பின் – பின்நவீனத்துவம்

நண்பர் தமிழவனுடன் ஒரு முறை உரையாடியபோது, பொதுவில் இன்றைய தமிழ் கதையாடல்கள் மேற்கு உலகோடு இணைந்து பயணிக்கவில்லை என்றேன். கிழக்குக்கென்று (நமக்கென்று?) ஒரு மரபு, பண்பாடு, இருந்தது. எண்ணமும் சிந்தனையும் தனித்துவம் பெற்றுத் திகழ்ந்த காலமொன்றும் இருந்தது. இன்று பழங்கதைகளாகிவிட்டன. எஞ்சி இருப்பவற்றை விதந்தோதக்கூட மேற்கத்திய மொழிகளும் மேற்கத்திய உத்திகளும் தேவை என்கிறபோது ஒப்பீடல் தவிர்க்க முடியாததாகிறது. தமிழில் ‘புதினம்’ என்று நாம் பொருள் கொண்டிருக்கிற சொல் நாவல் (Novel) ஆங்கிலச்சொல்லிலிருந்து பெறப்பட்டது. பிரெஞ்சு மொழியில் அதனையே ரொமான் (‘Roman) என்கிறார்கள். இடைக்காலத்தில் மேட்டுக்குடிகள்,  கல்வியாளர்கள், மதகுருமார்களுக்குரிய மொழி லத்தீன். அதேக்காலத்தில் சாமான்ய மக்களுக்கென எழுதப்பட்டவை ‘ரொமான்’ அல்லது ‘புதினம்’. பதினாறாம் நூற்றாண்டில் வெகுசனத்திற்கென எழுதப்பட்ட ‘புதினங்களுக்கு’ இலக்கிய அங்கீகாரம் கிடைக்கிறது. எதார்த்த உலகை முன்னெடுத்துச்சென்ற பாத்திரங்களைக்கொண்டு புனையப்பட்டவை அவை. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து மேட்டுக்குடியினரும் இணைந்துகொள்ள, பிற எழுத்துகளைப்போலவே  அறத்தைப்போதிக்கப் ‘புதினங்களுக்குப்’ பரிந்துரைக்கப்படுகிறது. வடிவமைப்பில் மாற்றங்கள் நுழைகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து அண்மைக்காலம் வரை புறத்திலும் அகத்திலும் பல மாற்றங்களுக்கு மேற்கு நாடுகளில் புதினங்கள் உள்ளாயின.

எனினும் புதின உலகில் இருபதாம் நூற்றாண்டு தனித்துவம் பெற்றது: கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் படைப்பிலக்கியவாதிகள்  உலகம், சமூகத்தின் அமைப்பு, அவற்றில் மனிதர்களின் பங்களிப்பு முதலானவற்றை – எதார்த்த பார்வையில் சொல்லவேண்டுமென்கிற கோட்பாட்டுடன் இயங்கினார்கள். சார்த்துரு (Sartre), செலின்(Céline), ப்ரூஸ்டு(Proust) போன்றவர்கள் அவர்களில் சிலர். உண்மையில் இவர்களுடைய பார்வைக்கு எல்லைகற்களற்ற நிலையில், இப்படைப்பிலக்கியவாதிகளின் புதிய முயற்சிகள் எதார்த்தம் பற்றிய பொதுஅறிவைக் கேள்விக்குட்படுத்தின.  இருபதாம் நூற்றாண்டில் அடுத்து வந்தவர்கள் வேறுவகையானவர்கள். வாய் வேதாந்தத்தில் நம்பிக்கைக் கொண்ட கூட்டமிது. கற்பனையில் வாழ்ந்த உளப்பிணியாளர்கள் என அழைப்பதிலும் தவறில்லை. முன்னோடிகள் என அழைக்கப்படும் அவான் – கார்டிஸ்டுகள் (avant-gardiste) என சொல்லப்பட்ட இவர்களே மீஎதார்த்தம்,  நவீன புதினம் என்கிற le nouveau- roman முதலான வகைமைகளுக்குச் சொந்தக்காரர்கள்.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், நிகழ்காலத்திலும் பிரெஞ்சு படைப்பிலக்கியத்தில் என்ன நடந்தது அல்லது என்ன நடக்கிறதென்பதை அறிவதற்கு முன்பாக புதினங்களின் வடிவமைப்புகளையும், அவற்றின் கட்டுமானத்தைப்பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும்.

வடிவங்களைப்பொறுத்தவரை பொதுவில் பிரெஞ்சு படைப்பிலக்கிய உலகில் அவை மூன்றுவகை:

1- மரபு வழி புதினங்கள் (The traditional novel): ‘அந்தக் காலத்திலே’, ‘பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு’ அல்லது நேற்று நடந்ததென ஆரம்பித்து கதை சொல்லலை தொடங்குவது. இறந்தகால சம்பவங்களை நிகழ்காலபடுத்துவது. இங்கே பாத்திரங்கள் நாய், பூனையாகக்கூட இருக்கலாம், அவை அறிவு ஜீவிகள். கதைசொல்லல் படர்க்கையில் அமைய எழுத்தாளன் தூண் துரும்பு எங்குமிருப்பான். மேற்கத்திய உலகைப்பொறுத்தவரை, இவ்வடிவம் அருகிவருகிறது.

