1. அண்மையில் சந்தித்த நண்பர்களும் எழுத்தாளர்களும்:
புதுச்சேரிக்கு செல்கிறபோதெல்லாம் அண்மைக்காலங்களில் நானும் நண்பர் நாயகரும் அதிகாலையில் நடப்பதற்குச் செல்வது வழக்கம். சரியாகக் காலை 5.30க்கெல்லாம் வீட்டிற்கு வந்திடுவார். நடந்து முடித்ததும் சிற்சில சமயங்களில் நண்பர்களை சந்திக்க காலைநேரத்திலேயே நாயக்கர் ஏற்பாடு செய்திடுவார். அப்படித்தான் இம்முறை நண்பர் இளங்கோவனைச் சந்திக்க நேர்ந்தது. முதன் முதலாக மு.இளங்கோவனைச் சந்தித்தது நண்பர் இலக்கியம் சீனு.தமிழ்மணி நடத்திவரும் புத்தக விற்பனை அகத்தில். அங்கே சிறியதொரு கலந்துரையாடலை சீனு. தமிழ்மணி ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் ஓரிரு நிமிடங்கள் உரையாடியிருப்போம். மரியாதை நிமித்தமாக நடந்த அவ்வுரையாடல் அறிமுகம், நலன் விசாரிப்பு என்று சுருக்கமாக முடிந்தது.
பாரதிதாசன் கல்லூரியில் பேராசியராகப் பணியாற்றும் இளங்கோவன் முனைவர் பட்டம் பெற்றவர். பொதுவாக இம்முனைவர்களின் ரிஷிமூலங்களை அறித்திருப்பதால், இந்த அலங்காரங்காரங்களை கண்டு அதிகம் மிரள்வதில்லை. விதிவிலக்காக 25 விழுக்காடு முனைவர் பட்டங்கள் சரியானவர்களை சென்றடைந்து பெற்ற இழுக்கை நேர் செய்து விடுகின்றன. அதுபோன்ற முனைவர்களையும் நிறைய சந்தித்திருக்கிறேன். நண்பர் நாயக்கர், மு.இளங்கோவன் ஆகியோர் இந்த 25 விழுக்காட்டினர் வரிசை.
பொதுவாகப் பேராசிரியர்கள், தங்கள் கல்விகாலத்தில் வாசித்திருப்பார்கள், அன்றி பாடம் எடுக்கவேண்டுமே என்ற தலையெழுத்திற்காக புத்தகத்தைப் புரட்டும் பேராசிரியர்களும் இருக்கிறார்கள்; இவர்களால் மொழியோ, கல்வியோ மேம்பாட்டினை அடையாதென்று தெரியும், வாங்கும் சம்பளத்திற்கு வஞ்சமின்றி வகுப்பில் பாடம் நடத்தி மாணவர்களை ஏய்க்க முடியாதென்றோ என்னவோ மரத்தடியிலும் கல்லூரி சிற்றுண்டி சாலைகளிலும் தங்கள் வக்கிரங்களைக்கொட்டித் தீர்த்து களைத்து போவார்கள் அப்படியொரு ஆங்கில பேராசிரியர் ஒருவரை அண்மையிற் பாரதிதாசன் கல்லூரியில் கண்டேன். நண்பர்களும் நானும் தலையிலடித்துக்கொண்டோம்.
முனவர் மு. இளங்கோவன் இளைஞர், “குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிழ் சிரிப்பும்’ அவர் உடன்பிறந்தவை என நினைக்கிறேன். வயதிற்கும் பெற்றுள்ள கீர்த்திக்கும் நிறைய வேறுபாடுகள். செம்மொழி இளம் அறிஞர் விருதை இந்தியக் அரசு அளித்துள்ளது, குடிரசு தலைவரிடமிருந்து அண்மையில் இவ்விருதைப் பெற்றுள்ளார். இவரது ‘இணையம் கற்போம்’ நூல் மொழியன்றி கணினி தொழில் நுட்பத்திலும் நண்பருக்குள்ள நுண்மான் நுழைபுலத்தைத் தெரிவிக்கின்றன. இதுவன்றி ‘அயலகத் தமிழர்கள்’ என்கிற நூல், பிறநாட்டில் வாழ்ந்து விளம்பரமின்றி தமிழ்த் தொண்டாற்றும் பெருமகன்களின் சிறப்பை பேசுகிற ஒரு நூல். நாட்டுபுற கலையிலும் தேர்ந்த ஞானம், அவ்வியல்சார்ந்து நூலொன்றையும் படைத்திருக்கிறார். உலகில் எங்கெல்லாம் தமிழ் மேடையேற்றப்படுகிறதோ அங்கே நண்பரும் மேடை ஏற்றப்படுக்கிறார். அவரால் தமிழுக்கும் தமிழால் அவருக்கும் பெருமை. நண்பர் மு. இளங்கோவன் பேசும் தமிழ் கேட்கவே அவர் நடைவாசலில் காத்திருக்கலாம்.
