மூச்சு முட்டி வளர்ந்ததொரு செடி

“இன்னும் நல்லா இழு”

“எனக்கு முடியலைடா”!

” தோ பாரு! நல்லா உதடுகளை முன்தள்ளிக்குவித்து, ஆள்காட்டிவிரலையும் கட்டைவிரலையும் சேர்த்து பீடிக்கு ஒரு கிடுக்கிப்பிடியிட்டு புகையைத் தம்கட்டி இழுக்கணும்.

” இழுத்தால்”?

” நாளைக்கே என்னைப்போல பெரிய மனுஷன் நீ!” -சொல்லிவிட்டு கலகலவென்று சிரிக்கிறான். அப்போ என்ன வயசிருக்குமென்று நினைவிலில்லை. ஏழாம் வகுப்பு கோடைவிடுமுறையென்று ஞாபகம். வாள் கொண்டு மரம் அறுப்பதற்காக பெரிய பள்ளம் தோண்டிவைத்திருந்தார்கள். பள்ளத்தின் இருகரையையும் பிடிமானமாகக்கொண்டு நீள்வாக்கில் மரம் போடப்பட்டிருக்கும் பள்ளத்தில் ஒருவரும் மேலே ஒருவரும் நின்றுகொண்டு மேலும் கீழுமாக சீரான கதியில் வாளை இழுப்பார்கள். அப்பள்ளந்தான் முதலும் கடைசியுமாக பீடியைக் குடித்துப்பார்க்க எனக்கு பயிற்சிகளமாக அமைந்தது. எனக்குக் குரு மண்ணாங்கட்டி.

அவன் பெயர் பதிவேடுகளில் சின்னத்தம்பி என்றிருந்தாலும், அவனுடையை பெற்றோர் மண்ணாங்கட்டியென்றே அழைக்க எங்களுக்கும் அது பழகிப்போயிற்று. அவன் அப்பா ராசு கவுண்டருக்குக் கடைசிகாலத்தில் பிறந்த ஒரே வாரிசு. கிராமத்தில் அப்போது ஆரம்பப் பாடசாலை என்ற பெயரில்கூட எதுவுமில்லை. எங்கள் கிராமத்திலிருந்து அரை கி.மீ தள்ளியிருந்த மற்றொரு கிராமத்திற்குச் செல்லவேண்டும். முதல் இரண்டு வகுப்புகள் அவனுடன் படித்திருப்பேன் பின்னர் நானும் எனது சகோதரரும் இரண்டு ஆண்டுகள் தாத்தா கர்ணமாக இருந்த அனுமந்தையென்ற ஊரிலும், பின்னர் ஐந்தாம் வகுப்பிலிருந்து எங்கள் பாட்டி சமைத்துப்போட புதுச்சேரியிலும் படிப்பைத்தொடர்ந்தோம். மண்ணாங்கட்டி பக்கத்து ஊரில் தொடர்ந்து படித்துவந்த ஞாபகம். பிறகு எட்டாம் வகுப்பிலிருந்து  எங்கள் கிராமத்திலிருந்து ஐந்து கி.மீட்டர் தூரத்திலிருந்த புதுச்சேரி மாநிலத்தைத் சேர்ந்த காலாப்பட்டு என்ற ஊரில் படிப்பைத் தொடர வேண்டியதாயிற்று. மண்ணாங்கட்டியுடனான நட்பு தொய்வின்றி தொடர்ந்தது.

