தமிழ்நாட்டின் வேறு பகுதிகளில் பிறந்து, பின்னாளில் அரசியல் மற்றும் பணி நிமித்தமாக புதுச்சேரிக்கு வந்து, வேரூன்றி கிளைவிட்டு நிழல்பரப்பி தமிழிலக்கியத்திற்குப் பெருமை சேர்த்தவர்களில் முன்னோடி பாரதியார். அண்மையில், கி. ரா அவ்வரலாற்றை திரும்ப எழுதினார். ஒருவகையில் புதுச்சேரிவாசிகள், புதுவைப் பல்கலைகழகத்திற்கு நன்றி கூறக் கடமைப்பட்டவர்கள். பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு, புதுச்சேரி எல்லைக்குள் குறுகிவிடாமல், வங்கக்கடல்கடந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கையென தமிழ் ஒலிக்கிற இடங்களிலெல்லாம் புழங்குகிற பெயரென்று உண்டெனில், அது படைப்புலகில் பிரபஞ்சன், கல்விப்புலத்தில் லெனின் தங்கப்பா. இவை இரண்டும் தமிழ் அறிவுஜீவிகளுக்கு நனு அறிமுகமான பெயர்கள். ஏற்கனவே கூறியதுபோன்று புதுச்சேரி பல்கலைகழகத்திற்கு பணியின் பொருட்டு வந்தவர்கள் பலர் இன்று தங்கள் உழைப்பால், உள்ளூர்வாசிகளால் உயர்த்த முடியாத புதுச்சேரியின் புகழை, தமிழ் வெளியெங்கும் கொண்டு செல்கிற அரும்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள், அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர். க. பஞ்சாங்கம். அவரது மூன்று புத்தகங்களை சமீபத்தில் வாசித்தேன். முதலாவது: இப்பத்தியின் தலைப்பில் சொல்லப்பட்டிருக்கும் புத்தகம், மற்றது “ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் என்ற நாவல்”, மூன்றாவது அவரது இலக்கிய திறனாய்வு நூல்- இரண்டாம் பாகம். முதல் பாகம் எனக்குக்கிடைக்கவில்லை. பஞ்சாங்கத்தின் படைப்புலகம் குறித்து சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுத இருக்கிறேன். தற்போது வேலை பளுகாரணமாக உடனடியாக செய்ய இயலாத நிலை. தவிர அவரது இலக்கிய திறனாய்வு கட்டுரைகள் தொகுப்பின் இரண்டாம் பாகத்தில் நவீன இலக்கிய பிரிவை மட்டுமே வாசிக்க முடிந்தது, ஏனைய பகுதிகளை இன்னும் வாசிக்காததும் தள்ளிப்போடுவதற்கு ஒரு காரணம்.
‘கி. ராஜநாராயணனின் புனைகதைகளும் இயற்கையை எழுதுதலும்’ என்ற நூலை அன்னம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது, சில நூல்களுக்கு அரிதாகவே நல்ல முன்னுரைகள் அமையும். இதற்கு முன்னுரை எழுதியிருப்பவர் பேராசிரியை திருமதி மீனாட்சி. இந்நூலின் பெருமைக்கும் அதன் தரத்திற்கும் எதுகாரணம் என்று பலமுறை யோசித்தேன். ஆய்வுப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்ட கி.ராஜநாராயனனின் புனைகதைகளுக்கும், நண்பர் பஞ்சாங்கத்தின் எழுத்தில் தோய்ந்து திளைத்து மகிழ்ச்சிப்பரவசத்தில் ஓர் இலக்கியத் தோரணத்தை நூலின் தலைவாசலிற் தொங்கவிட்டுப் பூரிக்கும் பேராசிரியை மீனாட்சியின் முன்னுரைக்குங்கூட நூலின் பெருமையில் பங்கெடுக்க பூரண உரிமையிருக்கிறதென நம்புகிறேன். பிறகு இருக்கவே இருக்கிறது பேராசிரியர் பஞ்சாங்கத்தின் அறிவுபூர்மான, அழகான, வலுவான, நியாயமான வாதங்கள், கருத்துகள், தீர்ப்புகள். போகிறபோக்கிலே, ஏதோ சில அரசியலை முன்வைத்து, ‘கி.ரா’ என்ற நாடறிந்த படைப்பாளிக்கு சந்தடிசாக்கில் ஒரு மாலையைப்போட்டு பூசைவைக்கிற தமிழ்மரபு குலதெய்வப் படையலாக இந்நூல் இல்லை. அவரது இலக்கிய திறனாய்வு கட்டுரைகள் தொகுப்பிலுங்கூட ‘கி.ரா’ மீதுகொண்டுள்ள அன்பையும், ஓர் விமர்சககருக்குள்ள பொறுப்பையும் பேராசியர் கலக்கவில்லை. அதது அந்தந்த இடத்தில் தமது எல்லைக்கோடுகளை தாண்டாமல் இருக்க பழக்கியிருக்கிறார்.
தொல்காப்பியர் வழி அதாவது இயற்கை என்பது ‘நிலமும் -பொழுதும்’ என்ற கருத்தியத்தின் அடிப்படையில் இரண்டு சொற்களின் உறவுகளைச் சென்று பார்க்கிறார். அவற்றிடம் எங்கள் படைப்பாளி எவ்வாறெல்லாம் தனதெழுத்தில் உங்கள் பெருமைகளைக் கொண்டாடுகிறான் பாருங்கள் என்கிறார். கி.ராவின் மண்ணு தின்னியும், புல் பூண்டும், மண் தினுசுகளும், கலப்பைக் கொழுவும், முள்ளெலிகளும், காட்டாமணக்குவிதைகளும் பஞ்சாங்கத்தின் கைப்பகுவத்தில் மீசை முறுக்குகின்றன. நிலம், பொழுது, கருப்பொருட்கள், விலங்குலகம், பறவைஉலகம், தாவரங்களென கி.ராவின் எழுத்துலகம் காட்சிப்படுத்தப்படுகிறது. சத்தியமாக சொல்கிறேன் கோபல்ல கிராமத்திற்குள் இத்தனை ரசனையோடு நான் சென்றதில்லை. மீண்டும் ஒருமுறை கோபல்ல கிராமத்து மக்களைச் சந்திக்க நினைக்கிறேன், கி.ராவின் இயற்கையை தரிசிக்க இருக்கிறேன். இப்படியொரு போதைக்கு என்னை அடிமைபடுத்தியிருக்கிற நண்பரை எந்தச் சட்டத்தின் கீழ் தண்டிப்பது? கி.ராவைத்தான் கேட்கவேண்டும். கி.ரா எழுத்தை தமிழில் நல்ல வாசகர்கள் என அறியப்பட்டவர்கள் அனைவருமே பொதுவாக வாசித்திருப்பார்கள், வாசிக்காதவர்கள் சொற்பமாகவே இருப்பார்கள். அனைவருக்கும் நான் வைக்கும் அன்பான வேண்டுகோள்:
“பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் கட்டுரைகளை ஒருமுறைவாசித்துவிட்டு, கி.ராவின் படைப்புகளை வாசியுங்கள். கிரா என்ற கலைஞனின் பிரம்மாண்டம் ஓரளவு பிடிபடும்.
—————–
கி. ராஜநாராயனனின் புனைகதைகளும் இயற்கையை எழுதுதலும்
ஆசிரியர்: பேராசிரியர் க.பஞ்சாங்கம்
அன்னம் பதிப்பகம்
மனை எண் 1. நிர்மலா நகர்,
தஞ்சாவூர்- 613007
தொலைபேசி : 04362 -239289
—————————-