மேற்கத்திய புனைவுலகில் நாவல்களில் பலவடிவங்கள் இருக்கின்றன. அத்தனை வடிவங்களிலும் நாவல்கள் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன. தமக்கென பெற்றுள்ள வாசகர்கள் ஆதரவுடன் புனைவுலகில் தங்கள் இருப்பை அவை உறுதிப்படுத்திக்கொள்வதையும் காண்கிறோம். நாவல்களின் கரு, புழங்கும் எல்லை, வாசகர்கள் எண்ணிக்கை, அவர்களின் தரம் ஆகியக் தனிமங்கள் நாவல்களுக்குள் இனப்பாகுபாட்டை உருவாக்குகின்றன. ஒப்பந்தம் செய்துகொண்டு படைக்கிற எழுத்தைத் தவிர்த்து – அல்லது ஒப்பந்த தொழிலாளியின் எழுத்தைத் தவிர்த்து, பிற எழுத்துகள் அனைத்துமே பிற தொழில்களைப்போலவே ஒரு படைப்பாளி தொழிற்படும் ஆற்றலை, படைப்புத் திறனை மதிப்பீடு செய்ய உதவுபவை. சிறந்த தச்சனாக, சிறந்த கருமானாக, சிறந்த ஆசிரியனாக, சிறந்த விஞ்ஞானியாக இருப்பதைப்போலவே சிறந்த எழுத்தாளன் என்ற அடையாளத்தை அவன் படைப்புகளே உறுதிசெய்ய முடியும். நூறுபேர் கல்லுடைக்கிறார்கள், ஒருவர் மட்டுமே சிற்பி என அடையாளப்படுத்தப்படுகிறார். ஆயிரம் பேர் உளி எடுக்கிறார்கள், ஒன்றிரண்டுபேர்மட்டுமே செதுக்கு வேலைக்கு உரியவர்களெனச் சொல்லப்படுகிறார்கள். எதுகையும் மோனையும் தெரிந்தவனெல்லாம் கவிஞனல்ல, படைப்புலகம் ஒரு சிலரை மட்டுமே அங்கீகரித்திருக்கிறது. இது ஏன்? ஒரு குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் இருக்கிறபோது ஒருவன் அல்லது ஒருத்தியைமட்டுமே மட்டுமே படு சுட்டி என்று கொண்டாடுகிறோம். வீதியில் ஐம்பது குடும்பங்களில் ஒருவர் மட்டுமே அல்லது ஒருத்தி மட்டுமே ஊரறிந்தவர் ஆகிறார். இந்த மனிதர்களுக்கு மட்டும் ஏன் இப்படியொரு கொடுப்பினை, பிறர் பொறாமைகொள்ளும் வாழ்க்கை எப்படி அமைகிறது?. செய்யும் தொழில் எதுவாயினும் அதில் பக்தியும், ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் காரியம் ஆற்றும்போது கவனத்திற்கு வருகிறார்கள்.
நம்மோடு சேர்ந்து நூறுபேர் கடைவிரித்திருக்கிறார்கள் என்கிறபோது நமது பொருட்கள் வாடிக்கையாளரின் கவனத்தை பெறவேண்டுமானால், அப்பொருட்கள் தொடர்ந்து விலைபோகவேண்டுமெனில் மேற்குறிப்பிட்ட பக்தி, ஆழ்ந்த ஈடுபாடு ஆகியவற்றுடன் தனித்தன்மைகொண்ட ஞானங்களும் தேவைப்படுகின்றன. இலக்கிய படைப்பாளிகள் எனச்சொல்லபடுகிறவர்கள் மேற்கத்திய நாடுகளில் 90 விழுக்காடுகள் மொழியிலோ, தத்துவத்திலோ, பத்திரிக்கைத் துறையிலோ உயர்கல்வி பெற்றவர்களாக இருப்பார்கள். பத்தாண்டு அனுபவம் தராத ஞானத்தை ஓர் ஆண்டு கல்விமூலம் வெகு எளிதாகபெறமுடியும். சிந்திக்கும் ஆற்றலை அனைத்துத் தளங்களிலும் செலவிட்டுக் கூடுதல் சிறப்புடையப் படைப்புகளைப் தருவதற்கு அவர்களால் முடியும். தமிழில் அப்படியொரு நிலமை இல்லை. மக்களுக்கு ஏற்ப தலைவர்கள் அமைவதுபோல, வாசகர்களின் ஞானத்தை பிரதிபலிக்கிற வகையில்தான் ஒரு மொழியின் எழுத்தாளர்கள் அமைவார்கள்.