எங்கள் வீட்டில் அவனோடு சேராதே என்று உத்தரவு. இருந்தும் வீட்டிற்குத் தெரியாமல் அவனைத் தேடிபோய் பழகுவேன். எனக்கு அப்போது சிவாஜிபடங்கள் என்றால் பிடிக்கும் அதற்கு இரண்டுகாரணங்கள். அப்பா காங்கிரஸ்காரர் என்பது ஒரு காரணம். மற்றது மண்ணாங்கட்டி. சிவாஜிபோல வசனம் பேசுவான். கிராமத்தில் தெருக்கூத்தோ, நாடகமோ நடந்தால் மறுநாள் அதில் வரும் முக்கிய பாத்திரங்களாக மாறி என்னைப்போல பையன்களைக் கூட்டிவைத்துக்கொண்டு நடித்துக்காட்டுவான். தவலையைத் தலைக்குப்புற கவிழ்த்து நீச்சலடித்துக்கொண்டு மறுகரைக்கு போய்வருவான். பெண்கள் முன்னால் திடீரென்று காற்சட்டையை அவிழ்த்துப்போட்டு நிர்வாணமாக இடுப்பை ஒடித்து ஆடுவான். அவர்கள் ‘எடு துடைப்பக் கட்டையை! ‘எனக்கூவிக்கொண்டு துரத்துவார்கள், நின்று சிரிப்பார்கள், இவனும் பதிலுக்குச் சிரிப்பான். எனக்கு மட்டுமல்ல விடலைப்பருவத்தில் என் வயது பையன்கள் பெண்கள் என எல்லோருக்கும் அவன்தான் ஹீரோ. ஒருநாள் உள்ளூர் குளத்தில் வெகு நேரம் ஆட்டம்போட்டுவிட்டு கரையேறியபோது அவன் போடவிருந்த கால் சட்டையிலிருந்து பீடியொன்று விழுந்தது.

– ஐய்யயோ நீ பீடியெல்லாம் பிடிப்பாயா? எனக்கேட்டேன்.

– நான் பெரியமனுஷன் ஆயிட்டேன் பிடிக்கிறேன்

– எனக்கும் பிடிக்கணும்போல இருக்குது கொடேன்.

– இல்லை ஒரு பீடிதான் இருக்குது, நாளைக்கு உங்க வீட்டுலேயிருந்து காசு எடுத்துவா. பீடி புடிக்கக் கற்றுதரேன்- என்றான்.

மறு நாள் மரமறுக்கும் பள்ளத்தில் அவன் பீடிபிடிக்க எனக்குக் கற்றுதந்தபோது, பதட்டமாக இருந்தது. முதற்புகையைவிட்டபோது அவன் கூறியதைபோலவே சட்டென்று வளர்ந்து பெரிய மனுஷன் ஆன நினைப்பு. ஆனால் வீட்டிற்குத் திரும்பும்போது அச்சம் நெஞ்சுகொள்ள இருந்தது. யாராவது பார்த்திருப்பார்களோ என்ற கவலை. அப்பாவுக்குத் தெரிந்தால் தோலை உரித்துவிடுவாரென்று தெரியும். அவருக்கு அது மகா பெரிய தப்பு. ரொம்பக் கோபக்காரர். அன்றைக்கு ஒளிந்து புகைவிட்டபோது அப்பா முகத்தில் விட்டதுபோலத்தான் இருந்தது. அப்பாவை ஜெயித்துவிட்டதாக உணர்ந்தேன். நன்றாக ஞாபகம் இருக்கிறது வீட்டிற்கு நுழைந்ததும் நான்செய்த முதல் காரியம், அப்பாவின் கதர்த் துண்டை வாய்க்கு நேராகவைத்து, வாயில் இன்னமும் புகை பத்திரமாக இருப்பதைப்போல அதில் பலமுறை ஊதிய ஞாபகம். விடலைப்பருவம் அன்றையதினம் மனதிற் ஏற்படுத்திய இரசவாதத்திற்கு ஒப்பீடுகளில்லை.

*                         *                                       *                                     *

– அப்பா என் பிரண்டுக்கு பிறந்த நாள்.

– நான் காரில் கொண்டுபோய் விடவா.

– இல்லை அவள் அம்மா வந்து அழைத்து போவாங்க, நிகழ்ச்சிக்குப்பிறகு அவங்களே கொண்டு வந்து விடுவாங்க..

-*                                     *                                             *                          *

– பன்னிரண்டு மணி ஆகப்போகுது கம்ப்யூட்டர்ல என்ன பண்ற? வேளையா படுக்கணுமென்று எத்தனை முறை சொல்லியிருக்கேன்.

*                                    *                                       *                                    *

– ஒரு நண்பர் வீட்டுலே திருமணம், வீட்டுக்கு வந்தவங்க உன்னையும் தானே அழைச்சாங்க வாயேன்.

– இல்லை நான் வரலை. நீங்க போயுட்டு வாங்க, எனக்கு யாரையும் அங்கே தெரியாது.

