1. அண்மையில் புதுவையில் சந்தித்த நண்பர்களும் எழுத்தாளர்களும்
துளிப்பா சீனு தமிழ்மணிஏதோ ஒரு பறவை அல்லது விலங்கு, தின்றதைப் போடுகிறது, பூமிப்பெண் சூல்கொள்கிறாள், விதைகருவாகிறது; மேகமும் சூரியனும் நீராகவும் ஒளியாகவும் உதவிக்கு வருகிறார்கள்; விதைகள் முளைவிடவும், துளிர்விடவும் அவை கன்றாகி மரமாகி, பூவும் காயுமாகி மீண்டும் ஒரு சுழற்சிக்கு காரணமாகி, காரியங்களைச் செய்கிறது. இவ்வுலகும் நேற்றுக்கும் மேலானதொரு நாளை சமைத்து திருப்தியுறுகிறது. தன்னை வளர்த்த மனிதனுக்கு மட்டுமே நிழல், தன்னை உபயோகிக்கத் தெரிந்தோருக்குமட்டுமே எதிர்காலமென மரமோ, ஞானமோ அல்லது உலகின் ஏனையோ கூறுகளோ இயற்கையோ நியதிகளை வகுத்துக்கொண்டு ஒழுகுவதில்லை. மனிதன்மட்டுமே, தன்னைச்சுழன்றுவரும் வெளி என்ற மையத்தை மனதில் வைத்து இயங்குகிறான்; தான், தன் நலனை அடிப்படையாகக்கொண்ட உறவுகள் என வாழப் பழகியிருக்கிறான். தனது பசியும், தன் காமமும், தன் கோபமும், தன் தேவையும் அவனது அக்கறை பட்டியலில் மட்டுமல்ல; உறவுகள் நட்புவட்டங்கள், அண்டைமனிதர்கள், இவனை யாரென்றே அறிந்திறாத மனிதர்கள் ஆகியோர் பட்டியலிலும் முதலில் இடம்பிடித்து பராமரிக்கபடவேண்டியவை என நினைக்கிறான். தான் எத்தனை பெண்களைத் தேடினாலும் படுத்தாலும் தப்பில்லை, மனைவி இன்னொரு ஆணிடம் பேசானிலேத் தப்பு, தான் எத்தனை நண்பர்களைத் தேடினாலும் தப்பில்லை ஆனால் தன் நண்பன் இன்னொரு நண்பனைத் தேடிக்கொண்டால் அவனோடு நேரத்தை செலவிட்டால், இவனுக்குக் காய்ச்சல், தூக்கம் பிடிப்பதில்லை. மனிதரிடமுள்ள இந்த இயற்கை குணத்தோடு முரண்படும் மனிதர்களும் இல்லாமலில்லை. இவ்வுலகம் தொடர்ந்து இயங்கவும் மானுடம் மேலானதொரு வாழ்க்கையை நாளை எட்டவும் அமைதியாக எவ்வித சலசலப்புமின்றி உயிர்வாழ்க்கையை நகர்த்த அறிந்திருக்கிறார்கள், ‘பிறருக்காக’ வாழ்கிறோம் என்ற பிரக்ஞைகூட அவர்களுக்கு வருவதில்லை, புதுவை ‘இலக்கியம் சீனு தமிழ் மணி’ அவர்களில் ஒருவர்.
குயவர்பாளையம் என்ற பகுதி புதுச்சேரியின் தோள் போன்றது. புதுச்சேரியில் நூற்பாலைகளின் மின் தறிகள் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்த காலங்களில், ஆலைத்தொழிலாளர்களால் நிறைந்திருந்த பகுதி, அதன் எச்சசொச்சங்கள் இன்றும் ஆங்காங்கே அப்பகுதியின் சந்துபொந்துகளில் தங்கள் கடைசிமூச்சை விடுவதற்கான தருணத்தை எதிர்பார்த்து நிலைகுலைந்திருக்கின்றன. அங்கே மருத்துவர் இல்லங்கள், மருந்துக்கடைகள், தேனீர்கடை, பெட்டிக்கடை, நொறுக்குத் தீனி கடைகள், இரு சக்கர வாகனங்கள், மனிதர்கள் – அவற்றின் பேரிரைச்சல்களுக்கு மத்தியில் – லெனின் வீதி என்ற பெயரில் தெற்கு வடக்காக ஒருவீதி. அங்கு நீங்கள் வருகிற திசைக்கேற்ப வலப்புறமோ இடதுபக்கமோ ஒருவீட்டில் மாடியில் இலக்கியம் என்ற பெயரில் பலகையொன்று தொங்கும். எழுபதுகளில் அதிகம் படித்திராத சமைந்த பெண்கள் தரிசனம் வீடுகளில் அபூர்வமாகத்தான் நிகழும், ‘இலக்கியம்’ புத்தக விற்பனைகடையும் அந்த வகைதான்.
