1. லெ.கிளேசியோ – விசாரணை
எனது மகன் குடும்பமும், இளையமகளும், லாஸ் ஏஞ்ஜெல்ஸில் வசிக்கும் எனது பெரிய மகளைப்பார்த்துவிட்டு அங்கிருந்து அனைவருமே ஹவாய்த் தீவுக்குச் சென்றிருக்கிறார்கள். எனது மனைவியுடன் செல்ல விருப்பமிருந்தது. கிளேஸியோ தடுத்துவிட்டார்? கடந்த இரண்டுமாதமாக வழக்கத்தைக் காட்டிலும் கடுமையாக பணி, நோபெல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் லெ.கிளேசியோவின் முதல் நாவலும் அவருக்கு பிரெஞ்சு படைப்புலகின் மிகப்பெரிய கொன்க்கூர் பரிசை பெற்றுத் தந்த “Le Proces -Verbal’ நாவல் காலச்சுவடு பதிப்பகத்திற்காக தமிழில் வருகிறது. அதன் நுட்பமான சொல் தேர்விற்கும், நெஞ்சை லுக்கும் சொல்லாடலுக்கும் புகழ்பெற்றது. முடிந்தவரை அதன் அடர்த்திக்குப் பங்கமின்றி மொழிபெயர்த்து களைத்திருக்கிறேன்.
2. அம்பை – சிறுகதைகள் – பிரெஞ்சில் வருகின்றன.
நண்பர் கண்ணன் முயற்சியால் அம்பை சிறுகதைகள் பிரெஞ்சில் வருகின்றன. புகழ்பெற்ற பிரெஞ்சு பதிப்பகம் வெளியிடுகிறது. பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் பெண்மணி ஒருவருடன் இணைந்து மொழி பெயர்ப்பில் ஈடுபட்டுள்ளோம். எல்லாம் ஒழுங்காக நடந்தால் 2014 ஜனவரியில் அம்பை சிறுகதைத் தொகுப்புகளை எதிர்வரும். ஜனவரியில் பிரெஞ்சுப் புத்தககக் கடைகளில் எதிர்பார்க்கலாம்.
3. ஆக்கமும் பெண்ணாலே – முனைவர் எ. இராஜலட்சுமி.
முனைவர் எ. இராஜலட்சுமியைப் பற்றி என்னிடம் முதலில் குறிப்பிட்டவர், அவருடன் பணியாற்றும் புதுச்சேரி பாரதிதாசன் பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த தமிழ்த்துறை இணை பேராசிரியராக பணிபுரியும் நண்பர் மு.இளங்கோவன். உங்கள் ‘ மாத்தா ஹரி நாவலைப் பற்றி முனைவர் எ. இராஜலட்சுமி தனது நூலொன்றில் கட்டுரை எழுதியிருக்கிறார், தாங்கள் புதுச்சேரிவந்தால் தெரிவிக்கும்படி சொன்னார், தங்களை சந்திக்க விருப்பமாம் என்றார். எனக்கும் அவரைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. அந்த ஆவலைப் பூர்த்தி செய்தவர், புதுவையில் இலக்கியம் புத்தகக் கடை நடத்தும் நண்பர் சீனு தமிழ் மணி. பொதுஉடமை, பெரியார், பசுமையைப் போற்றுதல் என்பதை ஆரவாரமற்று செய்பவர். அவரது ஏற்பாட்டின்படி பேராசிரியை எ. இராஜலட்சுமியை அவரது புத்தகக்கடையில் சந்தித்தேன். ஒன்றிரண்டு நூல்களை எனக்குப் பரிசாக அளித்தார். ஒன்று ‘ஆக்கமும் பெண்ணாலே’ மற்றொன்று ‘நீயும் நானும் நாமும்’ என்ற கவிதைத் தொகுப்பு. இரண்டைப் பற்றியும் எழுதலாம் எழுதவேண்டும். ஒருவேளை மாத்தாஹரி பற்றி அவர் எழுதவில்லையெனில், அவர் யாரோ நான் யாரோ? எனக்கு அவர் எழுத்துகள் பற்றிய எந்த அறிமுகமும் நிகழ்ந்திருக்காது. ஓரளவு அறிமுகமானவற்றைத் தேடிப்படிக்கிறோம். தமிழில் நெட்வொர்க் இருந்தால் அல்லது இருநூறு ரூபாயை என்வலோப்பில் வைத்துக்கொடுத்தால் அல்லது பூசாரிகளைக் கவனித்தால் அவ்வைக்குப்போகவிருக்கும் நெல்லிக்கனியையும் தட்டிப் பறிக்கலாம். மேடைக்கும் மாலைக்கும் ஏற்பாடு செய்து சந்தோஷப்படலாம். முனைவர் எ. இராஜலட்சுமிபோல கேட்பாரற்ற படைப்பாளிகள் தமிழ் நாடெங்கும் இருக்கிறார்கள்.