*                              *                                     *                              *-

மேற்கண்ட உரையாடல்கள் எனக்கும் எனது இளையமகளுக்கும் ஆனது. அவளை இலேசாக கண்டித்தால் போதும், சட்டென்று அழுதுவிடுவாள். அவள் அம்மா, “இன்றைக்கு உனது பிறந்த நாளாயிற்றே, வேண்டுமென்பதைச் சொல்லேன், செய்துதரேன்”- என்பாள். எங்களுக்குக் கிடைக்கும் அவளுடைய எதிர்வினை தோளைக்குலுக்கி, உதட்டை பிதுக்குவது. ஏறக்குறைய இதேபோன்றதொரு உரையாடலை, அனுபவத்தைக் கடந்த காலத்தில் எனது பிற பிள்ளைகளுடன் பெற்றிருப்பேன்.

எனது பெற்றோர்களுக்கும் எனக்குமான விடலைப்பருவ உறவு எப்படி?  அப்பா நடைவாசலில் நுழையும்போதே, வீட்டைவிட்டு ஓடிவிடுவேன். அப்பாவின் மூர்க்கம் ஊரறிந்தது. அம்மாவிடம் அப்பா சொல்லுவது, ‘உனக்கு சமைக்கமட்டுமே தெரியும்’. அதையே கொஞ்சம் மாற்றி எங்களிடம், ” நீங்க சின்னப்பையன்கள், உங்களுக்கு ஒன்றும் தெரியாது” -என்பார். இதில் என்னைவிட மூன்று வயது பெரியவராக இருந்த அண்ணனிடத்தும் இதே அபிப்ராயத்தை வைத்திருக்கிறாறே என்பதில் எனக்கு சந்தோஷம். கொஞ்சம் தைரியத்துடன் அவரிடம் நாங்கள் பேசிவிட்டால் போதும், பிறகு இரண்டொரு மாதத்திற்கு  மறக்க முடியாதென்றாகிவிடும்.  தலைமுடி எப்படியிருக்கவேண்டும், சட்டை எப்படி இருக்கவேண்டும். எந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கலாம், வீட்டில் என்ன சமைக்கலாம் எல்லாம் அவர்.. அவர்.. அவர். எனது விடலைப்பருவம் அப்பா நிழலில் மூச்சு முட்டி வளர்ந்ததொரு செடி.

சொல்லப்போனால் விடலைப்பருவத்தை உடல் ஏற்றுக்கொண்ட தருணம் தொடங்கி அதன் இயல்புக்குகந்த சில எதிர்வினைகளை நடத்தியிருக்கிறது. உடல், மனம் இவற்றிலேற்பட்ட மாறுதல்களைப் பற்றிய பிரக்ஞையில்லை. விரல் முனையில் ஊடகங்கள் இல்லாதகாலம்.  என்னைச்சுற்றியிருந்த மனிதர்களின் தாக்கமும் குறைவாகவே இருந்தது. எனது தந்தையின் முரட்டு சுபாவத்திற்கு எதிரான குணம் கொண்டிருந்தவர்களை அல்லது அவரது அதிகாரத்திற்கு எதிராகக் கேள்வி எழுப்புவர்களைத் தேடிச்சென்று பழகினேன். எங்கள் வீட்டிற்கு வந்தால் தயங்கி நிற்பவர்கள் இல்லங்களைத்தேடி  அவர்களுடைய வீட்டுத் திண்ணையில் சென்று அமருவேன். விடலைப்பருவத்தில் முரட்டு அப்பாவிற்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளால் கொடி பிடித்ததாக நினைப்பு. அப்பா பழுத்த காங்கிரஸ்காரர். எங்கள் ஊர் தமிழாசிரியர் உள்ளூர் எம்.ஜி.ஆர். ரசிகர்களுடன் சேர்ந்துகொண்டு கிராமத்தில் முதன் முறையாக தி.மு.க கொடியை ஏற்றிவிட்டார். அப்பா அவரைக் கன்னத்தில் அறைந்துவிட்டார். கொடிக்கம்பமும் சின்னாபின்னமானது. நான் தி.மு.க அனுதாபியானது அப்படித்தான். அப்பாவின் மேலிருந்த கோபம் தமிழாசிரியரைக் கொண்டாட உதவிற்று, அவர் வீட்டிற்கு அடிக்கடி போக ஆரம்பித்தேன். அவருக்கு விடலைப் பருவத்தில் ஒரு பெண் இருந்ததும் காரணமாக இருக்கலாம்.