ஓரளவு கல்வியுடனும் பிற ஞானத்தை வாசிப்பின்மூலமும் பெற்றே ஜெயகாந்தனும், பிரபஞ்சனும் எழுத்தில் ஜெயிக்க முடிந்ததெனில், உயர்கல்வி பெற்றிருப்பின் இவர்கள் புகழ் வீச்சு எதுவரை இருந்திருக்குமென யோசிக்க வேண்டியிருக்கிறது. அப்படி யோசிக்கறபோது இன்னொரு அச்சமும் வருகிறது, கொஞ்சம் அதிகம் படித்திருந்தால், இவர்கள் இந்திய அறத்தின்படி ஏதேனுமொரு அலுவலகத்தில் கோப்புப் பார்த்துக்கொண்டிருந்திருப்பார்கள், நமக்கு நல்ல எழுத்தாளர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். பணிசெய்துகொண்டே எழுதியவர்கள் இல்லையா? இருந்தார்கள் இருக்கிறார்கள். தங்கள் கவனத்தை முழுவதும் எழுத்துக்காக சோர்வின்றி முழு ஈடுபாட்டுடன் அவர்களால் அளிக்க முடிகிறதா? ஆக இன்றைய படைப்புக்குத் தேவையான எழுத்து நுட்பத்தைப் பெற, உயர் கல்வியும் வேண்டும், ஆழ்ந்த ஞானமும் வேண்டும், தமது நேரத்தை முழுமையாக எழுத்துக்குச்செலவிட, தயாராகவும் இருக்கவேண்டும்.
நாவல்களில் பலவடிவங்கள் உண்டு, ஆனால் தமிழில் பரவலான முயற்சிகள் குறைவு. காரணம் வாங்குவோரும் இல்லை வாசகனும் இல்லை. இளம் வயதில் மேதாவி, நாஞ்சில் பி.டி சாமி, கலாதர் ஆகியோரை எல்லாம விரும்பிப் படித்திருக்கிறேன். ஆனால் எனக்கு ராஜேஷ்குமார் வகையறாக்களைப் பிடிப்பதில்லை காத தூரம் ஓடுவேன். அகதா கிரிஸ்டி, கானன் டாயில், பெரி மேஸன், சிட்னி ஷெல்டன் ஆகியோரையும் ஆர்வத்துடன் படித்த காலமொன்றுண்டு. தமிழில் மர்ம நாவல்கள் என்ற முத்திரையுடன் வரும். பொதுவில் இன்றைக்கும் குற்ற புனைவுகளை விரும்பி படிக்கிறோம், கடைசிப்பக்கத்தில் அவிழ்க்கப்படும் மர்மம் முதல் இருநூறுபக்கங்களை வாசிக்கின்ற சக்தியை நமக்கு அளிக்கின்றன. இந்த யுக்தியைப் பயன்படுத்திக்கொண்டு அதாவது மர்மமுடிச்சை கடைசியில் அவிழ்க்கிற இத்தந்திரத்தை நாவலில் பரவலாக தூவி வாசகனை சோர்வின்றி வாசிக்க குற்ற புனைவுகளற்ற நாவல்களிலும் சாத்தியமா? சாத்தியம் என்பதை இன்றைய எழுத்துகள் நிரூபிக்கின்றன. கதையின் கரு, தேர்வு செய்யும் சொற்கள், கதை சொல்லும் வகைமை, உத்தி, நடை எனபலவற்றின் துணைகொண்டு அதனைச் சாதிக்க முயற்சிக்கிறார்கள்.
எனக்கும் விறுவிறுப்பாகக் கதை சொல்லிப்போவதில் விருப்பம் அதிகம், அதாவது விறுவிறுப்பான கதைகளெனில் குற்ற புனைவென்றோ அல்லது மர்ம நாவலென்றோ நீங்கள் பொருள்கொள்ள மாட்டீர்களெனில். விறுப்பான கதைகளுக்கு, ‘திட்டமிடல்’ என்பது நெருக்கமானதொரு சொல். திட்டமிடலின்றி செய்ய ஏதேனுமிருக்கிறதா? சொல்லுங்கள். இங்கே சொல்லவரும் கதையையே திட்டமிடல் வேண்டும். நிகழ்ச்சி கூறுகளை முறையாக வகுத்துக்கொண்டு கதை சொல்ல தொடங்கவேண்டும். வாசகனுக்கு அதன் தேவை அவசியமற்றதாக இருக்கலாம், ஆனால் விறு விறுப்பாகக் கதை செல்ல நினைக்கும் எழுத்தாளனுக்கு ஒரு கட்டாயத் தேவை.