ஆக்கமும் பெண்ணாலே
இக்கட்டுரைத்தொகுப்பில் இருபது கட்டுரைகள் இருக்கின்றன. மொத்தக் கட்டுரைகளும் பெண்படைப்பாளிகளின் படைப்புகளை முன் வைத்து எழுதப்பட்டவை, வெண்பொங்கலில் கல் சேர்ந்ததுபோல ‘இடையில் மாத்தா ஹரி’ என்ற எனது நாவலைப்பற்றிய கட்டுரை, ஆசிரியர் தவிர்த்திருக்கலாம். சங்ககாலம் தொட்டு பெண்படைப்பாளிகளின் படைப்புகள் மெல்ல மெல்ல ஆணாதிக்க சமூகத்திற்கு எதிராக தங்கள் குரலை எங்கனம் திடப்படுத்திக்கொண்டனர் என்பதை அப்படைப்புகளைக்கொண்டு ஆசிரியர் நிறுவுகிறார். கட்டுரையாளர் ஒரு தமிழ்ப் பேராசிரியை, முனைவர் வீ. அரசுவின் வழ்காட்டுதலில் உருப்பெற்றவர் என்பதால் பத்தாம் பசலித்தனமான பழங்கதை பேராசிரியர்களின் ஊசல்வாடையும் ஊத்தை நெடியும் கொண்ட சிறைச் சவ்வை வெகு எளித்தாகக் கிழித்துக்கொண்டு சங்கத்தமிழ் நவீனத் தமிழில் இரண்டிலும் சம நிலையில் கால் ஊன்ற முடிகிறது.
பொதுவாகப் பெண்கள் சமூகம் சார்ந்தும், பொருள் சார்ந்தும் பாலின வரிசையில் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ள கொடுமை இன்று நேற்றல்ல வெகுகாலம் தொட்டு, இப்பூமியில் எல்லாப் பரப்பிலும், எல்லா ஜீவராசிகளிடமும் -( தேனிக்கள் வாழ்க!) இருக்கிறது. நான் என் மனைவியை அதிககமாக நேசிப்பதாலோ என்னவோ ஆண் சமூகம் சார்ந்து இக்குற்ற உணர்விற்கு அவ்வப்போது, (நெடுக அப்படியொரு உணவுக்கு இடம் அளிப்பதில்லை நானும் ஒரு ஆண்தானே?) ஆளாகிறேன். இதில் வாசிக்கிற உங்களிலும் சிலர் நானாக இருக்கலாம். பெண்களிடம் ‘அவ்வப்போது’ அனுசரணையாக நடந்துகொள்ளும் விழுக்காடும் அதிகமிருக்க வாய்ப்பில்லை. அதுபோலவே ஆணாதிக்க சமூகத்திற்கு எதிரான வாழ்நிலையைத் துணிச்சலாக எதிர்கொள்கிற பெண்களும் இச்சமூகத்தில் குறைவு. ஆணாதிக்க சமுதாயத்தை முதன்முதலாக எதிர்க்கத் தொடங்கியது மேற்கத்திய உலகம் என நினைத்துக்கொண்டிருக்க ஆசிரியர் நமது சங்ககால பெண்கவிஞர்களை கை காட்டுகிறார். அவர்களை (பெண்களை) ஓர் அற்ப உயிரியாக பார்த்த சமூகம், அவர்கள் விருப்பத்தையும் வெளிகளையுங்கூட கண்ணியம், கட்டுப்பாடென்ற அலகுகளால் முடக்கிவைத்த நூற்றாண்டு அது, எனினும் துணிச்சலாக “சமூகக் கட்டுபாடுகள், மரபான கருத்தாக்கங்கள், சூழல் ஆகிய அனைத்தும் இறுகிக் கிடந்தபோதும்” தங்கள் கருத்தை முன் நிறுத்த முனைந்த பெண்புலவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அப்பாடல்களிலுள்ள கருத்துச் சுதந்திரத்தையும் உணர முடிகிறது: பரத்தை வீடுகளுக்குச் சென்று திரும்பும் தலைவனின் நடத்தையைக் கண்டிக்கும் பாடல்; உடன்கட்டை ஏறுதலுக்கு, கைம்மை நோன்பிலுள்ள சங்கடங்களைக் காரணமாக முன் வைக்கும் பெருங்கோப்பெண்டுவின் பாடல் ஆகியவற்றை சமூக இயக்கத்தில் இயங்கியல் ரீதியான வரையறைகளை மீறி வெளிப்படும் குரல்கள் என்கிறார் கட்டுரையாளர்..
