வயது. 14 வருடங்கள் மூத்தவள். அதுவும் தவிர அவனுக்கு சித்தி முறை. நெருக்கடியான பதின் பருவத்தைக் கடக்க மட்டுமல்ல, சுற்றியுள்ள சமுதாயத்தை எதிர்கொள்ளவும் அவனைத் தயார்படுத்துவதும் ஜூலியாதான். புனைவை மையமாகக்கொண்ட அத்தியாயங்களில் (‘வானொலித் தொடராக ஒலிப்பரப்பப்படுகின்றன) ஒவ்வொரு பாத்திரமும் விக்கிரமாதித்தன் சிம்மாசனப் பொம்மைகள்போல, தனித்தனியாக கதை சொல்கின்றன, போஜராஜன்போல நமக்கும் விடைதேடவேண்டிய கேள்விகள், ஐயுறு வினாக்கள் அதிலிருக்கின்றன.
பொதுவாகவே மரியோ வார்கஸ் கதைசொல்லலில் ஒரு வேகமுண்டு, ஒரு வாக்கியத்தை முடிக்கும் முன்பாக, வரும் வாக்கியத்தின் முதற் சொல் உங்கள் மனதிற்குள் சரிந்திருக்கும். இறுதிப்பக்கம்வரை பிரமை பிடித்தவர்கள்போல ஓடுகிறோம். சமுதாயப் பெருவெளியின் மேடு பள்ளங்கள் கால்களில் அல்ல நம் கண்களில் இடறுகின்றன. சமகால வாழ்வியல் அவரது வார்த்தை எள்ளலில் கூனிக்குறுகுகிறது, வார்த்தை விளையாட்டில் அவர் நிகழ்த்தும் சித்து, வியப்பூட்டுகிறது. இன்றைய உலக இலக்கியப்போக்கை அறியாதவர்கள் கூச்சல் இரைச்சலென பேர்சூட்டலாம். ஆனால் ஏற்கனவே கூறியதுபோல அவர் எழுத்தில் உள்ள எள்ளலும், நீர்ப்பரவல்போன்ற நடையும், வார்த்தைச் சித்தும் சாதாரண மனிதர்களையும் நிகழ்வுகளையும் அசாதாரண மனிதர்களாக, அபூர்வ நிகழ்வாக மாற்றிக்காட்டும் ரஸவாதக் கலை வேறு படைப்புகளில் வாசிக்கக் கிடைக்காதது.
ரோஜெர் காஸ்மெண்ட் பட்டுமல்ல, Pantaléon et les visiteuses (Captain Pantoja and the Special Service) நாவலில் கதை நாயகனான பாந்தலெயோன் பாந்த்தொஜா ஆகட்டும், La tente Julia et le scribouillard (Aunt Julia and the Scriptwriter)ல் வருகிற லெ பேடரோ கமாச்சோ ஆகட்டும் மாரியோ வார்கஸ் லோஸாவின் கதைநாயகர்கள் முக்காலே மூணுவீசம் முரண்பாடுடைய மனிதர்கள்தான். இங்கே முரண்பாடு எவரிடமில்லை. எல்லோரும் ஏதோஒருவிதத்தில் முரண்பாடுகளுக்குச் சொந்தக்காரர்கள்தான். கொந்தளிக்கும் கடலும், வெடித்து சிதறும் எரிமலையும் நேற்றுவரை அமைதியாக இருந்தவைதான். கொரில்லா யுத்தமும் பயங்கரவாதமும் எவரிடம் பிறந்தது, ஏன் பிறந்தது? சந்தர்ப்பமும் சூழலும் வேறாகிறபோது காந்திமகன் கூட சந்தியில் நிற்க வேண்டியிருக்கிறது. எத்தனைதான் கற்றாலும், ஒழுக்கத்திற்கு உதாரணமாக இருக்கப்போகிறேன் என்றாலும் பல நேரங்களில் உணர்ச்சி அறிவை சுலபமாய் வென்றுவிடுகிறது, அன்பாய் இருக்கிற மனவியிடம் கையோங்கிவிட்டு அவள் கைவருடலில் கலங்கவேண்டியிருக்கிறது. மனிதர்கள் அனைவருமே மகாத்மாக்கள் இல்லை. நாம் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கிற மகாதமாக்களிடமும் ஓர் பத்துசதவீதம் முரண்கள் இருக்கலாம். இதுதான் எதார்த்தம், இதுதான் இயற்கை.
————————————-