http://muelangovan.blogspot.fr/
———————————
2. வாசித்து கொண்டிருக்கிற நூல்: பஞ்சாங்கம் கட்டுரைகள் 11
மாதத்தில் ஒருநூலையேனும் வாசித்து முடிக்கவேண்டும் என்ற சபதத்தில் அண்மையில் ஓட்டை விழுந்திருக்கிறது, கூடிய சீக்கிரம் அதை அடைத்தாக வேண்டும். நண்பர் பஞ்சாங்கத்தின் இலக்கிய திறனாய்வு கட்டுரைகளின் இரண்டாம் பாகத்தை அண்மையில் வாங்கினேன் வாசித்துக்கொண்டிருக்கிறேன். பதிப்புரை ஆசிரியர் இந்நூலில் 60 கட்டுரைகள் இருப்பதாகக் கூறுகிறார். முதற்கட்டமாக இக்கால இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். அடுத்த இரண்டுகிழமையில் இதை பற்றி எழுதுகிறேன்.
———–
3. பிரான்சில் என்ன நடக்கிறது: Salle de Shoot
அரசியல்வாதிகளுக்கு ஆளும் திறன் இருக்கிறதோ இல்லையோ, மக்களை திசைதிருப்புவதில் அசகாய சூரர்கள். பிரான்சு நாட்டு ஆளும் கட்சியும் விதிவிலக்கல்ல. பிரெஞ்சு வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராத அளவு வேலையில்லா திண்டாட்டம், பொருளாதாரத்தில் தேக்கம். தொலைத்தொடர்பு, மின்சக்தி , மின்சார சாதனங்கள், மின்னணுப்பொருட்கள் ஆகிவற்றின் சரிவென்றாலும் அத்தியாவசியப்பண்டங்களின் விலை உயர்வு மிக மோசமாக இருக்கிறது. நாட்டில் அத்தியாவசிய உணவான பகத் என்கிற நீண்ட ரொட்டி 2002க்கு முன்னால் அதாவது பிரெஞ்சு நாணயமான பிராங் உபயோகத்தில் இருக்கையில் 3 பிராங்கிலிருந்து 4 பிராங்வரை விற்றது, சராசரியாக 0,50 செண்ட்ஸ், இன்று 1யூரோ. இந்நிலையில் கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மணையில் வை என்பதுபோல ஆளும் இடது சாரிகள் ஓரின திருமணத்திற்கு சட்டவரைவு கொடுக்க, எதிர்ப்பாளர்கள் இப்பிரச்சினையை விடப்போவதில்லையென வீதியில் இறங்கியிருக்கிறார்கள். அதன் ஆதரவாளர்களில் பலருக்குங்கூட நாட்டில் வேறு முக்கியமான பிரச்சினைகளிருக்க அரசாங்கம் இதனை ஏன் கையில் எடுக்கவேண்டுமென கேட்கிறார்கள். இந்நிலையில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல Salle de Shoot திறக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். பாரீஸ் மாநகராட்சி, கார் துய் நோர் என்ற பகுதியில் ( தமிழர்கடைகள் நிறைந்துள்ள பகுதி) முதற்கட்டமாக Salle de Shoot ஐ திறக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. இது எதற்காக? போதை மருந்து உபயோகிப்பாளர் இடம்தேடி திருட்டுத் தனமாக அலையவேண்டியதில்லை. ஹாய்யாக வந்து புகைத்து ‘ஆனந்தப்படலாம். நாட்டின் தற்போதைய நிலமைக்கு ஒரு முழம் கயிறு கொடுத்தால் தேவலாம் என அரசாங்கத்தைப் பலரும் கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
—————————————-