எரிந்தது 18 மில்லியன் மட்டுமல்ல..…
ஒன்றல்ல இரண்டல்ல ஏழு ஒவியங்கள் எரியுண்டன – இடம் ருமேனியா, செய்தவள் ஒரு மூதாட்டி. முதலாளித்துவ உலகில் அரிதானப் பொருட்கள், சிற்பங்கள் ஓவியங்களெல்லாம் junk bonds களாக மாறிவருவதை உறுதிபடுத்தும் சம்பவம். எரிக்கப்பட்ட ஓவியங்களுள் ஒன்றை பிக்காசோவின் தூரிகையும், இரண்டு ஓவியங்கள் மொனேவின்(Monet) கைவண்ணத்திலும், மத்திஸ் (Matisse); கொகன் (Gauguin) ஆகியோரின் தலா ஒரு ஓவியமும் அடங்கும். ஏழு ஓவியங்களும் கடந்தவருடத்தில் ஆம்ஸ்டர்டாம் அருங்காட்சியகத்திலிருந்து களவாடப்பட்டிருந்தன. ருமேனியா நாட்டின், அரசு அருங்காட்சியகத்தின் இயக்குனர் இச்செய்தியை உறுதிபடுத்தியிருக்கிறார். எரிந்த சாம்பலில் வெள்ளீயம், ஈயம், துத்தநாகம் ஆலிய நிறமிகள் இருந்தனவென்றும், இவ்வகை ஓவியங்களில் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை உபயோகிக்கப்பட்டு, பின்னர் அவை தடைசெய்யப்பட்டதென தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர எரிந்த சாம்பலில் நீலம், மஞ்சள் சிவப்பு வண்ணத்துணுக்குகளும் கிடைத்தனவாம். எரிந்த ஏழு ஓவியங்களின் மதிப்பு 18 மில்லியன் யூரோவென ஒரு தோராயக் கணக்கு போட்டிருக்கிறார்கள்.
திருடப்பட்ட இவ்வோவியங்கள் முதலில் அநாதையாக பூட்டிக்கிடந்த வீடொன்றின் தோட்டத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன. பிறகு என்ன நினைத்தார்களோ கல்லறையில் ஒளித்து இல்லை புதைத்து வைத்திருக்கிறார்கள். கடைசியில், புதைத்ததில் நிறைவு அடையாமல் திருமதி தொகாரு எரித்திருக்கிறார். திருடியக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் தன் மகனுக்கு எதிரான சாட்சியங்களை அழிக்க நினைத்து இந்த நல்ல காரியத்தைச் செய்திருக்கிறார். நல்ல அம்மா..
2012ம் ஆண்டு அக்டோபர் ஆலந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரிலிருந்த, குன்ஸ்த்தால் (Kunsthal) அருங்காட்சியகத்திலிருந்து ஏழு ஓவியங்களும் சாமர்த்தியமாக திருடப்பட்டன, எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 90 நிமிடங்கள். குற்றவாளிகள் ஆறுபேரும் ருமேனியர்கள் அவர்களுள் ஓவியங்களை எரித்தக்குற்றத்திற்காக கைது செய்யப்படுள்ள திருமதி தொகாருவும் அடக்கம். வழக்கு அடுத்தமாதம் 13ந்தேதியன்று தொடங்குகிறது.
பிரான்சில் என்ன நடக்கிறது?
Le Petit Nicolas – சிறுவன் நிக்கோலா: அறுபதுகளில் சக்கைபோடுபோட்ட சிறுவர்களுக்கான கதைபுத்தகம். அநேகமாக பிரான்சுநாட்டில் தங்கள் பால்ய வயதில் ‘சிறுவன் நிக்கோலாவை’ வாசித்திராத மனிதர்களே இல்லை என்கிறார்கள். நிக்கோலா என்ற சிறுவனின் தினசரி வாழ்க்கை அனுபவங்கள் கதைகளாக கோட்டோவியத்துடன் பிரசுரமாகி, விற்பனையில் அப்புத்தகங்கள் சாதனையும் படைத்தன. நிக்கோலாவின் குடும்பம், பெற்றோர்கள், தந்தை, அவர் முதலாளி, பள்ளி சிநேகிதர்கள், சிநேகிதைகள் அவன் சந்திக்கிற பிற மனிதர்கள் என முழுக்க முழுக்க நிக்கோலாவின் உலகம் எளிய மொழியில் நேரான வாக்கியத்தில் சொல்லப்பட்டது. சிறுவன் நிக்கோலா ‘ரெனே கோசின்னி’ என்பவரின் கற்பனையில் உருவானவன். தொடக்கத்தில் பெல்ஜியத்திலும் பின்னர் பிரான்சிலும் தொடராகன் வெகு காலம் வந்தவை. 2009 ஆண்டில் Le Petit Nicolasவின் ஐம்பதாவது வயதை விமரிசையாகக்கொண்டாடினார்கள். நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் விதமாக அவ்வாண்டு Le Petit Nicolas என்ற பெயரில் கார்ட்டூன் திரைப்படமும் வெளிவந்தது. பிறகு திரைப்படமும் வெளியானது. இதுவரை உலகமெங்கும் பல மொழிகளில் வெளிவந்து 15 மில்லியன் புத்தகங்கள் விற்ப¨னை ஆகியுள்ளனவாம். அடுத்தமாதம் யிட்டிஷ் (Yidish), அரபு, ப்ரெத்தோன் ஆகியமொழிகளில் வர இருக்கின்றன.
ஒரு குட்டித்தகவல்.
‘சிறுவன் நிக்கோலா’ மூன்று மொழிகளில் வரவிருக்கும் செய்தியைத் தெரிவித்திருந்தேன். அரபு மொழியைப்பற்றி உங்களுக்குத் தெரியும் ஆனால் அதனுடன் முன்னும் பின்னுமாகக் குறிப்பிட்டுள்ள மொழிகள் இரண்டையும் உங்களில் அநேகர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவை இரண்டுமே பிரெஞ்சு அரசாங்கத்தால் அதிகாரபூவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பிரான்சு மொழிகள். அதுபோல 75 மொழிகளை பிரெஞ்சு அரசாங்கம் அங்கீகரித்திருக்கிறது. வேறு சில மொழிகள் கோர்ஸ், ஒக்ஸித்தான், அல்சாசியன்… நான் வசிக்கிற ஸ்ட்ராஸ்பூர் நகரம் அல்ஸாஸ் எனப்படும். இங்கு பேசப்படும் மொழி அல்சாஸியன், ஜெர்மன் மொழியிலிருந்து பிறந்தது. யிட்டிஷ் மொழியும் ஜெர்மானிக் மொழியிலிருந்து பிறந்ததுதான், இன்னொரு கூடுதலானத் தகவல் உலகில் பெரும்பாலான யூதர்கள் பேசுமொழியும் யிட்டிஷ் மொழியே.
———————————–
பயனுடைய செய்திகள். பாராட்டும் வாழ்த்துகளும்.