சீனு தமிழ்மணியை முதன் முதலாகச் சந்தித்தது அப்புத்தகக்கடையில்தான். புதுவை அரசு அச்சககத்தில் பணியாற்றும் நண்பர் சீனு தமிழ்மணியும் சரி அவரது சகோதரரும் சரி அன்றிலிருந்து நேற்றுவரை என்ன காயகல்பம் சாப்பிடுவார்களோ இளமையுடன் இருக்கிறார்கள், நண்பர் நாயக்கரின் இளமை இரகசியம் வெந்நீரில் இருக்கிறது, சீனு தமிழ்மணியின் இளமைக்கு எது காரணமென்று அடுத்தமுறை இந்தியா வருகிறபோது அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும். கணீரென்ற குரல், ஆனால் அளந்துதான் பேசுவார், தேவையின்றி சொற்களை விரயம் செய்வதில்லை. சொல்லவேண்டியதைச் சுருக்கமாக, பொருத்தமான வார்த்தைகளின் உதவிகொண்டு, வெளிப்படுத்திவிட்டு, தனது காரியத்தில் தொடர்ந்து கவனம் செலுத்துவார், தமிழ் மொழியும் தமிழ் தேசியமும் இரு கண்கள். உடல் வாழ்க்கைக்கு அரசு உத்தியோகத்தையும், உயிர்வாழ்க்கைக்கு ‘இலக்கியத்தையும்’ சார்ந்து வினைபுரிகிறார். பிற (தமிழ்) புத்தகக்கடை விற்பனையாளர்களிடமிருந்து வேறுபட்டவர், இவருக்கு படைப்புலகையும், படைப்பாளிகளையும் அவர்களது படைப்புகள்குறித்தும் சொல்ல இருக்கின்றன, மதிப்பீடுகள் உள்ளன. அடிப்படையில் ஓர் படைப்பிலக்கியவாதியாக இருப்பது காரணமாக இருக்கலாம். சீனு. தமிழ்மணியின் குடும்பமே தமிழுக்காக வாழ்கிற குடும்பமென அறியவந்தபோது பிரமித்துவிட்டேன். அவரது சகோதரர் தமிழ் நெஞ்சனும் ஓர் சிறந்த கவிஞர், வாரிசுகளும் இவர்களின் வழித் தடத்திலேயே பயணிக்கிறார்கள், நடுத்தர குடும்பமாக இருந்தபோதிலும், தந்தை பெயரில் ஓர் அறக்கட்டளை நிறுவி வருடந்தோறும் அறிவுஜீவிகளைக்கொண்டு சொற்பொழிவு ஏற்பாடு செய்துவருகிறார்கள்.