2. சுய சரிதை புதினங்கள் (The autobiographical novel):  உண்மையும் புனைவும் கலந்தது – கதைசொல்லியின் வரலாறு, அனுபவங்கள், எதார்த்த உலகத்திடம் அவனுக்குள்ள முரண்கள், பிணக்குகள்.. முதலானவை தன்மையிற் வெளிப்படும். கதைசொல்லி ஆசிரியனாகவும் இருக்கலாம், துணைமாந்தர்கள் அவனுடைய உறவுகள் நண்பர்களாகவும் இருக்கக்கூடும். கடந்தகாலம், நிகழ்காலமென்று எதையும் கதைப்படுத்த முடியும். இவ்வகையான சுயசரிதை புதினங்களை ஒருவனுடைய சுயத்தைப் பேசும் எழுத்துக்கள் என்றவகையில் பிரெஞ்சு மொழியில் ‘Les écritures de soi’, என்கிறார்கள். பெரும்பாலான இன்றைய புனைவுகள் சுயசரிதைகளுக்குள் அடங்குபவை. இவற்றில் பல உட்பிரிவுகளுண்டு: சுயபுனைவு என்கிற Autofiction, புற உலகுடனான மோதலிலுறும் தனது அகவய வலிகளுக்காகப் புலம்பிக்கொண்டே, பிறர்சார்ந்த தனது வாழ்க்கையை  நியாயப்படுத்தும் சராசரி மந்தர்களைப்பற்றிய Auto mythobiographie, பிறகு நாம் பலரும் அறிந்த Curriculum vitae அவற்றுள் சில. இவற்றைப் பற்றி விரிவாக தமிழ் படைப்புலகிற்கு அறிமுகப்படுத்தவேண்டும்.

3. கதைக்குள் கதை இதனைப் பிரெஞ்சில் ‘le Roman à tiroirs’ அன அழைக்கிறார்கள். பிரதானக் கதையாடலுக்கிடையே உபகதைகளை சேர்ப்பது. இவ்வடிவம் இந்திய மரபிற்குப் புதிதல்ல.

புனைவுகள் வடிவங்கள் அடிப்படையில் வேறுபடுவதைப்போலவே அவற்றின் கட்டுமானத்தின் அடிப்படையில் வேறுபடுத்தலாம்

1. படைப்பிலக்கிய இயக்கங்களோடு தொடர்புடையவை (Le Classicisme, le Symbolisme, le Surréalisme etc..).

2. மனக்கிளர்ச்சிகள் அல்லது உணர்ச்சிகளை மையயமாகக்கொண்ட ரொமாண்டிக் புதினங்கள்

3. எதார்த்தவகை புனைவுகள். நடைமுறை உலகை, கருப்பொருளாகக்கொண்டு எழுதப்படுபவை

4. கதை சொல்லலில் புதிய நுட்பங்களையும், வழமைக்கு மாறான புதிய முயறசிகளையும் மேற்கொள்ளும் ‘நவீன புதினங்கள்’ – le Nouveau- Roman..