முதன் முதலாக எனது குமர பருவம் உணர்த்தப்பட்ட அனுபவம் மறக்க முடியாதது. அப்போதெல்லாம் அமெரிக்க அரசாங்கம் இந்திய பள்ளி மாணவர்களுக்கு பால் மாவும், மக்காச்சோள மாவும் CARE என்ற அமைப்பின் கீழ் இலவசமாக வழங்கிவந்தார்கள். இரண்டுமாதத்திற்கு ஒரு முறை, யூனியனுக்குச் சென்று அப்பொருட்களை எடுத்துவரவேண்டும். ஒருவாரமாக பெய்து கொண்டிருந்த மழையில் ஏரிகுளங்களெல்லாம் நிரம்பிவழிந்தன, கலிங்கல் வழிந்து ஓடையில் இடுப்பளவு தண்ணீர். கிராமத்திற்கு வந்திருந்த நான், உள்ளூர் பையன்களுடன்  கேர் பொருட்களைக்கொண்டுவர அவர்களுடன் தயாரானேன். ஆசிரியை முன்னால் போய்க்கொண்டிருக்கிறார். பையன்கள் நாங்கள் அவர் பின்னால் போய்க்கொண்டிருந்தோம்.

– என் பின்னாலேயே வரவேண்டும், ஆங்காங்கே தண்ணீர் குளம்போல நிற்கிறது, நீங்கபாட்டுக்கு எங்கேயாவது போய் தண்ணிரில் மாட்டிக்கொள்ளப்போகிறீர்கள் என்று ஆசிரியை எச்சரித்திருந்தார்.

எங்களுக்கு முன்னால் நடந்துகொண்டிருந்த ஆசிரியை திடீரென்று ஒரு புதர் மறைவில் ஒதுங்க நாங்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு பின்னால் போய் நிற்க, அவர் பதற்றத்துடன் எழுந்து எங்களை முறைத்ததையும், “- ஏண்டா தடிப் பசங்களா ஒரு பொம்மனாட்டி அவசரத்துக்கு ஒதுங்கிறதைப் புரிஞ்சுங்க மாட்டீங்களா? எனக்கேட்டுச் சிரித்ததையும் ஜென்மத்திற்கு மறக்கமுடியாது.

அப்போதும் மண்ணாங்கட்டிதான் பதில் சொன்னான்:

– நீங்கதானே டீச்சர் உங்க பின்னாடியே வரச்சொன்னீங்க!

– நீ பிஞ்சிலேயே பழுத்தவனாயிற்றே என்பது ஆசிரியையிடமிருந்து வந்த பதில். அவள் சொன்னவாக்கு கூடிய சீக்கிரம் பலித்தது. நான் பத்தாம் வகுப்பில் சேர்ந்திருந்தபோது, அவனுக்குத் திருமணம் ஆகிவிட்டது, நான் புமுகவகுப்பு படிக்கிறபோது இரண்டு குழந்தைக்கு அவன் தகப்பன். நான் கல்லூரியில் சேர்ந்தபோது இறந்துபோனான்.

எட்டாவது வகுப்பில் ஆரம்பித்து கல்லூரியில் புகுமுக வகுப்புவரை எனது குமரப்பருவம் நீடித்ததாகச் சொல்லலாம். துளசி என்ற ஆசிரியர் எங்கள் ஊரில் தங்கி பக்கத்து ஊர் பள்ளியில் பணியாற்றினார். வெகு சன பத்திரிகைகள் பலவும் அவர் வீட்டிற்கு வரும். அவர் படித்து முடித்த மறுகனம் அவற்றை வீட்டிற்குக்கொண்டுவந்து படிப்பேன். விடலைப்பருவ இச்சைகளை, தேடல்களை கூர்தீட்டியவை அவை. ஜெயராஜ் படங்களுக்காகவே சுஜாதாவை வாசிக்க நேர்ந்ததும் விடலைப்பருவத்தில் நிகழ்ந்ததுதான்.  ஒரு முறை வீட்டில் திதி கொடுக்கவேண்டுமென்று மாவிலையும் சுள்ளியும் ஒடித்துவரசொல்கிறார்கள்.  கையெட்டும் தூரத்தில் சுள்ளிகள், மாங்கொத்து. ஒடிக்கமுடியும் என்கிறபோதும், உறவுக்கார கன்னிப்பெண்ணொருத்தியைக் பார்த்த வேகத்தில் எவரெஸ்டில் ஏறுவதாக நினைத்துக்கொண்டு மடமடவென்று மரத்தில் ஏற, தாங்கிய கிளை முறிய, விழுந்ததைத் தொடர்ந்து  கட்டுபோட ஒரு மாதம் புதுச்சேரில்லருகில் ஓட்டேரிப்பாளையம் என்ற ஊருக்குப் போய்வந்ததற்கும் பருவக்கோளாறுக்கும் சம்பந்தமிருக்கிறது. விடலைப்பருவம் உடைகள் விஷயத்தில் அக்கறைகொள்ளவைத்திருக்கிறது. சொற்களை கவனமாக உச்சரிக்கவைத்திருக்கிறது. ஆசிரியர்களைக்காட்டிலும் ஆசிரியைகளிடத்தில் கூடுதலாக மரியாதை செலுத்தவைத்திருக்கிறது. இதற்கு நேர்மாறாக ஆசிரியர்கள் எங்கள் வகுப்புத் தோழிகளிடம் கடலைபோட்டிருக்கிறார்கள்.