துளிப்பா கவிஞர்:
சொற்களின் கடைவிரிப்புகளின்றி ஆழமாகவும், நுணுக்கமாகவும், சாதுர்யமாகவும் கையாளப்படவேண்டிய கவிதை வடிவம் ‘ஹைக்கூ’ கவிதைகள். ஜப்பான் நாடு அதன் நதிமூலம். இன்று உலகமொழிகள் ஒவ்வொன்றிலும் அதன் இயங்குதளத்தை விரிவாக்கிக்கொண்டிருக்கிறது. தமிழில் துளிப்பா துறையில் நாட்டம்கொண்டு, தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பவர் சீனு. தமிழ்மணி. இலக்கிய நண்பர்கள் பலரும் அவரை துளிப்பா சீனு தமிழ்மணியென்றே அறிந்திருக்கிறார்கள். தமிழில் துளிப்பாவுக்கென முதல் இதழைக்கொண்டுவந்த பெருமை சீனு. தமிழ்மணியெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன, இதழின் பெயர் ‘கரந்தடி’. அவ்வாறே பத்தாண்டுகளுக்கு முன்பு ‘காவியா’ பதிப்பகத்தின் “இருபதாம் நூற்றாண்டு புதுச்சேரித் துளிப்பாக்கள்” என்ற நூலுக்குத் தொகுப்பாசிரியராக இருந்திருக்கிறார். இவர் கவிஞர் மாத்திரமல்ல சுற்றுசூழல் போன்ற சமூல நலன் சார்ந்த துறைகளிலும் நாட்டம் கொண்டவர். அண்மையில் அவரும் அவர் நண்பர்களும் கடுமையாக உழைத்து வே. ஆனைமுத்துவின் கருத்துக் கருவூலம்வர காரணமாக இருந்திருக்கிறார்கள்
துளிப்பாக்களில் சில பாக்கள்:
ஆங்கிலம்பேசும்
தமிழ் குழந்தை
தமிழ் பேசும் ஆங்கிலப்படம்
——
விற்ற மனையே
விற்கப்படுகிறது
“ரியல்” எஸ்டேட்
——
கோடை
மிந்துறையைத் திட்டியபடி
ஓய்வுபெற்ற மின் ஊழியர்
———-
நன்றி:
தகவல்கள் மற்றும் படங்கள்
என்விகடன் -புதுச்சேரி,
வெ.சுப.நாயகர்
நண்பர் மு.இளங்கோ வலைப்பூ
————————————————————————————
2. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்
இசைவிழா
திருவையாறில் இசைகலைஞர்கள்கூடி தியாகராசர் ஆராதனைசாக்கில், இசை வல்லுனர்களும், மேடை ஏறாத கலைஞர்களுமாக கலந்து இசைமுழக்கம் செய்வதில்லையா? அப்படியொரு விழா பிரான்சிலும் நடப்பதுண்டு.
ஒவ்வொரு வருடமும் ஜூன் 21ந்தேதியன்று நடைபெறும் இவ்விழாவுக்கு அடிகோலியவர், பிரெஞ்சு அரசாங்கத்தின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஜாக் லாங் என்ற மனிதர். அதிகாரபூர்வமாக 1983ம் ஆண்டு ஜூன் 21ந்தேதி கொண்டாட ஆரம்பித்தார்கள்.
எதற்காக ஜூன் 21ந்தேதி?
கோடைகாலத்தின் கதிர் திருப்ப நாளாம் -Solstice- அதாவது சூரியன் தனது பயணநேரத்திற்கு அதிகம் அல்லது குறைந்த நேரத்தை எடுத்துக்கொள்வதை கதிர் திருப்ப நாள் எனச்சொல்லப்படுகிறது -தகவல் உபயம் விக்கிபீடியா. அந்த வகையில் ஜூன் 21ந்தேதி சூரியன் மறையாமல் வெகுநேரம் இருக்கும் நாள்.
இந்த இசைவிழா பிரான்சின் குக்கிராமங்கள், கிராமங்கள், நகரங்கள், பெருநகரங்கள் எங்கும் பொது வெளிகளில், மிகப்பெரிய அரங்குகளை அமைத்து, பெருந்திரளான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுவதோடன்றி; ஆங்காங்கே நாற்சந்திகளில், வீதிமுனைகளில், தெருவோரங்களில் பத்து அல்லது பதினைந்து ரசிகர்கள் கூடியிருக்க அமெச்சூர் கலைஞர்கள் பங்கேற்கிற எளிய நிகழ்ச்சிகள்வரை ஆயிரக்கணக்கில் நடபெறுகின்றன. நேற்று எங்கள் ஊரில் (ஸ்ட்ராஸ்பூர்)மட்டும் இருநூறுக்கும் குறையாத நிகழ்ச்சிகள். விடியவிடிய நடந்தன. திரும்பியபக்கமெல்லாம், கிடார், ட்ரம்ஸ் ஆகியவற்றின் ஓசை, கும்பல் கும்பலாக இளைஞர் பட்டாளம், ஜோடி ஜோடியாக இசை எல்டராடோவில் திளைத்த ஹிப்பிகால மனிதர்கள். எங்கும் சந்தோஷத்தின் மூச்சு. உலகம் இப்படியே நீடித்தால் எத்தனை சுகம்…
———————————————