– யூகொ ஹாமில்டன்(Hugo Hamilton)
(அண்மையில் லியோன் (Lyon- France) நகரில் கடந்த மே 27 ஆரம்பித்து ஜூன் 2வரை நாவல் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் தமது 7வது வருடாந்திர அமர்வை ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வின் போது அயர்லாந்து நாவலாசிரியர் ‘அயர்லாந்தியம்’ பற்றித் தெரிவித்திருந்த கருத்தைப் பிரெஞ்சு நாளிதழ் L’Express அதனைப் பிரசுரித்திருந்தது . ஆங்கிலத்தில் எழுதிய அல்லது தெரிவித்த உரையை பிரெஞ்சில் மொழிபெயர்த்திருந்தவர் கத்தியா ஓம்ஸ் (Katia Holmes), வாசிக்க நன்றாக இருந்தது. எனவே நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.)
அன்றிரவு டப்ளினில் இடியும் மின்னலுமாக மழைகொட்டிக்கொண்டிருந்தது. சன்னற்கதவை மூடுவதற்காக எனது அறைக்குத் தகப்பனார் வந்தார். செல்லரித்த நாளான சாஷ்(Sash)வகைச் சன்னல் அது. கைகொடுத்து அப்பா மேலே இழுத்தார், கையோடுவந்த கண்ணாடியின் சட்டம் கேக் துண்டொன்று உடைத்து உதிர்வதுபோல பொலபொலவென்று கொட்டியது. தற்போது திறப்பை அடைத்தாகவேண்டிய கட்டாயம். அப்பா சுற்றுமுற்றும் பார்க்கிறார். முதலிற் கண்ணிற் பட்டது அறைமூலையிற் கிடந்த ஓர் உலகவரைபடம், பள்ளி சிறுவர்களுக்கானது. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபொழுது அப்பா வகுப்பறையில் உபயோகித்தது. இரண்டு அரைக்கோளமாகவிருந்த உலகப் படத்தை சன்னலின் பிரதானச் சட்டங்களிற் கொடுத்து ஆணி அடித்தார். தற்காலிகத் தீர்வொன்றைக் கண்ட திருப்தியில் என்னிடம், “இனி தூங்கலாம்”, – என்றார். வெளியே காற்று பேயாட்டமிட, கடல் இரவெல்லாம் வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக இரைந்துகொண்டிருக்க, நான் உறங்கப் பழகிக்கொண்டேன். மறுநாள், சூரியனின் முழுவீச்சுடன் விடிந்தது.
‘அயர்லாந்துகாரன்’ என்ற எனது ‘இருப்பே’ கூட ஓர் தற்காலிக தீர்வுதான். அயர்லாந்தில் பிறந்தேன், வாழ்ந்தேன். இன்றுங்கூட எனது சிறுபிராயத்து அனுபவப் பார்வையூடாக வெளி உலகைப்பார்க்கிறேன், எனது சக டப்ளின் வாசிகளைப்போல. டப்ளின் எனக்கு நுழைவாயில், பேசும்வகைமை; ஓவியத்தின் மீது விழும் பகற்பொழுதின் ஒளிக்கோணத்தோடு ஒப்பிடக்கூடியது, எனது பூர்வீகத்தின் பூகோளப் பின்புலம்: ஓரிடத்தில் நிலைபெற்று உலகத்துடனான பந்தத்தை வழிநடத்துவது. எனது எழுத்திலும் ஏன் என் காலில் அணிந்துள்ள சப்பாத்திலுங்கூட டப்ளின் வழிகாட்டுதல் இருக்கவே செய்கிறது.
எனினும், எனது பூர்வீகத்தின் ஒரு பகுதி, ஓரிடத்திலும் நிலைபெற்றுவிடாததொரு துணிச்சலையும் எனக்குத் தருகிறது; நாடோடியாகத் திரியவைக்கிறது. ஓர் அயர்லாந்து எழுத்தானின் பார்வையில் ‘ஊர் சுற்றுதலுக்கு’ இடமுண்டு, உலக வரைபடத்தில், இன்னொரு பிரதேசத்தை எட்டிப்பார்த்துவிட்டு, அயர்லாந்தையும் போதிய இடைவெளியில் தள்ளிநின்று பார்ப்பதென்று அதைக் கருதலாம். நாங்கள் கற்பனையில் வாழ்கிறோம், எப்போதும் வேறிடம் தேடுகிறோம். அயர்லாந்து அடையாளத்தை மறுப்பதேகூட அயர்லாந்துக்காரன் என்கிற அடையாளத்தேடல் எனலாம். ‘அடையாளம்’, ‘பிறந்த மண்’ போன்ற சொல்லாடல்களெல்லாம் எங்களைப் பொறுத்தவரை மாற்றத்திற்கு உட்பட்டவை. இயல்புத்தன்மைக்கு எதிரான அந்நிலமை ஓர் முரண்நகை. சொற்கள் பொதுவில் தங்களைச் சிறைபடுத்திக்கொள்கின்றன. அதேவேளை, இணக்கமான பொருள் தரும் சூழலிலிருந்து விடுதலைப்பெற தேடலில் இறங்கவும், எதைக்கூற நினைக்கிறோமோ அதற்கு எதிரான பொருளில் விரும்பியே தமக்கு மீண்டும் விலங்கிட்டுக்கொள்ளவும் செய்கின்றன. மகிழ்ச்சிகரமானதொரு முரணிலும், வேடிக்கயான தொரு எதிர்வினையிலும், வேண்டாமென்று கடந்துவந்தவற்றை மீண்டும் தள்ளிநின்று திரும்பிப்பார்ப்பதிலுங்கூட ஐரிஷ் இலக்கியம் மிக நன்றாகச் செயல்படமுடியும் என்பதெங்கள் கருத்து. இயற்கையில் எழுத்தாளர்கள் தோட்டிகளாவும், அரும்பொருள் சேகரிப்போராகவும், தொல்பொருளியல் அறிஞகளாகவும், குற்றபுதிர்களை விடுவிக்கிற காவலற்துறை அறிவியல் வல்லுனர்ககளாகவும் செயல்படுகிறவர்கள் நமக்கு நேர்ந்ததென்ன என்பதை துப்பறிவதே அயர்லாந்து இலக்கியம், உண்மைகளென்று அதுகண்டறிந்தது எதிர்காலத்தில் பொய்த்தும் போகலாம்: வேறிடங்களுடன் ஒப்பிட்டு நம்மைக்கொண்டே சாட்சியங்களை கட்டமைக்கிறோம். கண்காணாத பிரதேசத்திலிருந்து வந்தவர்களைப்போல சொந்த மண்ணில் காலைவைக்கிறபோது, முதல்முறையாக வந்திருப்பதுபோல நடந்துகொள்கிறோம். அயர்லாந்தை பற்றி எழுதுகிறபோதும் கற்பனையில் மட்டுமே சஞ்சாரம்செய்த இடங்களைப்பற்றி எழுதுவோம், ஏற்கனவே அறிமுகமானவற்றின் துணையுடன்,
எங்களை ஏற்றுக்கொண்ட உலகவரைபடத்தை புரிந்துகொள்ள, முயற்சிக்கிறோம்.
——-