மூன்றாவது கட்டுரை சங்க இலக்கியம் – புதுக்கவிதை பெண்படைப்பு வெளியை இணைக்கும் முயற்சிக்கான களத்தை சீர் படுத்துவதில் முனைகிறது. சில சங்க கால கவிதைகளோடு தற்கால கவிதைகள் எவ்வாறு பொருந்துகின்றன எனச் சொல்லப்படிருக்கிறது. அதன் பிறகு சமகால பெண் கவிஞர்களின் பல்வேறு விதமான படைப்புக் குரல்களைக் கேட்கிறோம். திரிசடை (‘பனியால் பட்ட பத்து மரங்கள்), “கவிதைகள் பூராவும் தேடிப்பார்த்துடேன் ம்ஹீம்..ம் மருந்துக்குக்கூட ஒரு யோக்கியமான ஆண்பிள்ளையைக் காணோம்” என சுஜாதாவின், சந்தோஷக் குட்டுபட்ட ரோகினியின் கவிதைத் தொகுப்பு, தேவமகளின் ‘முரண்’, இவரா, சுபத்ரா, இளபிறை மணிமாறன், குட்டி ரேவதி, சுகிர்தராணி, சல்மா என்று என்று ஆரம்பித்து தி.பரமேஸ்வரி, பாலபாரதி, அழகு நிலா, தாராகணேசன், லீனா மணிமேகலை, அ. வெண்ணிலா, கனிமொழி என நீளும் பட்டியலில் தமிழச்சி தங்கபாண்டியனையும், மாலதி மைத்ரியையும் ஆசிரியர் வேண்டுமென்றே தவிர்த்ததுபோல தெரிகிறது. கட்டுரையாளர் நவீனக் கவிதைப்போக்கில் குறிப்பாக 2000த்திற்குப் பின்னர் எழுதப்படும் கவிதைகளில் அதிகம் நிறைவுகாணாதவராக இருக்கிறார். அதற்கு ஒருவகையில் இதழ்களும் பொறுப்பென்பது அவர் வைக்கும் குற்றச்சாட்டு.
கட்டுரையாளர் தெரிவிக்கப்பட்டிருந்த சில கருத்துக்கள் மனதிற்கொள்ளவேண்டியவை:
1. ஆணின் சிறப்புகளை அங்கீகரிக்கும் தன்மையும், தனக்கு இன்னல் தரும்போது ஆணை விமர்சிக்கும் மனப்பாங்கும் சங்கப் பெண்கவிஞர்களின் கவிதைகளில் காணக் கிடைக்கின்றன (பக்கம் -43)
2. உணர்வை மட்டுமே மையப்படுத்தி, அதற்கேற்ப மொழியை கையாண்டமையினாலேயே இன்றும் சங்கப் பாடல்கள் உயிர்ப்போடு விளங்குகின்றன. வெற்று சொற்களின் கோர்வையாக எழுதி உடனடிக் கவனத்தை கவனத்தைக் கவர எத்தனிக்கும் படைப்புகள் மீளாய்க்குரியவை மட்டுமன்று, ஆபத்தானந்துங்கூட. (பக்கம் 43) -பெண்கவிஞர்களுக்காக மட்டும் சொல்லப்பட்டதல்ல, ஆண் கவிஞர்களுக்கும் உரியதுதான்.
3. ” பாலியல் தொடர்பான செய்திகளின் வெளிப்பாட்டில் எழுத்தாளன் உணர்வுகளாகவே அவற்றை அடையாளம் காணக்கூடிய ஆபத்து இருப்பதால் பலரும் இத்தலைய உணர்வுகளைத் தாமே தணிக்கை செய்துகொண்டு எழுதுகின்றனர்” (ஹரி விஜயலட்சுமி 2003:37) -தொகுப்பில் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளது.
இக்கட்டுரைத் தொகுப்பு ஓர் ஆய்வு நூலாக வெளிவந்துள்ளது, ஆங்காங்கே தக்கச் சான்றுகளுடன், ஆழமான விவாதங்களுடன் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. நல்ல பல கவிதைகளை எடுத்துக்காட்டுகளாக கையாண்டிருப்பது ஆசிரியர் எடுத்துக்கொண்ட பொருளிலிருந்து விலகவில்லை என்பதையும், கவிதை அழகியலில் அவருக்குள்ள ஈடுபாட்டையும் தெரிவிக்கின்றன.
கடைசியாக இந்நூலில் இடம்பெற்றிருந்ததொரு கவிதை:
“புதுக்கடை திறக்கு முன்
மாமா விளம்பரமளித்தார்
சுறுசுறுப்பான அழகான
விற்பனை பெண்கள் தேவை
மாமி ஆட்சேபித்தாள்
மாமா சொன்னார்
பையன் திருடுவான்
தம்மடிக்கப்போவான்
சட்டம் பேசுவான்
தனிக் கடைபோடுவான்
பொட்டை புள்ளைக
சிவனேன்னு
கொடுத்த காசுக்கு உழைக்கும்
வாரவனுக்கும் கண்ணுக்குக் குளிர்ச்சியா
கூட்டம் குறையாது
மாமா சொல்லாதது
அப்பப்ப நானும்
தொட்டுப் பார்த்துக்கலாம்”
– ‘தேவமகள் (1981:64)
—————————————————
ஆக்கமும் பெண்ணாலே
ஆசிரியர் முனைவர் ஏ. இராஜலட்சுமி
முரண்களரி பதிப்பகம்
34/25 வேதாச்சலம் தெரு, காந்தி நகர்
சின்னசேக்காடு, மணலி, சென்னை-600 068
அலைபேசி:9841374809
————————————