அவர் எங்கள் அறிவியல் ஆசிரியர். அவள் எங்கள் வகுப்பு தோழி. எப்போது பாடினாலும் பி. சுசீலாவின் ‘நீ இல்லாத உலகத்திலே’ என்றபாடலை இனிமையாகப் பாடுவாள்.  அவள் பாடியதெல்லாம் அந்த அறிவியல் ஆசியருக்காகவென்று பின்னர்தான் தெரிந்தது. இருவருமாக சேர்ந்துகொண்டு பையன்களாகிய எங்களை நன்றாக ஏமாற்றியிருந்ததை காலம் தாழ்ந்தே புரிந்துகொண்டோம். அவள் வயதென்றாலும் எங்களை அவர் விடலைப்பையன்களாகக்கூட நடத்தவில்லை. அதற்குப் பிறகு ஒன்பதாம் வகுப்பிலிருந்து பதினோறாம் வகுப்புவரை எங்களுக்கு அறிவியல் பாடம் எடுத்தவர் ஓர் ஆசிரியை, திருமணம் ஆகாதவர். அவர் அறிவியல் பாடங்களுக்கு கையேட்டில் படம் வரைகிறபோதெல்லாம் ஆங்கிலத்தில் நன்றாக இருக்கிறது, அழகாக இருக்கிறதென்று எழுதுவார். அவரும் நல்ல சிவப்பு, அழகுவேறு.  எனக்கும் நித்தியானந்தம் என்றொரு சக நண்பனுக்கும் அவரிடம் பாராட்டைப்பெறுவதில் கடுமையான போட்டி இருந்தது. ஆசிரியருக்குப் பதிலாக ஆசிரியைகளாக இருந்து பாடமெடுத்திருந்தால் எல்லாவற்றிலுமே கூடுதலாக மதிப்பெண்பெற்றிருப்போமென நினைக்கிறேன்.

விடலைப்பருவத்தை எப்படிக் கடந்துவந்தேன் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. எபோது ஆரம்பித்தது எப்போது முடிவுக்குவந்ததென்பதைத் துல்லியமாக நூல் பிடித்து பிரித்துணர்ந்த அனுபவம் எனக்கில்லை. ஆனாலும் இதுவும் அதுவுமாக அலிஸ்ஸ¤க்குத் திறந்த விந்தையுலகம் எனக்கும் திறந்து வண்ணமயமான அனுபவங்களை வழங்கியிருக்கிறது. குமரப்பருவத்தில் புதுவீடுகட்டி குடித்தனம்போனதுபோல ஒவ்வொரு அறையாக எட்டிப்பார்த்து, கதவைத் திறந்து, காலெடுத்துவைத்து, பாய்போட்டோ போடாமலோ உட்கார்ந்து, எழுந்து, நடந்து, வாசங்களை நுகர்ந்து, கடந்த தருணங்களும் சிதைந்த கனவுகளும் எத்தனையெத்தனை?

அன்ன போழ்தினிலுற்ற கனவினை

அந்த மிழ்ச்சொலி லெவ்வணஞ் சொல்லுகேன்? (பாரதி)

————————-

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s