சுமார் முப்பதுவருடங்களுக்கு முன்புவரை திரைப்பட பாடல்கள் புத்தககங்கள், தியேட்டர் வாசலிலோ, திருவிழாக்களிலோ, தெருவில் கடைபரப்பியோ விற்கப்படுவதுண்டு., அச்சிறு புத்தகத்தில்:
“ஏழைவிவசாயி பாலன் பண்ணையார் மார்த்தாண்டம் மகள் செவ்வந்தியைக் காதலித்தான். ஒரு நாள் பண்ணையாருக்கும் பாலனுக்கும், கூலித் தகராறு ஏற்படுகிறது. முறைமாமன் நாகலிங்கமும் செவ்வந்தியைக் காதலித்து பண்ணையாரிடம் தன்குடும்பத்துடன் பெண்கேட்டுவந்தான், அவன் நடத்தையைக் காரணம் காட்டி பண்ணையார் நாகலிங்கத்திற்குப் பெண்ணைத் திருமணம் செய்துகொடுக்க மறுக்கிறார். மறுநாள் பண்ணையார் கொலைசெய்யப்பட சந்தர்ப்ப சாட்சியங்களைவைத்து போலீஸ் பாலனை கைது செய்கிறது. பாலன் விடுதலை அடைந்தானா? செவ்வந்தியைத் திருமணம் செய்துக்கொண்டானா? வெள்ளித் திரையில் மிகுதியைக் காணுங்கள் என அந்த விளம்பர முடியும்”.
நீங்கள் வாசித்ததொரு விறுவிறுப்பான நாவலை மனதில் அசைபோடுங்கள். நிகழ்ச்சித் தரவுகளின் வரிசையை அவதானியுங்கள். அத்தரவுகளை துல்லியமாகப் புரிந்துகொள்ள முயலுங்கள். ஆல்·ப்ரெட் ஹிட்ச்காக் அதனை, “TheMcGuffin’ (1) என அழைப்பாராம். நாவலொன்றில் நிகழவிருக்கும் சம்பவங்களுக்கான காரணங்கள் அவை. அதாவது காரியங்களுக்கான காரணங்கள். நகரத்தை வெடிவைத்து தகர்ப்பதற்கானத் திட்டம், ‘யாதோன் கி பாரத்’ படத்தைப்போல காணாமற்போன சகோதரனைத் தேடி அலைவது, பழிக்குப்பழி வாங்குவது, வங்கியில் கொள்ளை -இவை எல்லாமே ‘TheMcGuffin’ கீழ் ஒதுங்குபவைதான். TheMcGuffin சூத்திரம் குற்ற புனைவுகளுக்கு மாத்திரம் சொந்தமல்ல எல்லா நாவல்களுக்கும் உதவும். ‘கிருஷ்ணப்பர் நாயக்கர் கௌமுதி’ என்ற பெயரை நாவலோடு எப்படிப் பொருத்தலாம், கிருஷ்ணப்ப நாயக்கர் யார்? அவரோடு செண்பகம் எப்படி இணைந்தாள், சித்ராங்கி எழுதிய கடிதத்தை கிழித்துபோட எது ‘காரணம்’? அக் ‘காரணம்’ அவள் எதிர்காலத்தடத்தை எப்படி புரட்டியது? என்பதாக அண்மையில் எழுதிய ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’க்கு சில கேள்விகளை வைத்துக்கொண்டு அவற்றிற்கான பதில்களை தொய்வில்லாமல், இலக்கிய சுவை குன்றாமலும், கூற முயற்சித்தேன். இப்படி உபயோகமான கேள்விகளை அல்லது திட்டமிடல்களை அடிப்படையில் கதையை நகர்த்தத் தீர்மானித்த பிறகு ஒவ்வொரு கேள்விக்குமான பதிலை நம்முடைய உணர்வோடு, அனுபவத்தோடு, அவ்வனுபவத்தின் அடிப்படையில் எடுத்த முடிவோடு கதையை முன்நகர்த்தலாம். ஆனால் இதில் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயம் சொல்லப்படும் கதை படைப்பாளியின் அனுபவமல்ல படிக்கின்ற வாசகனின் அனுபவம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திதருதல்.
ஆகக் கதையை: புதிர் புதிருக்கான விடையென இரண்டாக வகுத்துக்கொண்டு செயல்படலாம். நாடக அரங்கில் விளக்கை அணைப்பார்கள் திரைவிழுகிறது. பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பு, அடுத்த சில நொடிகளில் அமைதி, யாரும் கேட்டுபெற்ற அமைதியல்ல விழுந்த திரையும் அணைந்த விளக்கும் ஏற்படுத்திய அமைதி, திரை விலகினால், விளக்கு மீண்டும் உயிர்பெற்றால் என்ன நடக்குமென்ற எதிர்பார்ப்பு ஏற்படுத்திய அமைதி. நல்ல கதை சொல்லலுக்கும் இத்திரையும் இருட்டும் விளக்கும், வெளிச்சமும் தேவை.
அல்லது இப்படியும் அமைத்துக்கொள்ளலாம் நீங்கள் ஒரு கால் பந்தாட்ட வீரர் (எழுத்தாளர்) கோல் போட்டு முடிக்கும் வரை நீங்கள் செய்யவேண்டியவை என்ன? உங்கள் கால்களை நம்பி பார்வையாளர் காலரியில் அமர்ந்த்திருக்கும் ரசிகனுடைய எதிர்பார்ப்பை எப்படி நிறைவேற்றப்போகிறீர்கள் என்பதில் இருக்கிறது உங்கள் வெற்றியும் தோல்வியும்.
–
———————————————-
1. Inside the Mystery Novel – Stanley Elen