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்- இருபத்தோராம் நூற்றாண்டில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகவும் பிரெஞ்சு படைப்புலகம் வடிவத்திலும், கட்டுமானத்திலும் இறுதியாகசொல்லப்பட்ட இரண்டின் வழிமுறைகளையே தேர்வு செய்து இயங்குகின்றன. இலக்கியகோட்பாடுகளையெல்லாம் உதறிவிட்டு வடிவத்திலும் கதை சொல்லலிலும் கடந்த 30 ஆண்டுகளாக விட்டேத்தியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிற படைப்பாளிகள் நுழைந்திருக்கிறார்கள்.  இவர்களில் சிலருக்கு அகவயமும், நடப்பியல் வாதமும் கூடாப்பொருட்கள். கடந்தகாலத்தில்  மானுடவியல், மொழியியல், உளவியல் ஆகியவற்றின் அடிப்படையில் புனையப்பட்ட இலக்கிய மாந்தர்களெல்லாம் இலக்கிய உற்பத்திகளேயன்றி படைப்புகளல்ல என்பது இவர்கள் வாதம். இங்கே கவிஞரும், மெய்யியல் அறிஞருமான போல் வலெரி கூறுவதுபோல அவான்-கார்டிஸ்டுகளின் படைப்புகள், ” காகிதக் குடல்களாலான மனித உயிரிகள்(1). இந்நிலையில் எதார்த்தம், அகவயம் பற்றிய இலக்கியங்களைப் படைக்கிறோம் என்பதெல்லாம் ஒருவித ஏமாற்றுவேலை. இவர்களைப் பொறுத்தவரை இலக்கியம் அடைப்புக்குறிக்குள் இயங்கவேண்டிய மொழி அதாவது அல்ஜீப்ராகணிதத்தின் சூத்திரத்தைப்போல; அதுவன்றி தன்னைப்பார்த்துக்கொள்கிற கண்ணாடியாகவும், தனக்குரிய விருப்பமான களமாகவும், நேரங்காலமின்றி எதையாவது தோண்டிகொண்டிருக்கிற தனது கட்டுமானப்பணி கேந்திரமாகவும் இலக்கியத்தை அமைத்துக்கொள்வதென்பது இவர்களின் தேர்வு, அவற்றில் கடந்தகால வரலாறுகளும் இருக்கலாம், சொந்தக் கதைகளும் இருக்கலாம். விமர்சனங்களைக் குறித்தோ, இலக்கிய சூத்திரங்களைக்குறித்தோ துளியும் அக்கரையற்றவர்களாய், செயல்படுகிறார்கள்.  வேண்டாமென்கிறபோதும் இலக்கிய விமர்சகர்கள் விடுவதாக இல்லை, இப்புதிய படைப்பிலக்கியத்தை ‘செயப்படுப்பொருள் குன்றா வினை சார்ந்தது’ (Transitive), என அழைக்கிறார்கள், அதாவது செயப்படுபொருளை அனுமதிக்கும் வினைச்சொல்லின் செயல்பாட்டுடன் இப்புதியவகை படைப்புகளைப் பொருத்துகிறார்கள்.

இப்புதிய அணியின் வரவு 1979 ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. அவர்களுக்கிடையே நிலவிய ஒற்றுமை தாங்கள் ஒவ்வொருவரும் தனித்தவர், மற்றவரிடமிருந்து வேறுபட்டவரென தங்கள் இருத்தலை உறுதிசெய்தது. அலென் ரோப் கிரியே (Alain Robbe Grillet ) நத்தாலி சர்ரோத் (Nathalie Sarraute), மார்கெரித் துராஸ் (Marguerite Duras), குளோது சிமொன் (Claude Simon) ஆகியோர் அவர்களில் முக்கியமான ஒரு சிலர். இன்றைக்கு அவர்கள் கிளேசியோ (Clèzio), மிஷெல் ஹ¥ல்பெக் (Michel Houellebecq)  பத்ரிக் மொதியானோ (Patrick Modiano, மரி தியாய் (Mari Ndiaye) என வேறுபெயர்களில் மும்முரமாக இயங்கிக்கொண்டிருப்பவர்கள். இவர்களின் நூல்களை வாசித்தவர்கள் நிகழ்ந்த மாற்றத்தை உணருகிறார்கள். இப்படைப்பிலக்கியவாதிகளின் எழுத்துக்களில் முந்தைய படைப்பாளிகளின் சாயலில்லை. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பிரெஞ்சு படைப்புலகத்தை ஆட்டிப்படைத்திருந்த ‘சடங்கிய விதி’களைத் தளர்த்திக்கொண்டு , பதிலாக ‘தனிமனித இருப்பு, ‘குடும்பம்’ சமூக அமைவு ஆகியனவற்றினை ஊடுபாவாகக்கொண்டும், பிரெஞ்சு இலக்கிய உலகம் பாராமுகமாக இருந்த துறைகளிலும் அக்கறை காட்டுகிறார்கள். வேடிக்கை என்னவெனில் இல்லாத ஒன்றையும் இவர்களுக்கு எழுத்தாக்க முடிவது, தமிழிற் சொல்வதுபோல மணலில் கயிறு திரிக்கவும் இவர்கள் அறிந்தவர்கள். எழுத்தாளரும் விமர்சகருமான பியர் ழூர்து (Pierre Jourde), “இன்று நேற்றல்ல வெகுகாலமாகவே, எல்லாவகையான வரைமுறைகளையும்”, கடந்து எழுதிக்கொண்டிருக்கிறோம்”, என்கிறார். இந்திய இலக்கிய மரபை அறிந்த நமக்கு அதில் வியக்க ஒன்றுமில்லை. படைப்புலகில் இருவகையான எழுத்துகள் இன்றுள்ளதாய் நம்பிக்கொண்டிருக்கிறோம். அதிலொருவகை நுட்பமும், அழகியலும் இணைந்த புனைவு; மற்றது வெகுசன இரசனைக்குரியவை. மேற்குலகைப் பொறுத்தவரை இவை இரண்டுமே கலந்ததுதான் இன்றைய இலக்கியம் என்கிறார் பியர் ழூர்து.

– நன்றி -மீண்டும் அகரம்

———————————————————————————–

1. “être aux entrailles de papier” Cd. page 14, la littérature française aujourd’hui- Dominique Viart et Bruno vercier

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s